வெள்ளி, 28 செப்டம்பர், 2012

மருந்துச்சீட்டுகளில் தமிழ் எப்போது?

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பு வோருக்கான தொடர் சிகிச்சை நடைமுறைகள் மற்றும் அவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுவதால், பலர் புரியாமல் தவிக்கின்றனர். இந்த நடைமுறையில் மாற்றம் செய்து, தமிழில் அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, "டிஸ்சார்ஜ் சம்மரி' வழங்கப்படும்.
ஆங்கிலத்தில் அறிவுரை:


இதில், நோயாளி மருத்துவமனைக்கு வரும் போது இருந்த நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம், கொடுக்கப்பட்ட மருந்துகள், தற்போதைய உடல் நிலை பற்றிய விவரம், தொடர் சிகிச்சைக்கு உரிய அறிவுரை அல்லது, வீடு திரும்பிய பின் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை பற்றிய அறிவுரைகள் இருக்கும். இந்த குறிப்புகள் அனைத்தும், ஆங்கில மொழியில் எழுதி தரப்படுகிறது. நோயின் தன்மை, அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகிய விவரங்கள், மருத்துவர்களுக்கு தெரிந்தால் போதும் என்ற கருத்து உள்ளது. இவற்றை ஆங்கில மொழியில் எழுதுவதால் பிரச்னை ஒன்றும் இல்லை என, நோயாளிகளும் தெரிவிக்கின்றனர். ஆனால்,
சிகிச்சைக்கு பின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை, நோயாளிக்கு கண்டிப்பாக புரிய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோர் பெரும்பாலும், ஆங்கிலம் அறியாதவர்கள் என்பதால், ஆங்கிலத்தில் அளிக்கப் படும் மருத்துவ அறிவுரையை புரிந்து கொள்வதில், அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, பிரசவம் முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு, அறிவுரைகள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்ட துண்டு சீட்டுகளாக வழங்கப்படுகிறது. இவற்றில், குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்; பாலூட்டுவதற்கான கால இடைவெளி; பாலுட்டும் நேரத்தில் உடல் பராமரிப்பு போன்ற முக்கிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஆங்கிலத்தில் இருப்பதால், பெரும்பாலான பெண்களுக்கு பயனில்லாமல் போய்விடுகிறது.
இது குறித்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று திரும்பிய, சுமதி கூறியதாவது: ஏழைகள் தான் பெரும்பாலும் இங்கு வருகின்றனர். ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் இதில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. ஆலோசனைகளை தமிழில் அச்சடித்து கொடுத்தால், அதை படித்து தெரிந்து கொள்ளவும், அதை நடைமுறையில் பின்பற்றவும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு சுமதி கூறினார். மேலும், ""ஆங்கிலத்தில் அறிவுரைகள் இருப்பதால், அவற்றால் பயன்
Advertisement
இல்லை. இதில் என்ன எழுதி இருக்கிறது என்று மருத்துவமனை ஊழியர் களிடம் கேட்டால், திட்டு தான் விழும். தமிழில் விவரங்களை தரும் முறையை அரசு மருத்துவமனையில் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
"தமிழ் என்றால் சிரமம்':


நோயாளிகளுக்கான அறிவுரை களை தமிழில் வழங்குவது குறித்து, சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு, டிஸ்சார்ஜ் சம்மரியில், அவர்கள் விரும்பிக் கேட்டால் அறிவுரைகளை தமிழில் எழுதி கொடுக்கிறோம். இதற்காக, ஒரு ஸ்டெனோ பணியில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். மேலும், ""மற்ற எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. மருத்துவ தகவல்களை, தமிழில் எழுதி கொடுப்பது சற்று சிரமமான விஷயம். அரசு டிஸ்சார்ஜ் சம்மரி தாள்களை அச்சடித்து வழங்கும் போதே, அதை தமிழில் அச்சடித்தால், நடைமுறை மாற வாய்ப்பு உண்டு,'' என்றார். தமிழ், தமிழர், தமிழ் நாடு என, தவறாமல் முழங்கும் நமது அரசியல்வாதிகளின் கவனம், சற்று, பாக் ஜலசந்தியின் அப்புறத்தில் இருந்து இப்புறம் திரும்பினால், தமிழ் பிழைக்க, தமிழர் வாழ்வு மேம்பட வழிபிறக்கும்.
-  தினமலர்  செய்தியாளர்  -




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக