டகாஜோ, மார்ச்.13: ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் 2 நாட்களாக உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில் 1000-த்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.மீட்புப் பணிகளில் ஜப்பான் ராணுவத்தினர் சுமார் 100,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு மின்சாரத் தொழிற்சாலையின் 2 அணு உலைகள் சுனாமியால் சேதமடைந்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதலில் நிலநடுக்கம் குறித்து கவலை அடைந்தோம். தற்போது அணுக்கதிர் குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளோம். அணு உலைகளுக்கு அருகில் வசிப்பதால் இங்கு வந்து பரிசோதனை செய்தோம். பரிசோதனையில் உடலுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது என கோரியாமாவில் அவசரகால மையத்தில் கட்டுமானத் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.ஜப்பானின் பெரும்பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியவில்லை. எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.380,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அவசரகால வசிப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவாகி நகரில் உணவு மற்றும் எரிபொருள் இல்லாததால் குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். அந்த நகரில் மின்சாரம் இல்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.ஜப்பான் முழுவதும் கடந்த 2 நாட்களாக 14 லட்சம் பேர் குடிநீர் இல்லாமலும், 25 லட்சம் பேர் மின்சார வசதி இல்லாமலும் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக