வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 டிசம்பர், 2013

முள்ளிவாய்க்கால் முற்றம்: பழ. நெடுமாறன் வழக்கு

முள்ளிவாய்க்கால் முற்றம்: அரசின் நடவடிக்கைக்கு த் தடை கோரி பழ. நெடுமாறன் வழக்கு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் தலைவர் பழ. நெடுமாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவின் விவரம்:
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் அரசிடம் முறையாக அனுமதி பெற்று இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
ஆனாலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா ஆகியவை நெடுஞ்சாலைத் துறையினரால் இடித்துத் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 14-ஆம் தேதி விளார் ஊராட்சித் தலைவர் எங்கள் அறக்கட்டளைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட கட்டட அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.
எனவே, அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிகோத்ரி, கே.கே. சசிதரன் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ.எல். சோமையாஜி, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இருப்பதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 17) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதன், 11 செப்டம்பர், 2013

நளினி மீதான வழக்கை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

நளினி மீதான வழக்கை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குற்றவாளியான நளினியின் அறையில் கடந்த 2010ம் ஆண்டு மொபைல் போன் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ரத்துசெய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

அமெரிக்கா மீது வழக்க - ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்

அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை, 1953-ம் ஆண்டு சதி செய்து கவிழ்த்த குற்றத்துக்காக அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரான் முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு முதல்நிலை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பங்கேற்ற 196 உறுப்பினர்களில் 167 பேர் மசோதாவை ஆதரித்தும், 5 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து, விசாரணை அறிக்கையை 6 வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அமெரிக்கா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஞாயிறு, 26 மே, 2013

வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்

 வழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு தாராளம்
 கோர்ட்டில், வழக்கு நிலுவையில் இருந்த போதும், சாகித்ய அகடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்தை, மத்திய அரசு தந்துள்ளது. இதன்மூலம், செம்மொழி வரிசையில், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளோடு, தற்போதுமலையாளமும் சேர்ந்துள்ளது.

"ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனில், குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் உள்ளடக்கிய தாக, அந்த மொழி இருக்கவேண்டும்' என, "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.

இலக்கண தொன்மை:அதன்படி, ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனில், அந்த மொழியானது, குறைந்தது, 2,000ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். அதே கால அளவுக்கு, பேச்சுவழக்கிலும், அந்த மொழி இருந்திருக்கவேண்டும். வேற்று மொழி சொற்கள் கலந்திருக்காமல், தனக்கே உரிய இலக்கண தொன்மையுடன், அந்த மொழி உயரிய பழம்பெருமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை எல்லாம், பூர்த்தி செய்த மொழிகள் என்பதால், சமஸ்கிருதம், ரோமன், கிரேக்கம், சைனீஷ் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன. இந்த மொழிகள் அனைத்திற்கும், எந்த வகையிலும், குறைச்சல் இல்லாத பழமையும், பெருமையும் வாய்ந்த மொழி தமிழ் என்பதால்,அதையும் செம்மொழியாகஅறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கடந்த, 2004ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதல் ஆட்சிக் காலத்தில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., செல்வாக்குடன் திகழ்ந்த அந்த ஆட்சியில், தமிழை செம்மொழியாக்கும் நடவடிக்கைகள் துவங்கப் பெற்று, அமைச்சரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, மத்திய கலாசார துறை அமைச்சராக இருந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி, தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தந்திரம் செய்தார். அதாவது, "செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு, 2,000 ஆண்டுகள் பழமையாக இருக்க வேண்டும் என்ற விதியை, 1,500 ஆண்டுகள், பழமையானதாக இருந்தால் போதும்' என, மாற்றினார்.

இந்த திருத்தம், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்த போது, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க., அமைச்சர்கள் யாரும் எதிர்க்கவில்லை.இந்த வரலாற்று பிழை காரணமாக, தமிழுக்கு நிகரான அந்தஸ்தை, பிற மொழிகள் பெற வழி ஏற்பட்டது. தொன்மை குறித்த நிபந்தனை, 2,000 ஆண்டுகளாகவே இருந்திருக்க வேண்டும் என, தி.மு.க., உறுதியாக எதிர்த்து இருக்க வேண்டும். அதைச் செய்ய தவறி விட்டதாக, தமிழறிஞர்கள் குறைபட்டனர்.அதனால், செம்மொழிஅந்தஸ்தை, தமிழின் பெருமைக்கும், தொன்மைக்கும் சற்றும் நெருக்கத்தில் வர முடியாத, பிற மொழிகளும் பெற நேர்ந்தது.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்காக, பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. ஆனால், செம்மொழியான
தமிழ்மொழி, பத்தோடு பதினொன்றாக ஆன கதை, பெரிதாக பேசப்படவில்லை.தமிழுக்கு பிறகு, ஜெய்பால் ரெட்டி நினைத்தபடியே, தெலுங்கும் செம்மொழி ஆக்கப்பட்டது. பின், கன்னடமும் செம்மொழியானது. தென் மாநில மொழிகளில், மலையாளம் மட்டுமே பாக்கி இருந்தது. இது கேரள மக்களுக்கு, பெரும், "ஈகோ'பிரச்னையாக உருவெடுக்கவே, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை,மளமளவென துவக்கினர்.

மத்திய அரசிடம், இந்த கோரிக்கை தீவிரமாக வைக்கப்பட்டது. அப்போது, நாட்டின் மிகப்பெரிய அமைப்பான, சாகித்ய அகடமியின் மொழிகள் பிரிவு பரிசீலனைக்கு, இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டது. "மலையாளத்திற்கு, செம்மொழி அந்தஸ்து பெற தகுதி இல்லை' என்ற, கடுமையான எதிர்ப்பை, சாகித்ய அகடமி பதிவு செய்தது.

மலையாள செல்வாக்கு:ஆனாலும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் தலைமையில், இதற்கென குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசில் உள்ள மலையாள செல்வாக்கை, பயன்படுத்தும் பணிகள் ஆரம்பமாகின.இதற்கிடையில், "மலையாள மொழியை செம்மொழி ஆக்கக் கூடாது. அதற்கான தகுதி அந்த மொழிக்கு இல்லை' என்று வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து வழங்குவது என, முடிவெடுக்கப்பட்டது. இருந்தாலும், இது, சென்னை ஐகோர்ட்டில் தொடரப் பட்டுள்ள வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்புக்கு உட்பட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நமது  தில்லிச் செய்தியாளர்  -

வெள்ளி, 10 மே, 2013

கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க கருணாநிதி வழக்கு

கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்:  உச்ச மன்றத்தில்  கருணாநிதி வழக்கு

 கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு

 தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே, இந்த உடன்படிக்கைகளை செல்லாது என அறிவிப்பதுடன், கச்சத்தீவை இந்தியாவுடன் மீண்டும் இணைக்க உத்தரவிட வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை தடுக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல்களில் பலியான மீனவர்கள் மற்றும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 13 டிசம்பர், 2012

காதல் மனைவியின் மீதே தீண்டாமைப் பிரிவில் வழக்கு

சேர்ந்து வாழ மறுத்ததால் காதல் மனைவியின் மீதே தீண்டாமைப் பிரிவில் வழக்கு: நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி பேட்டை அருகே, காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒருவர் மனவேறுபாடால் பிரிந்து சென்ற தன் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ வரவில்லை என்பதற்காக, தீண்டாமைப் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளார். இது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டை அருகே உள்ள நரசிங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கோமதிச்செல்வி என்பவரும் கடந்த 2008ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனவேறுபாட்டால், கார்த்திக்கிடம் சண்டை போட்டுக்கொண்டு கோமதிச்செல்வி தன் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார். இவர்களின் மகன் கார்த்திக்கிடமே வளர்ந்துவந்தார்.
தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து, தன்னுடம் சேர்ந்து வாழ வருமாறு கார்த்திக் அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டாராம். இந்நிலையில், பாளையங்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கோமதிச்செல்வியை தங்கள் மகனையாவது பார்த்துவிட்டுச் செல் என்று கூறி மீண்டும் அழைத்துள்ளார். அப்போது கோமதிச்செல்வியும், அவரது தாயார் முத்துலட்சுமி, அக்கா அனு ஆகியோர் கார்த்திக்கை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸில் புகார் செய்தார் கார்த்திக். ஆனால், போலீஸார் இதனை வாங்க மறுத்துள்ளனர். எனவே இதுகுறித்து திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கார்த்திக். மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், இந்த வழக்கை தீண்டாமைப் பிரிவில் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் கொடுத்த புகாரில் காதல் மனைவியின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தீண்டாமைப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.