நீரிழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீரிழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 அக்டோபர், 2013

நீரிழிவு நோய்க்குச் சிறந்த உணவுகள்

சருக்கரை நோயை க் கட்டுப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

சனி, 6 ஏப்ரல், 2013

சத்தில்லாத சருக்கரை!




சத்தில்லாத சருக்கரை!

சர்க்கரையின் தயாரிப்பு முறைகளால் ஏற்படும் பாதிப்புகளை கூறும், மருத்துவர் பி.சவுந்தரபாண்டியன்: இனிப்பு சுவையுடைய சர்க்கரை, கரும்பு, பனை, தென்னை என, பல தாவரங்களில் இருந்து கிடைத்தாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதி, கரும்பிலிருந்தே கிடைக்கிறது. சத்து மிக்க பொருளாக விளையும் கரும்பு, சர்க்கரையாக புது வடிவம் பெறும் போது, ஏன் நச்சுப் பொருளாக மாறுகிறது? இதற்கு காரணம், கரும்பிலிருந்து சர்க்கரையை சுத்திகரிக்கும் முறை தான்.வயல்களில் விளையும் கரும்பு, சர்க்கரை ஆலைக்குள் சென்று, வெள்ளை நிறச் சர்க்கரையாக மாறுவதற்கு, பல்வேறு வேதியியல் பொருட்கள் கலப்பதே காரணம். கரும்பை துண்டுகளாக்கி, அதன் சாற்றைப் பிழிந்து, சுண்ணாம்புடன் கொதிக்க வைத்த பின், சர்க்கரை பாளங்கள் கிடைக்கின்றன.பாளங்கள், திடமான கரும்பு சாற்றில் கலக்கப்படுகின்றன. இப்படிச் செய்யும்போது, சாற்றின் பழுப்பு நிறம், சற்று மாறுகிறது. அடுத்த கட்டமாக, "கார்பனேஷன் அல்லது பாஸ்படேஷன்' முறையில், கரும்புச் சாற்றை சுத்தப்படுத்தும் போது, சாற்றில் உள்ள சத்துக்கள் நீக்கப்படுகின்றன. "ஆக்டிவேட்டட் கார்பன்' என்ற எலும்புச் சாம்பல் படுகையில், கரும்புச் சாறு செலுத்தப்படுவதால், சர்க்கரைக்கு வெள்ளை நிறம் கிடைக்கிறது.

சாறு பிழிந்தது போக, மீதம் இருக்கும் சக்கை கலவையான, "மொலாசசில்' மட்டுமே, 30 சதவீதம் சுக்ரோஸ், 25 சதவீதம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ், இரும்புத்தாதுக்கள் இருக்கின்றன. சுத்திகரிப்பு என்ற பெயரில், இத்தகைய வேதியியல் நடைமுறைகளால் சுண்ணாம்பு, இரும்பு, மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சோடியம், வைட்டமின் போன்ற, சத்துக்களை நீக்குகின்றனர்.மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பலால் தான், சர்க்கரைக்கு வெண்மை நிறம் கிடைக்கிறது. கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்து இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாகவே பயன்படுத்துவதால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொடர்புக்கு:9865582142.
 

திங்கள், 28 ஜனவரி, 2013

புற்றுநோயை க் கட்டுப்படுத்தும் மஞ்சள்: அமெரிக்க ஆய்வில் தகவல்


புற்றுநோயை க் கட்டுப்படுத்தும் மஞ்சள்: அமெரிக்க ஆய்வில் தகவல்

ஊசுடன் : மஞ்சளை, அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்' என, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியர் :


அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தைச் சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியதாவது:இந்தியாவில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது. மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.இதில், மூட்டுவலியை குறைப்பதில், மஞ்சள் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், புற்றுநோய், நீரிழிவு நோய், சரும நோய் போன்றவற்றிலிருந்தும், மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையால், சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி செய்து விடுகிறது.

மாத்திரை வடிவில்:
மஞ்சளை அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால், இப்போது, மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும் சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும். மஞ்சளை சேர்த்துக் கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது; மாறாக, உணவுப் பொருளுக்கு நிறத்தை அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி, அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம். இவ்வாறு, மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறினார்.



வெள்ளி, 16 நவம்பர், 2012

பெற்றோரே எச்சரிக்கை : குழந்தைகளுக்கும் நீரிழிவு

பெற்றோரே எச்சரிக்கை : 

குழந்தைகளுக்கும் நீரிழிவு

First Published : 16 November 2012 03:14 PM IST
நமது உணவுப் பழக்க வழக்கத்தால் ஏற்படும் நோய்களில் முதன்மையானதாக விளங்குவது நீரிழிவு நோயாகும். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பதே அதிர்ச்சியூட்டும் செய்தியாகும்.
கோயம்பத்தூரில், 12ம் வகுப்பு மாணவிக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இந்த மாணவி மட்டுமல்ல, கோவையில் ஏராளமான குழந்தைகளுக்கு நீரிழிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உணவுகளை அதிகம் உண்ணாமல், குளிர்பானங்களை அதிகமாக அருந்தும் குழந்தைகளுக்குத்தான் நீரிழிவு நோய் எளிதில் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
ஒன்றரை வயது சிறுவனுக்குக் கூட நீரிழிவு நோய் இருப்பது உறுதி செகய்யப்பட்டுள்ளதாகக் கூறும், கோயம்பத்தூர் நீரிழிவு அறக்கட்டளையின் மூத்த மருத்துவர் வி. சேகர், ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 குழந்தைகளுக்கு நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு அவனது பெற்றோர் எப்போதும் குளிர்பானங்களை அதிகமாக கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறுகிறார்.
முறையான உணவும், தினமும் செய்யும் உடடற்பயிற்சியும் நீரிழிவில் இருந்து காக்க உதவும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்!

ஞாயிறு கொண்டாட்டம்
மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்!



ஓருவருக்குச் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே நாம் கேட்கும் கேள்வி, அவருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா? என்பதே.சர்க்கரை நோய்க்கும் சிறுநீரகச் செயல் இழப்புக்கும் அந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது. ""ஆனால் சிறுநீரகச் செயல் இழப்புக்குச் சர்க்கரை நோய் தவிர, நிறையக் காரணங்கள் இருக்கின்றன'' என்கிறார் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் சிறுநீரகத்துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் ஆர்.விஜயகுமார்.""சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரகச் செயல் இழப்பு ஏன் ஏற்படுகிறது? சர்க்கரை நோய் வந்தவர்களுக்குச் சிறுநீரில் அதிகமான அளவில் புரதம் வெளியேறுகிறது. இதனால் அடிக்கடி அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். அவர்களுடைய சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான புரதம் வெளியேறிவிடுவதால், உடல் பருத்துவிடுகிறது. கை, கால்களில் வீக்கமும் ஏற்படுகிறது. அடுத்து, ரத்தத்தில் யூரியாவின் அளவும் அதிகமாகிவிடுகிறது. இப்படி புரதம், யூரியா என்று ரத்தத்தில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன. சிறுநீரகங்களால் ஓர் அளவுக்கு மேல் ரத்தத்தில் உள்ள கழிவுகளைத் தூய்மைப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ரத்தத்தில் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது. இந்தக் கழிவுகளை நீக்க, ரத்தத்தைச் செயற்கையான முறையில் தூய்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது, டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. இதன் பின்னர் சிலநாட்களிலேயே சிறுநீரகங்கள் முற்றிலும் செயல் இழந்துவிடுகின்றன.ஆனால் இது தவிர, சிறுநீரகச் செயல் இழப்புக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன'' என்கிறார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீரகவியல்துறையில் நிபுணரான அவர்.""இப்போது என்னிடம் வரும் நோயாளிகளில் 8 - 10 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகப்படியான வலி நிவாரண மாத்திரைகளை - அதாவது, தலைவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கான மாத்திரைகளை - பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. நான்-ஸ்டிராய்ட் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ் (NSAID) வகை மருந்துகளைப் பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக DICLOFENAC, NIMESULIDE போன்ற வலிநிவாரண மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.டாக்டர் எப்போதோ ஒரு நோய்க்கு ஒரு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருப்பார். மீண்டும் அது போன்ற நோய் வரும்போது, டாக்டரிடம் காண்பிக்காமல் பழைய மருந்துச் சீட்டைக் காட்டி மருந்துகளை வாங்கி பலர் உட்கொள்கிறார்கள். இது தவறு.ஒரே விதமான அறிகுறிகளுடன் பல நோய்கள் இருக்கலாம். உதாரணமாக தலைவலிக்கு நூற்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. மருத்துவர் எதனாலோ வந்த தலைவலிக்கு எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வேறு காரணத்தால் வந்த தலைவலிக்குப் பயன்படுத்துவார்கள். இதனாலும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.அதுமட்டுமல்ல, ஒருவருக்கு ஏதாவது நோய் வந்துவிட்டதாக அடுத்தவரிடம் சொன்னால், உடனே இந்த இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்று இலவச மருத்துவ ஆலோசனை கிடைக்கிறது. தனக்கு அந்த மாதிரி நோய் வந்தபோது டாக்டர் இதைத்தான் எழுதிக் கொடுத்தார் என்பதாகச் சொல்வார்கள். அப்படி அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும்போது பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த மாத்திரை ஒவ்வாமல் போய் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. சில ஆன்ட்டிபயாடிக் மருந்துகளாலும் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. சென்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏன் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுகிறது?உடலுக்குப் பொருத்தமில்லாத மருந்து, மாத்திரைகள் உடலுக்குள் சென்று செரிமானமாகி, உடலில் கல்லீரலிலும், ரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை எல்லாம் வெளியேறுவது சிறுநீரகங்களில் வழியாகத்தான். இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டவர்களை ஆரம்ப நிலையில் கொண்டு வந்தால் இரண்டு, மூன்று முறை டயாலிஸிஸ் செய்து குணப்படுத்திவிடலாம். அதிக அளவில் சிறுநீரகப் பாதிப்பு இல்லாமல் சரி செய்துவிடலாம். இதற்கே ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டால், மாற்றுச் சிறுநீரகம்தான் பொருத்த வேண்டும். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்'' என்கிறார் அவர்.""சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க ஓரே வழி, டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வதுதான். டாக்டரிடம் போக நேரமில்லை என்பதாலோ, டாக்டரிடம் போனால் அதிகக் கட்டணம் வசூலித்துவிடுவார் என்பதாலோ, மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டால் அதனால் ஏற்படும் இழப்பு மிகவும் அதிகம். மாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஆர்.விஜயகுமார்.
கருத்துகள்

மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி நன்றியுடன், ராசு படை ஆண்டவர்
By
9/24/2012 11:25:00 AM

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக திகழ்கிறது கொய்யாப்பழம். பச்சைப்பசேலென்ற நிறத்திலும், ஒருசில வகைகள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யப்பழங்கள் ருசியில் முதல் இடத்தை பிடிக்கின்றன.
 
கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா. இதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது விசேஷம். வெப்பம் மிகுந்த நாடுகளில் தற்போது அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
 
தற்போது கொய்யாப்பழ சீசன் என்பதால் அதிக அளவில் கொய்யாப்பழம் வந்து குவிந்துள்ளன.
 
கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறியதாவது:-
 
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம்.
 
இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.
 
 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும்.
 
கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்ற வற்றை குணப்படுத்தும்.
 
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய் களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா கொழுந்து மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும்.
 
கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
கொய்யாவில் சிறிதளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து போட்டால் காயம் குணமாகும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் பெரிதும் உதவுகின்றன.
 
கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய்வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கொடுக் கப்படுகிறது.
 
கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
 
மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
 
கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடைய வர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
 
ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. அனைத்து நோய்களையும் இது தீர்ப்பதால் மேற்கத்திய நாடுகளில் “டாக்டர் கொய்யா” என்று அழைக்கிறார்கள்.
 
இவ்வாறு டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார். கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் கொய்யாப்பழங்கள் கொய்யாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 100 டன்¢ கொய்யாப்பழங்கள் கர்நாடகம் மற்றும் விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வருகிறது.
 
இவற்றில் கர்நாடக கொய்யா பழங்கள் முதல் தரமாக கருதப்படுகிறது. இவை கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழங்கள் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதில் பெரிதாக இருக்கும் பழங்கள் ரூ.11-க்கு விற்கப்படுகிறது.
 
இப்பழங்களை வாங்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பழத்தின் வரத்து அதிகரிப்பால் மற்ற பழங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கோயம்பேடு வணிக வளாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.