புதன், 1 மே, 2013

மே 15இல் சேதுக் கால்வாய்த் திட்ட எழுச்சிநாள் : திமுக

மே 15இல் சேது க் கால்வாய்த்  திட்ட எழுச்சிநாள் பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் “எழுச்சி நாள்” பொதுக்கூட்டங்கள் மே-15 அன்று தமிழகமெங்கும் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
1860ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்படாமல் இருந்த தமிழக மக்களின் 150 ஆண்டுகால கனவுத் திட்டமான ‘சேது சமுத்திரம் திட்டம்’  2007 ஜூன் 2ஆம் நாள் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று திமுக அரை நூற்றாண்டு காலம் வலியுறுத்தி வந்தது.
23-7-1967 அன்று சேது சமுத்திரம் திட்டம், அதன் ஒரு பிரிவாக தூத்துக்குடி துறைமுகத் திட்டம் மற்றும் சேலம் இரும்பாலைத் திட்டம்  கிய திட்டங்களை நிறைவேற்றிடக் கோரி, திமுக  சார்பில் “எழுச்சி நாள்” அறிவித்து, மத்திய அரசினை வலியுறுத்தியது.
ஆனால், ஏறத்தாழ 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், சில பிற்போக்கு சக்திகளின் தூண்டுதல் காரணமாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இடைக்காலத் தடையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தங்களுடைய 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை’யில் மட்டுமன்றி, 2006 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் வலியுறுத்திய அ.தி.மு.க. தற்போது அந்தக் கோரிக்கைக்கு எதிராக மாறி, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசு இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - வேலைவாய்ப்புக்கும் பெரிதும் துணை செய்யும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் மேலும் வளம் பெறும் என்பதை உணராமல், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள ‘சேது சமுத்திரத் திட்டத்தை’ விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திட திமுக  சார்பில் தமிழகம் முழுவதும் “எழுச்சி நாள்” பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டுமென திமுக முடிவு செய்துள்ளது. இதன்படி, மாவட்டத் தலைநகரங்களிலும் - மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் “எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள்” 2013 மே 15ஆம் நாளன்று நடைபெறும் என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக