திங்கள், 14 பிப்ரவரி, 2011

good period of poormen is golden period- kalaignar said: ஏழைகளின் நற்காலமே பொற்காலம்': முதல்வர்


சமசுகிருத அரங்கத்திலே தமிழை வேண்டுமென்றே இழித்தும் பழித்தும் பேசியவனை எங்ஙனம் நாணயமாக நேர்மையாகக் கருததுரை கூறுபவராகக் கலைஞர் எண்ணினார் என்பது வியப்பாக உள்ளது. தாயையே பழிப்பவன் காலம் மாறினால் வேறுவகையாகப் பேசுவது இயல்பு. நல்ல விருதை வீணாக்கி விட்டார் கலைஞ்ர். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னை, பிப். 13: ஏழை, எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, அதுவே பொற்காலம் ஆகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.தமிழக அரசின் சார்பில் "கலைமாமணி' விருது, சின்னத்திரை விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த விருதுகளோடு, எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு "பாரதி' விருது, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு "எம்.எஸ்.சுப்புலட்சுமி' விருது, பத்மா சுப்பிரமணியத்துக்கு "பாலசரசுவதி' விருது ஆகிய விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எழுத்தாளர் ஜெயகாந்தன் இது தமிழர்களின் பொற்காலம் என்று குறிப்பிட்டார்.பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஏழை, எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, அது எப்போது நீடிக்கிறதோ அதுதான் பொற்காலம் ஆகும்.ஜெயகாந்தன் நாணயமாக, நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர். எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல், பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் ஜெயகாந்தன்.அவர் பொற்கால ஆட்சி என்று சொன்னதை, தமிழர்களுக்கு இது பொற்காலம் என்று கூறியதை, இங்கே உங்களுக்கு வழங்கிய விருதுகள், பரிசுகளை விட, எனக்கு வழங்கப்பட்ட சிறந்த பரிசாக கருதுகிறேன். ஒருகாலத்தில் எங்களைப் போன்றவர்கள் எழுதி, இயக்கத்தின் பத்திரிகைகளில் அது வெளிவந்தபோது, ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல. அவர் இன்று எங்களை ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறார். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். தேவையில்லாத வெறுப்பு இருக்காது. இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு எழுதவேண்டுமே என்று நான் எண்ணியதுண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு என்னுடைய எழுத்துகள் இருக்கின்றன. இந்த விழாவில் பொற்காலம் என்று குறிப்பிட்டார். பொற்காலத்தை கற்காலம் ஆக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.இதை பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தன் போன்றவர்களின் எழுத்துகள் பயன்பட்டாலும், இது பொற்காலமாகவும் இருக்க வேண்டாம்; கற்காலமாகவும் இருக்க வேண்டாம்; தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும்.
முதல்வரிடம் விருது பெறும் தேவயானி, அனுஷ்கா, தமன்னா, சரண்யா, ஆர்யா.
இப்போது சின்னத்திரை விருதுகள் உள்பட 125 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலவசங்களை வாரியிறைப்பதைப் போல, கருணாநிதி விருதுகளை வாரியிறைக்கிறார் என்று பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலவசங்கள் என்று கூறி இன்று விருது பெற்றவர்களை அவர்கள் இழிவுப்படுத்தியுள்ளார்கள்.இலவசம் ஓர் ஏழைக்குக் கிடைத்தால், இல்லாதவனுக்குக் கிடைத்தால் என்ன மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை இந்த விருதுகளை உங்களுக்கு வழங்கிய நான் அடைகிறேன்.இந்த ஆண்டு 125 விருதுகள் வழங்கியிருக்கிறேன். அந்தப் பத்திரிகை கிண்டல் செய்ததற்குப் பிறகு, நீங்கள் எல்லாம் மனது வைத்து நான் மீண்டும் 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றால், 125 அல்ல, அடுத்த ஆண்டு 225 விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன் என்றார் கருணாநிதி.செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் இராம.நாராயணன், உறுப்பினர்-செயலர் இளையபாரதி, சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் குஷ்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பேசினர். விழா துளிகள்
முதல்வரிடம் விருது பெறும் சரோஜா தேவி, ராதிகா, நளினி, ரோகிணி, கருணாஸ்.
விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதைப் பெற்று ஏற்புரை ஆற்றிய இசையமைப்பாளர் இளையராஜா, "நான் இங்கு விருது வாங்குவதற்காகதான் வந்திருக்கிறேன். பேச வரவில்லை.  இந்த விருதைப் பற்றி என்ன சொல்ல, என்றவர், ""காற்றினிலே வரும் கீதம்..'' என்ற  எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிரபல பாடலைப் பாடி உரையை நிறைவு செய்தார்.2008, 2009, 2010-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், 2009, 2010-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் உள்பட விழாவில் 125 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா, ரோகிணி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோருக்கும், எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, ராஜேஷ்குமார், ராணிமைந்தன் உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.  விழாவுக்கு பார்வையாளராக வந்த கவிஞர் வைரமுத்து, திடீரென மேடைக்கு அழைக்கப்பட்டார். இதனால் ஒரே மேடையில் பல ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்துவும், இளையராஜாவும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தும் இருவரும் வாழ்த்துகளை பறிமாறிக் கொள்ளாததோடு, பேச்சின் போதும் ஒருவரையொருவர் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை.ஆர்யா, அனுஷ்கா, தமன்னா, சுகன்யா, ராதிகா, தேவயானி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுக்கு விழாவில் முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, ராஜேஷ்குமார், ராணிமைந்தன் உள்ளிட்ட பலருக்கு இருக்கைகளில் முன் உரிமை இல்லை.கலைமாமணி விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கிய பிறகு ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் விழாவில் இருந்து புறப்பட்டு சென்றதால் இருக்கைகள் எல்லாம் வெறுமையாக காணப்பட்டன. எழுத்தாளர்களும், திரைத்துறை சாராத பிற கலைஞர்களும் விழா முடியும் வரை இருந்தனர்.இருக்கைகள் வெறுமையாக இருந்ததை தன் பேச்சில் சுட்டிக் காட்டினார் நடிகை குஷ்பு, ""முதல்வர் கருணாநிதியின் கையால் விருது பெற்றவர்கள் அவரின் சிறப்புரையை கேட்காமல் சென்றது வருந்ததக்கது'' என்றார் அவர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக