திங்கள், 9 டிசம்பர், 2013

தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்

attappadi dinamalar
கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான  சொத்துக்களைக் கவர்ந்து,  ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு  வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்  மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். அட்டப்பாடி மலை உச்சியிலுள்ள மல்லேசுவரன் கோவில் மிகவும்   புகழ் வாய்ந்தது;சிவனிரவின்(சிவராத்திரியின்)போது, விழா களைகட்டும்; கணக்கிலடங்காச் சுற்றுலாப் பயணிகள் கூடுவர். அட்டப்பாடிக்கு இன்னொரு முதன்மையும் உண்டு. இங்கு, தமிழர்கள்  பெருமளவில் வசிக்கின்றனர். தலைமுறை, தலைமுறையாக இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு வீடு,  வேளாண் நிலம்,  வணிகக் கடைகள் உள்ளன.  அண்மைக்காலமாக, இங்கு வசிக்கும் தமிழர்களின் நிலத்தைக் கவர்ந்து, ஓட்டாண்டியாக்கி, ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது, கேரள அரசு. ஆதிவாசிகளின்
நிலங்கள்,  மனைவணிகக் கொள்ளையரிடம் சிக்கியிருப்பதாகவும், வன எல்லைக்குள் விதிமீறிப் பண்ணை மாளிகைகள், ஆடம்பரச் சொகுசு வளமனைகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் கூறித், தமிழர்களின்  வேளாண் நிலம், வீடுகளைக் கவரத் திட்டமிட்டு, முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மன்னார்க்காடு எல்லைக்குரிய கேரள வருவாய்துறை அதிகாரிகள், அட்டப்பாடிவாழ் தமிழர்களுக்கு சமீபத்தில் ஒரு எச்சரிக்கை  அறிவிக்கை கொடுத்தனர்.
அதில், “ஆதிவாசி நிலங்கள், விதிமீறி பிறருக்கு க் கைமாறியுள்ளன. இவற்றைக் கையகப்படுத்தி, மீண்டும் ஆதிவாசிகளுக்கே வழங்க வேண்டியுள்ளது. எனவே, இந்த  அறிவிப்பு கண்டஏழு  நாளுள்,  பயன்பாட்டை அகற்றிக்கொள்ளவேண்டும். இல்லாவிடில்,  பிணையில் வெளிவரமுடியாதவாறு, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை, அட்டப்பாடி வாழ் தமிழர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. “தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்துவரும் நிலங்களைக் காலி செய்துவிட்டு, சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு,  ஒன்றுமில்லா ஏதிலிகளைப் போன்று எப்படி வெளியேற முடியும்; இதற்கு உடன்பட மாட்டோம்” என, எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதிக்க  ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுக்குச் சார்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஆனால், நில வெளியேற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கேரள அரசு மறுத்திருக்கிறது. ஆதிவாசிகளின் வாழ்விடங்கள் குறித்த நில ஆய்வு மட்டுமே தற்போது நடக்கிறது எனவும் தெரிவிக்கிறது.
இது குறித்து, வால்பாறை  இ.பொ.க. ச.ம.உ., ஆறுமுகம் கூறுகையில், “”அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்களை நிலவெளியேற்றம் செய்யக்கூடாது. இதற்கான முயற்சி மேற்கொள்ளும் கேரள அரசை, இ..பொதுவடைமைக்கட்சி, வன்மையாகக் கண்டிக்கிறது. கேரள அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், இருமாநில நல்லுறவு பாதிக்கும். அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அட்டப்பாடி வாழ் தமிழர்களுக்குச் சார்பாகப்  போராட்டம் நடத்துவது குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
கேரளத் தமிழர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை: கேரள வாழ் தமிழர்கள் பாதுகாப்புசுசங்கத்தின் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து கூறுகையில், “”இந்தச் சிக்கலைத் தமிழர்கள் சிக்கலாகவே பார்க்கக் கூடாது;உழவர்கள்  சிக்கலாகவே பார்க்க வேண்டும். ஏறத்தாழ 100 ஆண்டுகளாகத், தமிழர்கள் அட்டப்பாடியில் வசிக்கிறார்கள். நான்கு, ஐந்து பஞ்சாயத்துகளின் மக்கள் தொகையில் 40 முதல் 80 % மக்கள் தமிழர்கள். இவர்களுக்குரிய  குமுகாய, பொருளாதாரப் பாதுகாப்பைக், கேரள அரசு வழங்க வேண்டும்; நிலத்தைவிட்டு வெளியேற்றக்கூடாது,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக