அகரமுதல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகரமுதல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 65

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 64 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 65

இனிய அன்பர்களே!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நேற்று திறந்த மடல் எழுதினேன்.

அவர் உடனே விடையனுப்பினார்:

உயர்சாதியினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை அண்ணல் அம்பேத்துகருக்குச் செய்த துரோகம் என்றுதான் நான் கருதுகிறேன். நான் சார்ந்திருக்கும் தமு எகச இது குறித்து விரிவான அறிக்கை அப்போதே வெளியிட்டிருக்கிறோம் தோழரே. தங்கள் மடலுக்கு நன்றி.

அவருக்கு நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். தமுஎகச அறிக்கையை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டேன். “தேடி அனுப்புகிறேன் தோழர்” என்று விடையிறுத்துள்ளார்.  

தோழர் ச. தமிழ்ச்செல்வனை மனமுவந்து பாராட்டுகிறேன். அவரது குடியாட்சியப் பண்புக்காகவும், பொநபி (இ டபிள்யூ எசு) இட ஒதுக்கீடு பற்றிய உறுதியான நிலைப்பாட்டுக்காகவும் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தையும் பாராட்டுகிறேன்.

தாழி அன்பர்களே! நீங்களும் தோழர் தமிழ்ச்செல்வனையும் தமுஎகச அமைப்பையும் பாராட்டுவீர்கள் என நம்புகிறேன். குடியாட்சியப் பண்பாடு வளர நாமும் பாடாற்றுவோம்!   

திருச்சிராப்பள்ளியிலிருந்து வழக்குரைஞர் தோழர் கென்னடி எழுதுகிறார்:

அன்புள்ள தோழருக்கு வணக்கம் தங்களது மடல் தொடர்ந்து சீரான முன்வைப்புகளோடு அன்றாட நிகழ்வுகளை அரசியல் முக்கியமான செய்திகளையும் பார்ப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது இந்த முன்முயற்சி தொடர வேண்டும் அதற்கான எனது வாழ்த்துக்கள். நன்றி!

சிறப்பு முகாம் ஏதிலியர்க்காக நடத்தி வரும் சட்டப் போராட்டம் பற்றி நீங்களும் எழுதுங்க கென்னடி!  

அன்பர் மணி வில்லன் (பெயரே இதுதானா?) எழுதுகிறார்:

வணக்கம். தாழி மடல் தொடர்ந்து கிடைக்கிறது.  நன்றி.

அன்பர் மா. சத்தியசீலன் எழுதுகிறார்:

வணக்கம். தங்களின் ‘ஈழம் மெய்ப்படும்‘ நூலிற்காகக் காத்திருக்கிறேன்!

அத்துடன் ‘மூலமுதல்’ நூலின் தற்போதைய நிலை – எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதை அறியவும் ஆவலாய் உள்ளேன்.

தங்களின் முந்தைய ‘ மூலதனம்‘ நூலின் அனைத்துப் பாகங்களும் என்னிடம் உள்ளன; ஆனால் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமமாக உள்ளது. அந்நூலின் கருத்துகளை எளிமைப்படுத்தி என்னைப் போன்றோர் புரிந்து கொள்ளும் வகையில் சிறுசிறு கட்டுரைகளாக தங்களால் வெளியிட இயலுமா! அறிய விழைகிறேன், நன்றி; வணக்கம்!

1/ ஈழம் மெய்ப்படும் மின்படி இன்றே உங்களுக்கு அனுப்பப்படும்.

2/ மூலமுதல் தூய தமிழாக்கப் பணி பாதியில் நிற்கிறது. தனித்து நான் மட்டுமாக அதைச் செய்வது கடினம். பெருந்தொற்றுக் காலத்தில் யாரையும் உடன் வைத்துக் கொண்டு செய்ய இயலவில்லை. நானும் பொள்ளாச்சி போய் விட்டேன். பெருந்தொற்றுக் காலம் பெரும்பாலும் முடிந்த பின் தோழர் கார்த்திகேயபிரபுவின் உதவி கிடைத்தது. பொதுமையறிக்கை (பொ க கொ அ) தூய தமிழாக்கம் முடித்து விட்டு மூலமுதலை எடுக்கத் திட்டமிட்டு, அந்தப் பணியை அவர் துணையோடு தொடங்கினேன். சென்னை வந்த பிறகும் கொஞ்சம் செய்தோம். அதுவும் பாதியில் நிற்கிறது. விரைவில் அதை முடித்து, மூலமுதலுக்கும் திரும்ப முடியும் என்று எதிர்பார்க்கிறேன். தாழியில் அவ்வப்போது நிலவரம் பகிர்வேன்.

3/மூலமுதலில் முதல் அதிகாரம் மட்டும்தான் சற்றே கடினம். முயன்று படித்து அதைக் கடந்து விட்டால் பிறகு எல்லாம் எளிது. நான் ஏற்கெனவே மூலமுதல் வகுப்புகள் நடத்தியுள்ளேன். தமிழ்த் தேசம் ஏட்டில் “என்ன?” என்ற தலைப்பில் ஒரு தொடரே எழுதினேன். உங்கள் குறிப்பான ஐயப்பாடுகள் (அய்யப்பாடுகள் என்று எழுதுவீர்கள் அல்லவா?) இருப்பின் எழுதுங்கள். தெரிந்த வரை ஐயந்தெளிய உதவுவேன். இல்லையேல் பொறுங்கள், மூலமுதல் வரட்டும், அதற்கொரு ‘நண்பன்’ (கோனார் நோட்சு போல?) போட்டு விடுவோம்.

அன்பர் சிபி எழுதுகிறார்:

தோழர் சத்தியசீலனுக்கு! நலமா தோழர்? தங்களின் கடிதத்தைப் படித்தேன். மாற்றுக் கருத்தைக் கூற பிரபாகரனைத் துணைக்கு அழைக்க வேண்டா என்பதில் எவ்வித ஏரணமும் இல்லை. ஏனென்றால் சீமான் பிரபாகரனைத் துணைக்கு வைத்துக் கொண்டு எங்கேயும் ஈ.வெ. இரா. மீதோ திராவிடக் கருத்துகள் மீதோ இடித்தாய்வு வைக்கவில்லை. 2009 இனப் படுகொலையின் போது ஆண்ட கட்சியின் மீதே தொடக்கத்தில் அவர் இடித்தாய்வு வைக்கிறார். பின் அக்கட்சியின் அதன் திராவிடம் என்ற கருத்தியல் மேல் திறனாய்வு செய்து அது தமிழர்களுக்கெதிரான பிறமொழியாளர்களின் ஆதிக்கம் என்று முடிவு செய்து ஈவெஇராவை விமர்சிக்கிறார். அவரின் விமர்சனம் தமிழினப் படுகொலையின் மீது திமுக செயல்கள் தொடங்கி திராவிடமென்ற கருத்தியலை இடித்தாய்வு செய்வதாக உள்ளது. இதிலெதிலும் அவர் பிரபாகரனைத் துணைக்கு அழைக்கவும் இல்லை; காட்டவும் இல்லை. பிரபாகரன் மீது ஆதரவு தெரிவிப்பவர் ஈவெஇராவையோ திராவிடத்தையோ இடித்தாய்ந்தால் பிரபாகரனை ஐயுறுவோம் என்பது சிறுபிள்ளைத்தனம். சீமான் பேசும் திராவிட எதிர்ப்பு என்பது பாதிக்கப்பட்டவனின் வன்முறை போன்றது, அது எதிர்வினையே தவிர வினை இல்லை. அதற்கெதிராக பிரபாகரனை ஐயுறுவது அதிகாரத்தின் வன்முறைக்கீடானது, அது வினை ஆகும். இனப்படுகொலையில் பங்கு என்று வினையால் வந்த எதிர்வினையே சீமானின் இடித்தாய்வு.. நன்றி. சிபி. 

சிபி, சற்றுப் பொறுங்கள், நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விளக்கங்கள் மீதமுள்ளன. இதற்கிடையில் எனது “ஈழம் மெய்ப்படும்” மின்படியை உங்களுக்கும் அனுப்புகிறேன் (பிடிஎஃப்-க்கு நீங்களே தமிழ் சொல்லுங்களேன்.) பெரியார் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது என்பதை நான் மறக்கவில்லை. முதலில் பெரியார்-எதிர்-பிராபகரன் என்ற பூசலுக்கப்பால், அதை விட்டு வெளியே வந்து, ஈழப் போரில் திமுக பங்கு பற்றி விருப்பு வெறுப்பின்றி உரையாட ஒரு முதிர்ச்சி தேவைப்படுகிறது, நீங்களும் சத்தியசீலனும் இரு கருத்தியல் நிலைப்பாடுகளின் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) என்ற முறையில் நான் எழுதுவது உங்கள் இருவருக்காக மட்டுமல்ல. உங்களைப் போலவே ஆதரவு – எதிர்ப்பு நிலைப்பாடுகள் எடுத்துள்ள எத்தனையோ திராவிட, தமிழ்த் தேசிய  ஆர்வலர்களுக்காகவும்தான். தொடர்ந்து உரையாடுவோம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உயிர் பறித்த பீமா கொரேகான் பொய் வழக்கு

பீகொ-16: அமெரிக்காவிலுள்ள இணையத் தடயவியல் நிறுவனம் ஒன்று பீமா கொரேகான் வழக்கில் அருள்தந்தை ஃச்டான் சுவாமி இணைக்கப்பட்டது பற்றிப் புதிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. பொய் வழக்கில் அவரைச் சிக்க வைப்பதற்கான ஆவணச் சான்றுகள் 2017க்கும் 2019க்கும் இடையில் அவரது கணிணியில் ‘ஊன்றப்பட்டன’ என்று இந்நிறுவனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை எடுத்துக்காட்டி மா.பொ.க.(சிபிஎம்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு மோதி ஆட்சியில் தேசியப் புலனாய்வு முகமையின் செயல்பாடுகளைக் கண்டித்துள்ளது. பிணை மறுக்கப்பட்டு, சிறும வசதிகள் மறுக்கப்பட்டு, சிறைக் காவலில் அவர் உயிரிழந்தார், இது படுகொலையே என்று மா.பொ.க.சிபிஎம் அறிக்கை சொல்கிறது.    

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 39

ஞாயிறு, 12 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 32: கரி-எரி பரவல் தடை



(தோழர் தியாகு எழுதுகிறார் 31 தொடர்ச்சி)

கரி-எரி பரவல் தடை

உலகம் அழிந்து போய் விடுமோ? என்ற அச்சத்துக்கு இரு முகன்மைக் காரணிகளாகச் சொல்லப்படுகிறவை: 1) அணு ஆய்தப் போர்: 2) காலநிலை மாற்றம்.

அணுக்குண்டின் அழிவாற்றலை இரோசிமாவிலும் நாகசாகியிலும் கண்டோம். மீண்டும் ஓர் அணுவாய்தப் போர் மூளக் கூடாது என்றால் அணுவாய்தங்களை அடியோடு அழித்து விட வேண்டும், புதிய அணுவாய்தங்கள் செய்யக் கூடாது. அணுவாய்தங்களுக்கு மூலப்பொருள் கிடைக்காமற்செய்ய வேண்டும் என்றால் அணுவாற்றல் இயற்றுவதைக் கைவிட வேண்டும். அணுவாற்றலை அமைதி வழியில் பயன்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அணுவாற்றலை அமைதி வழியில் பயன்படுத்துவதற்கும் ஆய்தம் செய்யப் பயன்படுத்துவதற்குமான பிரிவுக் கோட்டை அழித்து விடுவது அரசியல் முடிவுதான்.

எந்த நேரத்திலும் இந்தக் கோட்டை அழித்து விட முடியும் என்பதைப் பல நாடுகளும் மெய்ப்பித்துள்ளன. இந்தியாவே இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அணுவாற்றலை அமைதிவழியில் மட்டுமே பயன்படுத்துவோம் என்று பண்டித சவகர்லால் அளித்த உறுதிமொழியை மதிக்காமல்தான் இந்திரா காந்தி பொக்குரானில் அணுகுண்டு சோதனை நடத்தினார்.

ஆனால் அணுவாய்தப் பேரழிவைத் தடுப்பது பற்றிய பன்னாட்டு உரையாடல் தொடங்கிய போது, வல்லரசுகள் தம்மிடமுள்ள அணுவாய்த இருப்புகளை அழித்து விட முன்வரவில்லை. புதிய அணுவாய்தங்கள் செய்வதைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் முன்வரவில்லை. அணுவாய்தக் குழாத்தில் இணைந்து கொள்ள புதிதாகப் பல நாடுகளுக்கும் ஆசை துளிர்த்தது. இந்தப் பின்னணியில்தான் நீண்ட நெடிய முயற்சிக்குப் பின் 1970ஆம் ஆண்டு ஐநா மேற்பார்வையில் அணுவாய்தப் பரவல் தடை ஒப்பந்தம் ஏற்பட்டது. Treaty on the Non-Proliferation of Nuclear Weapons, சுருக்கமாக Non-Proliferation Treaty அல்லது NPT. இந்த ஒப்பந்தத்தில் 2016 வரை 191 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன. அணுவாய்தங்கள் வைத்திருந்த போதும் ஒப்பமிடாத நாடுகள் இந்தியா, பாக்கித்தான், இசுரேல்.  சேர்ந்து விட்டுப் பிறகு வெளியேறிய நாடு வட கொரியா.

அணுவாய்தப் பரவல் தடை ஒப்பந்தம் அணுவாய்த வல்லரசுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பாகுபாடு காட்டக் கூடியது என்பது உண்மைதான். ஆனால் அணுவாய்தப் பேரழிவை உலகம் அறிந்தேற்றிருப்பதன் அடையாளம் என்ற முறையில் இந்த ஒப்பந்தம் முகன்மையான ஒன்று. எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்து அதன் பாகுபாடான கூறுகளை மாற்ற முயலலாம்.

அணுவாய்தப் பேரழிவின் அச்சுறுத்தல் இன்றும் நீடிப்பதைத்தான் உருசிய-உக்கிரைன் போர் காட்டிக் கொண்டிருக்கிறது. மறைமுகமாக அணுகுண்டு மிரட்டல் விடுத்த உருசிய அதிபர் விளாதிமிர் புதின் பரவலான கண்டனத்துக்கு ஆளானார். ஆனால் அவரது மிரட்டலில் மாற்றமில்லை. இவ்வாறான மிரட்டலே மாந்தக் குலத்துக்குப் பகையான செயல் என்ற அனைத்துலகக் கூட்டுணர்வு வளர வேண்டும். வளர்க்கப்பட வேண்டும்.

அணுவாய்தப் பேரழிவின் அச்சுறுத்தல் பற்றியும், அதற்கெதிரான இயக்கம் பற்றியும் வேறு தருணத்தில் விரிவாகப் பேசுவோம். இப்போது நாம் பேச வேண்டியது அணுப்பரவல் தடை ஒப்பந்தம் போல் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் ஒன்றின் தேவை பற்றித்தான்.

புவி வெப்பமாதலிலும், அதன் விளைவான காலநிலை மாற்றத்திலும் முதற்குற்றவாளி புதைபடிவ எரிபொருள் பயன்பாடுதான் என்பதறிவோம். புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் புவி வெப்பமாகிச் செல்வதையும் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த இயலாது. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை உடனே அடியோடு ஒழிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது. இப்பயன்பாட்டைச் சிறிது சிறிதாகக் குறைத்து வரம்பிடுவதுதான் ஒரே வழி.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பன்னாட்டு உடன்படிக்கையான பாரிசு ஒப்பந்தம் (2015) புதைபடிவ எரிபொருள் பற்றிப் பேசவே இல்லை. அண்மையில் நடந்து முடிந்த கா.நி.மா.27(COP27)  மாநாடு கன்னெய் (பெற்றோல்), எரிவாயுபற்றிப் பேசவே இல்லை. இந்தக் கள்ள மௌனத்துக்கு என்ன காரணம்? புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை விரிவாக்கிக் கொண்டே செல்லும் நாடுகளின் தன்னலமே காரணம்.

இத்தனைக்கும் புதுப்பிக்கவொண்ணாப் புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றான புதுப்பிக்கத்தக்க ஆற்றல்மூலங்கள் நிறைய இருப்பது இந்த நாடுகளுக்குத் தெரியும். புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம் பறியெல்லாம் உதட்டுச் சேவை செய்து கொண்டே, கரியுமிழ்வுக்குக் காரணமான புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள மறுக்கும் இந்த நாடுகள் புதைபடிவ எரிபொருள் போதைக்கு அடிமைப்பட்டிருப்பதாக சூழலியலர் சொல்கின்றனர். இறுதி நோக்கில் இது கரி வெறியில்லை, ஆதாய வெறிதான்!

அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் 190க்கு மேற்பட்ட நாடுகள் ஒப்பமிட்டிருக்கக் கண்டோம். ஆனால் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் (FOSSIL FUEL NON-PROLIFERATION TREATY) தேவை என்று வலியுறுத்தும் ஐநா உறுப்பரசுகளாக இருக்கும் நாடுகள் இரண்டே இரண்டுதான். ஒன்று: துவாலு! இரண்டு: வானுவாட்டு!!

துவாலுவைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டோம். வானுவாட்டுவும் துவாலுவைப் போலவே பசிபிக் தீவுக் கூட்டம்தான்! கடலால் விழுங்கப்படும் பேரிடருக்கு முகங்கொடுத்து நிற்கும் இந்தச் சிறிய நாடுகளே புதைபடிவ எரிபொருள் பரவலைக் கட்டுப்படுத்தப் பன்னாட்டு ஒப்பந்தம் செய்யக் கோரி முன்னுக்கு நிற்கின்றன.

தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் எந்தப் பொறுப்புமின்றி நிலக்கரியும் கன்னெய்யும்(பெற்றோலும்) எரிவாயுவும் பயன்படுத்தி வருவது மட்டுமன்று, புதிதாகத் தோண்டியெடுக்கும் முயற்சியிலும் அயராது ஈடுபட்டுள்ளன. இதே போக்கு தொடர்ந்தால் புவி வெப்பமாதலை 1.5 வெம்பாகை(செல்சியசு பாகை)க்குள் கட்டுபடுத்துவதெல்லாம் வெறுங்கனவாகி விடும். காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கத்தக்க அளவைப் போல் ஏழு மடங்கு வேகத்தில் உலக அளவில் புதைபடிவ எரிபொருள் பரவலாக்கம் நடைபெற்று வருகிறது. 

புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் ஏற்படுமானால், அது மூன்று கூறுகளைக் கொண்டதாக இருக்கும்: 1) புதைபடிவ எரிபொருள் தேடலுக்கு ஆய்வுகள் நிறுத்தப்பட வேண்டும்; 2) 1.5 பாகை என்னும் காலநிலை இலக்குக்குப் பொருத்தமாக புதைபடிவ எரிபொருள் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்; 3) நியாயமான மாறுதல்: புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றான ஆற்றல் வழிகளுக்கு ஆட்களும் குமுகாயங்களும் நாடுகளும் சரளமாக மாறிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

அணுவாய்தப் பரவல் தடை போல் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை வேண்டும் என்று இரண்டு சிறு நாடுகள் மட்டுமே முன்மொழிந்திருப்பினும் எழுபது உள்ளரசுகள் (மாநில அரசுகள், மாநகராட்சிகள் போன்றவை) இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 1,800 குடியியல் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அறிவிலியர்களும் கல்வியாளர்களுமான 3,000க்கு மேற்பட்ட அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற 101 அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஐரோப்பிய நாடாளுமன்றமும் உலக நலவாழ்வு அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இது ஒரு பெரும் மக்களியக்கமாக வளர்ந்தால்தான் உலகைக் கொதிக்க வைக்கும் அரசுகளை வழிக்குக் கொண்டுவர முடியும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 23

வெள்ளி, 10 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 28: மாவீரர்களின் பெயரால்…

 



(தோழர் தியாகு எழுதுகிறார் 27: தொடர்ச்சி)

மாவீரர்களின் பெயரால் 

ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள்.

2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும் மாவீரர் நாளை வெற்றுச் சடங்காக இல்லாமல் போராட்டத்தைத் தொடர மீள்சூளுரை ஏற்கும் நாளாகக் கொள்வோம் என்றால், நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து பட்டறிவுகளைத் தொகுத்து எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும்.

சென்ற ஆண்டு மாவீரர்களை நாம் நினைவுகூர்ந்து இந்த ஆண்டு பற்பல வழிகளில் அவர்களைப் போற்றும் வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் தாயகத்திலும் பன்னாட்டுலகிலும் அரங்கேறியுள்ள பொருத்தப்பாடு கொண்ட வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்துக் கொள்ளும் கடமை நமக்குண்டு.

இனநாயகம் கோலோச்சும் இலங்கைத் தீவில் சிங்கள அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களைக் கணக்கில் கொண்டு ஈழ மக்கள் உரிமைப் போராட்டத்தில் அவற்றின் தாக்கம் என்ன என்பதைக் காய்தல் உவத்தலின்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். அரியணையில் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதல்ல நாம் சுட்ட விரும்புவது. இந்த மாற்றங்களுக்கு வழிகோலிய மக்கள் போராட்டங்களையே மனத்திற்கொண்டுள்ளோம்.

இனவழிப்புச் செய்து போர்க்கள வெற்றிகளை அடித்தளமாக்கி சிங்களப் பேரினவாத அலை விளிம்பேறி ஆட்சியைப் பிடித்த அதே இராசபட்சர்கள் தம் மக்களிடமிருந்தே ஓடவும் ஒளியவும் ஒருநாள் வரும் என்று அவர்களும் அஞ்சியிருக்க மாட்டார்கள். நாமும் எண்ணியது இல்லை. தமிழர்களின் நீதிப் போராட்டத்தின் பார்வையில் ‘அறகலய’ எழுச்சியின் முதன்மை விளைவு சிங்கள அரசியல் சமூகத்தில் ஏற்பட்ட உடைப்புதான். பேரினவாத ஆளும் கும்பலின் சமூக அடித்தளமான சிங்கள வெகுமக்களே அந்தக் கும்பலை ஓட ஓட விரட்டியடித்ததை மறக்கவியலாது. ‘அறகலய’ நேராகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுப்பத் தவறியது என்பதை நாம் மறக்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை அந்த மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை நமக்கும் உள்ளது என்று மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் நீண்ட நெடிய நீதிப் போராட்டத்துக்கும் சிங்கள மக்களின் அண்மைய தன்னெழுச்சிக்கும் மொழியாப் புரிந்துணர்வு ஒன்றுண்டு என்பதை வரலாற்று மாணவர்கள் உய்த்துணர்வார்கள். தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரே பன்னாட்டு அரங்கில் சிங்களத்தை அரசியல் வழியில் தனிமைப்படுத்தும் சூழலைத் தோற்றுவித்தது என்பதோடு, தாங்கவொண்ணாத படைச் செலவால் இலங்கைப் பொருளியலையும் நொடிக்கச் செய்தது. இந்த வரலாற்று ஏரணத்தைத் தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் உள்வாங்கினார்களா? இனியாவது உள்வாங்கி நீதிக்கான போராட்டத்தில் உரியவாறு கணக்கில் கொள்வார்களா?

இனி என்ன நடந்தாலும் சரி, குறிப்பிடத்தக்க அளவில் சிங்கள இளைஞர்களிடம் துளிர்த்துள்ள குடியாட்சிய உணர்வும் இனவாத எதிர்ப்பும் இலங்கைத் தீவிலடங்கிய இரு தேசங்களின் போராட்டத்திலும் ஒரு நிலைத்த காரணியாகப் பங்கு வகிக்கும். நீதிக்கான போராட்டத்தை முடுக்கி விரைவாக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்கும்.

இரண்டாவதாக, இந்த நாளில் குழப்பம் நீங்க வேண்டிய ஒன்று இந்திய வல்லரசின் வகிபாகம் பற்றியதாகும். இனவழிப்பில் சிங்களப் பேரினவாதத்துக்கு உடந்தையாகச் செயல்புரிந்த இந்தியா தமிழர்களின் நீதிக்கான போரட்டத்திலும் இனக் கொலையாளிகளைக் காக்கும் கவசமாகச் செயல்பட்டு வருகிறது. ஐநா மனிதவுரிமைப் பேரவையில் மேலைநாடுகள் முன்மொழிந்த அரைகுறைத் தீர்மானத்தைக் கூட ஆதரிக்க மறுத்து வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. ஈனக் குரலில் 13ஆம் திருத்தம் பற்றி முனகித் தன் கடமையை முடித்துக் கொள்கிறது.

ஐநா அறிக்கைகளில் குவிந்து கிடக்கும் சான்றுகள், மனித வுரிமைகளுக்கான உயராணையர்கள் அறிக்கையிடும் மெய்ம்மைகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிப்படுத்தி வரும் கோரிக்கைகள், ஆற்றல்மிகு பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகள் வெளிச்சமிடும் செய்திகள் – இவற்றில் எதுவும் இந்திய வல்லரசின் கண்ணிற்படுவதில்லை. காதில் கேட்பதில்லை. கண்ணை மூடிக் கொண்டு சிங்களம் காக்கக் காக்க கவச மந்திரம் படித்துக் கொண்டிருக்கிறது.

அடியோடு ஒதுங்கியிருந்தாலும் தாழ்வில்லை என்னும் படியாகத் தமிழீழ அரசியலை ஆட்டிப்படைக்கக் குறுக்கிட்டுக் கொண்டிருப்பதுதான் இந்தியா செய்து வரும் ஆகப்பெரும் கேடு. வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குப் போய்விட்ட பதின்மூன்றாம் திருத்தத்தை மீட்டு வந்து அதனைத் தமிழர்களின் கோரிக்கையாக மாற்றிக் காட்ட அது அருவருக்கத்தக்க தந்திரங்களைக் கையாண்டது. இந்திய வல்லரசின் எடுப்பார் கைப் பிள்ளைகளாக மாற ஒப்புக் கொண்ட தாயகத் தலைவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள்.

சிங்களப் பேரினவாதத்துக்கு ஏற்பட்ட பொருளியல் நெருக்கடி அரசியல் நெருக்கடியாக முற்றிய நிலையில், சிங்களத் தலைவர்களுக்குள் மூண்ட அதிகாரப் போட்டியில் தமிழ் அரசியல் தலைவர்கள் ‘சொந்த புத்தி’ கொண்டு ஒரு முடிவெடுக்கக் கூட விடவில்லை மோதி அரசு. இதனால் தமிழ்த் தலைவர்களில் சிலர் இனக் கோட்டின் இரு பக்கமும் மதிப்பிழந்து நிற்க நேரிட்டது. “எங்கள் முடிவை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்று பணிவுடன் தெரிவித்திருந்தால் உங்களுக்காக நாங்கள் பெருமைப்பட்டிருப்போம்.

2021 சனவரியில் ஐநா மனிதவுரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு நீங்கள் எழுதிய கூட்டு மடல், பொத்துவில் – பொலிகண்டி பேரணி போன்றவை நீதிக்கான போராட்டத்தில் முகன்மையான நடைபடிகள். இந்த வழியை விட்டு விலகிப் போய், இந்தியாவின் கோலுக்கேற்ப ஆடவும், இரணிலோ அழகப்பெருமாவோ யாரேனும் ஒருவரை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரிக்கவும் வேண்டிய தேவை என்ன? எங்களுக்கு இதில் ஒரு தேர்வு வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கலாமே? “இரணில் ஆதரவு கேட்டார், கொடுத்தேன்” என்று ஒரு தலைவர் சொன்னது போல் நகைப்புக்கிடமானது எதுவும் இல்லை.

தமிழீழத்தின் உள்ளார்ந்த இறைமையைக் கொழும்புவிடம் விட்டுக் கொடுக்க மறுத்தே வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்துப் போராடத் தொடங்கினோம். அதனை தில்லியிடமும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை நம் மாவீரர்கள் தம் செங்குருதியால் ஈழமண்ணில் எழுதி வைத்தார்கள்.

மாவீரர்களின் பெயரால் இறைஞ்சுகின்றோம்: தாயகத் தமிழ்த் தலைவர்களே! சரியோ தவறோ நீங்களாக ஒரு முடிவெடுத்து நில்லுங்கள். அதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோருங்கள். தமிழ்நாடும் உங்கள் பக்கம் நிற்கும். 

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 21

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி)

தீரன் திண்ணியன் தேசத் தலைவன்

களம்புகல் ஓம்புமின்தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87)

“நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!”

பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும் வண்ணம் இத்தகைய இலக்கியச் சான்றுகள் எத்தனை எத்தனை!

தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் – ஔவை சொன்னவாறான ஒற்றைப் போர்வீரன் அல்லன்.  அவ்வாறான பல்லாயிரம் வீரர்களுக்குத் தலைவீரன்! கொடும்பகைக்கு முகங்கொடுத்து விடுதலைக்காகப் போரிடும் தேசிய இனத்தின் தலைவன் வீரனாய், பெருவீரனாய், வீரமுதல்வனாய் இருந்தாக வேண்டும். அதற்கும் மேலே எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியனாகவும் இருத்தல் வேண்டும்.

எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளின் முற்பகுதிகளிலும் – அப்போது சிறையில் அடைபட்டிருந்த எனக்கும் தோழர்களுக்கும் – பிரபாகரன் அறிமுகமாகி அறியப்பட்டது வீரனாகவும் புலிப்படையின் வீரத் தலைவனாகவுமே!

தமிழகத்தில் கருவிப் போராட்டவழி புரட்சி நடத்தும் கருத்தில் துணிந்து செயல்பட்டு இளம்வயதில் சிறைப்பட்டிருந்த எங்களுக்குத் தமிழீழத்தில் ஓர் இளைஞன்இளந்தலைவன் வெற்றிகரமாக விடுதலைப் போர் தொடுத்து வீரம் விளைத்து வரும் செய்திகள் பெரிதும் ஈர்ப்பாயின.

மறுபுறம் தமிழீழ மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இன ஒடுக்குமுறையும் அடக்குமுறையும்பற்றிய செய்திகள் வெளியில் போலவே சிறைக்குள்ளேயும் கொந்தளிப்பு உண்டாக்கின. இந்தக் கொடிய ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் நடத்தி வந்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் நாங்கள் கொண்டிருந்த ஈடுபாடும் வளர்ந்தது.

வந்தது ’83. இன அடக்குமுறை இன அழிப்பாகி, அரச பயங்கரவாதம் கொலைத் தண்டவமாடிற்று. கருப்பு – (இ)யூலையில் வெளிக்கடைச் சிறையில் நடந்த கொடுவதைகளும் கோரக் கொலைகளும் நாகரிக உலகை அதிரச் செய்தன. தமிழகத்தைக் கொதிக்கச் செய்தன. கொதிப்பின் உச்சநிலை சிறைகளிலேதான். இங்கே சிறைத் தமிழர்களைப் பொறுத்த ஆத்திரத்தோடு ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது – சட்டத்தால் தலையிடப்பட்டு அடைபட்டுக் கிடக்கிறவனால் சுவர் தாண்டிக் கடல் கடந்து கை நீட்டிக் கண்ணீரைத் துடைக்க முடியுமா?

தசையெலும்பைப் பூட்டி வைக்கலாம். தளும்பும் மனவுணர்ச்சிகளைக் கூடவா பூட்டி வைக்க முடியும்? மதுரைச் சிறையில் சிங்கள அரசதிபருக்குக் கொடும்பாவி கட்டிக் கொளுத்தினார்கள். திருசிராப்பள்ளிச் சிறையில் சிறைபட்ட அனைவரும் திரண்டு மௌன ஊர்வலம் நடத்தி மையத் திடலில் பொதுக்கூட்டமும் நடத்தினோம்.

எல்லாச் சிறைகளிலும் ஒரு நாள் உணவு மறுத்து அந்த உணவின் மதிப்பைத் தமிழக முதல்வரின் தமிழீழ ஏதிலியர் உதவிநிதிக்கு அனுப்பி வைத்தோம். அதிகார வருக்கம் வறட்டு விதிமுறைகளைக் காட்டி இதற்கெல்லாம் தடையிட்ட போது எதிர்த்துப் போராடினோம். 1983 ஆண்டிறுதியில் தமிழக அளவில் எல்லா மையச் சிறைகளும் சேர்ந்து போராடிய போதுமுதல் கோரிக்கையே இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் உரிமை வேண்டும் என்பதுதான்.

தமிழீழ விடுதலைக் குறிக்கோளை ஆதரிப்பவர் களாகவும்புலிப்படையோடு ஒருமைப்பாடு கொண்டவர்களாகவும்தம்பியை நேசிப்பவர்களாகவும் நாங்கள் மாறிப் போனதில் ஒரு முரண்பாடு இருக்கவே செய்தது – எங்களின் நிலைப்பாடு நாங்கள் சார்ந்திருந்த மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சிக்கு அடியோடு ஒவ்வாதது.

இந்தியாவில் தேசிய இனச் சிக்கல் குறித்தும், தமிழ்த் தேசிய இனத்தின் தன்தீர்வுரிமை (சுயநிர்ணய உரிமை) குறித்தும் கட்சித் தலைமையோடு எங்களுக்கு மாறுபாடுகள் இருந்தாலும், தமிழீழப் போராட்டம்தான் எங்கள் புரிதலைக் கூர்மையாக்கி முடிவை விரைவுபடுத்தியது. தமிழீழப் போராட்டத்தின் வரலாற்று நியாயத்தைக் காண விடாமல் மறைக்க சிவப்புத் திரைகளுக்கும் கூட உரிமையில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து ஆழ்ந்தகன்ற விவாதங்கள் நடைபெற்றன. எங்களுக்குள்ளே மட்டுமன்றித், தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளுக்காகவும் வேறு கோரிக்கைகளுக்காகவும் அறப்போராட்டம் நடத்திச் சிறைக்கு வந்த வேறு பல கட்சித் தலைவர்களோடும் கூட விவாதித்தோம். விடுதலையாகி வெளியே வந்த பிறகும் விவாதித்தோம். இதனால் தமிழீழ விடுதலை ஆதரவு நிலைப்பாடு உறுதிபட்டதோடு, தம்பி மீதான மதிப்பும் உயர்ந்தது. வீரத்துக்காக வியந்து வணங்கும் நிலை மாறி, விடுதலை அரசியல் பற்றிய தெளிவு வளர்ந்தது.

விடுதலை அரசியலின் நீட்சியே விடுதலைப் போர். விடுதலை அரசியல் என்பது வரலாற்று நோக்கில் விடுதலை தேவைப்படும் நிலையிலுள்ள வெகுமக்களை அறிவும் உணர்வும் ஊட்டி அணிதிரட்டிப் போராடச் செய்வதும், நட்பைச் சேர்த்துக் கொள்வதும், பகையைத் தனிமைப் படுத்துவதுமான முயற்சிகளைக் குறிக்கும். இம்முயற்சிகளைத் தொடரக் கருவியெடுக்கும் கட்டாயம் நேரிடும் போது விடுதலை அரசியல் விடுதலைப் போராக வடிவெடுக்கும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.     (திருக்குறள் 471)

அரசியலுக்கும் அதே போல் போருக்கும் வழிகாட்டும்படியான இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாக அன்று முதல் இன்று வரை பிரபாகரனின் வழிநடத்தல் விளங்கி வருகிறது எனலாம்.

இந்தத் தலைவன் வெறும் வீரனல்லன் என்பதை 1987 நிகழ்சிகள் மெய்ப்பித்தன. அப்பம் பிரித்த குரங்கின் வேலையைச் செய்ய முற்பட்டது இந்திய அரசு. இராசீவ் காந்தி – செயவர்த்தனா உடன்படிக்கையின் பேரால் இந்தியப் படை யாழ்ப்பாணத்தில் கனத்த கால் பதித்தது. ஈழ விடுதலைப் போராட்டத்தைச் சூழ்ந்தது ஒரு புதிய நெருக்கடி – இந்தியா நண்பனா? பகைவனா?

தமிழீழப் போராட்டம் தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறைக்கு இரு பக்கங்கள் உண்டு. இந்திய மக்களின் நலனையும், தமிழக மக்களின் உணர்வையும் பிரதிபலிப்பதாக இருக்கும் வரை இந்திய அரசு தமிழீழ மக்களின் நண்பனாய் இருக்க முடியும். ஆனால் தேசிய இனங்களை ஒடுக்கும் இந்திய ஆளும் சக்திகளின் நலனையும், தெற்காசியா மீதான மேலாதிக்க நோக்கத்தையும் பிரதிபலிக்கிற அளவில் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கெடுக்கவே முற்படும். அடுத்தும் கெடுக்கலாம். எதிர்த்தும் கெடுக்கலாம்.

காலங்காலமாய் இந்தியாவை நண்பனாகவே பார்த்துப் பழகிய தமிழீழ மக்கள் இப்போது 1987இலும் இந்தியப் படைகளின் வருகையைத் தங்கள் மீட்சிக்குத் துணை என்றே பார்ப்பது போலிருந்தது. இந்திய அரசின் உள்நோக்கத்தைத் தெளிவாகப்  புரிந்து கொண்ட பிரபாகரனின் தலைமை மக்களின் நாடித் துடிப்பை அறிந்து செயல்பட்டது. சுதுமலை அம்மன் திடலில் பிரபாகரன் ஆற்றிய உரை விடுதலை அரசியலில் அவரது தெளிவான தொலைநோக்கைக் காட்டியது.

கருவிமேல் காதலில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே கருவி என்பதால் கருவியைப் பாதுகாப்பதற்காக மக்களை இழக்க வேண்டியதில்லை. கருவியைக் கையளிக்கிறோம் என்றால் எமது மக்களின் பாதுகாப்பைக் கையளிக்கிறோம் என்று பொருள். முதிர்ச்சியின் முத்திரை தாங்கிய இந்த அணுகுமுறை பழுத்த அரசியல் நோக்கர்களையே வியந்து நோக்கச் செய்தது. சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் இவனே எனப் போற்றினோம்.

இந்தியப் படையின் செயல்பாடு… இது மீட்க வந்த படையாமிதிக்க வந்த படையாஎன்று மக்களைச் சிந்திக்க வைத்தது. புலேந்திரன்குமரப்பா உள்ளிட்ட பன்னிருவர் சிங்களப் படையால் சிறைபிடிக்கப்பட்டு நஞ்சுண்டு மாண்ட போது இந்தியா வேடிக்கை பார்த்த அவலம் தமிழீழ மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. உடன்படிக்கையைச் செயலாக்குவதில் ஒப்புக்கொண்ட  சிற்சிலவற்றைக் கூட நடைமுறைப்படுத்தாமல் இந்திய அரசு இழுத்தடித்ததை அம்பலமாக்கும் வகையில் புலிகளின் அழைப்பை ஏற்று தமிழீழ மக்கள் அறப்போராட்டம் நடத்தினார்கள். கொல்ல வந்தவரைக் கொஞ்ச வந்தவராகப் பார்க்கச் செய்த பனிப்படலம் விரைந்து விலகலாயிற்று. இந்த அறப்போராட்டத்தின் உச்சம்தான் திலீபனின் பட்டினிப் போர். அது இறுதியாகவும் உறுதியாகவும் தில்லிக் கழுகின் புறாச் சிறகைக் கழற்றிப் போட்டது.

திலீபனின் ஈகம் உலக வரலாற்றிலேயே தனித்துவமானது. இந்தத் தனித்துவமான தியாக மறவனை வளர்த்தெடுத்த தலைமையின் மகத்துவத்தை என்னென்பது! இறந்தும் வென்ற திலீபனின் போராட்டம் இந்தியாவின் அரசியல் தோல்வியைக் குறித்தது. அந்த அரசியல் தோல்வியை இராணுவத் தோல்வியாக மாற்றத்தான் ஒன்றரை ஆண்டுக்கு மேல் பிரபாகரன் தலைமையில் புலிப்படை வீரப் போர் புரிந்தது. மண்ணையும் மக்களையும் சார்ந்து நின்று போர் புரிந்தால் எவ்வளவு பெரிய வல்லடிப் படையையும் முறியடிக்க முடியும் என்ற வரலாற்றுப் படிப்பினையை வியத்துநாமுக்குப் பிறகு உலகுக்குணர்த்தியது தமிழீழம்.

திலீபனின் ஈகம் ஏற்படுத்திய தாக்கம் கருதியும், தமிழீழப் போராட்டத்தைக் கொள்கைவழி நின்று ஆதரிக்கும் நோக்கம் கருதியும் 1990 செட்டம்பரில் என்னை அமைப்பாளராகக் கொண்டு தமிழகத்தில் திலீபன் மன்றம் நிறுவப்பட்டது. அதன் மூன்று நிலைப்பாடுகள்:

·        தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை.

·        இராசீவ் – செயவர்த்தனா உடன்படிக்கை ஈழத்தமிழர் நலனுக்குப் பகை.

·        தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்!

அரசும் காவல் துறையும் செய்த கெடுபிடிக்கும் நெருக்கடிக்கும் இடையில் திலீபன் மன்றம் தனக்குரிய பங்கினை ஆற்றிவந்தது.

திலீபன் மன்றமும் விடுதலைக் குயில்களும் தமிழ் தமிழர் இயக்கமாக இணைந்த பிறகும் மேற்கூறிய நிலைப்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. தடைச் சட்டம்கள், அடக்குமுறை நெருக்கடிகள், அதிகாரக் கெடுபிடிகள் யாவற்றுக்குமிடையே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து நிற்கிறோம். பிரபாகரனின் தலைமை மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம். எந்நிலையிலும் இதில் எமக்கு ஊசலாட்டமில்லை.

இது வெறும் வீரவணக்கமோ நாயக வழிபாடோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். வரலாற்றை உருவாக்குபவர்கள் வெகுமக்களே.எவ்வளவு பெரிய தலைவனாயினும் வீரனாயினும் வரலாற்றின் கருவியே என்பதில் ஐயமில்லை.தமிழீழ விடுதலைப் போர் வரலாறு கண்டெடுத்த தலைசிறந்த கருவி பிரபாகரனே.வரலாற்றால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றை வடிப்பவராகத் திகழ்வதால் அவரே வரலாற்று நாயகன்.

தேசியத் தலைவர் என்பது அலங்காரப் பட்டமன்று.அது கடினமான பெரும் பொறுப்பு.இந்தப் பொறுப்பை உணர்ந்து இன்னல்களையும் இடர்மிகுந்த திருப்பங்களையும் கடந்து தன் மக்களை வழிநடத்தி வருவது பிரபாகரனின் தலைமைச் சிறப்பே.

தமிழகத்தில் தமிழ்த் தேசியப் புரட்சிக்காக உழைத்துவரும் எம்மைப் போன்றோர் பிரபாகரனின் போராட்ட வரலாற்றிலிருந்து நிறையக் கற்கவும் கடைப்பிடிக்கவும் வேண்டியதிருப்பதாகக் கருதுகிறோம். ஒரு சிலவற்றை ஈண்டு குறிப்பிடலாம்.

ஒரு மக்களினத்தை ஒன்றுபடச் செய்து பகைவனுக்கும் எதிராக அணிதிரட்ட வேண்டுமானால் அவ்வினத்திற்குள்ளான முரண்பாடுகளையும் பூசி மெழுகுவதன்று வழி. அவற்றுக்கு முறையாகத் தீர்வு காண வேண்டும். பிரபாகரனின் தலைமை சிங்களப் பேரினவாதத்தையும், அதற்கு துணைவந்த பிறரையும் எதிர்த்துப் போராடும் போதே, தமிழீழ மக்களின் ஓர்மையைச் சிதைத்து ஒற்றுமையைக் கெடுக்கும் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்துப் போரடியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் கண்டுள்ளது. தமிழீழ மக்களின் வெல்லற்கரிய வலிமைக்கு இந்தப் புரட்சிய ஒற்றுமையே அடித்தளமாகும். தமிழ்த் தேசியத்துக்கான போராட்டம்,சாதியொழிப்பு அல்லது சமூகநீதிக்கான போராட்டம் இவ்விரண்டின் இடையுறவையும் புரிந்து உள்வாங்கிக் கொள்ள தமிழீழம் நமக்குதவும்.

பிரபாகரன் மிக சிறந்த படைத் தளபதி என்பதை மாற்றாரும் மறுக்க மாட்டார். ஆனால் வெறும் படைத் தளபதியல்லர், மக்கள் விடுதலைப் போரின் தலைவர் அவர் என்பதை அவரின் போருத்திகளே காட்டும். ஆள் வலிமை, அறிவியல்–தொழில்நுட்ப வலிமை, ஆயுத வலிமை என்று அனைத்து வகை வலிமையோடும் அடக்கி ஒடுக்கும் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களாதரவை மட்டுமே சார்ந்து போராடுவதற்கான உத்தியாக உலக வரலாற்றில் கெரில்லாப் போர் முறை வளர்த்தெடுக்கப்பட்டது. நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த தற்கொடைப் போர் முறை கெரில்லாப் போர்முறையின் உச்சக்கட்ட வளர்ச்சியாகும்.

ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் தன்னந்தனியாக நின்று பேரினவாத அரசையும் அதற்குத் துணையாக வரும் வல்லாதிக்க ஆற்றல்களையும் எதிர்த்துப் போராடுவது எளிதன்று. தன் தரப்புக்கு ஆகக்குறைந்த இழப்போடு பகைத் தரப்பை ஆகப் பெருமளவுக்கு நொறுக்கிச் சிதறடிக்கும் தற்கொடைப் போர்முறையே இந்தக் கடினமான பயணத்தில் திறமிகு தடைநீக்கி என்பதை தமிழீழப் போராட்ட வரலாறு மெய்ப்பிக்கிறது. எந்தப் படையாலும் கரும்புலிகளின் உயிராயுதத்திற்கு எதிர்நிற்க முடியாது. இதுவே தற்கொடைப் போர்முறை. இந்தப் போர்குறையை வகுத்து வழிநடத்துவதில் பிரபாகரனின் போர்த்திறன் மட்டுமல்ல, விடுதலை அரசியலின் வித்தக நோக்கும் முன்னிற்கிறது.

விடுதலைப் போராளிகள் அமைதியையே விரும்புகின்றனர் – அது இடுகாட்டு அமைதியாய் இருந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு! உரிமைகளோடு சேர்ந்து வரும் மெய்யமைதிக்காகவே அவர்கள் போராடுகிறார்கள். விடுதலைப் போராளி தன் இரு கைகளையும் உயர்த்திக் காட்டுகிறார். ஒரு கை அமைதிக்காக! ஒரு கை போருக்காக! எந்தக் கை வேண்டுமென்று பகைவரே முடிவு செய்யட்டும். அமைதி என்றால் அமைதி! போர் என்றால் போர்! எது வேண்டும் சொல் பகையே! இதுவே விடுதலைப் போராளியின் அணுகுமுறை.

பிரபாகரன் சண்டைப் பிரியர், சமாதானத்தின் பகைவர் என்றெல்லாம் பாக்கு நீரிணையின் அப்பக்கமும் இப்பக்கமும் வறட்டுத் தவளைகள் போல் கத்திக் கொண்டிருந்தவர்கள் எங்கே? பிரபாகரனின் இப்போதைய அமைதி முயற்சி மெய்யான சண்டைப் பிரியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது.

தமிழீத் தாயகத்திற்கான போராட்டம் போர்வழி நடந்தது. இப்போது அமைதி வழி தொடர்கிறது. எப்படியும் அது முன்னேறிச் செல்கிறது. வீரனாகவும், அதற்கும் மேலே விடுதலைப் போர் வித்தகனாகவும் மக்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலில் இறுதி வெற்றி உறுதி. அது ஒரு தேசத்தின் வெற்றி. விடுதலை நாடும் அனைவரின் வெற்றியும் கூட!

ஒளிக் கதிர்களுக்கு எல்லைகள் உண்டோ?

[தலைவர் பிராபகரன் 50ஆம் பிறந்த நாள் (2004) மலருக்காக எழுதிய கட்டுரை]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 20