வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் : முதல்வர்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலைக்
குறைக்கும் வகையில், வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம்
அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா,
சென்னை மாநகர மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் வெளி மாநில மற்றும்
பிற மாவட்ட மக்களின் புழக்கம், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை
ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம்
பேருந்து நிலையங்கள், சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை அமைப்பதில் எனது
தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில்,
எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து
நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில்
ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்கத்தில் இல்லாத
பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில்
இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை
கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தற்போது, தென் மாவட்டங்களுக்குச் செல்லும்
1,250 பேருந்துகள் உட்பட மொத்தம் 2,100 பேருந்துகள் தினம் சுமார் 2,900
தடவை இயக்கப்பட்டு வருகின்றன. இடப் பற்றாக்குறை காரணமாக இந்தப் பேருந்து
நிலையத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கான பணி மனைகள் அமைக்கப்படவில்லை.
இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள் நாள் முழுவதும்
பேருந்து இயக்குமிடம் மற்றும் சாலை ஓரங்களிலேயே நிறுத்தப்படுவதால்
பேருந்துகள் நிலையத்திலிருந்து வெளியே செல்ல நீண்ட நேரமாகின்றது. பண்டிகை
மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவிலான பேருந்துகள்
இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்திற்குள்ளும், சுற்றுப் பகுதிகளில் உள்ள
முக்கிய சாலைப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒப்பந்த
பேருந்துகளுக்கான பேருந்து நிலையம், கோயம்பேடு மொத்த விற்பனை வணிக வளாகம்
ஆகியவையும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இதன் காரணமாக, வாகனங்கள் செல்லும் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் என்ற
நிலையில் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால்
உருவாக்கப்பட்டு வரும் மொத்த உணவு தானிய அங்காடி மற்றும் மெட்ரோ ரயில்
நிலையங்கள் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து
நெரிசலைக் கருத்தில் கொண்டும், இங்கிருந்து செல்லும் பேருந்துகளில்
பாதிக்கு மேல் தென் மாவட்டங்களுக்கு செல்பவையாக இருப்பதைக் கருத்தில்
கொண்டும், தென் மாவட்டங்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகளுக்கென
தெற்கத்திய பெருஞ்சாலை மற்றும் வெளி வட்டச்சாலை ஆகியவற்றிற்கு இடையே
வண்டலூர் - வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வண்டலூர் ரயில்
நிலையத்திற்கு அருகில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வண்டலூரில் புதியதாக உருவாக்கப்படும் இந்த புறநகர் பேருந்து
நிலையத்தில், புறநகர் பேருந்துகளை இயக்குவதற்கான இடம், மாநகரப் பேருந்துகளை
இயக்குவதற்கான இடம், வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடம், போக்குவரத்து
பணிமனை வசதிகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம்,
பொதுமக்களுக்கு தேவையான உணவகங்கள், சிறு கடைகள், பொது கழிப்பிட வசதி ஆகிய
எல்லா வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
இத்திட்டத்தின் மூலம் கோயம்பேட்டின் தற்போதைய நெரிசல் விலகி பயணிகள்
எளிதாகவும், வசதியாகவும், விரைவாகவும் பயணிக்க வழி வகுக்கும் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக