தமிழ் மரபு அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்ட (இடமிருந்து 3-வது) கல்வெட்டு ஆய்வாளரும், சொற்பொழிவாளருமான சீதாலட்சுமி, ஆய்வாளர் ப
சென்னை, மார்ச் 13: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்பட வேண்டும் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.தமிழ் மரபு அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். இவர்களில் பலர் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.பல்வேறு அரிய ஓலைச் சுவடிகள் இப்போது தொல்லியல் துறை மூலம் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆவணம் கூட செய்யப்படவில்லை. பாதிக்கும் மேற்பட்டவை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்றார் தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி எஸ். ராமச்சந்திரன்.அதைத் தொடர்ந்து பேசிய ஆய்வாளர்கள் மே.து. ராசுகுமார், கோ. உத்திராடம் ஆகியோர் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். ஓலைச் சுவடிகளை யாரிடம் ஒப்படைப்பது என்று குழப்பத்தில் இருந்த அரசு, வேறு வழியின்றி அவற்றைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து விட்டது. ஆனால், இதற்கான முறையான பயிற்சியோ அல்லது உதவியோ ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால்தான் அவை அழிவின் பிடியில் சிக்கியுள்ளன.எனவே, ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து, முறையாக பராமரிக்க தனித் துறையை அரசு உருவாக்கவேண்டும். இல்லையெனில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் தமிழகத்தில் ஓலைச் சுவடிகளே இல்லாத நிலை உருவாகிவிடும் என்றனர். கோயில்களை மத ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது.இவற்றின் மூலம் பல்வேறு வரலாற்று தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.ஆனால், இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிந்து வருகின்றன. ஏனெனில் புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் முறையான கொள்கை இந்தியாவில் கிடையாது.வழிபாடு நடைபெறுவதன் மூலம், வருமானம் கிடைக்கும் கோயில்களை மட்டுமே இந்து அறநிலையத்துறை பாதுகாத்து வருகிறது. வழிபாடு நடைபெறாத தேவாரப் பாடல் பெற்ற பல கோயில்கள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.மேலும், அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கோயில்களில், அவ்வப்போது வண்ணப் பூச்சுகள் மேற்கொள்ளப்படுவதால் அவற்றில் இடம்பெற்றிருக்கும் அரிய கல்வெட்டுகளும், தகவல்களும் சேதமடைந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார் தொல்லியல் ஆய்வாளர் வி. செல்வக்குமார்.இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகள் படி, கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படுவது இல்லை. இதனால், கற்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் அழிந்து வருகின்றன.கோயில் புனரமைப்பு என்ற பெயரில், ஒப்பந்ததாரர்கள் வாட்டர் வாஷ், மணல் பீய்ச்சி அடித்தல் (சாண்ட் பிளாஸ்டிங்) உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் கல்வெட்டுகள் அழிந்துவிடுவதோடு, கோயில்கள் பலமிழந்து உள்ளன என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஜே. சந்திரசேகரன் கூறினார்.தமிழகம் முழுவதும் ஓலைச் சுவடிகளைத் தேடுதல், பழைய நூல்களை மின்னாக்கப் பதிவு செய்தல், வட்டார வழக்குகளைப் பதிவு செய்தல், தமிழ் பாரம்பரியத்தில் உள்ள வாழ்க்கை முறை, பேச்சு முறை ஆகியவற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும் இந்தப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.ஏனெனில் இதுபோன்ற ஆவணங்களும், ஓலைச் சுவடிகளும் தமிழகத்தில் மட்டும் அல்ல. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம், கிழக்கு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம், டென்மார்க்கில் உள்ள நூலகம் எனப் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதுபோன்று வெளி நாடுகளில் இருக்கும் அரிய ஆவணங்களை மின் பதிப்பு செய்து, மீண்டும் இந்தியா கொண்டு வரும் முயற்சியை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முயற்சி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பெரிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் பணி முழுமை பெற்று, நம்முடைய பொக்கிஷங்களை நாம் அறியமுடியும் என்றார் ஜெர்மனியைச் சேர்ந்த தமிழ் மரபு அறக்கட்டளை துணைத் தலைவர் சுபாஷிணி ட்ரெம்மல்.நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆய்வாளர் பத்மாவதி, ஆய்வாளரும் சொற்பொழிவாளருமான சீதாலட்சுமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தமிழ் மரபு அறக்கட்டளையின் 2011 திட்டங்களை அறக்கட்டளையின் செயலர் மா. ஆண்டோ பீட்டர் வாசித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக