சனி, 4 மே, 2013

இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க நடவடிக்கை!

இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க நடவடிக்கை

இலங்கையில் மனித உரிமைகளைக் காக்கவும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டு வருவதால் அந்நாட்டில் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் காமன்வெல்த் நாடுகளுக்கு இப்போது தலைமை வகிக்கும் ஆஸ்திரேலியா, இலங்கையை இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் பிரண்டன் ஓ'கானர் இருநாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவரிடம், இலங்கை மனித உரிமை விஷயத்தில் எந்த அளவுக்கு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது என எண்ணுகிறீர்கள்?, இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்று சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரண்டன், "இலங்கையில் மனித உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தங்கள் சொந்த மக்களின் நலன்களைக் காப்பது அனைத்து அரசுகளுக்குமே அவசியமானது.
போர்ப் படிப்பினை, நல்லிணக்க ஆணையம் அளித்த பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக அமையும். இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டுமென்றே ஆஸ்திரேலியா விரும்புகிறது' என்றார்.
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனடா அறிவித்துள்ளது. பிரிட்டன் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
எனினும் இலங்கையுடன் நல்லறவு பேணப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
54 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் மாநாடு நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான நடவடிக்கைக் குழு விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. அப்போது இலங்கையில் மாநாட்டை நடத்தக் கூடாது என்று சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக