வியாழன், 17 மார்ச், 2011

Election obstructions: தேறுமா தேர்தல் கெடுபிடி?

எங்கள் வீட்டிலுள்ள ௪ வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் நீக்கம்.இப்படி எத்தனை நூறாயிரம் வாக்காளர்கள் பெயர்கள் காணாமல் போயினவோ! அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /


தேறுமா தேர்தல் கெடுபிடி?

First Published : 17 Mar 2011 01:37:13 AM IST


தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோலாகிவிட்டன அரசுத் திட்டங்கள் மற்றும் பணிகள். திடீரென தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு அவகாசம்கூட அளிக்காமல் அடுத்தடுத்து கெடுபிடிகளைச் செய்து வருகிறது தேர்தல் ஆணையம். இதைக் கண்டு அரசியல் கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் நியாயமானவைதான்.ஆனால் ஆணையத்தின் புதிய உத்தரவால் வாக்காளர்கள் பலர் குழம்பிப் போயிருக்கின்றனர். புதிதாக விலை உயர்ந்த பொருள்கள் எதையும் வாங்கக் கூடாது. விருந்து வைக்கக் கூடாது, திருமண மண்டபங்களில் விழாக்கள் நடத்துவதில் கட்டுப்பாடு, பணப் பரிமாற்றத்தில் நிபந்தனை என ஏகப்பட்ட அதிரடி உத்தரவுகள்.  ஒரு சில அரசியல் கட்சிகளுக்காக இவ்வளவு கெடுபிடி தேவைதானா என கேட்கத் தோன்றுகிறது. பொதுவாகத் தவறு செய்யும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதுதானே நியாயம். அதை விடுத்து, வாக்காளர்களின் சுதந்திரத்தில் தலையிடலாமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் அறிவித்துவிட்டால் அதை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. அதற்காக வானாளாவிய அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதும், அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என மக்களுக்கே உத்தரவு போடுவதும் வருத்தத்தை அளிக்கிறது.இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது திடீரென தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளித்தது யார்? இவர்களின் உத்தரவுக்குப் கட்டுப்படத்தான் வேண்டுமா என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அப்படியானால் அவர்கள் எழுப்பும் சில நியாயமான கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் அத்தனை பேருக்கும் அந்த அட்டைகள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன. இந்த அட்டைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள்தான். இவர்கள் கிராமப்புறங்களில் யார் வீட்டுக்காவது நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்றிருப்பார்களா அல்லது அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்திருப்பார்களா என விசாரித்தால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் நியாயமானதுதான் என நம்பலாம்.ஆனால் அப்படி எதுவுமே செயல்முறையில் இல்லை. ஏனென்றால் பட்டியலில் பெயர் இல்லாதோர் பலர். நிலைமை இப்படி இருக்க வாக்களிப்பவர்களுக்கு மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் பொருந்தும். வாக்களிக்காதவர்கள் இந்த உத்தரவுக்குப் பணிய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதற்கான காரணம் என்ன என்பதையும் அப்படியே ஆணையம் விளக்கினால் நன்றாக இருக்கும். ஜனநாயக நாட்டில் விளக்கம் அளிக்க எதிரிக்கும் அவகாசம் அளிக்க வேண்டும். அதை விடுத்து அத்தனை பேருமே இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டுமா என்பதே வாக்களிக்க முடியாதவர்களின் கேள்வி.கட்சிகள் பணம் கொடுப்பதை வாக்காளர்கள் வாங்கக் கூடாது என்பது சரிதான். அதைத் தரக்கூடிய கட்சிகளைக் கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ ஆணையம்தான் முன்வர வேண்டும். அதைவிடுத்து திருவிழா நடத்துவதற்கும், பிற விழாக்கள் நடத்துவதற்கும் தடை விதிப்பது மறு பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமாகும்.பாதிப்பேருக்கு மேல் வாக்குரிமை கிடையாது. அதைச் சரிசெய்யாத ஆணையம் தேவையற்ற நிபந்தனைகளை மக்களிடம் விதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தும் செயலாகும்.இப்படித்தான் கடந்தமுறை திருமங்கலம் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. நரேஷ்குப்தா தேர்தல் ஆணையராக இருந்தபோது அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அப்புறம் என்ன ஆனது. யாருக்காவது தண்டனை அளிக்கப்பட்டதா அல்லது நீதிமன்றப் படிக்கட்டுகளையாவது அவர்கள் மிதித்தார்களா என்பது கேள்விக்குறிதான்.இப்போது அதிரடியாகத் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள் அனைவரும் பாராட்டக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வாக்காளர்களை கவனிக்கப்போகும் கட்சிகளை எப்படிச் சமாளிப்பார்களோ தெரியவில்லை. தேர்தல் முடிந்ததும் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமே என்பதுதான் அனைவரின் கவலை.இதே சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் தேர்தல் முடிந்தபிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்தான் இருக்கிறது. எப்படி நடக்கிறது என்று பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக