இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்: இரனில் வலியுறுத்தல்
கொழும்பு, மே 25: தமிழர் பகுதிகளில் சேதத்தை மதிப்பிடுவதற்கும் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு அவர்களது தேவைகளை அறிந்து கொள்ளவும் சர்வதேச அமைப்புகளுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.
வீடுகளைத் துறந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களில் 80 சதவீதம் பேரையாவது இந்த ஆண்டுக்குள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சேதாரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். நமக்கு சர்வதேச உதவி தேவை. எனவே சேதம் குறித்து ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தற்போது முகாம்களில் உள்ள 80 முதல் 90 சதவீதம் மக்கள் வன்னிப் பகுதியில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றார் அவர்.
தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஐ.நா. அமைப்புகள் சுதந்திரமாக மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்துவிட்டாலும் விடுதலைப் புலிகளை பலவீனமாக்கியதில் இலங்கையில் உள்ள எல்லாத் தலைவர்களுக்கும் பங்குண்டு என்றார் அவர்.
எனது ஆட்சி காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதால் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் பலவீனப்பட்டன. 2002 - 2004-ம் ஆண்டில் குறைந்தது 4 ஆயிரம் புலிகளாவது சரணடைந்திருப்பார்கள் என்றார் அவர்.
நிவாரணப் பணிகளிலும், குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதிலும் அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.
ரனில் விக்கரமசிங்கே காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ராஜபட்ச அதிபராக பொறுப்பேற்ற சிறிது நாள்களிலேயே தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து புலிகள் மீது ஆக்ரோஷமாக தாக்குதலை தொடங்கினார்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
5/26/2009 4:02:00 AM
5/26/2009 2:38:00 AM