ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 படகுகள் முற்றுகை

தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 படகுகள் முற்றுகை



தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் கடல்பகுதி நுழைவு வாயிலை சனிக்கிழமை படகுகள் மூலம் முற்றுகையிட்ட அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்.
தூத்துக்குடி, செப். 22: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் போராட்டக் குழுவினர் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும், 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடியில் கடந்த 10-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவ அமைப்பினர் அடுத்த கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.போராட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டன. இதுதவிர, மாவட்டத்தின் பிற பகுதிகளான திருச்செந்தூர், அமலிநகர், புன்னக்காயல், மணப்பாடு, ஆலந்தலை, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளான இடிந்தகரை, உவரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இப் போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேவியர் வாஸ், நாட்டுப் படகு சங்கத் தலைவர் ஜான்சன், பேராசிரியை பாத்திமா பாபு உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.பலத்த பாதுகாப்பு: போராட்டக்காரர்களால் பிரச்னைகள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், துறைமுகத்தின் கடல் பகுதி நுழைவு வாயிலில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான வீராஸ், அகல்யா பாய், நாட்கி தேவி ஆகிய கப்பல்களும், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, கடலோர பாதுகாப்புப் பிரிவு ரோந்து படகுகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. துறைமுக நுழைவுவாயிலில் ராட்சத கயிறு மூலம் படகுகள் உள்ளே செல்ல முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், துறைமுக சுற்றுப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஆயுதம் தாங்கிய நிலையில் சுமார் 300 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் மூலமும் போராட்டம் கண்காணிக்கப்பட்டது.இந்தப் போராட்டத்தையொட்டி, தூத்துக்குடி மாநகரப் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸôர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.துறைமுக நிலவரம்: தூத்துக்குடி துறைமுகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 7 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தக் கப்பல்களில் இருந்து நிலக்கரி, சுண்ணாம்பு, பொது சரக்குகள் போன்ற பொருள்களின் இறக்குமதி வழக்கம்போல் எவ்வித பாதிப்புமின்றி நடைபெற்றது.மேலும், வெளித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 கப்பல்களைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதுதவிர, நிலக்கரி ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நிலக்கரிக்கான தனி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.கட்சிக் கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு:  இதற்கிடையே திரேஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை காலை அணு உலைக்கு எதிராகவும், கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி வந்த சிலர் அந்தப் பகுதிகளில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர். பின்னர் கொடிகளை தீ வைத்து எரித்தனர்.இதனால் அந்தப் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன.மனிதச் சங்கிலி: வஉசி துறைமுக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் பலர் இனிகோ நகரில் இருந்து மீன்பிடி துறைமுகம் வரை  பனிமய மாதா பேராலய பங்குத் தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் மீனவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். பாதிப்பு இல்லை: போராட்டம் குறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நடராஜன் கூறியது: பல்வேறு காரணங்களால் கப்பல்கள் வருவதிலும், செல்வதிலும் தாமதம் ஏற்படுவது உண்டு. இந்தப் போராட்டத்தால் துறைமுக செயல்பாட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக