புதன், 14 அக்டோபர், 2009

எம்.பி.க்கள் குழு தமிழினத்தை ஏமாற்ற முயல்கிறது: ஜெயலலிதா குற்றச்சாட்டு



சென்னை, அக். 13: இலங்கை சென்றுள்ள எம்.பி.க்கள் குழு தமிழினத்தை ஏமாற்ற முயல்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கு சென்றுள்ள எம்.பி.க்கள் குழு அனைத்துக் கட்சி குழு அல்ல என்ற உண்மையை முதல்வர் கருணாநிதியே ஒப்புக் கொண்டுள்ளார். நாடாளுமன்றக் குழு என்ற மாயையை ஏற்படுத்த தமது கூட்டணி கட்சிகளில் இருந்தே எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குழு என்று நினைத்து அவர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து சென்றுள்ள 10 அரசியல்வாதிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடியும். இலங்கை அரசின் அடக்குமுறை குறைவாக இருக்கும் தமிழர் பகுதிகளுக்கு மட்டுமே இந்தக் குழுவினர் அழைத்துச் செல்லப்படுவார்கள். ராஜபட்ச அரசால் தேர்வு செய்யப்படும் தமிழ் எம்.பி.க்கள், அமைச்சர்களிடம் மட்டுமே அவர்கள் கலந்துரையாட முடியும். ராஜபட்சவை கடுமையாக விமர்சனம் செய்த திருமாவளவன் உள்ளிட்டோர் இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபட்ச அளிக்கும் விருந்தை உண்டு மகிழ்வார்கள். உண்மையை சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டு, இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ள அகதி முகாம்களில் உள்ள சில தமிழர்களைத்தான் இந்தக் குழுவினர் சந்திக்க முடியும். இந்தக் குழுவினர் சென்னை திரும்பியவுடன் முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை அளிப்பார்கள். பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவார்கள். ""மிகப்பெரிய பிரச்னையை கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு சுமார் 4 லட்சம் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை மனப்பூர்வமாக செய்து வருகிறது. சில குறைபாடுகள் உள்ளன. மிகப்பெரிய பிரச்னையை கையாளும்போது இதுபோன்ற குறைகள் ஏற்படுவது சகஜம்தான். மிகக் குறுகிய காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதாக ராஜபட்ச உறுதி அளித்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் நிர்வாகத் திறமையையும், தொலைநோக்கு பார்வையையும் ராஜபட்ச வெகுவாக பாரட்டினார்'' என்று இக்குழுவினர் தெரிவிப்பார்கள். இதன் மூலம் கருணாநிதியும், அவரது குழுவினரும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் 50 ஆண்டுகால சுய நிர்ணயப் போராட்டம் என்னவாகும்? தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் என்னவாகும்? கருணாநிதியின் இந்த ஏமாற்று நடவடிக்கையை வருங்கால தலைமுறையினரும், தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள். தமிழர் உரிமைக்காக, இன்னுயிர் ஈந்த ஆயிரக்கணக்கான ஆன்மாக்களும் அவரை மன்னிக்காது என ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், தேர்தல் நேரத்தில் தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறிய நீங்கள் அது குறித்து வாய் திறக்காதது ஏனோ? அதே நிலைப்பாட்டில் நீங்கள் நின்றால் காட்சியும் மாறும்! ஆட்சியும் மாறும்! ஆனால், களத்தில் இறங்காமல் அறிக்கைப் போரில் ஈடுபடும் நீங்கள் முதலில் மாறுங்கள். உங்கள் கட்சி நலனுக்காகவாவது இல்லாவிட்டாலும் உங்கள் நலனுக்காகவாவது தமிழ் ஈழம் சார்பான விரைவான நடவடிக்கைகளை எடுத்தீர்கள் என்றால் எட்டப்பர்கள் ஓடப்பர்கள் ஆகிவிடுவார்கள். நீங்களே உலகத் த‌லைவி! தமிழினக் காப்பாளராய் மாற வலியுறுத்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2009 4:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக