புதன், 27 மே, 2009

தமிழ்நெறிக் காவலர்' மயிலை சிவமுத்து

First Published : 03 May 2009 02:03:00 PM IST


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் மறைந்த தமிழ்ச் சான்றோர் பலருள் தமிழ்நெறிக் காவலர் மயிலை சிவமுத்து குறிப்பிடத்தக்கவர். எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையின் வலிமை மிக்கப் பிடியில் சிக்கித் துன்பப்பட்டு, முயன்று படித்து பெரும்புகழ் பெற்றவர் சிவமுத்து. சென்னை, மயிலாப்பூரில் சிவானந்த முதலியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் இரண்டாம் மகனாக 1892-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி சிவமுத்து பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் முத்துக்குமாரசாமி. ஊர்ப் பெயரோடு தந்தையார் பெயரையும் இணைத்து மயிலை சிவமுத்து எனத் தம் பெயரை மாற்றிக் கொண்டார். அப்பெயரே இயற்பெயராக அமைந்து விட்டது. இவர் ஏழாம் வகுப்பு வரை படித்தார். அவரைக் குடும்பச் சூழ்நிலை திசை திருப்பி விட்டது. 1904-ஆம் ஆண்டில் எழும்பூரில் உள்ள சித்திரக் கலாசாலையில் சித்திரம் செதுக்கும் பிரிவில் சேர்க்கப்பட்டார். தந்தையார் மறைவுக்குப் பிறகு, குடும்பப் பொறுப்பைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் அச்சித்திர கலா சாலை பயிற்சியிலிருந்தும் விலகினார். சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் ஈடுபட்டார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சிறு சிறு நூல்களைப் படித்துத் தமிழ் மற்றும் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலியவைகளை இசையோடு பாடக் கற்றுக் கொண்டார். தாயுமானவர், பட்டினத்தார் போன்றோர் பாடல்களை இரவு - பகலாக மனப்பாடம் செய்தார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - புகழோடு வாழவேண்டும் என்ற எண்ணம் அவருடைய ஆழ்மனதில் அழுத்தமாக இருந்தது. தம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்தார். அவருடைய எண்ணமும் முயற்சியும் வீண் போகவில்லை. பிற்காலத்தில் தமிழ்நெறிக் காவலராகவும், பேராசிரியராகவும், மாணவர் மன்றத் தலைவராகவும், சமூகத் தொண்டராகவும், சிறந்த எழுத்தாளராகவும், குழந்தைக் கவிஞராகவும் புகழுடன் வாழ்ந்தார். இவர் தேவாரம், திருவாசகங்களை இசையுடன் பாடக் கற்றிருந்தமையால் சென்னை சிவனடியார் திருக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நிலையத்தில் நிறுவப்பட்ட "பால சைவ சபையின்' வாயிலாகக் கூட்டங்களில் பேசப்பழகிக் கொண்டார். அக்காலத்தில் இருக்கம் ஆதிமூல முதலியார், மணி.திருநாவுக்கரசர் ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. திருநாவுக்கரசரைத் தம் ஆசிரியராகக் கொண்டார். அவரிடம் தமிழ்க் கல்வி பயின்று பெரும்புலமை பெற்றார். தாம் பணியாற்றிய அச்சகத்தின் பணியிலிருந்தும் விலகினார். 1912-இல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் சென்னை கொண்டியம்பதியில் சிவனடியார் கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வந்த சைவ ஆரம்பப் பாடசாலையில் தலைமையாசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். இவர் தலைமையில் அப்பள்ளி எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. அக்காலத்தில் திருநாவுக்கரசர் முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். தம் ஆசிரியரின் விருப்பத்திற்கிணங்க சிவமுத்து தலைமையாசிரியர் பணியிலிருந்து விலகி, 1917-இல் முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியை ஏற்றார். இவர் முதன்முதலில் எழுதிய நூல் "என் இளமைப் பருவம்' என்னும் நூலாகும். இந்நூல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டது. "நித்தில வாசகம்' என்னும் தமிழ்ப் பாட நூலை இயற்றினார். இப்பாட நூல் அவரது புகழைப் பரவச் செய்தது. இவர் இயற்றிய குழந்தைப் பாடல்கள் பலவற்றைக் கவிஞர் தணிகை உலகநாதன் "முத்துப் பாடல்கள்' என்னும் தலைப்பில் தொகுத்து உதவினார். இந்நூலைப் பாராட்டி மத்திய அரசு அவருக்குப் பரிசளித்தது. குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகளுக்கான இவரது இலக்கியத் தொண்டைப் பாராட்டி மாநாடு நடத்திக் கேடயம் வழங்கியது. சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் மக்கள் சார்பில் "தமிழ்நெறிக் காவலர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழகப் புலவர் குழுவைச் சேர்ந்த நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராகத் திகழ்ந்தார் இவர். 1947-ஆம் ஆண்டு முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1931-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாணவர் மன்றப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது தலைவராக இருந்த டாக்டர் தருமாம்பாள் அம்மையார் மறைவுக்குப் பிறகு மன்றத்தின் தலைமைப் பொறுப்பை 1957-இல் ஏற்றார். நாளடைவில் சென்னையில் வாழும் மாணவர்களிடையே கலை நலமும், கல்வி வளமும் பெருகக் கலைப் போட்டிகளை நடத்தினார். உரைமணி கோ.வில்வபதி, கவிஞர் தணிகை உலகநாதன் ஆகியோரை மன்றக் கண்மணிகளாகத் தேர்ந்தெடுத்து, நாடு தழுவிய அளவில் உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு முன் மாதிரித் தமிழ்த் தேர்வுகளை நடத்தினார். 1961-இல் "நித்திலக்குவியல்' என்னும் திங்களிதழைத் தொடங்கினார். மன்றத்துக்காக சொந்தக் கட்டடம் வாங்கி, 1963-இல் இலவசத் தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். இன்றைய மாணவர் மன்றத்தின் வளர்ச்சிக்கும் பொலிவுக்கும் வித்திட்ட பெருமை மயிலை சிவமுத்துவையே சாரும். அவர் மன்றத் தந்தையார் மட்டுமல்ல; சிறந்த தமிழ்த் தொண்டராகவும் விளங்கினார். நாடு உரிமை பெற்ற பிறகும் தாய்மொழி கற்பிக்கும் தமிழாசிரியர் நிலை உயரவில்லை. அது உயர்வு பெறுவதற்காக "துக்கவாரம்' அனுஷ்டித்தார். 1938-இல் இந்தி மொழி, பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்ட போது இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் ஊட்டினார். தருமாம்பாளைத் தலைவராகக் கொண்ட தாய்மார் கழகத்தில் வாரந்தோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். திருக்குறளுக்கு எளிய, இனிய உரை நூல் எழுதினார். பெண்கள் முன்னேற்றத்துக்காக நல்ல பணிகள் செய்து சமுதாயத் தொண்டராக விளங்கினார். எண்ணற்ற இலக்கியம் படைத்த இலக்கியச் செம்மல், 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக