செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

Revolution in Egypt: editorial of dinamani: தலையங்கம்: யுகப் புரட்சி!

இப்படிப்பட்ட ஓர் எழுச்சியை ஈழத் தமிழர்களின் படுகொலைகளுக்கு எதிராக  நம் மக்கள் காட்டத் தயங்குவது ஏன்? இன்னும் அடிமைத்தனத்தில் உழல்வதால்தானோ?தமிழே விழி! தமிழா விழி! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தலையங்கம்: யுகப் புரட்சி!

First Published : 15 Feb 2011 01:06:47 AM IST


8 நாள்கள் நடந்த குருúக்ஷத்திரப் போரைப்போல, உலகை உலுக்கிய இந்த 18 நாள்களும் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட இருக்கிறது. மக்கள் சக்தியால் ஒரு சர்வாதிகார ஆட்சியைப் பதவியிலிருந்து அகற்ற முடியும் என்பதை எகிப்து மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். அன்று அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் அடக்குமுறையையும், நிறவெறியையும் எதிர்த்துப் போராட உலகுக்கு அளித்த "அஹிம்சை' என்கிற ஆயுதம் இன்று உலகமெல்லாம் வெற்றிவாகை சூடி வருகிறது.தெருக்களில் இறங்கி சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராகச் சில நூறு இளைஞர்கள் எழுப்பிய கோஷம் பல நூறு பேரை ஈர்த்தது. பல நூறு பேர்களின் ஊர்வலம் பல்லாயிரம் பேர்களின் ஆதரவுடன் ஒரு மிகப்பெரிய புரட்சியாக உருவெடுத்தது.தான் ஒரு துணை அதிபரை நியமிப்பதாக அறிவித்தார் முபாரக். கூட்டம் கலையவில்லை. செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். ஊஹும், மக்கள் மசியவில்லை. இணையதளம், தொலைக்காட்சி, மொபைல் என்று தகவல் தொடர்புகளைத் துண்டித்துப் பார்த்தார். பயனில்லை.தன்னுடைய ஆதரவாளர்களைக் கூட்டத்தினர் நடுவில் ஊடுருவவிட்டுக் கருத்து வேறுபாட்டை உருவாக்க நினைத்தார். முயற்சி பலிக்கவில்லை. கலவரத்தைத் தடுக்க அனுப்பிய காவல்துறை தோல்வியைத் தழுவித் திரும்பியபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. தெருவில் இறங்கிப் போராட வந்த கூட்டம், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முற்பட்டது. ராணுவ டாங்குகள் கடந்து செல்லப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழியேற்படுத்திக் கொடுத்தனர். சிலர் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அருங்காட்சியகங்களையும், அரசு அலுவலகங்களையும் வீடுகளையும் சூறையாட முற்பட்டபோது, அவர்கள் களையெடுக்கப்பட்டனர்.இத்தனைக்கும், இந்த மக்கள் புரட்சிக்கு எந்தவிதத் தலைமையும் கிடையாது. முன்கூட்டியே திட்டமிடவோ, கோரிக்கைகளை முன்வைத்து அறிவிப்போ கிடையாது. மக்களின் ஏகோபித்த குரல் - ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பது மட்டுமே!மேற்காசியா முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாகப் பரவத் தொடங்கி இருக்கும் இந்த மக்கள் எழுச்சியின் பின்னணி வியப்புக்குரியது. நம்ப முடியாதது. டுனீஷியாவில் காவல் துறை ஓர் இளைஞரை நியாயமற்ற முறையில் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டார். தனது மகனின் மரணத்துக்குக் காரணமான காவல்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்தார் அவரது தாய். தொலைக்காட்சிச் சேனல்களிலும், இணையதளத்திலும் வெளியானதைத் தொடர்ந்து அந்தத் தாயின் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு வலுத்தது. அந்தத் தாயைப்போலவே பாதிக்கப்பட்டிருந்த பலரும் தெருவில் இறங்கி அராஜக ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். விளைவு? டுனீஷியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.டுனீஷியாவில் மகனை இழந்த ஒரு தாயின் கண்ணீர்தான் இன்று மேற்கு ஆசியாவின் சர்வாதிகார ஆட்சியாளர்களை ஒருவர்பின் ஒருவராகத் துடைத்து அகற்றும் படையாக, ஒரு சுனாமியாக உருவெடுத்திருக்கிறது. டுனீஷியா, எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீனம், லெபனான், அல்ஜீரியா என்று ஒன்றன்பின் ஒன்றாக, "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று பாரதி கூறுவானே அதுபோல காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.எகிப்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டு அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராணுவம் அடுத்த ஆறு மாதங்களில் முறையான தேர்தலை நடத்தி, மக்கள் மன்றத்தின் தீர்ப்புக்கேற்ப, ஜனநாயக ஆட்சியை நிறுவ வாக்குறுதி அளித்திருக்கிறது.சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்குத் துணை நின்றவர்கள். ஊழல், வியாபாரத் தொடர்புகள் என்று கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள். இவர்களிடம் கைமாறி இருக்கும் ஆட்சியை, இந்தப் பழம் பெருச்சாளிகள் கைநழுவ விடுவார்களா என்பது   பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள், தாங்கள் உருவாக்கி இருக்கும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மேற்கு ஆசியாவிலுள்ள எந்த ஆட்சி மாற்றமும் அச்சுறுத்தலாகிவிடக் கூடாது என்பதில்தான் குறியாக இருக்கும். மேலும், எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆசியாவைத் தங்களது பிடியிலிருந்து நழுவவிடுவதையும், மக்களாட்சியின் மூலம் தங்களுக்குக் கைப்பாவையாகவும், தங்களுடன் ஒத்துழைப்பவராகவும் இல்லாத தலைமை ஏற்படுவதையும் இந்த மேலைநாடுகள் விரும்பாது. ஹோஸ்னி முபாரக்கை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சி ஏற்படுவதைத்தான் அமெரிக்கா ஆதரிக்கிறதே தவிர, ஐ.நா.வின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தி மக்களாட்சியை நிலைநிறுத்த உதவவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.எழுச்சியின் பலத்தை மேற்காசிய மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். ஆட்சி மாற்றம் காட்சி மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்கிப் போராட முடியும் என்கிற தைரியம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அதுவே போதும்.நல்லாட்சி இல்லாமல் போனால், மேற்காசியாவில் ஏற்பட்டிருப்பதுபோன்ற எழுச்சி இனி உலகின் எல்லா பகுதிகளிலும் எழத்தான் போகிறது. ஒரு தலைவர் இல்லை என்பதால் போராட்டங்கள் எழுவது தடைபடாது என்பதையும், மக்கள் தீர்ப்புக்கு எதிராகவும், அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும் உலகின் எந்தப் பகுதியிலும் இனி "சுயநல' ஆட்சியாளர்கள் பதவியில் தொடர முடியாது என்பதையும் உணர்த்தி இருக்கிறது எகிப்தில் எழுந்த யுகப் புரட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக