செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

Education through Thamizh/tamil medium : தமிழ்வழிக் கல்வியும் கலைச்செல்வங்களும்

உலகத்தாய்மொழிநாளை (௨௧.௨.) முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிட்ட தினமணிக்குப் பாராட்டுகள். நல்ல கட்டுரையை அளிக்கும் கட்டுரையாளர் இடையிடையே <<கடைப்பெயர்கள் தமிழில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இது போலித்தனமானதும் துரோகத்தனமானதுமாகும். >>என்பது போல் குழும்புகிறார். தாய்மொழிக் கல்வி தேவை என்பதற்குத் தமிழில் பெயர்பப்லகை வைப்பது எப்படி போலி நடவடிக்கை ஆகும். வேலை வாய்ப்பு மொழியாகத் தமிழை மாற்றினால் - தமிழ் அறிந்தவர்களுக்கு மட்டுமே வேலை தொழில் வாய்ப்புகள் என அரசு நடைமுறைப்படுத்தினால் -மிக விரைவில் தமிழ் வழிக் கல்வியும் நடைமுறைக்கு வரும். தெளிவில்லாத கட்டுரையாளரிடம் தெளிவான செயதிகளும் வெளிப்பட்டமைக்குப் பாராட்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்வழிக் கல்வியும் கலைச்செல்வங்களும்

ஓரு வளமான நாட்டுக்கு அடிப்படை வளமான கல்வி முறையே ஆகும். அதுவும் தாய் மொழிக் கல்வி முறையே ஆகும். உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் - இந்தியா உள்பட ஒரு சில ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைத்தவிர, தாய்மொழி மூலமாகவே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மனித ஆற்றலை வளமையாக்கவும், ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியால் மட்டுமே முடியும். இது அறிவியல்பூர்வமாக நிரூபணமான உண்மை. பல முன்னேறிய நாடுகள் இதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. தாய்மொழியிலேயே ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும். ஒருவரது சிந்தனை ஆற்றல் முழுவதும் தாய்மொழியில் ஊடாடி மூளையில் பதிந்து போகிறது. வெளிஉலகத்தைப் பார்க்கத் தொடங்கும் குழந்தையின் மூளையில் வெளிஉலகமே, தாய்மொழியில்தான் பதிந்து போகிறது.சிந்தனை ஆற்றலை வளர்ப்பதும், படைப்புத் தன்மையை உருவாக்குவதும், நாகரிகமான சமூக மனிதராக மாற்றுவதும், சமூகப் பண்பாட்டைக் காப்பாற்றிக்கொண்டே அதை மேம்படுத்துவதும் சிறந்த கல்வியின் நோக்கம். நம்முடைய கல்விமுறை - குறிப்பாக, நாலைந்து பாடத்திட்டங்களைக் கொண்ட ஆங்கில வழிக் கல்விமுறை - மேற்கண்ட திறமைகளை வளர்ப்பதற்குப் பயன்படுகிறதா என்று மனசாட்சிப்படி நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  மொழி என்பது நமது கருத்துகளை, அறிவை, தகவல்களை மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி என்று மட்டும் சுருக்கிக்கொள்ள முடியாது. சமூகத்தில் நிலவுகிற வளமான செறிவுள்ள அறிவுபூர்வமான கருத்துகள் அந்தச் சமூகத்தில் புழங்கும் மொழியைச் சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்கிறது. கருத்துகள், கருத்துகள் அடிப்படையிலான செயல்கள் இன்றி மொழி இல்லை. ஒரு மொழியை - வடிவம் மற்றும் வார்த்தைகள் தெரிந்து - பேசுவதாலேயே அந்த மொழியில் திறமைசாலியாகிவிட முடியாது. ஒரு மொழியில் உள்ள அறிவியல் மற்றும் கலைப்பொக்கிஷங்களை அறிந்தால் மட்டுமே அதில் திறமைசாலியாக முடியும். ஆனால், நமது அன்றாட வாழ்வில் ஆங்கிலம் பேசுவது, தமிழரின் அதிகபட்சத் திறமை என்பது பழகிப்போன ஒன்று. இதற்குக் காரணம் என்னவென்றால் தற்காலத்தில் பிழைப்புவாதமே  தமிழரின் கலாசாரமாகிப்போனதுதான். அப்படியெனில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மூன்று வயதுக் குழந்தைமுதல் இறக்கப்போகிற முதியோர்வரை அனைவரும் மிகுந்த திறமைசாலிகளே. ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த முதலாளிகள், ஆங்கிலமும் தெரிந்த குமாஸ்தாக்களையே விரும்புகிறார்கள். அதிகச் சம்பளம் தருகிறார்கள் என்றவுடன் எது திறமை என்பதை மறந்து, ஆங்கிலம் பேசுவது திறமையாகிப் போகிறது. இந்தச் சந்தர்ப்பவாத வாழ்க்கைமுறையில் நாட்டுப்பற்று, தேசமுன்னேற்றம் திறமை, படைப்பாற்றல் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. அறிவியல் என்பது உலகம் முழுவதும் பொதுவான ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழியில் இருக்கிறதே தவிர, அதன் சாராம்சமும் உள்ளடக்கமும் ஒன்றுதான். கூடங்குளம் அணுஉலையில் தாய்மொழியில் படித்த ரஷியப்  பொறியாளர்கள்,  புகலூர் காகித ஆலையில்  தாய்மொழியில் படித்த ஜப்பான் பொறியாளர்கள் ஆங்கிலம் தெரியாமலும், தமிழ் தெரியாமலும் இயந்திரங்களை நிறுவிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை, தாய்மொழியில் படிக்காத ஆங்கிலம் தெரிந்த நமது பொறியாளர்கள் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நம் நாட்டில் - குறிப்பாக, தமிழ்நாட்டில் - தமிழ்வழிக்கல்வி அவசியம் என்று அறிவுஜீவிகள் மனப்பூர்வமாகவும், ஆளும் அரசியல்வாதிகள் பேச்சளவிலும்  சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அது முடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.தமிழ்மொழியை அரசியலாக்கி, தேர்தல் வெற்றிக்குப் பயன்படும்பொருளாக மாற்றி, உணர்வுரீதியாக பொதுமக்களை மாற்றி இருக்கிறார்களேயன்றி அறிவுரீதியாக இல்லை. மேடைதோறும் தமிழ் வளர்ப்போம் என்று சவால் விடுகிறார்கள். கடைப்பெயர்கள் தமிழில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இது போலித்தனமானதும் துரோகத்தனமானதுமாகும். எதனால் ஒரு மொழி வளருமோ அதைவிட்டுவிட்டு, போகாத ஊருக்கு வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு மொழியை வாழ்வாதாரமாக, அறிவை உள்ளடக்கியதாக, வேலை வாய்ப்பை உருவாக்குவதாக ஆக்காமல் அதை எப்படி வளர்க்க முடியும்? சரி, தமிழ்மொழி எப்பொழுதுதான் வளரும். இது தமிழ்மொழி வழிக் கல்வி நடைமுறையில் இருந்து  அதன்மூலமாகக் கண்டிப்பாகச் சாத்தியமாகிற சிறந்த விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் உருவாகி அறிவியலிலும் கலைத்துறையிலும் உலகத்தரமான படைப்புகள் வரும்போது தமிழ்மொழி வளரும். ஏனெனில், உலகில் மற்ற மொழிக்காரர்கள் அப்பொழுதுதான் தமிழைப் படிக்கத் தொடங்குவார்கள்.அறிவுத்தளத்தில் தமிழில் என்னென்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள அறிவாளிகள் தமிழைப் படிக்கத் தொடங்குவார்கள். அப்படித்தான் இப்பொழுது ஆங்கிலம் ஜெர்மன், ருஷ்ய, சீன மற்றும் பிற மொழிகளை உலகம் முழுவதும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.   ஆனால், இன்றைய தமிழ்ச்சூழலில் ஆங்கிலம் தெரியாமல் நாங்கள் எப்படி அமெரிக்கா செல்வது என்று பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பாத்தியமும்  சொகுசு வாழ்வுமே குறிக்கோளாக இருக்கிறது. நல்ல சம்பாத்தியம்கூட நம்முடைய பண மதிப்பில்தான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வறுமைக்கோட்டுச் சம்பளம் நம்முடைய ரூபாயில் லட்சங்களாக இருக்கிறது. அவர்களுக்கு இரண்டு பதில்கள் உண்டு. அந்தப்  பதில்களும் ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்து இருக்கலாம். தெரியாதது மாதிரி நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அதனால், நாம் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. ஐரோப்பிய  நாடுகளில் அவரவர் தாய்மொழியில் படித்தே எங்கும் வேலைபார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் அறிவுப்பரிமாற்றமும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மொழிபெயர்ப்புச் செய்து கொள்கிறார்கள்.  அதுவும்போக, அமெரிக்காவில் ஆங்கிலம் தெரிந்த இந்திய கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்கும் மேலாக சீனாவைச் சேர்ந்த கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆங்கிலம் தெரியாமல் அங்கு இருக்கிறார்கள்.  அவர்களுக்கு மொழி ஒரு பிரச்னை இல்லை. அப்படியும் ஆங்கிலம் வேண்டுமென்றால் கல்வியைத் தாய்மொழியில் கற்றுக்கொண்டு தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைப்  பேசவும் எழுதவும் பள்ளிக் கல்வி முடிக்கும் முன்னரே அனைவருக்கும் கற்றுக்கொடுக்கலாம். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இங்கிருந்து மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஓராண்டுக்குள் அவர்கள் மொழியைக் கற்றுக்கொடுத்து அந்த மொழியில்தான் பட்டப்படிப்பையும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.தமிழ்நாட்டில் இருந்து பிழைப்புத் தேடி மும்பை செல்லும் படிக்காத இளைஞர்கள்கூட ஆறு மாதத்தில் இந்தி பேசமுடியும்பொழுது ஆங்கிலத்தைப் பேசவும் எழுதவும் 12-ம் வகுப்புக்குள் கற்றுக்கொள்ள முடியாதா?ஆங்கிலப்பாடத்தில் மனனம் செய்து மதிப்பெண் பெறும் முறையை ஒழித்து மாணவர்கள் பங்கேற்கும் கல்வி முறையால் எளிதாக ஆங்கிலம் படித்துவிடலாம்.  எனவே, தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை வைத்துக் கொள்ளலாம்.  நமது துரதிருஷ்டம் என்னவென்றால், மெத்தப் படித்த மேதாவிகள் அமெரிக்கா, ஐரோப்பா என்று சென்று வேலை பார்த்ததாலும் அங்குள்ள கல்வி முறையைப் பற்றி இங்கு வந்து வாய்திறப்பது இல்லை. அதுதான் இந்திய மனதின் வினோதநிலை. அங்கெல்லாம் தாய்மொழிக்கல்வி சமச்சீராக இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கு ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊர் போய் சிறந்த பள்ளி என்று பிள்ளைகளைச் சேர்க்க முடியாது. ஏனெனில்,  எங்கும் ஒரே பாடமுறை, ஒரே தரத்தில் தாய்மொழிக்கல்வி எனும்போது, அதற்குத்  தேவையும் இல்லை.நமது ஆங்கிலவழிப் பள்ளிகளிலும், கட்டடங்களும், நுனிநாக்கு தமிங்கிலமும் இருப்பதே திறமை என்று பெற்றோர்கள், மாணவர்களை அங்கு சேர்க்கிறார்கள். சிறந்த அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன் பிள்ளையை அந்த மாதிரியான தனியார் பள்ளியில்தான் சேர்க்கிறார்.எது நல்ல கல்வி என்று புரியாமல் போனதுதான் இதற்குக் காரணம். தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளில், கல்வி முறை உயிரோட்டமாக இல்லாமல், இயந்திரத்தனமாய் இருப்பதால், ஒரு தலைமுறை குழந்தைகளை ஆங்கிலப்  புலமையும் இன்றி, தமிழ்ப் புலமையும் இன்றி திரிசங்கு நிலையில் வைத்திருக்கிறோம்.  மிகுந்த படைப்பாற்றலோடு பள்ளிக்கு வரும் ஒரு குழந்தையை-மொழி, கலாசாரத்தில், இந்தியத் தன்மையுடன் 3 வயது வரை நல்ல நிலையில் இருந்த குழந்தையை ஆங்கில வழிக் கல்வி என்று புரியாமல், சிந்தனைத் திறனற்ற, மனனம் செய்யும் கல்விமுறையில் விடுவது என்பது உண்மையான திறமையை அழிப்பது அல்லாமல் வேறு என்ன? தற்சமயம், சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் பாரட்டப்பட வேண்டிய ஒன்று. கட்டுரையாளர்: (வேதியியல் துறைப் பேராசிரியர்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக