செவ்வாய், 30 ஏப்ரல், 2013

நீங்களும்முனைவர் ஆகலாம்!

நீங்களும்முனைவர் ஆகலாம்!
கல்வி உதவி த் தொகை மூலம், எளிதாக முனைவர் பட்டம் பெறும் வழிமுறைகளை கூறும், முனைவர் நா.இளங்கோ: நான், புதுச்சேரியில் உள்ள, காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில், பேராசிரியராக பணியாற்றுகிறேன். பிஎச்.டி., எனும் முனைவர் பட்ட மேற்படிப்புக்கு, முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக படிக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு கல்வித் தகுதியாக, முதுநிலை பட்டம் அல்லது எம்.பில்., எனும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.வசதி குறைந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்றே, ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் முழு நேர மாணவராக சேர்ந்து படிக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு, யு.ஜி.சி., எனும் பல்கலைக் கழக மானியக் குழு தேசிய அளவில் நடத்தும், "நெட்' எனும் தகுதித் தேர்வில் குறிப்பிட்ட, "கட் ஆப்' மதிப்பெண் எடுத்தால், ஜே.ஆர். எஸ்., சான்றிதழ் பெற்று, இந்தியாவின் எந்த பல்கலைக் கழகத்திலும் சேர விண்ணப்பிக்கலாம்.இச்சான்றிதழ் மூலம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக, 16 ஆயிரம் ரூபாயும், புத்தக செலவிற்கு ஆண்டிற்கு, 30 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். எம்.பில்., முடித்தவர்களுக்கு, இரண்டு ஆண்டும், முதுநிலைக்கு, மூன்று ஆண்டுகள் என்பதே, முனைவர் பட்டம் படிப்பதற்கான கால அளவாகும்.நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், தேசிய அளவிலான கல்லூரிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடத்துக்கும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு ஆண்டிற்கு இரு முறை நடைபெறும். மாநில அளவிலான, "ஸ்லெட்' தேர்வால், மாநில அளவிலான பேராசிரியர் பணிக்கே விண்ணப்பிக்க முடியும். பகுதி நேர முனைவர் படிப்பிற்கு, குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், விரிவுரையாளர் அல்லது உதவிப் பேராசிரியராக, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து, நிர்வாகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம். இப்படிப்பிற்கான ஆய்வுகளுக்கு, வழிகாட்டியாக இருப்பவர்கள் தரும் பரிந்துரைகள் முக்கியம் என்பதால், சிறந்த வழிகாட்டிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
 
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக