ஞாயிறு கொண்டாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு கொண்டாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

572 தீவுகள் 4 பேராயிரம் மக்கள்!


ஞாயிறு கொண்டாட்டம்
572 தீவுகள் 4 இலட்சம் மக்கள்!

First Published : 23 Sep 2012 12:00:00 AM IST

நமது பாரதத்தின் ஒரு மாநிலமாக, எட்டாத தொலைவில் குட்டி குட்டித் தீவுகளாக உலக வரைபடத்தில் சிறுசிறு எறும்புக் கூட்டங்களைப் போல் காட்சிதரும் அந்தமான்- நிகோபார் தீவுகளின் அழகைக் கண்டு மகிழும் வாய்ப்பு சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்தது. புலவர் நாவை சிவம் குழுவில் நானும் என் துணைவியார் விசயலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் இடம்பெற்றோம்.சென்னையிலிருந்து "சுவராஜ் தீப்' என்ற கப்பலில் புறப்பட்டோம். கப்பல் பயணம் எமக்குப் புதிது. 6-8-12-ல் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் கால் வைத்தவுடன் புத்துணர்ச்சி பிறந்தது. கப்பலின் தகவல் தொடர்பாளர் கண்ணன், எங்களைக் கப்பலை இயக்கும் கேபின் அறைக்கு அழைத்துச் சென்று கப்பல் செயல்பாடுகள் குறித்து விளக்கியதை என்றும் மறவோம்.அந்தமான் நிகோபார் தீவுகள்: சொர்க்க பூமியெனும் இத்தீவுகள் வங்கக் கடலில், சென்னையிலிருந்து நேர் கிழக்காக 1190 கி.மீ. தொலைவில் உள்ளன; பழங்குடியினர் இன்றைக்கும் வாழும் பூமி. 1050-ல் இரண்டாம் ராஜேந்திரன் கடாரத்தின் மீது படையெடுத்த போது நிகோபார் தீவுகளைக் கைப்பற்றினான் என்று வரலாறு தெரிவிக்கிறது. அதில் நிக்கோபார், "நக்கவரம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. 92 விழுக்காடு இயற்கை எழில் கொஞ்சும் பசுமரக்காடுகள்தான்.அந்தமானில் மொத்தம் 572 தீவுகள் உள்ளன. என்றாலும் 38 தீவுகளில்தான் மக்கள் வாழ்கின்றனர். தற்போது மக்கள் தொகை ஏறக்குறைய நான்கு லட்சம். இதில் தமிழர்கள் ஒரு லட்சம். வங்காளிகள் இரண்டு லட்சம். ஆந்திரா முதலான வடமாநிலத்தவரும் பிறரும் சேர்ந்து ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். மொத்தப் பரப்பு 8250 சதுர கிலோ மீட்டர்தான்.இங்கு அரசாங்கமே மக்களை அழைத்துக் குடியேற்றியுள்ளது. குடும்பத்திற்கு 5 ஏக்கர் நஞ்சை நிலத்தை வழங்கியுள்ளனர். குன்றுகளில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனர்.போர்ட் பிளேர் ஒன்றுதான் நகரம். நகரத்தின் கடைவீதிகளில் தவிர பிற இடங்களில் கூட்டமே இல்லை. காணும் இடமெங்கும் தூய்மை, பசுமை, இனிமை.கார்பின் கடற்கரை: போர்ட் பிலேரிலிருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவிலுள்ள கார்பின் கடற்கரையை அடைந்தோம். குதிரை லாடம்போல் அமைந்த சிறிய பகுதிதான். ஆரவாரம் இல்லாத கடலலைகளில் இளைஞர்கள் விசைப் படகுகள் மூலம் தண்ணீர் விளையாட்டில் பறக்கின்றனர். குளித்து மகிழ, சாய்வு இருக்கைகளில் படுத்து ஓய்வெடுக்க உணவருந்த வசதிகள் உள்ளன.காந்தி பூங்கா: போர்ட் பிளேரின் ஒரு பகுதியில் கொடைக்கானல் ஏரியைப் போன்று தில்தமன் ஏரி அமைந்துள்ளது. அதில் படகோட்டிப் பழகலாம். ஏரியைச் சூழ்ந்துள்ள குன்றில் சிறுவர்களுக்கான பூங்கா அமைந்துள்ளது. சிறுவர்கள் ஆடிமகிழ ஊஞ்சல் முதலானவை உண்டு. பூங்காவின் மையத்தில் பெரிய காந்தியடிகளின் சிலை அமைந்துள்ளது.பணியாளர்கள் தூய்மையாகப் பசுமையாகப் பேணி வருகின்றனர். ஜப்பானியர் இங்கு இருந்ததன் அடையாளமாக அவர்களது கோவில் ஒன்றை மாதிரியாகப் பூங்காவில் அமைத்துள்ளனர். மொத்தத்தில் அமைதி தவழும் பூங்கா. அழகு மிளிரும் பூங்கா. இதுபோன்றே கடற்கரையில் விவேகானந்தர் நிற்பது போன்ற சிலையும் கலைநயத்தோடு இருந்தது.செல்லுலார் சிறை: ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போரிட்டவர்களைக் கொண்டுவந்து அடைத்த கூண்டுச் சிறைதான் செல்லுலார் சிறை. 693 தனித்தனி அறைகள், 7 கட்டடங்களில் வரிசையாக அமைத்து, ஏழும் மையக் கோபுரத்தைச் சந்திக்கும்படி அமைத்துள்ளனர். மையக் கோபுரத்திலிருந்து பார்த்தால், சிறைக் கூடங்கள் தெளிவாகத் தெரியும். மூன்று கோடி செங்கற்களை அறுத்து, அத்தனை பெரிய கட்டடங்களையும் கட்ட, கைத்தோல் உரிய உழைத்தவர்கள் கைதிகள்தான். 1890-ல் தங்களுக்குத் தாங்களே கட்டிமுடித்த சிறையில் பட்ட கொடுமைகள் எழுத்தில் அடங்காது. டேவிட் பர்ரி என்ற சிறை அலுவலர் செய்த கொடுமைகளை ஒலி, ஒளிக் காட்சி வாயிலாகக் கண்டபோது கண்ணீரில் நனைந்தோம். சிறையில் தற்போது கைதிகள் இல்லை. தேசியச் சின்னமாக உள்ளது.சாத்தம் தீவு: ஆர்க்கிபால்டு பிளேர் என்ற நிலவியல் ஆய்வாளர் 1789-ல் முதன் முதலில் 200 பேருடன் குடியேற்றத்திற்காகக் கால் வைத்த மிகச் சிறிய தீவுதான் சாத்தம் தீவு. ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இத்தீவும் ஒரு துறைமுகம்தான். போர்ட் பிளேருடன் ஒரு பாலம் இத்தீவை இணைக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை இங்குள்ளது. கப்பல் மூலம் மரங்கள் வந்து இறங்குகின்றன. பெரிய மரங்கள் சில வினாடிகளில் அறுத்துத் தள்ளப்படுகின்றன.ராஸ் தீவு: உலக நாடுகள் பலவற்றை வென்ற ஆங்கிலேயர்க்கு லண்டன் தலைமையாக இருந்தது போல் அந்தமான் தீவுகளை நிர்வகிக்கச் சிறிய ராஸ் தீவு அமைந்தது. அரசு மாளிகை, மருத்துவமனை, தேவாலயம், அச்சுக்கூடம், நீச்சல் குளம் போன்ற அனைத்து வசதிகளும் அங்கே இருந்தன. 1943-ல் நேதாஜியும் அங்கொரு மாளிகையில் தங்கினார். 2004-ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் அனைத்தும் இடிந்து பாழடைந்துள்ளன. புள்ளிமான்கள் மட்டுமே சுற்றித் திரிகின்றன.வைப்பர் தீவு: மெரினா பூங்கா, கடற்கரையில் அமைந்த சிறந்த பூங்கா. அதனருகே ராஜீவ் காந்தி நீர் விளையாட்டு மையம் உள்ளது. அந்த இடத்திலிருந்து பல தீவுகளுக்குச் செல்லப் படகுகள் நிற்கின்றன. அங்கிருந்து வைப்பர் தீவுக்குச் சென்றோம். அது வெட்டவெளிச் சிறையாக இருந்த தீவு.சுண்ணாம்புக் குகையும் எரிமலைக் குழம்பும்: போர்ட் பிளேரிலிருந்து வடக்கு அந்தமானில் உள்ள பாராடங் என்ற தீவுக்குப் படகு மூலம் சென்றோம். இத்தீவின் சில குன்றுகளைக் காண சிரிய விசைப் படகில் விரைந்தோம். இருபுறமும் மாங்குரோஸ் மரங்களின் அழகு கண்களைக் கவர்கின்றன.கேரளாவின் கழிமுகப் பகுதிகளை அவை நினைவூட்டின. சிறிது தொலைவு நடந்த பின் இருள் சூழ்ந்த குகைக்குள் நுழைந்தோம். விளக்கு வெளிச்சத்தில் நாங்கள் கண்டவை அற்புதக் கலைச் சிற்பங்கள். சிற்பிகள் செதுக்கியவையல்ல, இயற்கை வடித்தவை. குன்று முழுவதும் சுண்ணாம்புப் பாறை. மேலே சிறுசிறு துவாரங்கள் உள்ளன. அதன் வழியே தண்ணீர் கசிந்து சொட்டுச் சொட்டாக விழுகிறது. அது தரையில் விழாமல் வடிந்து பல்வேறு வடிவங்களாகத் திரண்டு நிற்கின்றன. தொங்கும் சரவிளக்குகள் போல, வாழைத்தார் போல, விலங்குகள் போல நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.அதே பாராடங் தீவில் எரிமலைக் குழம்பு கக்கிக் கொண்டிருக்கும் குன்றையும் கண்டோம். சிமெண்ட் பால் போல் குழம்பு ஆங்காங்கே கசிந்து கொண்டே இருக்கிறது. ஒரு கி.மீ. சுற்றளவில் கற்கள்கான். தூரத்தில் தென்னை மரங்கள் கருகிக் காணப்படுகின்றன.கேவ்லாக் தீவு - ராதா நகர் கடற்கரை: அந்தமானில் உள்ள பல தீவுகள், கடற்கரைகள், தெருக்களின் பெயர்கள் ஆங்கில அதிகாரிகளின் பெயர்கள்தான். போர்ட் பிளேரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள கேவ்லாக் தீவிலுள்ள ராதா நகர் கடற்கரையும், விஜயநகர் கடற்கரையும் கண்டு இன்புற வேண்டியவை. உலகின் அழகான கடற்கரையில் இவை முதன்மை பெறுகின்றன. கடல் நீர் மூன்று வண்ணங்களில் ஜாலம் காட்டுகிறது. கரையைத் தொடும் அலைகள் வெண்மையாகவும் அடுத்து கொஞ்ச தூரம் பச்சை நிறமாகவும், அதன்பின் நடுக்கடல் கருமையாகவும் தோன்றுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர் வரை உள்ளே சென்று அச்சமின்றிக் குளிக்கலாம்.பழங்குடி மக்கள்: நாங்கள் பாராடங் நெடுஞ்சாலையில் பேருந்தில் சென்றபோது ஜார்வா பழங்குடியினர் கூட்டமாகக் குழந்தைகளுடன் இருந்தனர். கையில் வேல்,அம்பு ஆயுதங்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டதுபோல் தோன்றினர். மரவுரி தரித்தும் இருந்தனர்.வளமும் வாழ்வும்: அந்தமானுக்கு எவரும் புதிதாகக் குடியேற இயலாது. எனவே மக்கள் தொகை குறைவு. ஆறுமாதங்கள் மழை பொழியும். தெருக்களில் புழுதியைக் காணமுடியாது. ஒழுங்கான தார்ச்சாலையில் விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. காகிதப் பைகளையே பயன்படுத்துகின்றனர். பிச்சைக்காரர்களை எங்கு தேடியும் காணோம். ஆங்கிலமும் இந்தியும் பயிற்று மொழிகள்; தமிழ்ப் பள்ளிகளும் உண்டு. வினாக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழில் விடைகள் எழுதலாம்.அந்தமானுக்கு உணவுப் பொருள்கள் முதல் மக்களுக்குத் தேவையான அனைத்தும் சென்னையிலிருந்தும் கொல்கத்தாவிலிருந்தும் வருகின்றன. தீவுகளில் கொஞ்சம் நெல்லும் காய்கறிகளும் விளைகின்றன. உருளைக் கிழங்கு, கேரட் போன்ற மலையில் விளைவன இங்கு விளைவதில்லை. இருப்பினும் விலைகள் சென்னையைப் போன்றே உள்ளன. தரமான உணவுகள் கிடைக்கின்றன. அதிகாலை 5 மணிக்கு விடிகிறது. மாலையில் விரைவில் பொழுது சாய்கிறது.
கருத்துகள்

Thanks for sharing your experience with us. Really this makes us and gives us the presence to be there.It increases our interest to go andaman to enjoy the beauty of the nature.
By kulandaisamy 9/23/2012 5:08:00 AM

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்!

ஞாயிறு கொண்டாட்டம்
மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்!



ஓருவருக்குச் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே நாம் கேட்கும் கேள்வி, அவருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா? என்பதே.சர்க்கரை நோய்க்கும் சிறுநீரகச் செயல் இழப்புக்கும் அந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது. ""ஆனால் சிறுநீரகச் செயல் இழப்புக்குச் சர்க்கரை நோய் தவிர, நிறையக் காரணங்கள் இருக்கின்றன'' என்கிறார் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் சிறுநீரகத்துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் ஆர்.விஜயகுமார்.""சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரகச் செயல் இழப்பு ஏன் ஏற்படுகிறது? சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரில் அதிகமான அளவில் புரதம் வெளியேறுகிறது. இதனால் அடிக்கடி அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். அவர்களுடைய சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான புரதம் வெளியேறிவிடுவதால், உடல் பருத்துவிடுகிறது. கை, கால்களில் வீக்கமும் ஏற்படுகிறது. அடுத்து, ரத்தத்தில் யூரியாவின் அளவும் அதிகமாகிவிடுகிறது. இப்படி புரதம், யூரியா என்று ரத்தத்தில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன. சிறுநீரகங்களால் ஓர் அளவுக்கு மேல் ரத்தத்தில் உள்ள கழிவுகளைத் தூய்மைப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ரத்தத்தில் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது. இந்தக் கழிவுகளை நீக்க, ரத்தத்தைச் செயற்கையான முறையில் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது, டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. இதன் பின்னர் சிலநாட்களிலேயே சிறுநீரகங்கள் முற்றிலும் செயல் இழந்துவிடுகின்றன.ஆனால் இது தவிர, சிறுநீரகச் செயல் இழப்புக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன'' என்கிறார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீரகவியல்துறையில் நிபுணரான அவர்.""இப்போது என்னிடம் வரும் நோயாளிகளில் 8 - 10 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகப்படியான வலி நிவாரண மாத்திரைகளை - அதாவது, தலைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கான மாத்திரைகளை - பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. நான்-ஸ்டிராய்ட் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ் (NSAID) வகை மருந்துகளைப் பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக DICLOFENAC, NIMESULIDE போன்ற வலிநிவாரண மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.டாக்டர் எப்போதோ ஒரு நோய்க்கு ஒரு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருப்பார். மீண்டும் அது போன்ற நோய் வரும்போது, டாக்டரிடம் காண்பிக்காமல் பழைய மருந்துச் சீட்டைக் காட்டி மருந்துகளை வாங்கி பலர் உட்கொள்கிறார்கள். இது தவறு.ஒரே விதமான அறிகுறிகளுடன் பல நோய்கள் இருக்கலாம். உதாரணமாக தலைவலிக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. மருத்துவர் எதனாலோ வந்த தலைவலிக்கு எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வேறு காரணத்தால் வந்த தலைவலிக்குப் பயன்படுத்துவார்கள். இதனாலும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.அதுமட்டுமல்ல, ஒருவருக்கு ஏதாவது நோய் வந்துவிட்டதாக அடுத்தவரிடம் சொன்னால், உடனே இந்த இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்று இலவச மருத்துவ ஆலோசனை கிடைக்கிறது. தனக்கு அந்த மாதிரி நோய் வந்தபோது டாக்டர் இதைத்தான் எழுதிக் கொடுத்தார் என்பதாகச் சொல்வார்கள். அப்படி அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும்போது பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த மாத்திரை ஒவ்வாமல் போய் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. சில ஆன்ட்டிபயாடிக் மருந்துகளாலும் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. சென்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏன் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது?உடலுக்குப் பொருத்தமில்லாத மருந்து, மாத்திரைகள் உடலுக்குள் சென்று செரிமானமாகி, உடலில் கல்லீரலிலும், ரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை எல்லாம் வெளியேறுவது சிறுநீரகங்களில் வழியாகத்தான். இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டவர்களை ஆரம்ப நிலையில் கொண்டு வந்தால் இரண்டு, மூன்று முறை டயாலிஸிஸ் செய்து குணப்படுத்திவிடலாம். அதிக அளவில் சிறுநீரகப் பாதிப்பு இல்லாமல் சரி செய்துவிடலாம். இதற்கே ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டால், மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்த வேண்டும். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்'' என்கிறார் அவர்.""சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க ஓரே வழி, டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வதுதான். டாக்டரிடம் போக நேரமில்லை என்பதாலோ, டாக்டரிடம் போனால் அதிகக் கட்டணம் வசூலித்துவிடுவார் என்பதாலோ, மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டால் அதனால் ஏற்படும் இழப்பு மிகவும் அதிகம். மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஆர்.விஜயகுமார்.
கருத்துகள்

மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி நன்றியுடன், ராசு படை ஆண்டவர்
By
9/24/2012 11:25:00 AM

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

மூத்தப் படைப்பாளிகளின் சங்கமம்!

மூத்தப் படைப்பாளிகளின் சங்கமம்!
- செபலீன் சான்




ஈரோடு நூல் திருவிழாவில் ஆக.8ஆம் நாள் நடந்த இலக்கியக் கூட்டத்தில் தமிழ் இலக்கியப் பெருந்தகைகள் இந்திரா பார்த்தசாரதி, விக்கிரமன், அசோகமித்திரன், நீல.பத்மநாபன், தி.க.சிவசங்கரன், கு.சின்னப்ப பாரதி, தி.செல்வராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.  மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.இசுடாலின் குணசேகரன் ஒவ்வொரு படைப்பாளியையும் அறிமுகப்படுத்தினார்.  “அறிவாளியைப் பாராட்டாத நாட்டில் அறிவாளி உருவாக மாட்டான். ஈகி(தியாகி)யைப் பாராட்டாத நாட்டில் ஈகி உருவாக மாட்டான். படைப்பாளியைப் பாராட்டாத நாட்டில் படைப்பாளி உருவாக மாட்டான்!” என்று ஒலிவாங்கி பிடித்த இசுடாலின் குணசேகரன், “மிக மூத்த படைப்பாளிகளைப், பாராட்ட வேண்டும் என நாங்கள் அழைக்கவில்லை. நாம் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற படைப்பாளிகளை நேரில் பார்ப்பதே விந்தைதான். எனவேதான், இலக்கிய ஆர்வலர்கள் இவர்களை நேரில் பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தில்தான் அழைத்தோம். 8 ஆண்டு நூல் திருவிழாவில், இந்த நிகழ்ச்சிதான் விந்தையான நிகழ்ச்சி எனக் கருதுகிறேன்”' என்றார்.  இந்தியக் கம்யூனிசக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, படைப்பாளிகளுக்குப் பொற்கிழியையும் பாராட்டுக் கேடயத்தையும் வழங்கினார்.  நாமக்கல்லிலிருந்து வந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி, உரையாற்றும்போது, “எனது 60 ஆண்டுக்கால இலக்கிய வாழ்வில் இதுவரை இரண்டே இரண்டு பாராட்டு விழாக்களுக்குத்தான் சென்றிருக்கிறேன். பாராட்டு விழாக்களுக்குச் சென்றால் படைப்பாளிக்குப் புகழ் மயக்கம் வந்துவிடும். இதனால் படைப்பில் கவனம் சிதறிவிடும் என்பது என் குருநாதர் கற்றுக்கொடுத்த பாடம்! மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்கெனவே நடத்திய பாராட்டுவிழா ஒன்று, மற்றொன்று இப்போது நடைபெறும் மூத்த படைப்பாளிகளைப் பாராட்டும் நிகழ்ச்சி” என்றார்.  எழுத்தாளர் நீல.பத்மநாபன், “உடல் நலம் குறைவாக இருப்பதால் இப்போது இலக்கியக் கூட்டங்களுக்கு நான் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து செவிமடுத்துவிட்டு வந்துவிடுவேன்.  எழுதப் படிக்கத் தெரிந்த வயதில் இருந்தே நூல்களின் மீது எனக்குத் தீராத காதல். ஆனால் இப்போது எழுதவும், இலக்கியக் கூட்டங்களில் பேசவும் வந்துவிட்டது. ஏனெனில், இப்போது படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. முனைவர் பட்டம் பெறுவோர் கூட நூல்களைப் படிப்பதில்லை. எங்கள் காலத்தில் நூல்களைத் தேடி ஒவ்வொரு நூலகமாகச் செல்வோம். இப்போது நூல் திருவிழா என்ற பெயரில் நூல்களே உங்களைத் தேடி வருகின்றன.  தரமான தமிழ்ப் படைப்புகள் இருந்தும் எத்தனை பேர் அவற்றைத் தேடிச் சென்று படிக்கின்றனர் என்று தெரியவில்லை. படிப்பவர்களை மனதில் வைத்துத்தான் எழுத்தாளர்கள் எழுதுகின்றார்கள். நேயர்கள் அதைப் படித்துச், சிந்திக்கும்போதுதான் அந்த எழுத்து உயிரோட்டம் பெறுகிறது. எழுத்தாளர்களின் குருதிதான் படைப்புகள் என்பதை உணர வேண்டும்” என்றார்.  எழுத்தாளர் விக்கிரமன், “நேயர்கள்தாம் என் முதலாளிகள். இதுபோன்ற நூல் திருவிழாக்களைப் பார்க்கும்போது இனிமேல் படைப்பாளிகளும், பதிப்பகங்களும் நூலகங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம், வாசகர்களை நம்பிப் புதிய படைப்புகளை வெளியிடலாம் என்கிற நம்பிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது.  உடல் நலம் சரியில்லாததால் வீட்டை விட்டே வெளியே நான் வருவதில்லை. 5 ஆண்டுகளுக்குப் பின்பு முதல்முறையாக வீட்டை விட்டே வெளியே வந்திருக்கிறேன். ஈரோட்டில், ஆயிரக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் கூடிய இக்கூட்டத்தில், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், ஈரோடு மக்கள் கொடுத்த விருதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்!  இந்த விருதை எனது வீட்டில், எளிதில் தெரியும் இடத்தில் வைப்பேன். இனிமேல் சாகித்திய அகாதெமி விருது எனக்குத் தேவையில்லை. அதைவிடப் பெரிய விருதைப் பெற்ற மகிழ்ச்சியை இப்போது அடைந்து விட்டேன்.  ஈரோட்டுக்கு வந்து, இதே மேடையில் எனது உயிர் போனாலும் தேவலை என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். ஈரோடு தொடர்வண்டி நிலையத்தில் நள்ளிரவு 2 மணிக்கு இறங்கியதும், பாரதிப் படம் பொறித்த சட்டை அணிந்திருந்த மக்கள், சிந்தனைப் பேரவைத் தன்னார்வத் தொண்டர்கள் என்னை அலேக்காகத் தூக்கியபோது பாரதியே வந்து தூக்கி வந்ததாக உணர்ந்தேன்! இது போன்ற இலக்கிய ஆர்வம் மிக்க ஆர்வலர்களைத் தமிழகத்தில் நான் வேறு எங்கும் கண்டதில்லை! அடுத்த ஆண்டு, ஆற்றல் இருந்தால் இவ்விழாவுக்கு வருவேன்”' என்றார்.  எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, “சரசுவதி சம்மான் விருது, சாகித்திய அகாதெமி விருது பெறும்போது நான் பெற்றதைவிட ஈரோடு நூல் திருவிழாவில் மக்கள் கொடுத்த விருதைப் பெருமையாகக் கருதுகிறேன்! அதைவிட இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” என்றார்.  எழுத்தாளர் அசோகமித்திரன், “உடல் நிலை சரியில்லாததால் சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கே நான் செல்வதில்லை. பபாசி முன்னாள் தலைவர் சேது.சொக்கலிங்கமும், இசுடாலின் குணசேகரனும் 6 திங்கள்களுக்கு (மாதங்களுக்கு) முன்பாக என்னை நேரில் சந்தித்து ஈரோடு நூல் திருவிழாவுக்கு அழைத்தபோது ‘முயற்சி செய்கிறேன்’ என்றேன். தொடர்ந்து அழைத்ததால் இங்கு வந்தேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற மேடையில் நான் ஏறியதில்லை”' என்றார்.  எழுத்தாளர் இடி.செல்வராசு, “நானும், கு.சின்னப்ப பாரதியும் எழுதத் தொடங்கிய காலத்தில், எங்களது எழுத்துக்களை வெளியிட யாரும் முன்வர மாட்டார்கள். இடதுசாரிச் சிந்தனையுடன், தொழிலாளர், பாட்டாளி வகையினரின் குரல்களை நாங்கள் பதிவு செய்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.  எழுத்தாளர்களுக்கு வயது ஆகலாம்; ஆனால் எழுத்துக்கு வயது ஆகாது. சிந்திக்கும் எழுத்துக்களை மூத்த படைப்பாளிகளாலும் இப்போதும் படைக்க முடியும். சிந்தனையில் இப்போதும் உயிரோட்டமாகத்தான் இருக்கிறோம்” என்றார்.  எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான தி.க.சிவசங்கரன், “ஒவ்வோர் ஆண்டும், ஈரோடு நூல் திருவிழா எப்போது வரும் என்று எண்ணிக் கொண்டிருப்பேன். இதுபோன்ற திருவிழாக்களை ஒவ்வோர் ஊரிலும் நடத்த வேண்டும்!” 'என்றார்.  இத்தனை படைப்பாளிகளும் ஒரே மேடையில் ஏறியது 50 ஆண்டுக்கால இலக்கிய வரலாற்றில் இதுதான் முதல்முறை என மிகமூத்த இலக்கியத்தார்கள் சிலர் பேசிக் கொண்டே சென்றது நம் காதில் விழுந்தது.

திங்கள், 18 ஜூன், 2012

புகழ் நாட்ட ஏது அகவை?

சாதனைக்கு ஏது வயது?

First Published : 17 Jun 2012 12:00:00 AM IST


நேபாளத்தைச் சேர்ந்த டெம்பா ஷெரி ஷெர்பா என்னும் பதினாறு வயது சிறுவன்தான் (கடந்த 2001-ல்) குறைந்த வயதில் எவரெஸ்டின் உச்சியை அடைந்த வளர் இளம் பருவத்தினன் என்னும் சாதனையைச் செய்தான். அமெரிக்காவின் ஜோர்டான் ரோமரோ தன்னுடைய 13 வயதிலேயே ஷெர்பாவின் சாதனையை முறியடித்த சிறுவனாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டான். ஆம்.. இவன் எவரெஸ்டின் உச்சியைத் தொட்டது 13 வயதில்!நிமா செம்ஜி ஷெர்பா என்னும் பதினாறு வயது சிறுமி சமீபத்தில் எவரெஸ்டின் உச்சியை மலை ஏறும் வீரரான அவளுடைய தந்தையுடன் அடைந்திருக்கிறாள். உலகில் மிகக் குறைந்த வயதில் எவரெஸ்டின் உச்சியை அடைந்த பெண் என்பதற்காக ஷெர்பாவின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது.நேபாளச் சிறுமியின் இந்த சாதனை நிகழ்ந்த மூன்றாவது நாளில் ஜப்பானைச் சேர்ந்த டாமே வாடனேப் என்னும் பெண்மணி தன்னுடைய 73 வயதில் எவரெஸ்டின் உச்சியை அடைந்து, எவரெஸ்டின் உச்சியை இதற்கு முன் அடைந்த மிக அதிகமான வயதுடைய பெண்மணியின் சாதனையை முறியடித்துள்ளார். எவரெஸ்டின் உச்சியை இதற்கு முன் (கடந்த பத்தாண்டுகளுக்கு முன்) தன்னுடைய 63-ஆவது வயதில் அடைந்தவரும் டாமே வாடனேப்தான்! அவருடைய சாதனையை அவரே முறியடித்திருப்பதுதான் மிகப் பெரிய சாதனை!

சிறையில் தமிழ் வகுப்பு எடுக்கும் சா.இராசேந்திரன்

10 ஆம் வகுப்பு படித்த 12 ஆம் வகுப்பு ஆசிரியர்!



பிளஸ் டூ தேர்வு முடிவு. தேர்வு எழுதிய தமிழகச் சிறைக் கைதிகள் 35 பேரும் வெற்றி. படிக்கும் நேரத்தில் படிக்க முடியாமல், பல்வேறு சூழ்நிலைகளால் சிறைக்கு வந்தவர்கள், இப்போது வெளியில் உள்ள மாணவர்களைப் போல நன்றாகப் படிக்கிறார்கள். இந்த ஆண்டு சென்னை புழல் சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தேவராஜ் 365 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். வெளியில் பள்ளியில் படிக்கும் அவர் மகள் வனிதாவோ 294 மதிப்பெண்கள்தாம் எடுத்திருந்தார். இப்படி மூக்கில் விரலை வைத்து வியக்கும் படியான செய்திகள்.சிறையில் உள்ள கைதிகள் எப்படிப் படிக்கிறார்கள்? அவர்களுக்கு யார் சொல்லித் தருகிறார்கள்? சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குத் தமிழ்ப் பாடம் சொல்லித் தரும் சா.ராசேந்திரனைச் சந்தித்தோம்:""நான் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் சொல்லிக் கொடுக்கிறேன். 2007 இல் நான் எங்கள் ஊரில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டம் ஒன்றில் தன்னம்பிக்கையை வளர்ப்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றினேன். அந்தக் கூட்டத்துக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமாரும் வந்திருந்தார். என் பேச்சைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ""இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசும் நீங்கள் ஏன் சிறைக் கைதிகளுக்கு தமிழ்ப் பாடம் நடத்தக் கூடாது?'' என்று கேட்டார். நானும் ஒத்துக் கொண்டேன். அன்றைய சிறைத் துறைத் தலைவர் ஆர்.நடராஜ் அவர்களின் அனுமதியுடன் நான், அறிவொளி இயக்க வளர்கல்வி திட்ட ஆசிரியராகச் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குப் பாடம் நடத்தத் தொடங்கினேன்.எழுதப் படிக்கத் தெரியாத கைதிகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றவுடன் 8 ஆம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதினார்கள். அப்படியே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் கைதிகளுக்கும் தமிழ்ப் பாடம் நடத்தினேன்.நன்கு படித்தவர்கள் சூழ்நிலை காரணமாக சிறைக்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து தமிழ் தவிர பிற பாடங்களுக்கு வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். இப்படி நாங்கள் கைதிகளுக்குக் கற்றுக் கொடுத்தது வீண் போகவில்லை. 2007 -2008 ஆண் ஆண்டில் 8 - 10 மற்றும் 12 வகுப்புகளில் மொத்தம் 29 பேர் தேர்ச்சி பெற்றனர். 2008 - 2009 இல் 46 மாணவர்களும், 2009 -2010 இல் 82 மாணவர்களும், 2010 -11இல் 75 பேரும் தேர்ச்சி பெற்றனர்.இப்போது 25 வயதுக்கு மேல் உள்ள பல கைதிகள் படிக்கிறார்கள். இப்படிப் படிக்கும் மாணவர்களின் வாழ்நாள் சிறைத்தண்டனை அவர்களின் நன்னடத்தை காரணமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. சிறையை விட்டு வெளியே சென்றதும் அவர்கள் கற்ற கல்வியைப் பயன்படுத்தி நேர்மையான வழியில் பிழைக்கவும் முடியும். கைதிகளுக்கு நான் முதலில் திருக்குறளைத்தான் கற்றுக் கொடுப்பேன். திருக்குறளைக் கற்று அதைச் சரியானபடி பயன்படுத்தாததுதான் நமது இன்றைய எல்லாத் துயர்களுக்கும் காரணம் என்பது என் கருத்து.சொன்னால் வியப்படைவீர்கள். நான் படித்தது வெறும் 10 ஆம் வகுப்புதான். சொந்த ஊர் செந்துறை. மாணவப் பருவத்தில் கல்வியில் ஆர்வமின்றி சுற்றித் திரிந்த நான், ஒரு குறிப்பிட்ட வயதில் மனம் திருந்தி படிக்க ஆரம்பித்தேன். காரணம், என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் பலர், நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது, கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஆசிரியராக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். இது என்னை மாற்றியது.சங்க இலக்கியங்களைக் கசடறக் கற்றேன். பெருஞ்சித்திரனார், பொற்கோ போன்ற அறிஞர்களின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. அது என்னை வளர்த்தெடுத்தது. அதனால் இப்போது நான் பிளஸ் டூ பயிலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். சிறைக் கைதிகளுக்குப் பாடம் நடத்தும்போது கிடைத்த அனுபவங்கள் பல. கைதிகளின் பெயரை வெளியில் சொல்லக் கூடாது என்பதால் நிகழ்வுகளை மட்டும் இங்கே நான் சொல்கிறேன். நான் தமிழ்ப் பாடம் நடத்தி முடித்தவுடன் என் வகுப்பில் இருந்த கைதி ஒருவர் என்னிடம் வந்து கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார். அவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 3 ஆசிரியர்கள் ஏதோ பிரச்னை காரணமாக சிறைக்குள் இருக்கிறார்கள். என் வகுப்பில் அவர்கள் பாடம் கேட்பார்கள். திருக்குறளின் பெருமையை விளக்கி பாடம் நடத்தி முடித்தவுடன், அவர்கள் என்னிடம் சொன்னார்கள்: ""திருக்குறளை இப்படி நன்றாகப் புரிந்து கொண்டிருந்தால் சிறைக்கே வந்திருக்கமாட்டோம்''இதில் என்ன வேடிக்கை என்றால், அவர்களிடம் மாணவனாகப் பயின்ற 45 வயதுடைய கைதியும் அவர்களுடன் சேர்ந்து என் வகுப்பில் பயின்று வருகிறார். மாணவர் ஆசிரியரை அடையாளம் கண்டு கொண்டு தன்னை அறிமுகப்படுத்தியபோது ஆசிரியருக்கு அந்த சிறுவயதில் பார்த்த மாணவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.ஒரு கைதி. அவர் மீது 13 க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருந்தன. அதில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். இப்போது முற்றிலும் மாறிவிட்டார். வயது 48 இருக்கும். இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வில் 617 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். சிறையில் அவரை ஓய்வறை, தியான மண்டபம், நூலகம், பள்ளிக்கூடம் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. பிற மாநிலக் கைதிகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறேன். தமிழைத் தவிர பிற மொழிகள் எவையும் எனக்குத் தெரியாது. கைதிகளுக்கும் அவர்களுடைய தாய்மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இருந்தாலும் கொல்கத்தாவைச் சேர்ந்த கைதி ஒருவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தேன். அவர் 10 வகுப்பில் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். இந்த நான்கைந்து ஆண்டுகளில் 400 பேருக்கும் மேல் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். சிறையில் ஆசிரியராக வருவதற்கு முன்பு கைதிகளைக் கொடூரமானவர்கள் என நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த கருத்தை அடியோடு மாற்றிக் கொண்டிருக்கிறேன். கைதிகளை இல்லவாசி என்றும், சிறைக் கண்காணிப்பாளரை இல்லத் தந்தை என்றும் அழைக்கும் பழக்கம் இப்போது உள்ளது. கைதிகளுக்குத் தண்டனை கொடுக்க அல்ல சிறைச்சாலை, அவர்களைப் பண்படுத்தவே என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது'' என்றார்.