வியாழன், 2 மே, 2013

வெட்கக்கேடான செய்தி வேறு இல்லை

இதைவிட வெட்கக்கேடான செய்தி வேறு இல்லை. அரசு வணிக நிறுவனம் அன்று. தாய்மொழிவழிக்கல்வியையே அனைத்து நாட்டுக் கல்வியாளர்களும் வற்புறுத்துகையில் அயல்வழிக்கல்வியை ஊக்கப்படுத்துவது அரசிற்கு இழிவு தேடித்தரும் செயல் ஆகும். தமிழ் நலம் சார்ந்த கொள்கைகளை முதல்வர் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகையில் மாநகராட்சியும் பள்ளிக்கல்வித்துறையும் இவ்வாறு அதற்கு எதிராக நடந்து கொள்வது  முறைகேடானது. தமிழ்வழிக்கல்விக்கு வரவேற்பு இல்லையெனில், காரணம் அறிந்து குறையை நீக்க வேண்டும். அதற்கான ஒரே காரணம், பணி வாய்ப்பு இன்மைதான். எனவே, கடந்த ஆட்சியில் ஒப்புக்குப் போடப்பட்ட தவறான ஆணையை நீக்கித் தமிழ்வழியில் கல்வி கற்றவர்களின் வேலைவாய்ப்பிற்கு முழு முன்னுரிமை அளித்து அதன்பின்பே, தேவையெனில் தமிழ் அறிந்த அயல்மொழிவழிக்கல்வியினருக்கு  வாய்ப்பு அளிக்கப்படும் எனப்புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பகுதி 1 இல் கட்டாயம் தமிழைத்தான் படிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரவேண்டும். . ஆர்வமுள்ளவர்கள் அவரவர்  தேவைக்கேற்ப பிற மொழிகளைக்  க்ற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். ஆனால், கல்வி நிலையங்களை யார் நடத்தினாலும், தமிழ்வழிக்கல்வி மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்ற நிலையைக் கொண்டுவரவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


போட்டியை ச் சமாளிக்க தமிழக அரசு அதிரடி : ஆங்கில வழி க் கல்வியை அதிகரிக்க முடிவு



தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள குறைவான அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு சேர்க்கைக்கு, பலத்த போட்டி நிலவுகிறது.அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போலீசார் பாதுகாப்புடன், விண்ணப்பங்களை வழங்குகின்றனர்.
தனியார் பள்ளிக்கு நிகராக, இந்த பள்ளி இயங்குவது தான், போட்டிக்கு காரணம். ஆசிரியர்களும், முழு ஈடுபாட்டுடன் உழைப்பதால், மாநில அளவிலான இடங்களில், இந்த பள்ளி இடம் பிடிக்கிறது. அத்துடன், தேர்ச்சியும், 100 சதவீதமாக இருந்து வருகிறது.இதேபோன்று, படிப்படியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கிலவழி கல்வி முறையை அறிமுகப்படுத்தி, தரமான கல்வியை வழங்கினால், தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரை இழுக்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கும், 250 பள்ளிகளில், 95 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது, மேலும், 20 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகளை துவக்க உள்ளதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சியைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையும், அதிகளவில், ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவங்க, திட்டமிட்டுள்ளன.கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்த பள்ளிகளில், 640 வகுப்புகள், ஆங்கில வழியில் நடந்து வருவதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், 500 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, சட்டசபையில், இம்மாதம், 10ம் தேதி, பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியாகலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில்,"படிப்படியாக, அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கில வழி கல்வி திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கை, ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும். அந்த வகையில், வரும் கல்வி ஆண்டிலும், கணிசமான அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்குள் இருந்தாலும், இவற்றில், 43 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, 36 ஆயிரமாக இருந்தபோதும், இவற்றில் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, 58.05 லட்சமாகத் தான் உள்ளது.ஆண்டுக்கு ஆண்டு, தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் எடுத்து வரும் நிலையில், போட்டியை சமாளிக்கவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக