சனி, 17 அக்டோபர், 2009

தொலைபேசி ஒட்டுக்கேட்பு: மம்தா பானர்ஜி திடீர் புகார்



கோல்கத்தா, அக். 16: தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி குற்றம்சுமத்தியுள்ளார். மேற்கு வங்க அரசே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் அதிரடியாகப் புகார் தெரிவித்துள்ளார். கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மம்தா பானர்ஜி இதைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதுடன் எனது குறுந்தகவல்கள் (எஸ்எம்எஸ்), இ-மெயில் தகவல்களும் திருடப்பட்டுள்ளன. எனது உதவியாளர்களின் தொலைபேசியும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நிச்சயம் மத்திய அரசு அனுமதி அளித்திருக்காது என்பதை அறிவேன். மாநில அரசுதான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. நான் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அரசு சார்பில் அளிக்கப்பட்ட தொலைபேசிகூட ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் நான் முக்கியமான பொறுப்பை வகிக்கிறேன். இதனால் முக்கியமான தகவல்களை பரிமாறும் நிலை உள்ளது. மாநில அரசு இவ்விதம் நடந்து கொண்டால் நான் எவ்விதம் செயல்பட முடியும்? அமைச்சரவை சகாக்களுடனும், எனது உதவியாளர்களுடனும் எப்படி ரகசியமாகத் தகவலை பரிமாறிக்கொள்வது? இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தன்னை காரில் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றம் சுமத்தினார். இதுகுறித்து கோல்கத்தாவில் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். இந்நிலையில் தனது தொலைபேசியும், தனது உதவியாளர்களின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

தொலை பேசி ஒட்டுக்கேட்பு என அவ்வப் பொழுது மாநிலங்கள் அளவிலும் மத்திய அளவிலும் கூக்குரல்கள் வருவது வழக்கமாக உள்ளது. தனக்கு வேண்டியவன், உறவினன், பகைவன், என்று இல்லாமல் அனைத்துத் தரப்பாரையும் ஒற்று மூலம் அறிவது தவறே யல்ல. மடியில் கனமிருந்தால்தானே அஞ்ச வேண்டும்.எனவே, இச் செய்தி உண்மையாக இருந்தால் உளவுத்துறையைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால், இவ்வாறு அறியும் செயதிகளைத் தன்னுடைய கட்சி நலனுக்காக ஆளும் கட்சி பயன்படுத்தக் கூடாது. நாட்டு நலன் கருதி அரசு என்ன செய்தாலும் சரிதான்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். (திருக்குறள் 582)

வினை செய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.(திருக்குறள் 584)

(இரண்டும் ஒற்றாடல் அதிகாரத்தில் உள்ளவை)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக