மாற்று ப் பயிரிலும் சாதிக்கலாம்!
மாறி வரும் விவசாய தொழிலில், ஜாதிக்காய் போன்ற மாற்று பயிரிலும் லாபமீட்டிய சுப்ரமணியராஜா: நான், தென்காசி பகுதியைச் சார்ந்தவன். என் நண்பர் வீட்டிற்கு சென்றபோது, ஜாதிக்காய் மரத்தை பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டு, இது எந்த சூழலிலும் வளரக் கூடியதா, என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில், ஜாதிக்காய் பசுமை மாறாத தாவர வகையைச் சார்ந்தது. 1,000 மீ., உயரமுள்ள மலைப்பகுதியில், ஆண்டிற்கு, 150 செ.மீ.,க்கும் மேல் மழை மற்றும் கதகதப்பான ஈரப்பத சூழலில் மட்டுமே வளரும்.ஜாதிக்காய்க்கு நல்ல நிழலான இடம் தேவைப்படுவதால், தென்னை மரங்களுக்கு இடையே, ஒரு ஊடுபயிராக பயிரிட முயற்சித்தேன். 2 அடி நீள அகலம் உள்ள குழியில், 2 கிலோ சாணம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு சேர்த்து, 2 ஏக்கரில் ஜாதிக்காய் கன்றுகளை நடவு செய்து, நான்கு நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில், தண்ணீர் பாய்ச்சினேன்.துவக்கத்தில், கன்றின் வளர்ச்சி மந்தமாக இருந்தாலும், பின்னர் சீராக வளர ஆரம்பித்தது. விதைகள் மூலம் நடவு செய்த கன்றுகள், 7வது ஆண்டிலிருந்தும், ஒட்டுக்கன்றுகள் மூலம் நடவு செய்தது, 4வது ஆண்டிலிருந்தும் மகசூல் தர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்கு, 30 முதல் 40 காய்களும், மரம் நன்கு வளர்ந்த பின் ஆண்டிற்கு, 1,000 முதல், 2,000 காய்கள் என, 50 ஆண்டுகள் வரை மகசூல் தரும்.பொட்டாசியம், யூரியா, வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஆண்டிற்கு மூன்று முறை உரமிட்டு, ஜாதிக்காயில் வெடிப்புகள் தோன்றிய பின், ஆண்டிற்கு இரு முறை அறுவடை செய்கிறேன். ஜாதிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கும், ஜாதிபத்திரி கிலோ, 2,500க்கும், கொட்டைகள் கிலோ, 600க்கும் விற்பனை செய்கிறேன்.உலகம் முழுவதும் ஆண்டிற்கு, 9,000 டன் ஜாதிக்காய்கள் தேவை. எனவே, மாறி வரும் விவசாயத் தொழிலில் மாற்றுப் பயிர் பற்றி சிந்தித்து, ஜாதிக்காய் போன்ற பணப்பயிர்களை சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம். அரசு சார்ந்த தோட்டக்கலைத் துறையினரும், இதற்கு உதவுகின்றனர். தொடர்புக்கு: 94426 32688.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக