குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் நடுகல் சிலை
 நீர் நிலைகளைப் பாதுகாத்தவர்களுக்கு, நடுகல் சிலை வைத்து அவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாக மாற்றி முன்னோர்கள் முதன்மை அளித்துள்ளனர்.
  மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில்,  பயிர் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, குளங்கள், தடுப்பணைகள் உருவாக்குவது  முதன்மைப் பணியாக இருந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க, அவர்கள் அளித்த  முதன்மை, நீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் அழித்து விட்டு, வறட்சியில் வாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
   மேடான தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு, வாய்க்கால் வெட்டித் தண்ணீர் கொண்டு வந்து, தனது ‘வாக்குறுதிப்படி’, அங்கிருந்து வெளியேறிய காலிங்கராயன் உட்பட கொங்கு மண்டலத்தில், ஆறு, வாய்க்கால் ஆகிய அனைத்துக்கும் வரலாறு உள்ளது. பாலாறு, ஆன்பொருநை எனப்படும் அமராவதி, ஏழு குளப் பாசனம், தங்கம்மாள் ஓடை, உப்பாறு ஓடை ஆகிய நீர் நிலைகளைச் சார்ந்தே உடுமலைப் பகுதி இருந்துள்ளது.
   இதில், குளங்களை உருவாக்கிய ஆட்சியாளர்கள், காவலுக்கு ஆட்களை நியமித்து, அவர்களுக்குப் பல்வேறு  நல்கை(மானியங்)களையும் வழங்கியுள்ளனர். குளத்தைச் சேதப்படுத்துதல், தண்ணீரை மாசுபடுத்துதல் கடும் தண்டனைக்குரியதாக இருந்தது. உடுமலைப் பகுதியைப் பசுமையாக மாற்றிய, ஏழு குளங்களைப் பாதுகாக்க, பாதுகாவலர்களைத் தளி பாளையக்காரர்கள் நியமித்துள்ளனர்.
   இதில், பாதுகாவலர் ஒருவர், நீர் நிலையைச் சிறப்பாகப் பாதுகாத்து வந்ததுடன், அப்பணிக்காக போரிட்டு உயிரிழந்துள்ளார். அவரது நினைவாக உடுமலை பெரியகுளம் கரையில், வீரரின் நினைவைப் போற்றும் வகையில், நடுகல் சிலை வைக்கப்பட்டுத் தற்போதும், அச்சிலை வாளவாடி  சாலையில் காணப்படுகிறது.
 பாதுகாவல் வீரனுக்கும் நீர் நிலைகளுக்கும் அப்போதைய ஆட்சியாளர்கள் அளித்த முதன்மை இதனால், வெளியாகிறது. இச்சிலையின் வரலாறு, முழுவதுமாக வெளிப்படாத நிலையில், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள், குறிப்பிட்ட நாட்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.