ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கல்லூரி முதல்வர் கனவுடன் போராடும் பெண் கம்மியர்

கல்லூரி முதல்வர் கனவுடன் போராடும் பெண் கம்மியர்
வடபழனி துரைசாமி சாலையோரத்தில், வாகனங்களுக்கு கீழே படுத்து வேகமாகவும், லாவகமாகவும் பழுது பார்க்கும், பெண் மெக்கானிக் ஜெசிந்தாவின் செயல்பாடுகள், பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கத் தான் செய்யும். ஆனால் அவருக்கு, வாகனங்களில் பழுது பார்க்கும் பணி அனைத்தும் அத்துப்படி.
வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் அவரிடம் உரையாடியதில் இருந்து...

* வாகனங்களில் என்னென்ன பழுதுகளை பார்க்கிறீர்கள்?

ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிரீஸ் அடிப்பது, ஆயில் மாற்றுவது, கிளட்ச் ஒயர் மாற்றுவது மற்றும் வாகனங்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதுகளை சரி பார்ப்பேன்.

* யாரிடம் தொழில் பழகுனீங்க?

என் கணவர் ஜெயக்குமார் தான் என் குரு; அவர் ஆட்டோ ஓட்டுனர். வாகனங்களில் பழுது பார்ப்பதில் அடிப்படையான விஷயங்களையும், வாகனங்களுக்கு கிரீஸ் அடிப்பது குறித்தும் சொல்லி தந்தார். அதன் பின், அவ்வப்போது பழுது பார்த்துக் கொண்டே, நிறைய கற்று வருகிறேன்.

* மெக்கானிக் பணியில் விருப்பம் வந்தது எப்படி?

சூழ்நிலை தான் விருப்பமாக மாறியது. எனக்கு யாரும் உதவ முன் வராத போது, மெக்கானிக் பணியை ஆர்வத்துடன் எடுத்து செய்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், என் மகன், வீட்டின் மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 4 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட போது, நான் வேலை பார்த்த நிறுவனம் எனக்கு உதவவில்லை. போதிய பணம் இல்லாததால், என் மகன் இறந்துவிட்டான். அவனது இறப்பே என்னை, சுய தொழில் துவங்க தூண்டியது. அந்த நிமிடம், அந்த நிறுவனத்தை உதறிவிட்டு, இந்த தொழிலில் இறங்கி விட்டேன்.

* நிறுவனத்தில் வேலை பார்த்தீர்களா?

ஆமாம். டி.எம்.எல்.டி., என்கிற தொழிற்படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில், "சிஸ்டம் ஆப்ரேட்டராக' பணி புரிந்தேன்; பின், எம்.ஏ., முடித்தேன். தற்போது எம்.பில்., படித்து வருகிறேன். பிஎச்.டி., படிக்க வேண்டும் என்பது லட்சியம்.

* படிப்பு, நிறுவன வேலையெல்லாம் உதறிவிட்டு நடைபாதையில் எப்படி...?

துவக்கத்தில் சற்று கூச்சமாக தான் இருந்தது. பழுது பார்ப்பதில் ஆர்வம் வந்ததில், கூச்சம் தானாக போனது. பழுது பார்க்க வருவோரின் பாராட்டுகள், நம்பிக்கையையும், துணிச்சலையும் தந்தன.

* மீண்டும் நிறுவன வேலைகளுக்கு செல்ல விருப்பமில்லையா?

நான் இங்கு பார்க்கும் தொழிலில், தினமும், 500 ரூபாய் கிடைக்கிறது. என் மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருவதற்கும், என் குடும்பத்தை பார்த்து கொள்ளவும் முடிகிறது. பிஎச்.டி., முடித்த பின், மீண்டும் கல்லூரியில் பணி புரியலாம் என்று யோசித்து வருகிறேன். கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து பணிபுரிந்து, கல்லூரி முதல்வர் பதவி வரை உயர வேண்டும் என்பதே என் லட்சியம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக