வெள்ளி, 16 அக்டோபர், 2009

அடைக்கலம் அளிக்க ஆஸ்திரேலியாவுக்கு இலங்கைத் தமிழர்கள் வேண்டுகோள்



மெல்போர்ன், அக். 15: இலங்கையிலிருந்து படகில் தப்பிச் சென்ற போது இந்தோனேசிய கடற்படையிடம் சிக்கிக் கொண்ட தமிழர்கள், தங்களுக்கு அடைக்கலம் அளிக்குமாறு ஆஸ்திரேலியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பெரிய படகு ஒன்றில், 250-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தீவில் தஞ்சம் அடைவதற்காக சென்று கொண்டிருந்தனர். ஆனால், அந்தப் படகைத் தடுத்து நிறுத்துமாறு ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூத் கேட்டுக் கொண்டதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினர் அவர்களைத் தடுத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இலங்கையிலிருந்து தப்பி வந்த இவர்கள், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைவதற்காக பல மாதங்களாகப் பல இடங்களில் சுற்றித் திரிந்தனர். மலேசிய வனப் பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்தனர். இந்தத் தமிழர்களைச் சந்திப்பதற்கு செய்தியாளர்கள் சிலருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தப் படகில் உள்ளதைவிட மிக மோசமான நிலையில், இலங்கையில் உள்ள முகாம்களில் தமிழர்கள் வசித்து வருகின்றனர் என, தப்பி வந்த தமிழர்களின் சார்பில் அலெக்ஸ் என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார். இலங்கையில் இனப் பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்றும், தங்களது எதிர்காலத்தை உத்தேசித்து அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். "இலங்கைக்கு மீண்டும் சென்றால் நிச்சயமாக சாக நேரிடும்; இந்தோனேசியாவிலும் நீண்ட காலம் தங்கியிருக்க முடியாது. எனவே, ஆஸ்திரேலியா போன்ற மூன்றாவது உலக நாடுகள்தான் எங்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும்' என்றார் அலெக்ஸ். "இலங்கையில் எங்களால் வசிக்க முடியாது. எங்களை உங்கள் நாட்டில் அகதிகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என ஆஸ்திரேலியாவுக்கு இந்தக் குழுவினருடன் வந்துள்ள 9 வயதான சிறுமி பிருந்தா வேண்டுகோள் விடுத்தார். தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் படகைத் தகர்த்து தற்கொலை செய்து கொள்வோம் என இந்தத் தமிழர்கள் முன்னதாக எச்சரித்தனர்.
கருத்துக்கள்

குமரிக்கண்டம் இருந்த பொழுது தமிழ் நிலமாக இருந்த ஆசுதிரேலியா உடனே இக் கோரிக்கையை ஏற்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக