ஞாயிறு கொண்டாட்டம்
மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்!
ஓருவருக்குச்
சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே நாம் கேட்கும்
கேள்வி, அவருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா? என்பதே.சர்க்கரை நோய்க்கும் சிறுநீரகச் செயல் இழப்புக்கும் அந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது. ""ஆனால்
சிறுநீரகச் செயல் இழப்புக்குச் சர்க்கரை நோய் தவிர, நிறையக் காரணங்கள்
இருக்கின்றன'' என்கிறார் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ராத்
மருத்துவமனையில் சிறுநீரகத்துறைத் தலைவராக இருக்கும் டாக்டர்
ஆர்.விஜயகுமார்.""சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரகச் செயல்
இழப்பு ஏன் ஏற்படுகிறது? சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரில்
அதிகமான அளவில் புரதம் வெளியேறுகிறது. இதனால் அடிக்கடி அவர்கள் சிறுநீர்
கழிப்பார்கள். அவர்களுடைய சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டிய நிலை
ஏற்படுகிறது. அதிகப்படியான புரதம் வெளியேறிவிடுவதால், உடல்
பருத்துவிடுகிறது. கை, கால்களில் வீக்கமும் ஏற்படுகிறது. அடுத்து,
ரத்தத்தில் யூரியாவின் அளவும் அதிகமாகிவிடுகிறது. இப்படி புரதம், யூரியா
என்று ரத்தத்தில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன.
சிறுநீரகங்களால் ஓர் அளவுக்கு மேல் ரத்தத்தில் உள்ள கழிவுகளைத்
தூய்மைப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ரத்தத்தில் கழிவுகளின் அளவு
அதிகரிக்கிறது. இந்தக் கழிவுகளை நீக்க, ரத்தத்தைச் செயற்கையான முறையில்
தூய்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது, டயாலிஸிஸ் செய்ய
வேண்டியிருக்கிறது. இதன் பின்னர் சிலநாட்களிலேயே சிறுநீரகங்கள் முற்றிலும்
செயல் இழந்துவிடுகின்றன.ஆனால் இது தவிர, சிறுநீரகச் செயல்
இழப்புக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன'' என்கிறார் முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீரகவியல்துறையில் நிபுணரான அவர்.""இப்போது
என்னிடம் வரும் நோயாளிகளில் 8 - 10 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயால்
சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகப்படியான வலி நிவாரண மாத்திரைகளை -
அதாவது, தலைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கான மாத்திரைகளை -
பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. நான்-ஸ்டிராய்ட்
ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ் (NSAID) வகை மருந்துகளைப் பயன்படுத்துவதால்
சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக DICLOFENAC, NIMESULIDE போன்ற
வலிநிவாரண மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக பாதிப்புக்கு
உள்ளாகிறார்கள்.டாக்டர் எப்போதோ ஒரு நோய்க்கு ஒரு சில மாத்திரைகளை
எழுதிக் கொடுத்திருப்பார். மீண்டும் அது போன்ற நோய் வரும்போது, டாக்டரிடம்
காண்பிக்காமல் பழைய மருந்துச் சீட்டைக் காட்டி மருந்துகளை வாங்கி பலர்
உட்கொள்கிறார்கள். இது தவறு.ஒரே விதமான அறிகுறிகளுடன் பல நோய்கள்
இருக்கலாம். உதாரணமாக தலைவலிக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள்
இருக்கின்றன. மருத்துவர் எதனாலோ வந்த தலைவலிக்கு எழுதிக் கொடுத்த
மாத்திரைகளை வேறு காரணத்தால் வந்த தலைவலிக்குப் பயன்படுத்துவார்கள்.
இதனாலும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.அதுமட்டுமல்ல,
ஒருவருக்கு ஏதாவது நோய் வந்துவிட்டதாக அடுத்தவரிடம் சொன்னால், உடனே இந்த
இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்று இலவச மருத்துவ
ஆலோசனை கிடைக்கிறது. தனக்கு அந்த மாதிரி நோய் வந்தபோது டாக்டர் இதைத்தான்
எழுதிக் கொடுத்தார் என்பதாகச் சொல்வார்கள். அப்படி அந்த மாத்திரைகளை
வாங்கிச் சாப்பிடும்போது பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த மாத்திரை
ஒவ்வாமல் போய் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. சில
ஆன்ட்டிபயாடிக் மருந்துகளாலும் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
சென்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகப் பாதிப்பை
ஏற்படுத்துகின்றன. ஏன் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது?உடலுக்குப்
பொருத்தமில்லாத மருந்து, மாத்திரைகள் உடலுக்குள் சென்று செரிமானமாகி,
உடலில் கல்லீரலிலும், ரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை எல்லாம்
வெளியேறுவது சிறுநீரகங்களில் வழியாகத்தான். இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு
ஏற்படுகிறது.இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டவர்களை ஆரம்ப நிலையில்
கொண்டு வந்தால் இரண்டு, மூன்று முறை டயாலிஸிஸ் செய்து குணப்படுத்திவிடலாம்.
அதிக அளவில் சிறுநீரகப் பாதிப்பு இல்லாமல் சரி செய்துவிடலாம். இதற்கே
ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், சிறுநீரகம்
முழுவதும் பாதிக்கப்பட்டால், மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்த வேண்டும்.
அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்'' என்கிறார் அவர்.""சிறுநீரகப்
பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க ஓரே வழி, டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை
உட்கொள்வதுதான். டாக்டரிடம் போக நேரமில்லை என்பதாலோ, டாக்டரிடம் போனால்
அதிகக் கட்டணம் வசூலித்துவிடுவார் என்பதாலோ, மருந்துக் கடைகளில் மருந்து,
மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டால் அதனால் ஏற்படும் இழப்பு மிகவும் அதிகம்.
மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்'' என்று
எச்சரிக்கிறார் டாக்டர் ஆர்.விஜயகுமார்.
9/24/2012 11:25:00 AM