வியாழன், 15 அக்டோபர், 2009

தமிழர் முகாம்களை பார்வையிட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதியில்லை



கொழும்பு, அக். 14: இலங்கையில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிடுவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதில்லை என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தமிழக எம்.பி.க்களிடம் புகார் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் அளித்துள்ளன. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை அறிவதற்காக சென்ற தமிழக எம்.பி.க்கள் குழுவினர், இலங்கையில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதான எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனே, புகார் கடிதம் ஒன்றை தமிழக எம்.பி.க்களிடம் அளித்தார். அதில், முகாம்களைப் பார்வையிடுவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழக எம்.பி.க்கள் குழுவினர், இந்த விஷயத்தை இந்திய நாடாளுமன்றத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் எதிர்க்கட்சிகளின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களைப் பார்வையிட அனுமதிக்க இலங்கை அரசை நிர்பந்திக்க முயல வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துக்கள்

சிங்கள எதிர்க்கட்சிகளுக்குக் கூடத்தராத இசைவை திமுக குழுவிற்குத் தந்துள்ளது என்றால் இவர்களைத்தானே கைக்கூலியாகக் கருதியுள்ளது சிங்கள அரசு. இதில் பெருமைபேசி மகிழ்கின்றனரே சிலர்! கைக்கூலிகளாகச் சென்றது வெட்கக்கேடானது அல்லவா? சிங்கள அரசிற்கு நண்பர் யார் என்று தெரிவதில் இருந்தே தமிழர்களுக்குப் பகைவர்கள் அவர்கள்தாம் என்பதை உணர்த்திய இராசபக்சேவிற்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக