அதிர வைக்கும் "அந்த நாட்கள்'!
First Published : 23 Sep 2012 12:00:00 AM IST
அரசுப் பணி புரிபவர்கள் சமூகப் பணியிலும் சாதிக்கலாம் என்று நிரூபித்துள்ளார்
இளங்கோவன். தென்னக ரயில்வேயின் துணைப் பொது மேலாளராகப் பணிபுரியும் இவர்"சுடர்' என்ற அமைப்பின் மூலம் 12ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத பல
ஏழை மாணவிகளின் மேற்படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்துடன்
சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு ஆவணப் படங்களையும்
இயக்கியுள்ளார். இவருடைய மனைவி கீதாவும் ஓர் அரசு ஊழியர். இவர்
பெண்களுக்காக "கூடு' என்கிற அமைப்பை நடத்திக் கொண்டிருப்பதோடு குறும்பட
இயக்குநராகவும் உள்ளார். இருவரையும் நாம் சந்தித்தோம்.முதலில் நம்மிடம் பேசினார் இளங்கோவன்.""அரசுப்
பணியில் இருந்தாலும் தனிப்பட்ட மன நிம்மதிக்காக ஏதேனும் செய்ய
வேண்டுமென்று தோன்றியது. அப்போதுதான் நண்பர்களுடன் இணைந்து "சுடர்' என்ற
அமைப்பைத் தொடங்கினேன். ஆதரவற்ற பெண் குழந்தைகளின் மேற்படிப்புக்கு இந்த
அமைப்பின் மூலமாக உதவி செய்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு
நான் மதுரையில் பணிபுரிந்தபோது அங்கிருந்த அரசுக் காப்பகத்திற்கு செல்ல
நேர்ந்தது. அங்கே 12ஆம் வகுப்பு வரை அரசின் சலுகையில் படிக்கும் ஏழைப்
பெண்கள் பலர் அதன்பின் செல்லும் திசை புரியாமல் திகைத்துக் கொண்டிருப்பது
தெரிந்தது. அவர்களின் பெற்றோருக்கும் போதிய கல்வியறிவு
இல்லாத நிலையில் வறுமை காரணமாக பல மாணவிகள் கூலி வேலைக்கும், மில்
வேலைக்கும் சென்றனர். அவர்களுக்கு தொழிற்கல்வி கொடுக்க நினைத்தோம்.
கேட்டரிங், நர்ஸிங் அஸிஸ்டென்ட், என்ஜினியரிங் போன்ற துறைகளில் படிக்க
வைத்தோம். இன்று பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதில் சரண்யா என்ற
மாணவி என்ஜினியரிங் படித்துவிட்டு தற்போது ஐ.ஏ.எஸ். படித்துக்
கொண்டிருக்கிறார். அவருடைய படிப்புக்கான முழு செலவையும்
"சுடர்' அமைப்பே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது சென்னையிலும் இந்த
சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மதுரையில் உள்ள காப்பகத்தில்
பயிலும் மாணவிகளுக்கு இலவச டியூஷன் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல உயர்
அதிகாரிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.
எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மம்சாபுரம் பகுதியில்
மாணவர்களுக்காக இலவச பிரெüஸிங் சென்டரும் நடத்துகிறோம்.இது
தவிர நான் இரண்டு ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளேன். முதல் படம் "ஆராயா
தீர்ப்பு'. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா முழுவதும் 500 சாதியினரை
"குற்றப்பரம்பரை' என்ற பட்டியலில் வைத்திருந்தார்கள். அவர்கள் மீது 'ரேகைச்
சட்டம்' உள்ளிட்ட பல அடக்குமுறைகள் இருந்தன. தமிழ்நாட்டில் 30 வகையான
சாதியினர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். அதில் "கல்ஒட்டர்'
என்று சமூகமும் உண்டு.ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப்பரம்பரை
சட்டத்தால் துன்புறுத்தப்பட்ட அவர்கள் தற்போதும் துன்பத்தையே அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தப் படத்தில் பதிவு செய்திருந்தேன்.மதுரையிலும்
அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கல்ஒட்டர் சமூகத்தினர் அதிகம்
வசிக்கின்றனர். குற்றவாளிகள் அகப்படாத பல திருட்டு வழக்குகளில் அந்த சமுதாய
இளைஞர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டி சிறையில் அடைக்கும் கொடுமையை
காவல்துறை செய்து கொண்டிருப்பதை ஆதாரபூர்வமாகக் கூறியிருந்தேன்.இந்த
ஆவணப் பட வெளியீட்டு விழாவில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பலர்
கலந்துகொண்டர்கள். இந்தப் படத்தைப் பார்த்த அப்போதைய மதுரை உயர்நீதி மன்ற
நீதிபதி அக்பர் அலி ஒரு வழக்கின் தீர்ப்பின்போது ஓர் உத்தரவிட்டார். ""இனி
கல்ஒட்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை காவல் துறையினர் தன்னிச்சையாகக் கைது
செய்யக் கூடாது. தன்னார்வ அமைப்பினரிடம் அனுமதி பெற்ற பிறகே
கைது செய்ய வேண்டும்'' என்றவர் அதற்காக ஒரு தன்னார்வ அமைப்பையே
நியமித்தார். அதையே இந்தப் படத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகக்
கருதுகிறேன். "கல்ஒட்டர் சமூகத்தில் பிறந்ததற்காக
பள்ளியிலும் பல கேலிகளை அனுபவிக்கிறோம்' என்று பல மாணவ, மாணவிகள் அந்த
ஆவணப் படத்தில் கூறியிருந்தார்கள். தற்போது அவர்களில் பல மாணவ, மாணவிகளை
என்.ஜி.ஓ.க்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.அடுத்து
திருநங்கைகளின் வாழ்வை அடிப்படையாக வைத்து "அஃறிணைகள்' என்ற ஆவணப் படத்தை
இயக்கினேன். லிவிங் ஸ்மைல் வித்யா, ஏஞ்செல் கிளாடி ஆகிய இரண்டு
திருநங்கைகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இந்தப் படம். திருநங்கைகளின்
வாழ்வாதாரப் பிரச்னைகளை இந்தப் படம் அலசியது. இந்தப்
படத்திற்கு சரத் சந்திரர் நினைவு விருது கிடைத்தது. இரண்டு படங்களும்
த.மு.எ.க.ச.வின் விருதுகளைப் பெற்றன. மும்பையில் செயல்படும் ஃபிலிம்
சொûஸட்டி அமைப்பு உலகம் முழுக்க இந்தப் படத்தை திரையிடும் முயற்சியில்
இறங்கியுள்ளது'' என்றார்.தொடர்ந்து நம்மிடம் பேசினார் கீதா இளங்கோவன்:""நான்
மதுரையில் பணிபுரிந்தபோது அங்கு "கூடு' என்ற அமைப்பை ஆரம்பித்தேன். நான்
தற்போது சென்னையில் வசித்தாலும் அந்த அமைப்பு அங்கே இயங்கிக்
கொண்டிருக்கிறது. பெண்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த
அமைப்பின் மூலம் இலவச நாடகம் நடத்துகிறோம். "பெண்திரை' என்ற தலைப்பில்
பெண்கள் இயக்கிய குறும்படத்தைத் திரையிட்டோம். "வாழும் பெண்களின் வாய்மொழி
வரலாறு' என்ற தலைப்பில், பிணம் எரிப்பது போன்ற தொழிலைச் செய்யும் பெண்களை
அழைத்து வந்து அவர்களின் வாழ்க்கையைப் பிறர் அறிந்து கொள்ள வைத்தோம். இதுதவிர
நான் "லிட்டில் ஸ்பேஸ்' என்று குறும்படத்தை இயக்கியுள்ளேன். மூளை
வளர்ச்சியற்ற குழந்தைகளைப் பற்றிய படம் இது. பொது இடங்களில் அவர்கள் படும்
கஷ்டங்கள் அவர்களின் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கிறது என்பதை இந்தப்
படத்தில் கூறியிருந்தேன். ஹைதராபாத்தில் நடந்த "சர்வதேச
குழந்தைகள் திரைப்பட விழா'வில் இந்தப் படம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
'ஸ்கார்ஃப்' என்கிற அமைப்பின் விருதையும் இந்தப் படம் பெற்றது. இதையடுத்து
தற்போது "மாதவிடாய்' என்ற குறும்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.இதற்காக
பல குக்கிராமங்கள் தோறும் பயணம் செய்து படிப்பறிவில்லாத பெண்கள் படும்
துயரத்தைப் பதிவு செய்துள்ளோம். கிராமப்புற பெண்களுக்கு இதைப் பற்றிய
விழிப்புணர்வே இல்லை. உதாரணத்திற்கு மதுரை அருகிலுள்ள டி.கல்லுப்பட்டி என்ற
கிராமத்திற்கு இந்தப் படம் தொடர்பாக சென்றோம். அந்தக்
கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் மாத விலக்கான பெண்கள்
அனைவரையும் அந்த நாட்கள் முடியும் வரை ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு
சிறிய வீட்டில்தான் தங்க வைக்கிறார்கள். அந்த வீட்டில் மின்சார வசதிகூட
இல்லை. அந்தப் பெண்கள் அந்த நாட்களில் ஊருக்குள் வரக் கூடாது. இதைவிட
கொடுமை, பிரசவம் ஆன பெண்களை 30 நாட்களுக்கு அந்த வீட்டில்தான் தங்க
வைக்கிறார்கள். பிறந்த பச்சிளங் குழந்தையுடன் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப்
புறமாக தனியே இருக்கும் அந்த வீட்டில்தான் வசிக்க வேண்டும். முதல் மூன்று
நாட்களுக்கு மட்டும் ஒரு வயதான பெண்மணி அவருக்கு உதவியாக இருப்பார். பிறகு
அவரும் கூலி வேலைக்குச் சென்றுவிடுவார். இந்தப் பெண்களுக்கு சாப்பாடு
மட்டும் அவ்வப்போது யாரேனும் சென்று கொடுப்பார்கள். அதுவும்
சில நாட்களுக்குக் கிடைக்காது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால்,
"சாமிக்கு பயந்து இவ்வாறு செய்கிறோம்' என்கிறார்கள். இவ்வாறு படித்தவர்கள்
முதல் பாமரர்கள் மத்தியில் வரை மாதவிலக்கு தொடர்பாக உள்ள தேவையற்ற
அறியாமைகளை போக்கும் விதமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்'' என்று
முடித்தார் கீதா இளங்கோவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக