மக்கள் நலனில் கருத்து செலுத்தும் மக்களாட்சி வேண்டுமென்றால் நெடுமா வேண்டுவதுபோல் மக்கள் தங்கள் பொறுப்புரிமையை உணர வேண்டும். வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால்தான் நேர்மையான சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்கு நேரப் பயன்களுக்கு ஆசைப்பட்டு ஏனோதானோ என்று வாக்களித்தால் நாடு மேலும் மோசமாகும். மக்கள் தாங்கள் விரும்பும் கட்சித் தலைமைக்குக் கொத்தடிமைகளாக இல்லாமல் நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களைக் கட்சிகள் முடிவெடுக்கும் முன்னரே இதனை உணர்த்தி அனைத்துக் கட்சியினரும் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முயல வேண்டும். தமிழர்களையும் தமிழையும் அழிப்போருக்கு வாக்களிக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப்.12: தங்களது வரிப்பணம் கொள்ளை போவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். தமிழர் பண்பாட்டுப் பெருமன்றம் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது: அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் இப்போது வாரிசுகளை முன்னிறுத்துகிறார்கள். மன்னராட்சி மீண்டும் நடைபெறுவது போல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள அறைகூவல். மக்கள் இதைச் சந்திக்கவில்லை என்றால் ஜனநாயகம் அழிந்துபோகும். வாக்காளர்கள் எந்த அளவுக்குத் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்களோ, அதற்கேற்ற அளவுதான் பிரதிநிதிகள் வருவார்கள். வாக்காளர்கள் நேர்மையாகத் தகுதியைப் பார்த்து மட்டுமே வாக்களிக்க வேண்டும். பணம், சலுகைகள், பரிசுகள் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதன் மூலம் மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்ததால்தான் 1.76 லட்சம் கோடி ஊழல் நடக்கிறது. சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் இதுபோன்ற ஊழல்கள் நடைபெற்றிருக்காது. இப்போது வரிசையாக ஊழல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதில் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. சிறுதொகையைப் பெற்றுக்கொண்டு அளிக்கும் வாக்கு, அந்த மக்களின் எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும். சோழர் கால ஆட்சியில் குடவோலை முறைப்படி, ஊழல் செய்தவர்கள், மக்கள் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் ஆயுள் முழுக்க தேர்தலில் நிற்க முடியாது என்று தடைசெய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற கடுமையான சட்டங்கள், மரபுகள் கொண்டுவரப்பட்டால் ஒழிய ஊழலைத் தடுக்க முடியாது. தங்களது வரிப் பணம் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. மக்கள் பெரிய புரட்சியை நடத்தினால்தான் நல்லாட்சியைப் பெற முடியும். அமைதியான புரட்சியாக இந்தத் தேர்தலைக் கருதி, நேர்மையானவர்களுக்கும், ஈழத் தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்றார். தமிழர் பண்பாட்டுப் பெருமன்றத்தின் தலைவர் டாக்டர் செ.நெ.தெய்வநாயகம் பேசும்போது, "உங்களுடைய ஒவ்வொரு வாக்குச் சீட்டும் மிகப்பெரிய அதிகாரப் புள்ளி. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்' என்றார். பத்திரிகையாளர் அரு.கோபாலன், பேராசிரியர் சீமன்.நாராயணன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக