திங்கள், 29 ஏப்ரல், 2013

பொதுநல அமைப்பில் இலங்கை இடம் பெற இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: வைகோ

பொதுநல அமைப்பில் இலங்கை இடம் பெற இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: வைகோ

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 16ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை நடைபயணத்தை மதிமுக., பொது செயலாளர் வைகோ துவங்கினார். 13 நாட்களாக நடைபெற்ற இந்த நடைபயணம் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் முடிவடைந்தது. நடைபயண நிறைவு நிகழ்ச்சியையட்டி ஈரோடு சம்பத் நகரில் மதிமுக., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மாநில அவைத்தலைவர் துரைசாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொது செயலாளர் சத்யா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பொது செயலாளர் வைகோ பேசியதாவது:
தமிழகத்தில் மதுக்கடைகளால் சீரழியும் தாய்மார்களுக்காகவும், மதுவால் அழியும் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை 5 கட்டமாக நடத்த எண்ணி இதுவரை 3 கட்டமாக நடைபயணம் சென்று 1330 கி.மீ., தூரம் பிரசாரம் செய்திருக்கிறேன். இந்த பிரசாரத்திற்கு தமிழகம் முழுவதும் மக்களிடம் குறிப்பாக தாய்மார்களிடம் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே மதிமுக.,வின் முக்கிய இலக்கு. தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை முறையாக நடத்தாமல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவியை அனுபவிக்க நினைக்கிறார்கள். இதை மதிமுக., வன்மையாக கண்டிக்கிறது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தற்போது மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரால் சட்டத்தை நிறைவேற்ற உள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் இருக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களே அணைகளை பராமரிக்க வேண்டும் என்ற நிலை வரும். அந்த நிலை வந்தால் தமிழகம் முழுவதுமாக அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இச்சட்டத்தை அமலுக்கு வராமல் தடுக்க வேண்டிய கட்டாயம் நம்மிடம் இருக்கிறது.
ஈழப்போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்த்திருக்க முடியாது. பழுக்க காய்ச்சிய இரும்பை உறுப்பில் செலுத்தியது, 16,18 வயது பெண்களை பாலியல் சித்ரவதை செய்தது போன்றவை குறித்து உலக மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தேன். இதுதொடர்பான விசாரணைக்கு என்னை அழைத்த போது 1 மணி நேரம் உலக மனித உரிமை ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்தேன். உலக மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் தொடர்ச்சியாகவே கனடா போன்ற நாடுகள் தற்போது இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளது.
வரும் நவம்பர் 17, 18 ஆகிய தேதி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்குஎதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், மனித உரிமை மீறலுக்கும் கனடா கூட எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தொப்புள் கொடி உறவான தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு ஏன் இன்னும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? காரணம் இந்திய அரசும் இலங்கையுடன் கூட்டுக்கொலையாளியாக செயல்பட்டது தான்.
முன்பு இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பலாலி விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. முன்பும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்கள். இப்போதும், தமிழர்களுக்கு எதிராகவே இந்திய அரசு செயல்படுகிறது. இனியும் இது தொடர்ந்தால் வரும் தலைமுறையினர் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும். எனவே தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு புரிந்து கொண்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று அறிவியுங்கள் அல்லது காமன்வெல்த் அமைப்பிலேயே இலங்கை இடம் பெறக்கூடாது என்று அறிவியுங்கள்.
-இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக