Dr.Ramdoss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dr.Ramdoss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜனவரி, 2013

இலங்கையை க் காப்பாற்ற இந்தியா, அமெரிக்கா சதி: இராமதாசு

இலங்கையை க் காப்பாற்ற இந்தியா, அமெரிக்கா சதி: இராமதாசு



போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையைக் காப்பாற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக சதிசெய்வதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது, தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது உள்ளிட்ட செயல்களுக்காக இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் சில வல்லரசுகளின் துணையுடன் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பி வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்தி தவறு செய்த ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்காத சிங்கள அரசு, ஒருபுறம் போர் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கிவருகிறது; மற்றொருபுறம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுவருகிறது.
இதற்காக இலங்கை அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழர் நலனை விட இலங்கையில் உள்ள இயற்கை வளங்கள் மீதும், அந்நாட்டு கடற்பரப்பு மீதும்  அதிக பாசம் வைத்துள்ள அமெரிக்கா, போர் குற்றச்சாற்றுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்குடன், அந்நாட்டிற்கு எதிராக, இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மென்மையான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை கண்டிக்கும் வகையில் இத்தீர்மானம் வடிவமைக்கப்படும் போதிலும், அதில், போர்க் குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு மேலும் சில ஆண்டுகள் அவகாசம்  கொடுக்க வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் என்றும், இதன்மூலம் இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை நீர்த்துப் போகச் செய்வது தான் இந்தியா மற்றும் அமஎரிக்காவின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் தில்லி வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீசிடம், போர்க் குற்றச்சாற்றுகளிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதாக இந்திய அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கைப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவடையவிருக்கும் நிலையில், அந்நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு உண்மையான முயற்சிகளை நடத்தாமல், சொந்த லாபத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயல்படுவதும், அதற்கு இந்தியா துணை போவதும் கண்டிக்கத் தக்கது. இலங்கைக்கு எத்தனையோ வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அது திருந்துவதற்கோ அல்லது வருந்துவதற்கோ அறிகுறிகள் தென்படவில்லை. எனவே, இனியும் அந்நாட்டிற்கு அவகாசம் தராமல் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் , இலங்கை மீது உடனடியாக போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவருவது தான் சரியானதாக இருக்கும்.இதை செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து, அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
- என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதன், 14 நவம்பர், 2012

இலங்கையின் போர்க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா.: இராமதாசு

இலங்கையின் போர் க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா.:  இராமதாசு

First Published : 14 November 2012 12:37 PM IST
இலங்கையில் போர்க் குற்றம் நடக்கும் போது அதனை வேடிக்கை பார்த்த ஐ.நா. பரிகாரம் தேட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் என்ற கடமையிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் தவறி விட்டது தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தபட்ட உள்விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி யிருக்கின்றன. இலங்கையில் இருந்த ஐ.நா. குழுவினர் ஈழத்தமிழர்களின் உயிர்களை எவ்வளவு துச்சமாக மதித்தனர் என்பது தொடர்பாக அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தவதாக உள்ளன.
“இலங்கையில் பணியிலிருந்த ஐ.நா. அதிகாரிகள் அங்குள்ள தமிழர்களை காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டனர்; 2008ஆம் ஆண்டில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, வடக்கு மாநிலத்திலிருந்து
வெளியேற வேண்டாம் என ஈழத்தமிழர்கள் கண்ணீர் மல்க மன்றாடிய போதும், ஐ.நா. அதிகாரிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்; அவர்கள் அங்கேயே இருந்திருந்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை ஓரளவாவது தடுத்திருக்க முடியும்; இலங்கையில்
அபாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது , அங்கு என்ன நடக்கிறதுஎன்பதை உலகிற்கு தெரிவித்து,இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்று ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு அதன் அறிக்கையில் சாட்டையடி கொடுத்திக்கிறது.
இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போதே அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடி ஏந்தி
சரணடையவரும் தகவல் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மேரி கால்வின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. உயரதிகாரி விஜய் நம்பியார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படுவார்கள் என்று விஜய் நம்பியார் உறுதியளித்திருந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதே இலங்கை அரசுக்கு ஐ.நா. மற்றும் இந்திய அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது அம்பலமானது. இந்த நிலையில் ஐ.நா.வின் தவறு இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் அமைதியை நிலைநிறுத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் பாதுகாத்தல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுதல் ஆகியவை தான் ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம். ஆனால், ஈழத்தமிழர் பிரச்னையில் இந்தக் கடமைகளில் ஒன்றைக் கூட ஐ.நா. செய்யவில்லை. மொத்தத்தில் உலகின் மனசாட்சியாக செயல்படவேண்டிய ஐ.நா. இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறது என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
லிபியா, சிரியா போன்ற எண்ணெய் வள நாடுகளில் ஏதேனும் நடந்தால் மட்டும் அங்கு ஆதிக்க நாடுகளின் பிரதிநிதியாக தலையிடும் ஐ.நா., அப்பாவி தமிழர்கள் விஷயத்தில் மட்டும் கண்ணை
மூடிக்கொண்டு இருந்தது கண்டிக்கத் தக்கது. ஐ.நா. மீது உலக மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், இலங்கை விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் நோக்குடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும். இலங்கை ஆட்சியாளர்களின் கொடூரப்பிடியிலிருந்து ஈழத்தமிழர்களை காக்கும் நோக்குடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

காவிரி: மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக, அக்டோபர் 15ஆம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையமும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் புது தில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரும் 16 முதல் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மொத்தம் 8.85 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான துருவ் விஜய்சிங் ஆணையிட்டுள்ளார்.
ஆனால், வழக்கம் போலவே, இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறி, கூட்டத்திலிருந்து கர்நாடக தலைமைச் செயலாளர் வெளிநடபு செய்திக்கிறார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற கண்காணிப்புக் குழுவின் உத்தரவு ஆராயாமல் பிறப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் மத்தியக் குழுக்கள் நேரில் ஆய்வு செய்து, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கர்நாடகத்தில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் அறிக்கை அளித்ததன் அடிபடையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிக்கிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்திற்கு தருவதற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகம் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை என்பதையே தங்களின் சாதனையாக காட்டி, வரும் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கர்நாடக அரசு இவ்வாறு செயல்படுகிறது. தங்களின் சுயநலனுக்காக தமிழக விவசாயிகளின் நல னை பறிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் கொடூர மனப்பான்மை கடுமையாக கண்டிக்கத் தக்கது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசு, தற்போது கண்காணிப்புக் குழுவின்
ஆணையையும் ஏற்க மறுத்திப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு மீண்டும் ஒரு சவால் விடுத்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாட்டின் ஒருமைப்பாட்டிலும், கூட்டாட்சி தத்துவத்திலும் அக்கறை உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில் அரசியல் சட்டத்தின் 53ஆவது பிரிவின்படி கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடக அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்றிருப்பதும், கர்நாடக முதல்வர் அளித்த நினைவுப்பரிசை ஏற்றுக் கொண்டிருப்பதும், கர்நாடகத்தின் அரசியல் சட்ட மீறலை அங்கீகரிப்பதைபோல அமைந்துவிடும்.
அரசியல் சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசு மீது இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில், மத்திய அரசு கேலிப் பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக மத்திய அரசுக்கு அரசியல்ரீதியிலான நெருக்கடிகளை தமிழகம் தரவேண்டும். இது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி தமிழக அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. 2003ஆம் ஆண்டில் இதேபோன்று காவிரி பிரச்சினை தீவிரமடைந்த நிலையில்,பா.ம.க. தான் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு நியாயம் வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டது. அதைவிடக் கடுமையான சூழல் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். இல்லாவிட்டால், இந்த பிரச்னையில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

கருநாடகத்துக்குப்படை அனுப்புக - இராமதாசு

கருநாடகத்துக்கு இராணுவத்தை அனுப்பி அணையைத் திறக்க வேண்டும்: இராமதாசு

First Published : 09 October 2012 12:38 PM IST
கர்நாடகத்துக்கு இராணுவத்தை அனுப்பி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடபட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு திடீரென நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தி விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறுவை சாகுபடி பொய்த்துபோனது. அதன்பின் சம்பா பயிரையாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட போராட்டத்தின் பயனாக, காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் இதை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்த பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து தான் தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் திறந்து விடபட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை தண்ணீர் திறந்து விடபட்டால், சம்பா பயிரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடகம் நிறுத்தியிருப்பது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயலாகும்.
கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடபடுவது நிறுத்தபட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறுவதை ஏற்க முடியாது.
கடந்த 4ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள அணைகளில் 65 டி.எம்.சி, கால்வாய் அமைப்புகளில் 60 டி.எம்.சி என மொத்தம் 125 டி.எம்.சி தண்ணீர் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இது கர்நாடகத்தின் தேவையைவிட அதிகமாகும். அதேநேரத்தில் மேட்டூர் அணையில் வெறும் 34 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் அடுத்த இரு வாரங்களுக்கு கூட போதுமானதல்ல என்ற நிலையில், தமிழக உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, கர்நாடகமே தானாக முன்வந்து தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காக கர்நாடக அரசியல் கட்சிகள் அங்குள்ள மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, அவர்களை தமிழகத்திற்கு எதிராக போராட வைத்துள்ளனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை பிரதமரும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே கிஷ்ணராஜ சாகர் அணையை கர்நாடக அரசு மூடியிருப்பது பிரதமரையும், உச்சநீதிமன்றத்தையும் மட்டுமின்றி, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அவமதித்துவிட்ட கர்நாடகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
அணைகளின் பாதுகாப்புக்காக இராணுவத்தை நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இப்பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியானதல்ல.
கர்நாடகத்திலுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒரே அணியில் திரண்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. கர்நாடக அரசு இதுவரை மொத்தம் 3 முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ அதன் மனம்போன போக்கில் செயல்பட்டு வருகிறது.
இதுவே தமிழகத்தின் பலவீனமாக பார்க்கப்படும். ஒரு கையால் ஓசை எழுப்ப முடீயாது. ஊர் கூடினால் தான் தேரை இழுக்க முடியும் என்பதை உணர்ந்து இப்பிரச்சினையில் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

+++++++++++++++++++++++
கருநாடகத்துக்கு இராணுவத்தை அனுப்பி க் காவிரியில் தண்ணீரை த்திறக்க வேண்டும்: மரு.இராமதாசு
கர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சென்னை, அக். 9-

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு திடீரென நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தி விட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த 4-ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள அணைகளில் 65 டி.எம்.சி, கால்வாய் அமைப்புகளில் 60 டி.எம்.சி. என மொத்தம் 125 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது கர்நாடகத்தின் தேவையைவிட அதிகமாகும்.

அதே நேரத்தில் மேட்டூர் அணையில் வெறும் 34 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் அடுத்த இரு வாரங்களுக்குகூட போதுமானதல்ல என்ற நிலையில், தமிழக உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, கர்நாடகமே தானாக முன்வந்து தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும்.

ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காக கர்நாடக அரசியல் கட்சிகள் அங்குள்ள மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, அவர்களை தமிழகத்திற்கு எதிராக போராட வைத்துள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை பிரதமரும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே கிருஷ்ணராஜ சாகர் அணையை கர்நாடக அரசு மூடியிருப்பது பிரதமரையும், உச்சநீதிமன்றத்தையும் மட்டுமின்றி, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.

இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அவமதித்துவிட்ட கர்நாடகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

அணைகளின் பாதுகாப்புக்காக இராணுவத்தை நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்திலுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒரே அணியில் திரண்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

கர்நாடக அரசு இதுவரை மொத்தம் 3 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ அதன் மனம்போன போக்கில் செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தின் பலவீனமாக பார்க்கப்படும்.

ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது. ஊர் கூடினால்தான் தேரை இழுக்க முடியும் என்பதை உணர்ந்து இப்பிரச்சினையில் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

வெள்ளி, 5 அக்டோபர், 2012

இலங்கை த் தளபதியின் பேச்சு: இராமதாசு கண்டனம்

இலங்கை த் தளபதியின் பேச்சு: இராமதாசு கண்டனம்

First Published : 04 October 2012 04:17 PM IST
இலங்கை ராணுவ தளபதி மற்றும் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான ஜெகத் ஜெயசூர்யாவின் பேச்குக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறப்புப் படையைச் சேர்ந்த 45 உயரகாரிகள் டிசம்பர் மாதம் இந்தியாவில் பயிற்சி பெற வரவிருப்பதாகவும், முடிந்தால் தமிழக அரசியல்வாதிகள் அவர்களை தடுத்து நிறுத்தட்டும் என்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத் ஜெயசூர்யா கூறினார்.
இது குறித்து இன்று கண்டன அறிக்கை அனுப்பியுள்ள ராமதாஸ், இலங்கைப் போரின் போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற ஜெயசூர்யா, அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை செய்த குற்றத்துக்காக போர்க் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒருவர், இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பேசத் துணிந்திருப்பதற்குக் காரணம் இலங்கை அரசுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுதான்.
இதைப் பார்க்கும்போது, இந்தியா ராஜபக்சேவின் காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறதா? என்ற வினா எழுகிறது. இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.
மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதே இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என மத்திய அரசு கருதினால், இந்த பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் பயிற்சி பெற வரும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தமிழீழமே தீர்வு: இராமதாசு

தமிழீழமே தீர்வு:  இராமதாசு

தினமணி First Published : 12 Aug 2012 05:37:45 PM IST


சென்னை, ஆக.12: இலங்கை பிரச்னைக்கு தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.எனினும், இலங்கையுடனான இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் மாநாட்டில் எதையும் பேசக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் ஈழம் பற்றி பேச மறைமுக தடை விதித்துள்ளது. இப்படித் தடை விதிப்பதும், மாநாடு நடத்த மாநில அரசு அனுமதி மறுப்பதும் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்வது என்பது நடைமுறை சாத்தியமே இல்லாத செயலாகும். இந்திரா காந்தி இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு எப்போதோ தனி நாடு கிடைத்திருக்கும்.ஈழத் தமிழர் நலனுக்காக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.இலங்கை பிரச்னைக்கு தமிழீழமே தீர்வாக இருக்கும். தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

செவ்வாய், 22 நவம்பர், 2011

அணை (டேம்) 999 திரையிட அனுமதிக்காதீர்: வைகோ எச்சரிக்கை



சென்னை, நவ.22: டேம் 999 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படுமானால் அதை தடுத்து நிறுத்த மதிமுக அறப்போரில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே படுநாசம் செய்யக்கூடிய விதத்தில், ஐந்து மாவட்டங்களுக்குப் பாசனத்துக்கு நீரும், குடிநீரும் வழங்கி வருகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே விடுவது என்று கேரள அரசு முடிவு எடுத்து விட்டது. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 -ல், இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் அளித்த தீர்பபைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று கேரளம், சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. தற்போது, அணையை உடைப்பதற்கு, 40 கோடி ரூபாய்களை ஒதுக்கி விட்டது. எந்த நேரத்திலும், தென்பாண்டி மண்டலத்துக்கு அந்த அபாயம் நேரிடலாம்.கேரளம் கட்டுவதற்குத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர வாய்ப்பு இல்லை. ஏனெனில், புதிய அணை, பள்ளத்தில் அமையும்.கேரள அரசின் அக்கிரமப் போக்கை, மத்திய அரசு கண்டுகொள்ளாததுடன், ஊக்குவிக்கும் வகையில், கேரளத்தினர் தயாரித்துக் கொடுத்த ஒரு அணை மசோதாவை நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டு விட்டது. கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999.  இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர். 1975 இல், சீனாவில், பாங்கியாவோ எனும் அணை உடைந்ததைப் பின்னணி அமைத்து உள்ளனர்.  இந்திய, ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு, மலையாளிகள் முதலீடு செய்து, இப்படத்தைத் தயாரித்து உள்ளனர்.அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், இலட்சக்கணக்கான மக்கள் சாவது போலவும் கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து, ஐந்து இலட்சம் குறுந்தகடுகளை, கேரளம் முழுமையும் வழங்கினர். முதல்வரின் இணையதளத்திலேயே இந்தப் போலிக் காட்சிகளைக் காண்பித்தனர். அதைத்தான் இப்போது, பிரமாண்டமான திரைப்படக் காட்சியாக அமைத்து வெளியிடுகின்றனர். அரிசி, பால், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவுப் பண்டங்களும் கேரளத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து வருகின்ற நம் தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட, என்ன நெஞ்சழுத்தம் அவர்களுக்கு இருக்க வேண்டும்? முல்லைப் பெரியாறு அணை, எத்தகைய நில நடுக்கத்துக்கும் ஈடு கொடுக்கக்கூடிய வலிமையோடு உள்ளது என்பதைத் தமிழகத்துப் பொறியாளர்கள், ஆணித்தரமான ஆதாரங்களோடு குறுந்தட்டாக ஆக்கி உள்ளனர். ஆயினும், நமக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, நம் வாழ்வில் மண்ணைப் போட, கேரளம் முடிவு செய்து விட்டது. நம்மைச் சீண்டிப் பார்க்கிறார்கள். நம் முகத்திலேயே மிதிக்கவும் துணிந்து விட்டார்கள். கேரள மக்களை நாம் எதிரிகளாகக் கருதியது இல்லை. ஆனால், இப்பிரச்சினையில் தொடக்கத்தில் இருந்தே அங்கு உள்ள அரசியல் கட்சிகளும், சில அக்கறை உள்ள சக்திகளும், ஒன்றிரண்டு பத்திரிகை நிறுவனங்களும், எப்படியும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என முடிவு செய்து, அந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றார்கள். இந்தப் படத்தில், புராண காலத்துச் சம்பவங்களையும், மனிதர்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் இணைத்து, நம் முல்லைப் பெரியாறு அணை உடைவதால் பெருந்துயர் விளைந்தது என்று சித்தரித்து உள்ளனர். இதனைப் புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் என்று விளம்பரம் செய்து உள்ளனர். தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யயும் கேரளத்தின் திட்டத்தை,  எக்காளத்தோடு வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை, தமிழ்நாட்டில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, கடுகு அளவு அக்கறையேனும் இந்திய அரசுக்கு இருக்குமானால், இந்தியாவில் எங்கும் திரையிட, மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. ‘இந்தத் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்காதீர்கள்’ என்று, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு, இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்களுக்குக் கடிதமும் அனுப்பி உள்ளேன். அனைத்தையும் மீறி, தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மறுமலர்ச்சி தி.மு.க. அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கின்றேன்.
'டேம் 999' படம் வெளியானால் பொது அமைதி பாதிக்கப்படும்: ராமதாஸ்

First Published : 22 Nov 2011 12:40:10 PM IST


சென்னை,நவ.22: கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் டேம் 999 என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும்.முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டேம் 999 திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது. எனவே இந்த திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


செவ்வாய், 1 நவம்பர், 2011

இலங்கையில் பொதுநலநாடுகளின் மாநாடு: மத்திய அரசுக்குஇராமதாசு கண்டனம்


இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

First Published : 31 Oct 2011 02:31:10 PM IST


சென்னை, அக்.31: இலங்கையில் 2013-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கான உரிமையை இந்தியா வாங்கித் தந்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:போர்க்குற்றத்தை இழைத்த ஒரு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று இங்கிலாந்து பிரதமரும், கனடா பிரதமரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில்தான் நடத்த வேண்டும் என்று அறிவிக்க வைத்துள்ளது.இதிலிருந்து இலங்கை தொடர்பான அணுகுமுறையை மத்திய அரசு இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடுவதுடன், அந்த நாட்டு அரசுக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 29 அக்டோபர், 2011

3 பேர் உயிரை காப்பாற்ற அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மரு இராமதாசு கோரிக்கை

3 பேர் உயிரை காப்பாற்ற அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
சென்னை, அக் 29-
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தங்களது கருணை மனுக்களை குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
 
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தமிழக நிலைப்பாடு என்ன? என்ற உயர்நீதி மன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் கருத்து கூற விரும்பவில்லை என்பதே தமிழக அரசின் பதிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. பதில் மனுவின் கடைசி பகுதியில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அதாவது இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அரசின் இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது.
 
மூவரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோது அதை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்தது. அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினோம். முதலில் தயங்கினாலும் பின்னர் எங்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
 
மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் அரசு, ஒட்டு மொத்த தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படக்கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர், அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
 
அதை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இதே போன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, 3 உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் ஒட்டு மொத்த தமிழகமும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவைக் கொண்டாடும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.