செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஏமாற்று வித்தையில் கைதேர்ந்தவர் கருணாநிதி : செயலலிதா

ஏமாற்று வித்தையில் கைதேர்ந்தவர் கருணாநிதி : செயலலிதா



சென்னை, செப்., 25 : நாட்டில் தற்போதுள்ள முக்கியப் பிரச்னைகளில் இரட்டை நிலையினை கடைபிடித்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,  “காவேரி நதிநீர்ப் பிரச்னை”, “கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை”, “டீசல் விலை உயர்வு”, “சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி”, என அனைத்துப் பிரச்னைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, “குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும்” ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.ஹேமாவதி அணைக்கட்டு கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்த விதமான மறுப்பும் இல்லை” என்று பேசியது, முதல் துரோகம்.  காவேரி நதியின் உபநதிகளில், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கிய கட்டுமானப் பணிகளை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்தார் கருணாநிதி.  இது இரண்டாவது துரோகம்.4.8.1971 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை, தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, இரு அவைகளுக்கும் தெரிவிக்காமலேயே கமுக்கமாக 28.8.1972 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டார் கருணாநிதி! இது மூன்றாவது துரோகம்.  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும், காவேரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை.கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், அதன் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் அச்சம் எழுப்பிய போது,  “இனியும் தாமதிக்காமல் மத்திய – மாநில அரசுகள் உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தினை திறப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்” என்று அறிக்கைகளை வெளியிட்டார் கருணாநிதி.அதாவது, அப்பகுதி மக்களை மதிக்காமல், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்பது தான் அவரது வாதம்.கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு சில வாரங்களில் தனது உற்பத்தியை தொடங்கவிருக்கும் நிலையில், “...மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும்..” என்று நீட்டி முழக்கி இருந்தார் கருணாநிதி.  இப்படி ஆறே மாதத்தில் அந்தர் பல்டி அடித்துள்ள கருணாநிதி, “கூடங்குளம் போராட்டக்காரர்களையெல்லாம் தொடக்கத்தில் ஊக்கப்படுத்தி, ஆதரவளித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தற்போதெல்லாம் அதைப் பற்றி வாயையே திறப்பதில்லையே?” என்று தற்போது வினவியிருக்கிறார். கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு இதை விட ஒரு சிறந்த சான்று தேவையில்லை.கூடங்குளம் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நலத் திட்ட உதவிகளைப் பொறுத்த வரையில், அதற்காக 500 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.  அங்கு ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகியவுடன், அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முந்தைய மைனரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நிர்வாகத் திறமையின்மையாலும், குளறுபடிகளாலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட இருள் எனது ஆட்சிக் காலத்தில் நிச்சயம் விலகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மின் மிகு மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற்றால் மின்வெட்டிலிருந்து தமிழக மக்களை காக்க முடியும் என்றும், மத்திய ஒதுக்கீட்டிலிருந்து மேலும் மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறியிருக்கிறார் கருணாநிதி.முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்து நீண்ட கால அடிப்படையில் குறைந்த விலையில் மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தங்களை போடவும் தவறிவிட்டது. மாறாக, குறுகிய கால ஒப்பந்தம் மற்றும் மின் பரிமாற்றத்தின் அடிப்படையில், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை பெற்றது. இந்தச் சூழ்நிலையில்,  தென் மின் கடத்தும் தொடர் அமைப்பில் உள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு,  நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் பெறும் இதர தென் மாநிலங்களுக்கு மின் தொடரில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இதுவன்றி, அகில இந்திய அளவில், குறிப்பாக தென் மாநிலங்களில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, மின் மிகை மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறக் கூடிய சூழ்நிலை என்பது அறவே இல்லை என்பது தான் உண்மை நிலை.மத்திய அரசின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு தான் டீசல் விலைக்கு ஒப்புதல் அளிக்கிறது. இந்தக் குழுவில் தி.மு.க.-வின் சார்பில், கருணாநிதியின் புதல்வர் மு.க. அழகிரியும் உறுப்பினர். இந்தக் கூட்டத்தில் அழகிரி கலந்து கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாரா? அல்லது டீசல் விலை உயர்விற்கு ஒப்புதல் அளித்தாரா? அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா என்பதை நாட்டு மக்களுக்கு கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை மத்திய அரசு அனுமதித்துள்ளதை பொறுத்த வரையில், “மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதியாக இருக்கிறீர்களா?” என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, “எங்களைப் பொருத்தவரையில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.  திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்து, எந்த கூட்டணியிலே நாங்கள் இடம் பெற்றாலும், அந்தக் கூட்டணியிலிருந்து அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை என்று பதில் அளித்து இருக்கிறார்.  அதாவது, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை மத்திய அரசு அனுமதித்து இருப்பதை தான் ஆதரிப்பதாக தெளிவுபடுத்தி இருக்கிறார் கருணாநிதி.அதே சமயத்தில், டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி ஆகியவற்றிற்கு எதிரான நாடு தழுவிய ‘பந்த்’ போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார் கருணாநிதி. இருப்பினும், பந்த் தினத்தன்று தி.மு.க. அமைதி காத்தது என்பது தான் உண்மை. ஆனால் அடுத்த நாள் அறிக்கையில் தி.மு.க. பந்த்-ல் கலந்து கொண்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார் கருணாநிதி. இது கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.தமிழ்நாட்டின் நன்மைக்காக, தமிழர்களின் உரிமைகளை காக்கும் பொருட்டு, நான் எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு எதிராக,  “ஏடாகூடம்”, “ஏட்டிக்கு போட்டி” என்ற வகையில் விதண்டாவாதம் செய்து, முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கருணாநிதி. தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இது போன்ற முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக