அடுத்த முற்றுகை தலைமையர் இல்லம் தான் சென்னை திரும்பிய வைகோ எச்சரிக்கை
சென்னை:""இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, இந்தியாவிற்கு மீண்டும் அழைத்தால், லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்,'' என, வைகோ
எச்சரிக்கை விடுத்தார்.
ம.பி., மாநிலம் சாஞ்சியில் கடந்த, 21ம் தேதி நடந்த புத்த மத
விழாவில் பங்கேற்க ராஜபக்ஷே, இந்தியா வந்தார். ராஜபக்ஷேவுக்கு, கறுப்புக்
கொடி காட்டி போராட்டம் நடத்த, வைகோ தலைமையில், 21 பஸ்களில் 1,000 பேர்
சாஞ்சிக்கு சென்றனர். ரயில், விமானம் மூலம், 200 பேர் அங்கு சென்றனர். வைகோ
உள்ளிட்ட கட்சியினரை ம.பி., போலீசார் தடுத்து நிறுத்தினர்.இந்த
போராட்டத்தின் போது, ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை ம.தி.மு.க.,வினர்
எரித்தனர். தொடர்ந்து, சாஞ்சியை நோக்கி, பேரணியாகச் சென்றவர்களை போலீசார்
கைது செய்தனர்.நேற்று காலை, 7 மணிக்கு, வைகோ சென்னை திரும்புவதாக எதிர்பார்க்கப் பட்டது. வழியில் மழை பெய்து, சாலைகளில் நீர் தேங்கியிருந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், குறித்த நேரத்தில் பஸ்கள் சென்னைக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் விமானம், ரயில் மூலமாகச் சென்றிருந்த கட்சியினரும், போபாலில் இருந்து ரயிலில் புறப்பட்டு, நேற்று காலை, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிற்கு வந்தனர். அவர்கள் ரயிலிலிருந்து இறங்கியதும் ராஜபக்ஷே, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனால், அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு, சென்னை திரும்பிய வைகோவும், அவரது கட்சியினரும் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். இந்த நடவடிக்கை இனியும் தொடருமேயானால், ரயில், விமானம், பேருந்து என, லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ராஜபக்ஷேவுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்துவேன்.
இவ்வாறு வைகோ பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக