ம.தி.மு.க. நிருவாகி கூறியதாக எழுதியுள்ளதுதான் உண்மை. தொடக்கத்தில் இருந்தே வைகோ அ.தி.மு.க. ஆதரவுக் குரலை எழுப்பியதால்தான் இந்த நிலை போலும். தான் அணி மாறவும் அல்லது 3ஆம் அணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது எனப் பேசி வந்திருந்தால் அவரைத் தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள கூடுதல் இடம் தந்திருப்பார்கள் போலும். வைக்கோ அ.தி.மு.க.விடம் மண்டியிடாமல் குறைந்தது ௧௦௦ இடங்களிலாவது போட்டியிட்டுப் பிற இடங்களில் பரப்புரை மேற்கொள்ளாமல் அ.தி.மு.க அணிக்கு வாக்களிப்பதாகத் தெரிவிக்கலாம். இரண்டகம் - வஞ்சகம் - புரிவதாகக் கூறப்பட்ட மார்க்சியப் பொதுவுடைமைக்கு - ௩ ஆம் நிலை கொடுத்து விட்டு நாடு முழுவதும் பரவலான வாக்கு வங்கி உள்ள, தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் ஆதரவை உடைய ம.தி.மு.க. வை இழந்தால் அ.தி.மு.க.விற்குப் பேரிழப்புதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
சென்னை, மார்ச் 14: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் அனைத்துக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டபோதிலும் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து அ.தி.மு.க. அணியில் இடம்பெற்று வரும் கட்சியான ம.தி.மு.க.வுக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. ம.தி.மு.க. தரப்பில் தொடக்கத்தில் 35 தொகுதிகள் கொண்ட பட்டியல் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் 30 தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ம.தி.மு.க. இறங்கி வந்ததாகத் தெரிகிறது. எனினும், அடுத்தடுத்து நடந்த பேச்சுகளைத் தொடர்ந்து ம.தி.மு.க. மேலும் இறங்கி வந்து, 23 தொகுதிகளைக் கேட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு மட்டும் கூறி வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், கடந்த 8-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போதுதான் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேட்ட ம.தி.மு.க. தரப்பு மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து 12-ம் தேதி சந்திப்பின்போது ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்குக் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களைவிட 2 இடங்கள் அதிகமாகத் தர இருப்பதாகவும் அதற்குமேல் தொகுதிகளை ஒதுக்க இயலாது என்றும் அ.தி.மு.க. தரப்பு கூறிவிட்டதாகத் தெரிகிறது. எனினும், 14-ம் தேதி காலை ம.தி.மு.க.வைச் சந்தித்த அ.தி.மு.க. நிர்வாகிகள், முந்தைய நாள் தெரிவித்த 8 தொகுதிகளுக்குப் பதிலாக 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க இயலும் என்று கூறினார்களாம். மீண்டும் 14-ம் தேதி மாலை வைகோவைத் தொடர்பு கொண்ட அ.தி.மு.க. தரப்பினர் முன்பு கூறியபடியே 8 தொகுதிகள் தருவதாகவும், தங்கள் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திக்குமாறும் அழைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், ம.தி.மு.க. தலைமை அந்த அழைப்பை நிராகரித்து விட்டதாதக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் இத்தகைய அணுகுமுறையால் ம.தி.மு.க.வினர் மனதளவில் மிகவும் புண்பட்டிருப்பதை அறிய முடிகிறது. காரணம் என்ன? அ.தி.மு.க. தலைமையின் இந்தப் பிடிவாதத்துக்கு அந்த அணியில் தே.மு.தி.க. உள்ளதால் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்ற அதீத நம்பிக்கை ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இடதுசாரிக் கட்சிகளுடனும் இதேபோல பிரச்னை எழுந்து இப்போது அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிகள் அல்லாமல் தலா 3 தொகுதிகள் அதிகமாகப் போட்டியிடச் சம்மதித்து ஒப்பந்தமும் செய்துகொண்டு விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி 12 இடங்களிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் ம.தி.மு.க.வின் நிலைமைதான் இன்னும் முடிவு தெரியாமல் தொடர்கிறது. கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க. 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. வெற்றிபெற்ற 6 சட்டப்பேரவை உறுப்பினர்களில் மூன்று பேர் தி.மு.க.வுக்குச் சென்றுவிட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு இப்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். அதைப் பொருள்படுத்தாமல், கடந்த தேர்தல் முடிவுகளின்படி கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 6 தொகுதிகளுடன் மேலும் 3 தொகுதிகள் சேர்ந்து 9 தொகுதிகளை ஒதுக்கித் தருவதாக அ.தி.மு.க. தலைமை தெரிவித்திருப்பதாகவும், இதை ம.தி.மு.க. ஏற்கத் தயங்குவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ம.தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: ம.தி.மு.க இல்லாமல் வெற்றிபெற்று விடலாம் என்று அ.தி.மு.க. கருதினால், அதனால் அந்தக் கட்சிக்கு பெருத்த ஏமாற்றம்தான் கிடைக்கும். கடந்த 2006 பேரவைத் தேர்தலில் 61 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதில் 31 தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அங்கெல்லாம் ம.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், அ.தி.மு.க. நிச்சயம் தோல்வி அடைந்திருக்கும். உதாரணமாக, கடந்த தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வெறும் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்தத் தொகுதியில் 1996 தேர்தலில் 30 ஆயிரத்து 893 வாக்குகளையும், 2001 தேர்தலில் 20 ஆயிரத்து 668 வாக்குகளையும் ம.தி.மு.க. பெற்றிருந்தது. அதேபோல் கோவில்பட்டி தொகுதியில் கடந்த முறை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அங்கு 1996-ல் எங்கள் கட்சி வேட்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் 31 ஆயிரத்து 828 வாக்குகளையும், 2001 தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் விஸ்வாமித்திரன் 27 ஆயிரத்து 881 வாக்குகளையும் பெற்றிருந்தார். இதேபோல் ராஜபாளையம், புதுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, மருங்காபுரி, ஜெயங்கொண்டம், வரகூர், கரூர், மேலூர், நத்தம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பர்கூர், அணைக்கட்டு, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்ற பல தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ம.தி.மு.க.வின் ஆதரவுதான் காரணம். மேலும், எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ 213 தொகுதிகளில் மேற்கொண்ட சூறாவளி பிரசாரம், அ.தி.மு.க.வின் வெற்றிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. மொத்தத்தில், ம.தி.மு.க.வின் ஆதரவு இருந்ததால்தான் அ.தி.மு.க.வால் 61 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது. இல்லையெனில் அந்த எண்ணிககை 30-க்கும் குறைவாக இருந்திருக்கும் என்றார் அவர். அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் பலர் ம.தி.மு.க. தங்களது கூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளுக்குக் கொடுத்ததுபோல அல்லாமல் ம.தி.மு.க.வுக்குக் குறைந்தது 15 இடங்களையாவது ஒதுக்கித் தரவேண்டும் என்று பலர் நினைத்தாலும் கட்சித் தலைமையிடம் அதைத் துணிந்து வெளிப்படுத்த யாரும் தயாராக இல்லை. வரும் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு வித்தியாசம் என்பது பல தொகுதிகளில் மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஏற்கெனவே கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வின் ஆதரவை அ.தி.மு.க. இழக்குமானால், அதனால் அக்கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. வைகோ எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம் என்பது சந்தேகம் இல்லை. அவர் இந்தத் தேர்தலில் "அம்மா' சொல்வதுபோல தரப்படும் தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் அரசியல் சாதுர்யம். அ.தி.மு.க.வுக்கு தில்லியில் செயல்பட நம்பிக்கையான நபர் யாரும் இல்லாத நிலைமை. வைகோ அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்டால், 1998-ல் வாழப்பாடி ராமமூர்த்தியை மத்திய அமைச்சராக்கியதுபோல, இவரைத் தனது நம்பிக்கைக்கு உரியவராக தில்லி மாநிலங்களவைக்கு அனுப்பி, அமைச்சராக்கக்கூட "அம்மா' தயங்க மாட்டார். அதை அவரிடம் யார் சொல்லிப் புரியவைப்பது?'' என்று வேதனைப்பட்டார் "அம்மா' விசுவாசியான மூத்த தலைவர்.
கருத்து :
தனக்கு அமைச்சர் பதவி தரப்பட்ட பொழுதெல்லாம் மறுத்தவர் வைக்கோ. அவரிடம் அதனைக் காட்டித் தன்மானத்தை இழக்கச் சொல்வது சரியில்லை. விசயகாந்த்து பெற்ற வாக்குகளில் அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளும் அடக்கம். அவர் இக்கூட்டணியில் உள்ளமையால் அவர் பெறப் போகும் வாக்கு ௩ % அளவுதான் இருக்கும். நடிகர்களின் சேர்க்கையால் வெற்றி பெறலாம் என்னும் மமதை நீடித்தால் அ.தி.மு.க. வீழும். காங்.தொகுதிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் போட்டியிடும் இடங்களிலும் வைக்கோ கருத்து செலுத்திப் போட்டியிட்டால் அவர் யார் என்பது அரசியல்வாதிகளுக்குப் புரியும். இனப்படுகொலைக் கூட்டணிக்கும் ஊழல் கூட்டணிக்கும் எதிராக உள்ளவர்கள் அவர் பக்கம் இருக்கின்றனர். கடைசியில் ௧௨ அல்லது ௧௩ தந்து அமைதிப் படுத்த அ.தி.மு.க. முயன்றாலும் வைகோ
ஒத்துக் கொள்ளக் கூடாது.முதல் எதிரி காங்.தான் என்றாலும், காங்.எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என எண்ணாமல் துணிக!
ஒத்துக் கொள்ளக் கூடாது.முதல் எதிரி காங்.தான் என்றாலும், காங்.எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என எண்ணாமல் துணிக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக