பாடலால் உலகத்தை ப் ''பார்க்கும்'' பத்மலதா
மொத்த கூட்டமும் ஆனந்தமாய் ஆடிக்கொண்டிருக்கிறது. ஆட்டத்திற்கு காரணம் அருமையான களம், என்றால் அதைவிட முக்கியம் பாட்டுபாடுபவர்.
முதலில் களம் எது என்று பார்த்துவிடுவோம். திருமலை திருப்பதியில்
பிரம்மோற்சவ விழா நடந்துகொண்டு இருக்கிறது. இந்த விழாவினைப் பொறுத்தவரை
வெறும் ஆன்மீக விழாவாக மட்டும் நடப்பது இல்லை,நகரம் முதல் கிராமம் வரை உள்ள
சகல கலைஞர்களும் சங்கமிக்கும் விழாவாகவும் நடைபெறும்.
பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்ட கலைஞர்கள் வண்ண உடை உடுத்தி கையில்
கோலாட்டம் முதல் தப்பாட்டம் வரை பலவித இசைக் கருவிகளுடன் நடனமாடி
வருவார்கள், இதனை நான்கு மாடவீதிகளிலும் உட்கார்ந்து ரசிப்பது என்பது
இனிமையான விஷயமாகும். இந்த இனிமையான, ரசனையான விஷயத்தை ரசிப்பதற்கு என்றே
பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவின் போது கூடுவார்கள்
அப்படி கூடும் பக்தர்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பங்குபெறும்
கலைஞர்கள் தங்களது முழுத் திறமையையும் காண்பிப்பார்கள். இந்த நடன
கலைஞர்களுக்கு பொதுவான அம்சம் என்னவென்றால் ஒரு இடத்தில் நின்று ஆடாமல்
நான்கு மாடவீதிகளிலும் நடந்து போய்க்கொண்டே ஆடவேண்டும். இதன் காரணமாக
பாடுவதற்கு என்று தனியாக ஆட்கள் வைத்துக்கொள்ளாமல், ஏற்கனவே ஒலிப்பதிவு
செய்யப்பட்ட இசை மற்றும் பாடல்களை "டேப்ரிக்கார்டர்' போன்ற இசைப்பான் மூலம்
இசைக்கவிட்டு ஆடுவார்கள்.
இந்த நிலையில் ஒரு கூட்டம் மட்டும் மிக அழகாக ஆட்டம் போட்டது என்றால்
அதற்கேற்ப வித,விதமாய் வந்துவிழுந்த பாடல்கள்தான்.,ஆகவே முதலில் அந்த
பாடலுக்கு சொந்தக்காரரை பார்த்து பாராட்டிவிடுவோம் என்று எண்ணி அவரை
தேடிப்போய் வணக்கம் செலுத்திய போதுதான் தெரிந்தது ,அவருக்கு பார்க்கும்
சக்தி கிடையாது என்பது.
பத்மலதா என்ற அந்த பாடகியின் பார்வை இல்லாத முகத்தை பார்த்த போது
நமக்குதான் ஒருவித வருத்தமும்,சோகமும் ஏற்பட்டதே தவிர ,அவர் முகத்தில்
துளியும் அந்த துக்கமோ,வருத்தமோ இல்லை. திருமலையில் ஒரு ஏழைக்குடும்பத்தில்
பிறந்தவரான பத்மலதாவிற்கு பிறந்தது முதலே பார்வை கிடையாது.,பார்வையற்றோர்
பள்ளிக்கு அனுப்பி படிக்கவைக்கும் அளவிற்கு ஞானமில்லாத
குடும்பமது.திருமலைக்கு வரும் பிரபல பாடகர்களின் இசைக்கச்சேரியை கேட்டே
வளர்ந்த பத்மாவதிக்கு நல்ல கேள்வி ஞானம் உண்டு. இதன் காரணமாக இசைபற்றி
முறையாக படிக்கவிட்டாலும் தாளம் தப்பாமல்,சுருதி பிசகாமல் தான் கேட்ட
பாடல்களை அப்படியே பாடும் வல்லமை பெற்றவர் இவர்.
பிரம்மோற்சவத்தின் போது பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்து
கொள்கிறார்கள், ஏன் நாம் திருமலையில் இருந்து கொண்டு கலந்துகொள்ளக்கூடாது
என்ற எண்ணத்துடன் தனது தோழியர் சிலருடன் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த
பிரம்மோற்சவ விழாவின் போது, நான்கு மாடவீதிகளிலும் பாடிக்கொண்டே
சென்றவருக்கு, பலமான பாராட்டு கிடைத்தது. பலர் வீடுதேடிவந்து
பாராட்டிவிட்டு சென்றார்கள், கோயில் முக்கியஸ்தர்களோ, ஒரு நாளோடு
நின்றுவிடாமல் பிரம்மோற்சவம் நடக்கும் ஒன்பது நாட்களும் இது போல வந்து
பாடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
சாதாரண குடிசை வீட்டிற்கு இப்படி பெரிய, பெரிய மனிதர்கள் எல்லாம் வந்தது
தான் பெருமாள் மீது பாடிய பாட்டுகளால்தான் என்பதால் மகிழ்ந்து போன பத்மலதா
தொடர்ந்து அந்த வருடம் மட்டுமில்லாமல் கடந்த பல வருடங்களாக பிரம்மோற்சவம்
தவறாமல் பெருமாள் மீதான பக்தி பாடல்களை பாடிவருகிறார். ஆரம்பத்தில் பத்து
பேர் கொண்ட இவரது குழுவில் இப்போது நூறு பேருக்கு மேல் உள்ளார்கள்.
இப்போதும் பெரிதாக வருமானம் ஒன்றும் கிடையாது, ஆனாலும் வாழ்க்கையில்
வருத்தமேதும் கிடையாது, கடவுள் எல்லாவற்றுக்கும் ஓரு காரணம் வைத்து
இருப்பார், எனது படைப்பும் அப்படியானதுதான்.என் மனதில் இறையருளும், இசையும்
நிறைந்து இருக்கிறது அது போதும் இந்த ஜென்மத்திற்கு என்றவரை அடுத்த
பாட்டுபாட கூட்டம் கேட்டுக்கொண்டது.
ஊர்வலத்தின் ஆரம்பத்தில் முகம் எல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பூவாக மலர்ந்த
நிலையில் மைக்கை பிடித்து பாட ஆரம்பித்தார், இவரது பாடலுக்கு ஏற்ப இவரது
குழுவினர் மட்டுமல்ல பார்வையாளர்கள் பலரும் கூட ஆட ஆரம்பித்துவிட்டனர்.
தெலுங்கு பாடல் மட்டுமே பாடத்தெரிந்த பத்மலதா, பெருமாளுக்கு மிகவும்
பிரியமான" நந்தலாலா...சுப நந்தலாலா' என்று பாட ஆரம்பிக்கிறார்,
பார்வையாளர்கள் பலரது கால்கள் அவர்களை அறியாமலே நடனமாடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக