தமிழை இழித்தும் பழிததும் பேசுபவனுக்குத் தரும் விருதுக் காலம் தமிழன்னைக்கு அவமானக் காலம். காந்தனின் கடந்த காலக் கதைப்படைப்புகளை எண்ணி விருது வழங்கியிருக்கலாம். எனினும் கெட்டுப்போன உணவைத் தூக்கித்தான் எறிய வேண்டும். தமிழால் வாழ்ந்தும் தமிழைப் பழிப்பவனுக்குத் தந்த விருது, தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்னும் பாவேந்தர் பாரதிதாசன் உறுதிமொழிக்கு முரணானது. தமிழன்னையை வெட்கித்தலைகுனியச் செய்த விருது வழங்கிய காலம் பொற்காலமல்ல; போதாக்காலம்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப்.13: எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் கருணாநிதி என எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார். தமிழக அரசின் சார்பில் கவிஞர் பாரதி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆற்றிய ஏற்புரை:தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி. அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால்தான் வெளிப்படுத்த முடிகிறது. எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் அவர். அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழுக்கும், கலைக்கும் செய்த பணிகளை அசை போடுவதற்கு நான் பயின்றுள்ளேன். இன்னும் பல எழுத்தாளர்களை வருங்காலத்தில் அவர் கௌரவப்படுத்த வேண்டும் என்றார்.விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியது: விருது பெறுவதற்கு ஒரு பெருமை வேண்டும். அவ்வாறு பெறுகிறவர்கள் யார் கொடுத்தாலும் பெற மாட்டார்கள். விருது தருகிறவர் யார் என கேட்பார்கள். அப்படி கேட்டு விருதுகளை நிராகரித்தவர்கள் அதிகம். முதல்வர் கருணாநிதி கொடுத்தால் எந்த கலைஞனும் விருதை ஏற்று கொள்வான். கலைமாமணி விருதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 1967-ல் அண்ணா கையால் விருது பெற்றவர்தான் முதல்வர் கருணாநிதி. அன்று கலைமாமணி பெற்றவர்; இன்று கலைமாமணி விருது வழங்குகிறார். இந்த விருதுகள் எல்லாம் பெருமைமிக்க விருதுகள். ஜெயகாந்தன் இந்த மேடையில் பேசும் போது, இது தமிழர்களின் பொற்காலம் எனக் குறிப்பிட்டார். முதல்வர் கருணாநிதியின் ஆட்சி ஜெயகாந்தன் குறிப்பிட்டதை போல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொற்காலமாகத்தான் திகழ்கிறது. ஒரு சமுதாயம் உயிரோடு இருப்பது வேறு. உயிர்ப்போடு இருப்பது வேறு. உயிரோடு இருக்க உணவு, பாசம், செல்வம் இருந்தால் போதும். உயிர்ப்போடு இருக்க உணர்வு முக்கியம். அந்த உணர்வுக்கு கலை, கலைஞர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தை கொடுப்பது முதல்வர் கருணாநிதி. இந்த கலைமாமணி பெற்ற படத்தை, விருதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பேரன், பேத்தி என உங்கள் பரம்பரை மகிழும் என்றார் கவிஞர் வைரமுத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக