செவ்வாய், 10 டிசம்பர், 2013

தேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்களுடையதா?

தேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்களுடையதா?

மதுரை மாவட்டம், தேனூரில், 2009 ஆம் ஆண்டு, செல்வம் என்பவரின் வீட்டருகில் இருந்த முதிர்ந்த மரம் ஒன்று, காற்றில் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை அகற்றுகையில், வேருக்கு அடியில், மண் கலயத்திற்குள், தங்கப் புதையல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த மண் கலயத்தினுள், 661 கிராம் எடை கொண்ட ஏழு தங்கக் கட்டிகள், 21 உத்திராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலரும் இருந்தன. அவை, மதுரை கருவூலத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்தத் தங்கக்கட்டிகளில் எழுத்துக்கள் இருப்பது தெரிந்தும், யாரும் படிக்க அனுமதிக்கப்படவில்லை. கலெக்டர் எல்.சுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தங்கக் கட்டிகளில் உள்ள எழுத்துக்கள், மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் பெரியசாமி அவர்களால், 2013 ஆம் ஆண்டு படிக்கப்பட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம், செய்தியாக வெளியானது. தங்கக் கட்டிகளில், தமிழ்-பிராமி எழுத்து முறையில், "போகுல்குன்றக் கோதை' என்று எழுதப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அந்தத் தங்கக் கட்டிகள், வரலாற்று முக்கியம் வாய்ந்தவை.
அந்த ஏழு கட்டிகளின் புகைப்படங்களைப் பெற்று படிக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்தது. அந்தத் தங்கக்கட்டிகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புதையுண்டு இருந்ததால், அக்கட்டிகளின் மேல், அதிக அளவில் மாசு படிந்திருக்கலாம். புகைப் படங்களை எடுக்கும் முன், சரியான முறையில் சுத்தம் செய்தனரா என்று தெரியவில்லை. சரியான முறையில் சுத்தம் செய்து, மீண்டும் புகைப்படம் எடுத்தால், தவறில்லாமல் படிக்க வாய்ப்புண்டு. கிடைத்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, பல நாட்கள் ஆய்வு செய்தேன். அந்த ஏழு கட்டிகளில், இரண்டு கட்டிகள் தான், ஆய்வுக்கு உதவியாக இருப்பதை உணர்ந்தேன். அதில், முதல் கட்டியின் புகைப்படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தக் கட்டியின் எடை, நீளம் மற்றும் அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியில் படிக்க முடிந்த எழுத்துக்களை மட்டும், கீழே உள்ள வரைபடத்தில் கொடுத்துள்ளேன். தெரியாத எழுத்துக்கள் உள்ள இடங்களில், சிறு வட்டக் குறியீடு போட்டுள்ளேன். கீழே கொடுத்துள்ள முறையில், முதல் கட்டியில் காணப்படும் "தமிழ்-பிராமி' எழுத்துக்களைப் படித்துள்ளேன். எழுத்து தெளிவில்லாத இடங்களில், 'ணி' வட்டமிட்டு காட்டியுள்ளேன்.
முதல் ஐந்து எழுத்துக்களை "அரசன்கு' என்று படித்துள்ளேன். "கு' எழுத்திற்கு பிறகு, அடைப்புக்குறி போட்டுள்ளேன். பல தெளிவில்லாத எழுத்துக்கள், படிக்க முடியாத நிலையில் உள்ளன. நடுவில் மீன் சின்னம் உள்ளது. மீன் சின்னத்திற்கு இடப்பக்கம், "மா' என்ற எழுத்தும், அதை அடுத்து தெளிவில்லா எழுத்தும், சின்னத்தின் வலப்பக்கத்தில், "ன்' என்ற எழுத்தும் உள்ளது. இதை, "மாறன்' என்று படிக்க வாய்ப்புண்டு.
"ன்' எழுத்திற்குப் பிறகு சில எழுத்துக்கள் தெரியவில்லை. அத்துடன் அடைப்புக்குறி போட்டு முடித்துள்ளேன். அடைப்புக்குறிக்கு பிறகு, இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துக்களை, "கொற்' என்று படிக்க முடிகிறது.இரண்டாவது கட்டியில் இந்த, "கொற்' எழுத்துக்களின் தொடர்ச்சி இருக்கிறது. இரண்டாவது கட்டியின் புகைப்படத்தையும் கீழே கொடுத்துள்ளேன். இதன் எடை, நீளம், அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியின் வலப்பகுதியில், நான்கு எழுத்துக்கள், படிக்கும் நிலையில் உள்ளன. அந்தக் கட்டியின் வரைபடத்தையும், வலப்பகுதியில் உள்ள நான்கு எழுத்துக்களின் வரைபடத்தையும் கொடுத்துள்ளேன்.
கீழே கொடுத்துள்ள முறையில், இரண்டாவது கட்டியில் காணப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்களைப் படித்துள்ளேன். இரண்டாவது கட்டியில், "கொய் கோன்' என்று படிக்க முடிகிறது. இரண்டு கட்டிகளில் உள்ள தெளிவான எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்-பிராமி எழுத்து முறையில், "அரசன்கு கொற்கொய்கோன்' என்று தெரிகிறது. இந்தச் சொற்றொடர், "கொற்கொய்யின் அரசன்' என்று பொருள்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, "தாமிரபருணி' ஆறு, கடலில் கலக்கும் இடத்தில், கொற்கைத் துறைமுகம் இருந்தது. கொற்கையை தலைநகராகக் கொண்டு, பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியர்களுக்கும் என்ன உறவின்முறை என்று தெரியவில்லை. "பெரிப்ளஸ்' (கூடஞு கஞுணூடிணீடூதண் ணிஞூ tடஞு உணூtடணூச்ஞுச்ண குஞுச்) என்ற நூலில், சேர நாடு குறித்தும், பாண்டிய நாடு குறித்தும் பல செய்திகளைக் காண முடிகிறது. இந்நூல், கி.பி., 60 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை.
குமரியைக் கடந்து கடல் வழியாகச் செல்லும்போது, கொற்கை (ஓணிடூடுடணிடி) இருப்பதாகவும், அந்த ஊர், பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருப்பதாகவும், அக்கொற்கைக் கடலில், குற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்தி, முத்துக் குளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அங்கு விளைந்த முத்துக்கள், பாண்டிய அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிரேக்க, ரோமானிய வணிகர்கள், அந்த முத்துக்களை வாங்க, தரமான தங்கக் கட்டிகளைக் கொடுத்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தத் தங்கக்கட்டிகளில் எழுதப்பட்டச் சொற்களை வைத்து பார்க்கும்போது, இவை, கொற்கை மன்னருக்கு உரியது என்பது உறுதியாகிறது. தங்கக் கட்டியின் நடுவில் இருக்கும், "மீன்' சின்னம், பாண்டியர்களது சின்னம் என்பதும், அது ஆதாரமாகி இருப்பதும், இதில் தெளிவாகத் தெரிகிறது.

டாக்டர்.இரா.கிருட்டிணமூர்த்தி, தலைவர் - தென்னிந்திய நாணயவியல் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக