வியாழன், 2 மே, 2013

தமிழை வாழ்விக்கும் கொடை திருக்குறள்!

தமிழை வாழ்விக்கும் கொடை திருக்குறள்!











தமிழை வாழ்விக்கும் கொடைதான் திருக்குறள் என புகழாரம் சூட்டினார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் உள்ள திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் 16-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஆகியவை திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு, ஓய்வுபெற்ற பேராசிரியர் ப. தர்மலிங்கம் தலைமை வகித்தார்.
விழாவில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய நிறைவுரை:
அடுத்த தலைமுறைக்கு திருக்குறளை எடுத்துச் செல்லும் பணியை தொடர்ந்து 16-வது ஆண்டாகச் செய்து வரும் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையை நிறுவி செயல்பட்டு வரும் தயாபரனை பாராட்டுகிறேன்.
உலகில் எத்தனையோ மொழிகள், இனங்கள் உண்டு. அந்தந்த மொழிகளில் இலக்கியங்களும் உண்டு. ஆனால், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும் பொதுவான மறையைத் தந்திருப்பது தமிழினம் மட்டும்தான். அதுதான் திருக்குறள்.
மேலை நாடுகளில் வயதானவர்களுக்கு மறதி நோய் அதிக அளவில் ஏற்படுகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஆய்வு நடத்தியபோது கிடைத்த விடை என்ன தெரியுமா? விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்ற பெயரில் எதையுமே ஞாபகம் வைத்துக் கொள்ளாத நிலையை ஏற்படுத்தி இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆறெட்டு நாற்பத்தி எட்டு என்று மனதால் கணக்குப் போடக்கூட கால்குலேட்டர் தேவைப்படுகிறது என்கிற நிலைமைதான் மறதி நோய் ஏற்படக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இள வயதில் மனனம் செய்வதால் முதுமையில் மறதி நோய் வராது.
திருக்குறளை மனனம் செய்வதன் மூலம் இந்த குழந்தைகளுக்கு இரண்டு முக்கியமான பலன்கள் கிடைக்கும். ஒன்று வாழ்க்கை நெறிகளை அறிந்து கொள்வது, மற்றொன்று முதுமைக்கு அவர்கள் சேர்த்து வைக்கும் ஓய்வூதியமாக மறதி நோய் ஏற்படாது என்பதும்தான் அவை.
திருக்குறளை குழந்தைகள் அர்த்தம் தெரியாமல் படிப்பதால் பலன் உண்டா என்று கேட்கலாம். அனைத்து குறள்களுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு தான் படிக்க வேண்டும் என்பதில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையில் சோதனைகள், இடர்பாடுகள் வரும் போது அவர்கள் அதை எதிர்கொள்ள குறள் வழிகாட்டும். வாழ்க்கை அனுபவங்கள் அவர்களுக்குக் குறளின் பொருளை எடுத்துரைக்கும்.
குழந்தைகள் தற்போது திருக்குறளை மனப்பாடம் செய்வது அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்லும் முயற்சியாகும்.
வீட்டில் குழந்தைகளுக்கு தினந்தோறும் ஒரு திருக்குறளையும், ஆத்திச்சூடியையும் கற்றுக் கொடுங்கள். வீட்டில் தமிழிலேயே பேசுங்கள்.
திருக்குறளைக் கற்றுத் தேர்ந்த பிறகு பாரதியையும், கம்பனையும், இளங்கோவடிகளையும் குழந்தைகள் படித்தார்களானால், அது தமிழைத் தலைமுறை தலைமுறைக்கும் கொண்டு செல்லும் என்றார் அவர்.
போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பித்த 32 குழந்தைகளுக்கும், 500 குறள்களை ஒப்பித்த 35 குழந்தைகளுக்கும், 850 குறள்களை ஒப்பித்த 2 குழந்தைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், அறக்கட்டளை தலைவர் பூவை. பி. தயாபரன் அறிமுக உரையாற்றினார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்) ஆ. புகழேந்தி, பேராசிரியர் ரெ. நடராசன், திருக்குறள் சு. முருகானந்தம், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கி. சிவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு
தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளை தினமணியுடன் இணைந்து நடத்த தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குறள் தினவிழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களிலும் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை போன்று ஏதேனும் ஒரு அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களை தேர்வு செய்து அனுப்பினால், மாநில அளவிலான போட்டியை தினமணி நடத்த தயாராக உள்ளது. அதற்கு எந்த அமைப்புகள் வேண்டுமானாலும் முன்வரலாம். இதை ஒரு வேண்டுகோளாக, அறைகூவலாக இங்கு வைக்கிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான போட்டியை நடத்த முன்வரும் அமைப்புடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கவும், சான்றிதழ்களை வழங்கவும் தினமணி தயாராக உள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக