பொதுநல அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுநல அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2013

பொதுநல அமைப்பு : தலைமையருக்கு முதல்வர் மடல்

பொதுநல அமைப்பு :  தலைமையருக்கு முதல்வர் மடல்







இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
 இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும்.
தமிழகம் சார்பில் அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்புகளும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து விட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிம் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக உறுதியோடு அறிவிக்க வேண்டும்  என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

புதன், 21 ஆகஸ்ட், 2013

பொதுநல அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் : இராமதாசு

பொதுநல அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் : இராமதாசு

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சே மற்றும் போர்ப்படைத் தளபதிகள் மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களும் கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசு அமைதியை கடைபிடித்து வருகிறது. போர்க்குற்ற நாடான இலங்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அங்கு வரும் நவம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் காமன்வெல்த் ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும்  வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஏழு கோடி தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்பது பற்றி மத்திய அரசு இதுவரை எதையும்  கூறவில்லை.
இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தான் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கடந்த மார்ச் மாதம் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்  என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தின. இதுகுறித்து மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுப்பதாக கூறிய மத்திய அரசு,  அண்டை நாட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வெளியுறவு கொள்கை இடமளிக்காது என்று கடைசி நேரத்தில் கூறிவிட்டது. அதேபோல், ஐ.நா மனித உரிமை ஆணையத்திலும் தமிழகத்தின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்தது. ஆனால், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் சுட்டதற்காக பாகிஸ்தானைக் கண்டித்து கடந்த 14-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நான் வரவேற்கிறேன். ஆனால், எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறியதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற அனுமதித்த வெளியுறவுக் கொள்கை, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வருவதற்கு மட்டும் இடம் தராதது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.
அதேபோல் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டாலோ, அந்த நாடுகளை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் இந்தியா தான் தீவிரம் காட்டியிருக்கிறது. காமன்வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலான 65 ஆண்டுகளில் பாகிஸ்தான், ஃபிஜி தீவுகள், ஜிம்பாப்வே, நைஜீரியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. 2007-ஆம் ஆண்டில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டின் ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலக அதிபர் முஷராப் மறுத்தது, ஊடகங்களை அச்சுறுத்தி ஒடுக்கியது, சுதந்திரமாக தேர்தலை நடத்த தடை போட்டது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிடை நீக்கம் செய்தது ஆகியவை தான் காரணமாக கூறப்பட்டன. இந்த குற்றங்களை எல்லாம் இலங்கை அதிபர் இராஜபக்சேவும் செய்திருக்கிறார். கூடுதலாக லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது, பாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இரு முறை நீக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இலங்கைக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுப்பதற்கு மட்டும் தயங்குவது ஏன்? பாகிஸ்தானுக்கு ஒரு நீதி....  இலங்கைக்கு ஒரு நீதியா?
உலக வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் மற்ற எந்த சர்வாதிகாரிகளையும் விட இலங்கை அதிபர் இராஜபக்சே அதிக குற்றங்களை இழைத்திருக்கிறார். இதற்காக சர்வதேச சமுதாயத்தால் தண்டிக்கப்பட வேண்டிய அவர், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி தமக்கு உலகத்தின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்கிறார். ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ததுடன், இந்திய மீனவர்களை தாக்கியும், கொன்றும், கைது செய்தும் கொடுமைப் படுத்திவரும் இராஜபக்சேவை தண்டிப்பதற்கு பதிலாக, காமன்வெல்த் அமைப்பின் நடப்புத் தலைவராக அவர் மகுடம் சூடிக்கொள்வதற்கு இந்தியா துணைபோவது கொலைக் குற்றவாளிக்கு நீதிபதி பதவி தருவதற்கு ஒப்பானதாகும்.
எனவே, உத்தமர் வேடம் போட முயலும் இராஜபக்சேவுக்கு இந்தியா எந்த வகையிலும் துணை போகக் கூடாது. மாறாக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
1) காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக்கூடாது.
2)  வரும் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நட்பு நாடுகள் மூலமாக கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
3) இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
4) இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் ஒன்றாக வாழ வாய்ப்பே இல்லை என்பதால், தமிழர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து, அதை தமிழீழமாக அறிவிப்பது குறித்து ஐ.நா.மன்றத்தின் மூலம்  உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 29 ஏப்ரல், 2013

பொதுநல அமைப்பில் இலங்கை இடம் பெற இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: வைகோ

பொதுநல அமைப்பில் இலங்கை இடம் பெற இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: வைகோ

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 16ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை நடைபயணத்தை மதிமுக., பொது செயலாளர் வைகோ துவங்கினார். 13 நாட்களாக நடைபெற்ற இந்த நடைபயணம் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் முடிவடைந்தது. நடைபயண நிறைவு நிகழ்ச்சியையட்டி ஈரோடு சம்பத் நகரில் மதிமுக., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மாநில அவைத்தலைவர் துரைசாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொது செயலாளர் சத்யா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பொது செயலாளர் வைகோ பேசியதாவது:
தமிழகத்தில் மதுக்கடைகளால் சீரழியும் தாய்மார்களுக்காகவும், மதுவால் அழியும் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை 5 கட்டமாக நடத்த எண்ணி இதுவரை 3 கட்டமாக நடைபயணம் சென்று 1330 கி.மீ., தூரம் பிரசாரம் செய்திருக்கிறேன். இந்த பிரசாரத்திற்கு தமிழகம் முழுவதும் மக்களிடம் குறிப்பாக தாய்மார்களிடம் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே மதிமுக.,வின் முக்கிய இலக்கு. தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை முறையாக நடத்தாமல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவியை அனுபவிக்க நினைக்கிறார்கள். இதை மதிமுக., வன்மையாக கண்டிக்கிறது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தற்போது மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரால் சட்டத்தை நிறைவேற்ற உள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் இருக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களே அணைகளை பராமரிக்க வேண்டும் என்ற நிலை வரும். அந்த நிலை வந்தால் தமிழகம் முழுவதுமாக அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இச்சட்டத்தை அமலுக்கு வராமல் தடுக்க வேண்டிய கட்டாயம் நம்மிடம் இருக்கிறது.
ஈழப்போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்த்திருக்க முடியாது. பழுக்க காய்ச்சிய இரும்பை உறுப்பில் செலுத்தியது, 16,18 வயது பெண்களை பாலியல் சித்ரவதை செய்தது போன்றவை குறித்து உலக மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தேன். இதுதொடர்பான விசாரணைக்கு என்னை அழைத்த போது 1 மணி நேரம் உலக மனித உரிமை ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்தேன். உலக மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் தொடர்ச்சியாகவே கனடா போன்ற நாடுகள் தற்போது இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளது.
வரும் நவம்பர் 17, 18 ஆகிய தேதி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்குஎதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், மனித உரிமை மீறலுக்கும் கனடா கூட எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தொப்புள் கொடி உறவான தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு ஏன் இன்னும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? காரணம் இந்திய அரசும் இலங்கையுடன் கூட்டுக்கொலையாளியாக செயல்பட்டது தான்.
முன்பு இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பலாலி விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. முன்பும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்கள். இப்போதும், தமிழர்களுக்கு எதிராகவே இந்திய அரசு செயல்படுகிறது. இனியும் இது தொடர்ந்தால் வரும் தலைமுறையினர் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும். எனவே தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு புரிந்து கொண்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று அறிவியுங்கள் அல்லது காமன்வெல்த் அமைப்பிலேயே இலங்கை இடம் பெறக்கூடாது என்று அறிவியுங்கள்.
-இவ்வாறு பேசினார்.