ஞாயிறு கொண்டாட்டம்
572 தீவுகள் 4 இலட்சம் மக்கள்!
First Published : 23 Sep 2012 12:00:00 AM IST
நமது
பாரதத்தின் ஒரு மாநிலமாக, எட்டாத தொலைவில் குட்டி குட்டித் தீவுகளாக உலக
வரைபடத்தில் சிறுசிறு எறும்புக் கூட்டங்களைப் போல் காட்சிதரும் அந்தமான்-
நிகோபார் தீவுகளின் அழகைக் கண்டு மகிழும் வாய்ப்பு சென்ற ஆகஸ்ட் மாதத்தில்
கிடைத்தது. புலவர் நாவை சிவம் குழுவில் நானும் என் துணைவியார் விசயலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் இடம்பெற்றோம்.சென்னையிலிருந்து
"சுவராஜ் தீப்' என்ற கப்பலில் புறப்பட்டோம். கப்பல் பயணம் எமக்குப்
புதிது. 6-8-12-ல் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் கால் வைத்தவுடன்
புத்துணர்ச்சி பிறந்தது. கப்பலின் தகவல் தொடர்பாளர் கண்ணன், எங்களைக்
கப்பலை இயக்கும் கேபின் அறைக்கு அழைத்துச் சென்று கப்பல் செயல்பாடுகள்
குறித்து விளக்கியதை என்றும் மறவோம்.அந்தமான் நிகோபார்
தீவுகள்: சொர்க்க பூமியெனும் இத்தீவுகள் வங்கக் கடலில், சென்னையிலிருந்து
நேர் கிழக்காக 1190 கி.மீ. தொலைவில் உள்ளன; பழங்குடியினர் இன்றைக்கும்
வாழும் பூமி. 1050-ல் இரண்டாம் ராஜேந்திரன் கடாரத்தின் மீது படையெடுத்த
போது நிகோபார் தீவுகளைக் கைப்பற்றினான் என்று வரலாறு தெரிவிக்கிறது. அதில்
நிக்கோபார், "நக்கவரம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. 92 விழுக்காடு இயற்கை
எழில் கொஞ்சும் பசுமரக்காடுகள்தான்.அந்தமானில் மொத்தம் 572 தீவுகள்
உள்ளன. என்றாலும் 38 தீவுகளில்தான் மக்கள் வாழ்கின்றனர். தற்போது மக்கள்
தொகை ஏறக்குறைய நான்கு லட்சம். இதில் தமிழர்கள் ஒரு லட்சம். வங்காளிகள்
இரண்டு லட்சம். ஆந்திரா முதலான வடமாநிலத்தவரும் பிறரும் சேர்ந்து ஒரு
லட்சம் பேர் வாழ்கின்றனர். மொத்தப் பரப்பு 8250 சதுர கிலோ மீட்டர்தான்.இங்கு
அரசாங்கமே மக்களை அழைத்துக் குடியேற்றியுள்ளது. குடும்பத்திற்கு 5 ஏக்கர்
நஞ்சை நிலத்தை வழங்கியுள்ளனர். குன்றுகளில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக
வாழ்கின்றனர்.போர்ட் பிளேர் ஒன்றுதான் நகரம். நகரத்தின் கடைவீதிகளில் தவிர பிற இடங்களில் கூட்டமே இல்லை. காணும் இடமெங்கும் தூய்மை, பசுமை, இனிமை.கார்பின்
கடற்கரை: போர்ட் பிலேரிலிருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவிலுள்ள கார்பின்
கடற்கரையை அடைந்தோம். குதிரை லாடம்போல் அமைந்த சிறிய பகுதிதான். ஆரவாரம்
இல்லாத கடலலைகளில் இளைஞர்கள் விசைப் படகுகள் மூலம் தண்ணீர் விளையாட்டில்
பறக்கின்றனர். குளித்து மகிழ, சாய்வு இருக்கைகளில் படுத்து ஓய்வெடுக்க
உணவருந்த வசதிகள் உள்ளன.காந்தி பூங்கா: போர்ட் பிளேரின் ஒரு
பகுதியில் கொடைக்கானல் ஏரியைப் போன்று தில்தமன் ஏரி அமைந்துள்ளது. அதில்
படகோட்டிப் பழகலாம். ஏரியைச் சூழ்ந்துள்ள குன்றில் சிறுவர்களுக்கான பூங்கா
அமைந்துள்ளது. சிறுவர்கள் ஆடிமகிழ ஊஞ்சல் முதலானவை உண்டு. பூங்காவின்
மையத்தில் பெரிய காந்தியடிகளின் சிலை அமைந்துள்ளது.பணியாளர்கள்
தூய்மையாகப் பசுமையாகப் பேணி வருகின்றனர். ஜப்பானியர் இங்கு இருந்ததன்
அடையாளமாக அவர்களது கோவில் ஒன்றை மாதிரியாகப் பூங்காவில் அமைத்துள்ளனர்.
மொத்தத்தில் அமைதி தவழும் பூங்கா. அழகு மிளிரும் பூங்கா. இதுபோன்றே
கடற்கரையில் விவேகானந்தர் நிற்பது போன்ற சிலையும் கலைநயத்தோடு இருந்தது.செல்லுலார்
சிறை: ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போரிட்டவர்களைக்
கொண்டுவந்து அடைத்த கூண்டுச் சிறைதான் செல்லுலார் சிறை. 693 தனித்தனி
அறைகள், 7 கட்டடங்களில் வரிசையாக அமைத்து, ஏழும் மையக் கோபுரத்தைச்
சந்திக்கும்படி அமைத்துள்ளனர். மையக் கோபுரத்திலிருந்து பார்த்தால், சிறைக்
கூடங்கள் தெளிவாகத் தெரியும். மூன்று கோடி செங்கற்களை அறுத்து, அத்தனை
பெரிய கட்டடங்களையும் கட்ட, கைத்தோல் உரிய உழைத்தவர்கள் கைதிகள்தான்.
1890-ல் தங்களுக்குத் தாங்களே கட்டிமுடித்த சிறையில் பட்ட கொடுமைகள்
எழுத்தில் அடங்காது. டேவிட் பர்ரி என்ற சிறை அலுவலர் செய்த கொடுமைகளை ஒலி,
ஒளிக் காட்சி வாயிலாகக் கண்டபோது கண்ணீரில் நனைந்தோம். சிறையில் தற்போது
கைதிகள் இல்லை. தேசியச் சின்னமாக உள்ளது.சாத்தம் தீவு:
ஆர்க்கிபால்டு பிளேர் என்ற நிலவியல் ஆய்வாளர் 1789-ல் முதன் முதலில் 200
பேருடன் குடியேற்றத்திற்காகக் கால் வைத்த மிகச் சிறிய தீவுதான் சாத்தம்
தீவு. ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இத்தீவும் ஒரு துறைமுகம்தான். போர்ட்
பிளேருடன் ஒரு பாலம் இத்தீவை இணைக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை
இங்குள்ளது. கப்பல் மூலம் மரங்கள் வந்து இறங்குகின்றன. பெரிய மரங்கள் சில
வினாடிகளில் அறுத்துத் தள்ளப்படுகின்றன.ராஸ் தீவு: உலக
நாடுகள் பலவற்றை வென்ற ஆங்கிலேயர்க்கு லண்டன் தலைமையாக இருந்தது போல்
அந்தமான் தீவுகளை நிர்வகிக்கச் சிறிய ராஸ் தீவு அமைந்தது. அரசு மாளிகை,
மருத்துவமனை, தேவாலயம், அச்சுக்கூடம், நீச்சல் குளம் போன்ற அனைத்து
வசதிகளும் அங்கே இருந்தன. 1943-ல் நேதாஜியும் அங்கொரு மாளிகையில்
தங்கினார். 2004-ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் அனைத்தும் இடிந்து
பாழடைந்துள்ளன. புள்ளிமான்கள் மட்டுமே சுற்றித் திரிகின்றன.வைப்பர்
தீவு: மெரினா பூங்கா, கடற்கரையில் அமைந்த சிறந்த பூங்கா. அதனருகே ராஜீவ்
காந்தி நீர் விளையாட்டு மையம் உள்ளது. அந்த இடத்திலிருந்து பல
தீவுகளுக்குச் செல்லப் படகுகள் நிற்கின்றன. அங்கிருந்து வைப்பர் தீவுக்குச்
சென்றோம். அது வெட்டவெளிச் சிறையாக இருந்த தீவு.சுண்ணாம்புக்
குகையும் எரிமலைக் குழம்பும்: போர்ட் பிளேரிலிருந்து வடக்கு அந்தமானில்
உள்ள பாராடங் என்ற தீவுக்குப் படகு மூலம் சென்றோம். இத்தீவின் சில
குன்றுகளைக் காண சிரிய விசைப் படகில் விரைந்தோம். இருபுறமும் மாங்குரோஸ்
மரங்களின் அழகு கண்களைக் கவர்கின்றன.கேரளாவின் கழிமுகப் பகுதிகளை
அவை நினைவூட்டின. சிறிது தொலைவு நடந்த பின் இருள் சூழ்ந்த குகைக்குள்
நுழைந்தோம். விளக்கு வெளிச்சத்தில் நாங்கள் கண்டவை அற்புதக் கலைச்
சிற்பங்கள். சிற்பிகள் செதுக்கியவையல்ல, இயற்கை வடித்தவை. குன்று முழுவதும்
சுண்ணாம்புப் பாறை. மேலே சிறுசிறு துவாரங்கள் உள்ளன. அதன் வழியே தண்ணீர்
கசிந்து சொட்டுச் சொட்டாக விழுகிறது. அது தரையில் விழாமல் வடிந்து பல்வேறு
வடிவங்களாகத் திரண்டு நிற்கின்றன. தொங்கும் சரவிளக்குகள் போல, வாழைத்தார்
போல, விலங்குகள் போல நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.அதே
பாராடங் தீவில் எரிமலைக் குழம்பு கக்கிக் கொண்டிருக்கும் குன்றையும்
கண்டோம். சிமெண்ட் பால் போல் குழம்பு ஆங்காங்கே கசிந்து கொண்டே இருக்கிறது.
ஒரு கி.மீ. சுற்றளவில் கற்கள்கான். தூரத்தில் தென்னை மரங்கள் கருகிக்
காணப்படுகின்றன.கேவ்லாக் தீவு - ராதா நகர் கடற்கரை:
அந்தமானில் உள்ள பல தீவுகள், கடற்கரைகள், தெருக்களின் பெயர்கள் ஆங்கில
அதிகாரிகளின் பெயர்கள்தான். போர்ட் பிளேரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள
கேவ்லாக் தீவிலுள்ள ராதா நகர் கடற்கரையும், விஜயநகர் கடற்கரையும் கண்டு
இன்புற வேண்டியவை. உலகின் அழகான கடற்கரையில் இவை முதன்மை பெறுகின்றன. கடல்
நீர் மூன்று வண்ணங்களில் ஜாலம் காட்டுகிறது. கரையைத் தொடும் அலைகள்
வெண்மையாகவும் அடுத்து கொஞ்ச தூரம் பச்சை நிறமாகவும், அதன்பின் நடுக்கடல்
கருமையாகவும் தோன்றுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர் வரை உள்ளே சென்று
அச்சமின்றிக் குளிக்கலாம்.பழங்குடி மக்கள்: நாங்கள் பாராடங்
நெடுஞ்சாலையில் பேருந்தில் சென்றபோது ஜார்வா பழங்குடியினர் கூட்டமாகக்
குழந்தைகளுடன் இருந்தனர். கையில் வேல்,அம்பு ஆயுதங்களுடன் வேட்டைக்குப்
புறப்பட்டதுபோல் தோன்றினர். மரவுரி தரித்தும் இருந்தனர்.வளமும்
வாழ்வும்: அந்தமானுக்கு எவரும் புதிதாகக் குடியேற இயலாது. எனவே மக்கள்
தொகை குறைவு. ஆறுமாதங்கள் மழை பொழியும். தெருக்களில் புழுதியைக்
காணமுடியாது. ஒழுங்கான தார்ச்சாலையில் விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
பிளாஸ்டிக் பைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. காகிதப் பைகளையே
பயன்படுத்துகின்றனர். பிச்சைக்காரர்களை எங்கு தேடியும் காணோம். ஆங்கிலமும்
இந்தியும் பயிற்று மொழிகள்; தமிழ்ப் பள்ளிகளும் உண்டு. வினாக்கள்
ஆங்கிலத்தில் இருக்கும். தமிழில் விடைகள் எழுதலாம்.அந்தமானுக்கு
உணவுப் பொருள்கள் முதல் மக்களுக்குத் தேவையான அனைத்தும் சென்னையிலிருந்தும்
கொல்கத்தாவிலிருந்தும் வருகின்றன. தீவுகளில் கொஞ்சம் நெல்லும்
காய்கறிகளும் விளைகின்றன. உருளைக் கிழங்கு, கேரட் போன்ற மலையில் விளைவன
இங்கு விளைவதில்லை. இருப்பினும் விலைகள் சென்னையைப் போன்றே உள்ளன. தரமான
உணவுகள் கிடைக்கின்றன. அதிகாலை 5 மணிக்கு விடிகிறது. மாலையில் விரைவில்
பொழுது சாய்கிறது.
கருத்துகள்
By
kulandaisamy 9/23/2012 5:08:00 AM