ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கருத்தரங்கக் கூடமாகப் புது சட்டசபை மாற்றம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_83049920131019234453.jpg

கருத்தரங்க க் கூடமாக ப் புது சட்டசபை மாற்றம்: சன.17இல் நவீன மருத்துவமனை திறப்பு?



சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் அன்று, இந்த கட்டடத்தில் அதிநவீன மருத்துவமனையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. புது தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கட்டடம், அதிநவீன கருத்தரங்க கூடமாக மாற்றப்பட்டுள்ளது. சட்டமேலவை கட்டடம் தற்போது, மருத்துவ ஆய்வரங்கமாக மாற்றப்பட்டு உள்ளது.
புது தலைமைச் செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் இந்த பணி, ஜனவரி மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர், கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஏழு உதவி செயற்பொறியாளர் கொண்ட தனிக்குழு, அங்கு முகாமிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.



வார்டுகள்:

ஒவ்வொரு தளத்துக்கும், ஒரு உதவி செயற்பொறியாளர் வீதம், நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியதாக கட்டப்பட்ட அறைகள், இரண்டு வார்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு தளத்தில் இருந்தும், நோயாளிகளை படுக்கையில் அழைத்துச் செல்ல, சாய்தளம் அமைக்கும் பணி, இரண்டு பக்கங்களிலும், தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, மூன்று தளங்கள் வரை அமைக்கும் பணிகள் முடிந்து, நான்காம் தளததில் இருந்து, ஐந்தாம் தளத்துக்கு சாய்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, மேலவைக்காக கட்டப்பட்ட கட்டடம், எந்த மாற்றமும் செய்யப்படாமல், சிறப்பு ஆய்வரங்க கட்டடமாகவும், சட்டசபை கட்டடம், கருத்தரங்கு கூட அரங்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையில், பேராசிரியர், துறை தலைவர்களுக்கு, 90 கழிப்பறைகள் வீதம், மொத்தமாக, 560 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து வார்டுகளிலும், முழுவதுமாக, 'ஏசி' அமைக்கும் பணி, முடியும் தறுவாயில் உள்ளது. அதேபோல், தரைத்தளம் மற்றும் முதல் தளம், புறநோயாளிகள் பிரிவாகவும், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் நிர்வாகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளாகவும், நான்காம் தளம், அவசர சிகிச்சை பிரிவாகவும், ஐந்து, ஆறாவது தளங்கள் உள்நோயாளிகள் சிகிச்சை வார்டுகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

500 பேர்:

நவம்பர் மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களோடு, தினமும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர், கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் இறுதிக்குள், கட்டுமானப் பணிகளை முடித்து, அதன் பிறகு, மருத்துவமனைக்கான உபகரணங்கள் அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான ஜனவரி, 17ல், பல்நோக்கு மருத்துவமனை செயல்படத் துவங்கும் என, தெரிகிறது.

- நமது செய்தியாளர், தினமலர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக