ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

அரசு மருத்துவமனை அலட்சியத்தால் குழந்தையை இழந்த பெண் - Mother losses her child due to carlessness of govrt. hospital

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், செவிலியர்களின் அலட்சியம் காரணமாக, அழகான ஆண் குழந்தையை இழந்த இளம்பெண், "என் நிலை இன்னொரு தாய்க்கு ஏற்படக்கூடாது' என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 31. இவரது மனைவி புவனா, 25; ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. புவனா கர்ப்பமடைந்தார். அரசு மருத்துவமனை சிகிச்சை மீது, அசுர நம்பிக்கை வைத்த புவனா, பெற்றோர், மாமியார், மாமனார், கணவர் ஆகியோர் எவ்வளவு சொல்லியும், தனது பிரசவம் அரசு மருத்துவமனையில் தான் என்று உறுதியாகக் கூறினார். வீட்டிற்கு அருகில் உள்ள, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், மாதாந்திர பரிசோதனைகளை செய்து கொண்டார். இறுதியில், கடந்த ஜூன் மாதம், 30ம் தேதி நடந்த பிரசவத்தில், அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையை இழந்து, உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளார் புவனா.

இது குறித்து, "தினமலர்' நாளிதழுக்கு புவனா கண்ணீர் மல்க அளித்த பேட்டி:"அரசு மருத்துவமனையில் பிரசவம் நன்றாக பார்ப்பர்' என்று எனக்கு தெரிந்த பலர் கூறியதால், என் குழந்தையையும் அங்கு பெற்றெடுக்க விரும்பினேன். கருத்தரித்த நாள் முதல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகளை செய்து கொண்டேன். அப்போது தான், முதல் முறையாக அரசு மருத்துவமனைக்கு நான் சென்றேன்.கர்ப்பிணிகளை, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒருமையில் தான் பேசுகின்றனர். ஒரே மருத்துவர், தொடர்ச்சியாக இருக்க மாட்டார். நாம் செல்லும் போது, பணியில் இருக்கும் மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஒருவர், "ஸ்கேன்' எடுக்கச் சொல்வார். அடுத்த மாதம் அதன் முடிவைக் காட்டினால், "இதை யார் எடுக்கச் சொன்னது?' என்று மற்றொரு மருத்துவர் கேட்பார். நான் ஆறு ஸ்கேன் எடுத்துள்ளேன். ஒருமுறை கூட ஸ்கேன் முடிவை, மருத்துவர்கள் வாங்கிப் பார்க்கவில்லை. குழந்தை நன்றாக இருக்கிறது என்று மட்டும் கூறுவர்.

எனக்கு ஜூன் 25ம் தேதி பிரசவமாகும் என, மருத்துவர்கள் தேதி குறித்துக் கொடுத்தனர். ஆனால், பிரசவ வலி வரவில்லை. இது குறித்து நான் மருத்துவரிடம் கேட்டபோது, 28ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளுமாறு கூறினார். எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், குரோம்பேட்டையில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார்.மருத்துவர் சொன்னபடி, 28ம் தேதி மருத்துவமனையில் சேரச் சென்றேன். முதலில் சேர்க்கைக்கு, 20 ரூபாய் லஞ்சம் பெற்றனர். நிறைமாத கர்ப்பிணியாக காலையில் மருத்துவமனைக்குச் சென்ற எனக்கு, 3 மணிக்குத் தான் சேர்க்கை கொடுத்தனர். முதல் நாள், எந்த மருத்துவரும் வரவில்லை. அடுத்த நாள், ஒரு மருத்துவர் வந்து விசாரித்தார். ஜூன் 30ம் தேதி மதியம், இனிமா கொடுத்தனர்.குளுக்கோஸ் ஏற்றினர். இரண்டாவது பாட்டில் குளுக்கோஸ் ஏறிய போது, பிரசவ வலி ஏற்பட்டது. அன்று இரவு, 8 மணிக்கு எனக்கு பனிக்குடம் உடைந்தது.

பணியில் இருந்த செவிலியர்கள், "இதுக்கு இப்போ தான் பனிக்குடம் உடைந்துள்ளது; நாம் சென்று சாப்பிட்டு விட்டு வரலாம் வா' என்று கூறிவிட்டுச் சென்றனர். 30 நிமிடம் கழித்து வந்தனர். வலியில் நான் துடித்துக் கொண்டிருந்தேன்.எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், குழந்தையை ஆயுதம் வைத்து எடுக்குமாறு செவிலியர்களிடம் கூறினார். இதற்கு, "சுகப் பிரசவத்திற்கே முயற்சிக்கலாம்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று செவிலியர்கள் கூறினர். மருத்துவர் சென்றுவிட்டார்.

என், வயிற்றில் கை வைத்து, குழந்தையின் தலை உள்ள பகுதியில் தாறுமாறாக அழுத்தினர். பெரும் அவஸ்தைக்கு பிறகு, 10.45 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது அழவில்லை. குழந்தையை செவிலியர்கள் என்னிடம் காட்டவில்லை.சிறிது நேரம் கழித்து, "குழந்தையின் உடல்நிலை மோசமாக உள்ளது. எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கூறினர். "எங்களிடம் கார் உள்ளது; நாங்கள் அழைத்துச் செல்கிறோம்' என்று கேட்டபோது, "அப்படி எல்லாம் தர முடியாது; 108 ஆம்புலன்ஸ் மூலம் தான் அனுப்பி வைப்போம்' என்று கூறினர்.

ஒரு வழியாக என் சகோதரி சுமதி, குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவு, 1 மணிக்கு, எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எழும்பூரில் எவ்வளவோ போராடியும், கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி குழந்தை இறந்துவிட்டது. மூச்சுத் திணறலால் குழந்தை இறந்துவிட்டதாக, சான்றிதழ் அளித்தனர். அரசு மருத்துவமனையை நம்பி வந்ததற்கு, தற்போது என் குழந்தையையும் இழந்து, என் உடல்நிலையும் பாதித்து நிற்கிறேன். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும்.என் நிலை, இன்னொரு தாய்க்கு வரக்கூடாது என்பதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நடப்பதைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க, முதல்வர், அமைச்சர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் என அனைவருக்கும், எனக்கு நடந்த கொடுமையை கடிதமாக எழுதினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.இவ்வாறு புவனா கண்ணீர் மல்கக் கூறினார்.

 - தினமலர் செய்தியாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக