ஞாயிறு, 11 அக்டோபர், 2009




தனது ஆட்சிக்காலத்தில் எந்த அளவுக்கு, தமிழர்களின் உரிமைகளை ஒடுக்க முடியுமோ, ராணுவம் மற்றும் காவல்துறைகளைப் பயன்படுத்தி எவ்வளவு கொடுமைகளை இழைக்க முடியுமோ, அந்தளவுக்கு செயலாற்றிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். (டிசம்பர் 1988)உடனடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, 1989, ஜனவரி 2-ஆம் தேதி இலங்கையின் அதிபரானார். தனது பதவி ஏற்பை புராதன நகரமான கண்டியில், புத்தரின் பல் இருப்பதாகக் கருதப்படும் "புனிதப் பற்கோயில்' அமைந்துள்ள, தலதா மாளிகையில் நடத்தினார். இதன்மூலம் பெüத்தத்தில் தமக்கிருந்த ஆழ்ந்த பற்றை, சிங்கள தேசியவாதிகளுக்கு உணர்த்தினார்.அதே வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஜனவரி 1-ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஜனநாயகம் என்கிற பெயரில், தமது நலன்களைப் பாதுகாக்க என்னென்ன செய்யும் என்பதற்கு தமிழீழத்தில் நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலும், அதிபர் தேர்தலும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.இரண்டு தேர்தல்களிலும் தமிழீழ மக்கள் ஆயுதமுனையில் பலவந்தமாக வாக்களிக்க அழைத்துச் செல்லப்பட்டார்கள். பல இடங்களில் மக்கள் இல்லாமலே வாக்குகள் போடப்பட்டன. அதேபோன்று, ஜனாதிபதி தேர்தலை நடத்த வந்த சிங்கள அதிகாரிகள் நீங்கள் போடாவிட்டால் பரவாயில்லை, நாங்கள் போடுவோம் என்று கூறியுள்ளார்கள். இந்த வகையில் நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியென்றும் புகழப்படுகிறது. நாம் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை எம்மால் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியும். இன்று தமிழ்மொழி அரச கரும மொழியாக்கப்பட்டுள்ளது; மலையக மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தமே இதைச் சாதித்தது என்கிறது இந்திய அரசு. அரசோடு ஒத்துழைத்தோம் குடியுரிமை பெற்றோம் என்கிறது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ். அப்படியென்றால் 1948-1988 வரை அரசாங்கத்தோடு ஒத்துழைத்தும் மலையக மக்கள் குடியுரிமை பெற 40 ஆண்டுகள் பிடித்தது ஏன்?மலையக மக்களை அவர்கள் நம்பிய தலைமை, புரட்சிப்பாதையில் வழி நடத்தியிருந்தால் குடியுரிமை பறிக்கப்பட்ட ஒருசில ஆண்டுகளுக்குள்ளேயே, அவர்களது குடியுரிமையை மீளப் பெற்றிருக்க முடியும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியிருக்க முடியும். இன்று எமது ஆயுதப் போராட்டமும் அதன்மூலம் மலையகத் தமிழர்களிடையே தோன்றியுள்ள விழிப்புணர்வும், புரட்சித் தன்மையுமே மலையகத் தமிழ் மக்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒப்பந்தமோ, பிரார்த்தனைகளோ இவற்றைப் பெற்றுத்தரவில்லை என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவார்கள்.இன்று தமிழ் மக்களுக்குத் தரப்பட்டதாகக் கூறப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படுமா? நிலைக்குமா? ஸ்ரீலங்கா அரசு நினைத்தால் ஒரே நாளில் இவற்றை இல்லாமல் செய்துவிட முடியுமோ?.இந்தியாவுக்கு நாம் எப்போதும் நேச சக்தியாகவே இருந்திருக்கிறோம். ஆனால் இந்திய அரசு, தாம் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஆயுதமுனையில் நிர்பந்திக்கும்போது நாம் நமது உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழீழ மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையின் இறுதியில், "நாம் அடிமைகளாக வாழக்கூடாது என்றால் (1) ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது (2) உண்மையான ஜனநாயகம் மலரவேண்டுமென்றால் ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது (3) சுதந்திர சோசலிச தமிழீழத்தில்தான் உண்மையான ஜனநாயகம் மலரும் (4) இன்று ஜனநாயகத்தின் பெயரால் ஆயுதங்களைக் கையளியுங்கள் என்பவர்கள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் மட்டுமல்ல; துரோகத்தையும் இழைக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரேமதாசா தான் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதும், இந்திய அமைதிப்படையைக் கடுமையாக எதிர்த்த இரு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அவர் குறிவைத்த அமைப்புகளில் முதலாவது விடுதலைப் புலிகள் இயக்கம், இரண்டாவதாக ஜனதா விமுக்தி பெரமுன என்னும் சிங்களத் தீவிரவாத இயக்கமாகும். பிரேமதாசா தான் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர். அந்த ஒப்பந்தம் கையொப்பமாகும்போது நாட்டிலேயே இருக்கமாட்டேன் என்று கூறி வெளிநாடு சென்றவர். ஜே.வி.பி. இயக்கம் அமைதிப் படையைக் கடுமையாக எதிர்த்தது. அதேபோன்றுதான் விடுதலைப் புலிகளும். எனவேதான் பிரேமதாசா, பேச்சுவார்த்தை என்கிற சொற்பிரயோகத்தை வெளிப்படுத்தி, இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து பிரேமதாசா நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரம் காட்டினார். தனது கட்சி வெற்றிபெற வேண்டும் என்பது அவருக்கு அவசியமாயிற்று. எனவே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப் படைக்கும் இடையே மோதல் நீடித்த நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு ஜூன் முதல், தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தபடியே இருந்தன. இது விசித்திரம் மட்டுமல்ல; ஆச்சரியமும்கூட. முதலில் வடக்கு-கிழக்கு தவிர்த்து இதரப் பகுதிகளில் மாகாணசபைத் தேர்தல், அடுத்து வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல், அதனையடுத்து மூன்றாவதாக அதிபர் தேர்தல் என்று நடந்த முடிந்த நிலையில் தற்போது பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல், அதுவும் நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கிற தேர்தல் என்பதால் பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டின. தமிழர் பகுதிகளிலும் ஈபிஆர்எல்எஃப் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் மேலும் சில கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் ஈடுபட ஆர்வம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்போ இத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்தது. இதுகுறித்து அவ்வியக்கம் 10.1.1988 அன்று வெளியிட்ட அறிக்கையில், "எதிர்வரும் மாசி 15-இல் (பிப்ரவரி 15) நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்கிறார்கள். இனப் படுகொலைகளுக்கு மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஆதரவு தந்தவர்கள் இன்று எமது பிரதிநிதிகளாக எமக்காகக் குரலெழுப்புவதற்கான அங்கீகாரம் கேட்கிறார்கள். நாடாளுமன்றத்தையும் மாகாணசபையையும் எமது போராட்டத்தை முன்னெடுக்க ஓர் இடைக்காலத் தீர்வாக ஏற்கிறோம் என தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் கூறிவருகிறார்கள். இவர்கள் இடைக்காலத் தீர்வுகளை ஏற்பது போராட்டத்தை முன்னெடுக்க அல்ல. தமிழீழப் போராட்டத்தை விலைபேசி விற்கும் இத் துரோகிகள் கூட்டம், இடைக்காலத் தீர்வு என்ற பெயரிலும் ஜனநாயகம் என்ற பெயரிலும் தேர்தலில் பங்குபற்றுவது தமது கோழைத்தனத்தையும் இயலாமையையும் மறைத்து அற்ப பதவிகளையும் அற்ப சுகங்களையும் அனுபவிப்பதற்கே என்பதை நாம் அறிவோம்... "தமிழீழத்தில் சுமுகநிலை இன்னும் வரவில்லை. குடிபெயர்ந்தவர்கள் இன்னும் அவர்களது இடத்தில் குடியமர்த்தப்படவில்லை. இந் நிலையில் தேர்தலா?' என்று கேள்வி எழுப்பியவர்கள்கூட, இப்போது தேர்தலில் போட்டியிட முன்வந்து விட்டார்கள். இதில் இன்னொரு முரண், வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்கள் கருத்தை அறிய ஜூலை 25-ம் தேதி சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதையும்கூட ஏற்கிறார்கள். நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலே ஒரு மோசடி. அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் அளவில் மோசடிகளை நடத்த இருக்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சென்று சாதிக்கப் போவதென்ன? 30 ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் போராட்டகாலத்தில்தான் மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டது. தமிழ்ப் பிரதேசம் சிங்களக் குடியேற்றத்தால் பறிபோயிற்று. தமிழ்மொழி தன் உரிமையை இழந்து, தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரம் சீரழிக்கப்பட்டது' என்று அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. தேர்தலில், பிரேமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சியே (யுஎன்பி) வென்றது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் தோற்றனர். இவர்களின் சேவையை அங்கீகரிக்க, ஈபிஆர்எல்எஃப் அணியினர் இவர்களை நியமன உறுப்பினர்களாக்க முனைந்தனர்.இதே நேரத்தில், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஓராண்டு ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அதுவரை ஆட்சிபுரிந்து வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் பிளவுபட்டு தனித்தனியே நின்றன. காங்கிரஸ் கட்சி, பிளவுபட்ட எம்.ஜி.ஆரின் கட்சியுடன் உறவு இல்லாமல் தனித்து நின்றது. நான்கு முனைப் போட்டியாக நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதன் தலைவர் மு.கருணாநிதி மூன்றாவது முறையாக முதல்வரானார் (1989, ஜனவரி 27). எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவி ஜெ.ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக