கடலின் எல்லையை எச்சரிக்கும்!
தமிழக ப் படகுகள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த, ராஜேந்திர பிரசாத்: நான், சிவகாசி பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லூரியில், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில், மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்திய எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் போது, எல்லை தாண்டியதாக மீனவர்களை கைது செய்வது, துப்பாக்கியால் சுடுவது என, இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது.இதற்கு தீர்வு காண, தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டும் போது, எச்சரிக்கை செய்யும் கருவியை கண்டுபிடிக்க, சக கல்லூரி நண்பர்களின் உதவியுடன், முயற்சியை துவக்கினேன். "ஆர்.எப்., டிரான்ஸ்மீட்டர்' எனும், ரேடியோ சிக்னல்களை அனுப்பும் டிரான்ஸ்மீட்டரை, கடற்கரையில் பொருத்தி, அதன் சிக்னல்களை உள் வாங்கும், "ரிசீவர்' கருவியை, மீனவர்கள் கடலுக்கு செல்ல பயன்படுத்தும் படகுகளில் பொருத்த வேண்டும். ரிசீவரை படகில் பொருத்தும் போது, இலங்கை கடல் எல்லை ஆரம்பமாகும், 100 மீட்டருக்கு முன்பே, டிரான்ஸ்மீட்டரில் இருந்து ரிசீவருக்கு சிக்னல் கிடைக்காது. சிக்னல் துண்டிக்கப்பட்டதால், மைக்ரோ கன்ட்ரோலர் மூலம், எச்சரிக்கை மணி ஒலிக்க துவங்கும். இதனால், இலங்கை கடல் எல்லை ஆரம்பமாவதை அறியும் மீனவர்கள், எல்லை தாண்டாமல் உஷாராக திரும்பி விடலாம். எச்சரிக்கை மணியின் ஒலி கேட்காமலோ அல்லது எல்லை மீறி சென்றாலோ, கப்பலின் என்ஜினை, தானாகவே, "ஆப்' செய்து, இரண்டு நிமிடத்திற்கு பின்னரே, கப்பல் இயங்கத் துவங்கும். இரண்டு விதமான எச்சரிக்கை செய்வதால், மீனவர்கள் கடலுக்கு பாதுகாப்பாக செல்லலாம்.இரவிலும், பகலிலும் இயங்கும் இக்கருவியை தயாரிக்க, 6,000 ரூபாய் செலவானது. பல மீனவர்களும் இக்கருவிக்கு ஆதரவு தருகின்றனர். சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா அவர்களும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரேடியோ சிக்னல் தரும் கருவிகள் வாங்க, 75 சதவீத மானியம் தருவதாக அறிவித்துள்ளார். தொடர்புக்கு: 81222 20603.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக