arignargal/ sholars தமிழ் அறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
arignargal/ sholars தமிழ் அறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2011

demant for separate dept, for palm leaves: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை: 
ஆய்வாளர்கள் வலியுறுத்தல்


தமிழ் மரபு அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்ட (இடமிருந்து 3-வது) கல்வெட்டு ஆய்வாளரும், சொற்பொழிவாளருமான சீதாலட்சுமி, ஆய்வாளர் ப
சென்னை, மார்ச் 13: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்பட வேண்டும் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.தமிழ் மரபு அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். இவர்களில் பலர் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.பல்வேறு அரிய ஓலைச் சுவடிகள் இப்போது தொல்லியல் துறை மூலம் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆவணம் கூட செய்யப்படவில்லை. பாதிக்கும் மேற்பட்டவை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்றார் தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி எஸ். ராமச்சந்திரன்.அதைத் தொடர்ந்து பேசிய ஆய்வாளர்கள் மே.து. ராசுகுமார், கோ. உத்திராடம் ஆகியோர் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். ஓலைச் சுவடிகளை யாரிடம் ஒப்படைப்பது என்று குழப்பத்தில் இருந்த அரசு, வேறு வழியின்றி அவற்றைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து விட்டது. ஆனால், இதற்கான முறையான பயிற்சியோ அல்லது உதவியோ ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால்தான் அவை அழிவின் பிடியில் சிக்கியுள்ளன.எனவே, ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து, முறையாக பராமரிக்க தனித் துறையை அரசு உருவாக்கவேண்டும். இல்லையெனில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் தமிழகத்தில் ஓலைச் சுவடிகளே இல்லாத நிலை உருவாகிவிடும் என்றனர். கோயில்களை மத ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது.இவற்றின் மூலம் பல்வேறு வரலாற்று தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.ஆனால், இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிந்து வருகின்றன. ஏனெனில் புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் முறையான கொள்கை இந்தியாவில் கிடையாது.வழிபாடு நடைபெறுவதன் மூலம், வருமானம் கிடைக்கும் கோயில்களை மட்டுமே இந்து அறநிலையத்துறை பாதுகாத்து வருகிறது. வழிபாடு நடைபெறாத தேவாரப் பாடல் பெற்ற பல கோயில்கள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.மேலும், அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கோயில்களில், அவ்வப்போது வண்ணப் பூச்சுகள் மேற்கொள்ளப்படுவதால் அவற்றில் இடம்பெற்றிருக்கும் அரிய கல்வெட்டுகளும், தகவல்களும் சேதமடைந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார் தொல்லியல் ஆய்வாளர் வி. செல்வக்குமார்.இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகள் படி, கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படுவது இல்லை. இதனால், கற்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் அழிந்து வருகின்றன.கோயில் புனரமைப்பு என்ற பெயரில், ஒப்பந்ததாரர்கள் வாட்டர் வாஷ், மணல் பீய்ச்சி அடித்தல் (சாண்ட் பிளாஸ்டிங்) உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் கல்வெட்டுகள் அழிந்துவிடுவதோடு, கோயில்கள் பலமிழந்து உள்ளன என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஜே. சந்திரசேகரன் கூறினார்.தமிழகம் முழுவதும் ஓலைச் சுவடிகளைத் தேடுதல், பழைய நூல்களை மின்னாக்கப் பதிவு செய்தல், வட்டார வழக்குகளைப் பதிவு செய்தல், தமிழ் பாரம்பரியத்தில் உள்ள வாழ்க்கை முறை, பேச்சு முறை ஆகியவற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும் இந்தப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.ஏனெனில் இதுபோன்ற ஆவணங்களும், ஓலைச் சுவடிகளும் தமிழகத்தில் மட்டும் அல்ல. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம், கிழக்கு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம், டென்மார்க்கில் உள்ள நூலகம் எனப் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதுபோன்று வெளி நாடுகளில் இருக்கும் அரிய ஆவணங்களை மின் பதிப்பு செய்து, மீண்டும் இந்தியா கொண்டு வரும் முயற்சியை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முயற்சி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பெரிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் பணி முழுமை பெற்று, நம்முடைய பொக்கிஷங்களை நாம் அறியமுடியும் என்றார் ஜெர்மனியைச் சேர்ந்த தமிழ் மரபு அறக்கட்டளை துணைத் தலைவர் சுபாஷிணி ட்ரெம்மல்.நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆய்வாளர் பத்மாவதி, ஆய்வாளரும் சொற்பொழிவாளருமான சீதாலட்சுமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தமிழ் மரபு அறக்கட்டளையின் 2011 திட்டங்களை அறக்கட்டளையின் செயலர் மா. ஆண்டோ பீட்டர் வாசித்தார்.

திங்கள், 3 ஜனவரி, 2011

borders of thamizh naadu: vengadam and kumari: வடவேங்கடமும் தென்குமரியும்


வடவேங்கடம் என்பதை இமயமலை என விளக்கியும் சிலர் கட்டுரைகள் படைத்துள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறிருப்பினும் தமிழகத்தின் தென் எல்லையை இயற்கையால் நாம் இழந்தோம். வட எல்லையை நம் செயல்பாடுகளால் அல்லது செயல்பாடுகள் இன்மையால் இழந்தோம். இருக்கின்ற நிலப்பரப்பையாவது காப்பாற்ற அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும்  அகற்றி மொழித்தூய்மை பேண வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவளளுவன்

வடவேங்கடமும் தென்குமரியும்


மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா? தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டமா?சரித்திரகாலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு தமிழ்நாடாயிருந்தது என்றும், அதில் வசித்தவர்கள் தமிழர்களாய் இருந்தார்கள்'' என்றும் ஹரப்பா நாகரிகத்தை ஆய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் படைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லெமூரியா கண்டம் அல்லது பண்டைய தமிழகம் பரந்த நிலமாக இருந்தது என்பது தெரிய வருகிறது.கலித்தொகை பாடல் 104:1-4, சிலப்பதிகாரம் 20:17-22 ""பஃறுளி ஆறும் பல குன்றும் சூழ்ந்த குமரிக்கோடும் சினங்கெழு கடலுள் ஆழ்ந்தன'' என்று குறிப்பிடுகிறது. உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இதனுடன் ""பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையே 700 கவதப் (அளவு) பரப்புடைய நிலம் இருந்ததென்றும்'' குறிப்பிட்டுள்ளார்.இது கருதியே தமிழக வரலாற்றை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் தமிழக வரலாறு எழுதிய வி.கனகசபை (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - தமிழில்: கா.அப்பாதுரை) ""நாம் குறிப்பிடும் காலத்திய மக்கள் தம் காலத்துக்கு முன் தமிழகத்தின் நிலப்பரப்பு அன்றிருந்த எல்லை கடந்து தெற்கில் நெடுந்தொலைவு பரந்திருந்தது. கடலின் ஒரு திடீரெழுச்சியால் குமரிக்கோடு என்ற மலையும், பஃறுளியாறு ஓடிய பரப்பும் மறைந்துவிட்டன'' என்று குறிப்பிட்டுள்ளார்.பனம்பாரனாரால் சுட்டப்படும் வடவேங்கடம் இன்றைய திருப்பதிதானா என்பதற்கு, ""நெடியோன் குன்றமும் தொடியோள் பெüவமும்'' என்பது சங்கப்பாடல் தரும் குறிப்பு. இங்கு நெடியோன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், குன்றம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் முருகக்கடவுள் கோயில்கொண்ட இடமாகவே அமைந்துள்ளது என அறியலாம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது முதுமொழி.இன்று அழகர்மலை என்று அழைக்கப்படும் மலை சோலைமலை என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. இதுபோல் பண்டைக் காலத்தில் தமிழகத்தின் வட எல்லையாக இருந்த வேங்கடத்தில் முருகனுக்குக் கோயில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.இதை உ.வே.சா., ""பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் வடவெல்லை கிருஷ்ணா நதியென்று சிற்பசாஸ்திரம் கூறுகிறதென்று கேட்டிருக்கிறேன். தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகவும், குமரியைத் தெற்கெல்லையாகவும் கொண்டிருந்தது'' என்கிறார். (சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும், பக்.14)மேலும், அவர் ""அழகர் மலையைச் சோலைமலை என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுடன், அது முருகக் கடவுளுடைய திருப்பதி என்றும், நக்கீரர் பாடியிருக்கிறார். அப்படியே திருவேங்கடமும் முருகக்கடவுள் ஸ்தலமென்று சில பழைய நூல்களால் தெரிகிறது'' என்று கூறுவதால், வடவேங்கடம் என்று பனம்பாரனார் குறிப்பிடுவது தற்போதுள்ள திருப்பதிதான் என்பதை உறுதியாகச் சொல்லலாம். இரண்டாவது வினா தென்குமரி பற்றியது. ""வடவேங்கடந் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து'' என்ற தொல்காப்பிய பாயிரத்தில் குறிப்பிடப்படும் "குமரி' என்ற சொல், தமிழகத்தின் தற்கால எல்லையாக உள்ள குமரிமுனை அல்ல. சங்க காலத்தில் கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டத்தையே குறிக்கிறது என்பது பல ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.தொல்காப்பியப் பாயிரத்தில் குறிக்கப்படும் "குமரி' என்பது, பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டின் தென் பகுதியில் ஓடிய ஆற்றின் பெயராகும். சங்க காலத்தில் ஏற்பட்ட பேராழியால் (சுனாமி)- கடல் கோளால் அதில் இருந்த சில நாடுகளும் குமரி ஆறும் பஃறுளியாறும் அழிந்துபோயின என்பது ஆய்வாளர்களின் கருத்து.""செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி''""செந்தமிழியற்கை சிவணிய நிலம்''எனத் தொல்காப்பியரும் பனம்பாரனாரும் கூறிய செந்தமிழ் நிலம் என்பது முதலிடைச் சங்கங்கள் இருந்த நிலப்பகுதியாதலே தகுதி'' என்பது மு.இராகவையங்காரின் கருத்தாகும்.மேலும், ""பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையிலிருந்த 700 காத அளவுள்ள 49 நாடுகள் அழிவுற்றனவென்று சிலப்பதிகார ஆசிரியர் தெரிவிக்கிறார்.வடக்கெல்லை வடவேங்கடமென்றும், மற்ற மூன்று எல்லைகள் கடலென்றும் சிகண்டி ஆசிரியரும், சிறுகாக்கைப் பாடினியாரும் தத்தம் சூத்திரங்கள் முகமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் காலத்துக்கு முன்பு குமரியாற்றை கடல்கொண்டது போலும்'' என்று உ.வே.சாமிநாதையர் கூறியுள்ளதால், கடல்கோளால் அழிந்துபோன சங்ககால குமரிக்கண்டமே தமிழகத்தின் தென் எல்லையாகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

ஞாயிறு, 31 மே, 2009

நாடகத் தமிழ் வளர்த்த காசிவிசுவநாதப் பாண்டியன்

First Published : 31 May 2009 12:51:00 AM IST


தமிழ் நாட்டில் கலை, இலக்கிய வரலாற்றில் எட்டையபுரம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. எட்டையபுரத்தை ஆண்ட குமார எட்டேந்திர மன்னர் கர்நாடக சங்கீத சாகித்ய கர்த்தாவாக விளங்கினார். இவர் நாதஜோதி முத்துசுவாமி தீட்சிதர், பாலுசுவாமி தீட்சிதர், சுப்பராம தீட்சிதர் ஆகிய கர்நாடக சங்கீத வித்வான்களை ஆதரித்தார். எட்டையபுரத்து அரசர் ராம வெங்கடேசுவர எட்டப்ப மன்னர் "சுத்தசேவன்' என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.வெங்கடேசுவர எட்டப்ப மன்னரின் இளைய குமாரர் காசி விசுவநாதப் பாண்டியன். இவர் 1888-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி எட்டையபுரத்தில் பிறந்தார். அங்கேயே ஆரம்பக்கல்வி பயின்றார். பின்னர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியக் கலை பயின்று ஓவியத்தில் பட்டம் பெற்றார்.விசுவநாதப் பாண்டியன் ஓவியராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கினார். இவர் நாடகம் எழுதியதோடு நாடகக் கலைஞர்களை ஆதரிக்கும் புரவலராகவும் விளங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், காசிவிசுவநாதப் பாண்டியன் ஆகிய மூவரும் தமிழ் நாடக மும்மூர்த்திகளாவர்.காசிவிசுவநாதப் பாண்டியன், "தேவராச, ஜெகதீச தியேட்டரிக்கல் கம்பெனி' என்ற நாடகக் குழுவை அமைத்திருந்தார். இக் குழுவிலிருந்து பின்னாளில் பல நாடகக் கலைஞர்கள் உருவானார்கள். டி.பி.சங்கர நாராயணன், பி.எஸ்.வெங்கடாசலம், எஸ்.பி.வீராச்சாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி ஆகிய நாடகக் கலைஞர்கள் இக்குழுவிலிருந்து உருவானவர்கள். இவர் சிறந்த ஓவியராக இருந்ததால், தம்முடைய நாடகக் குழுவிற்கு வேண்டிய திரைச் சித்திரங்களை தாமே வரைந்தார்.கன்னட நாடகக் கலைஞர் குப்பி வீரண்ணாவைப் பின்பற்றிப் புதிய முறைகளில் பல்வேறு காட்சித் தட்டிகளையும் தயாரித்தார். எட்டையபுரத்தில் நிரந்தர நவீன நாடக அரங்கை அமைத்தார். இதற்கு ஸ்ரீராமசந்திர விலாஸ் தியேட்டர் என்று பெயர் சூட்டினார். நாடகக் குழுவில் இருந்த நடிகர்கள் அத்தனை பேருக்கும் கடுக்கன், தங்கச் சங்கிலி, காப்பு ஆகிய அணிகளை இவரே தம் அன்பளிப்பாகச் செய்து கொடுத்தார்.பிரகலாதா, மாருதி விஜயம், கபீர்தாஸ், ராமதாஸ், மனோகரன், வி.சி.கோபாலரத்தினம் எழுதிய ராஜபக்தி, தயாளன், சுத்தசேவன் ஆகிய பல நாடகங்கள் இக்குழுவால் நடிக்கப்பட்டன. இக்குழுவினரின் நாடகங்கள் எட்டயபுரம் சுற்று வட்டாரத்திலும், சாத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களிலும் நடைபெற்றன.இவர் சிறந்த இசைக் கலைஞரும் ஆவார். வீணை, ஆர்மோனியம், தபேலா போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். கிராமபோன் இசைத் தட்டுக்கள் வராத காலம் அது. போனோகிராம் என்று ஒரு கருவியை வைத்து மெழுகினால் இசைத் தட்டுக்கள் தயாரித்து அதில் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளையின் வாத்திய இசையையும், காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் வாய்ப்பாட்டு இசையையும் பதிவு செய்து வைத்திருந்தார்.இவர் சிறந்த நிழற்பட நிபுணராகவும் விளங்கினார். நாடகக் கலைஞர்களை நிழற்படங்களாக எடுத்துள்ளார். நாடக ஆசிரியர் எம்.கந்சாமி முதலியார், எம்.கே.இராதா, கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.கே.எஸ். சகோதரர்கள் முதலிய கலைஞர்களின் நிழற்படங்கள் இவரால் எடுக்கப்பட்டவை. இவை தமிழ் நாடகக் கலையின் வரலாற்றைக் கூறும் வரலாற்றுப் பெட்டகங்களாகும்.காசிவிசுவநாதப் பாண்டியன் சொந்தமாக நாடகக் குழு வைத்து, நாடகக் கலையை வளர்த்ததோடு தமிழ் நாட்டில் உள்ள நாடகக் குழுக்களை எட்டையபுரத்திற்கு வரவழைத்து அவர்களுடைய நாடகங்களை நடத்தி, அவர்களுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து உதவினார். சிறந்த நாடகக் கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த நாடகக் குழுவைக் கலைத்துவிட டி.கே.எஸ். சகோதரர்கள் முடிவு செய்த பொழுது காசிவிசுவநாதப் பாண்டியன், தன்னுடைய நாடகக் குழுவுக்காக தயாரித்த காட்சிகளையும், உடைகளையும் தந்து டி.கே.எஸ். நாடகக் குழு தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவினார்.""1935 நவம்பரில் நாங்கள் பங்கு கொண்ட மேனகா படப்பிடிப்பிற்குப் பின் ஏறத்தாழ ஆறு மாத காலம் நாடகக் குழு நடைபெறவில்லை. குழுவை கலைத்துவிட்டு நாகர்கோவிலில் தங்கி வேறு தொழிலில் ஈடுபட எங்கள் பெரியண்ணா டி.கே.எஸ்.சங்கரன் முயன்று வந்தார். எங்கள் பால் அன்பு கொண்ட சில பெரியவர்கள் மீண்டும் நாடகக் குழுவைத் தொடங்கும்படி வற்புறுத்தி வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இருவர்: ஒருவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி, மற்றொருவர் எட்டையபுரம் இளைய ராஜா காசிவிசுவநாதப் பாண்டியன். அவர் கருணையோடு எங்களுக்கு உதவ முன் வந்தார்'' என்று டி.கே.சண்முகம் தன்னுடைய நாடக வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகக் குழு தமிழ் நாடக வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்துள்ளது. இந்த மாபெரும் நாடகக் குழுவைக் காப்பாற்றியவர் கலைக் காவலர் காசிவிசுவநாதப் பாண்டியன்.இவர், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கன்னடம், மலையாளம் ஆகிய இரு மொழிகளைப் பேச, புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருந்தார். "தயாளன்' என்னும் நாடகம் இவரால் எழுதப்பட்டு அச்சிலும் வெளிவந்துள்ளது. தயாளன் நாடகம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நாடகம். இது அவரின் மொழிப் புலமையை வெளிப்படுத்தக் கூடிய நாடகமாக அமைந்துள்ளது. இந் நாடகம் இவருடைய நாடகக் குழுவால் நாடகமாக நடிக்கப்பட்டது. 1937-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் கூட்டுறவோடு தயாளனை திரைப்படமாகத் தயாரித்தார். இதில் பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்துள்ளார்.காசிவிசுவநாதப் பாண்டியன் சிறந்த தேசபக்தரும் ஆவார். மகாகவி சுப்பிரமணிய பாரதியுடன் நெருங்கிய நட்பு கொண்டு, விடுதலை வீரர்களுக்கு பல உதவிகள் செய்து வந்தார். தன்னுடைய திரைப்பட அரங்கிற்கு "பாரத மாதா டாக்கீஸ்' என்று பெயர் சூட்டினார். இவருடைய திரைப்பட அரங்கில் பக்கிம்சந்திரரின் "வந்தே மாதர' கீதத்துடன் தான் திரைப்படக் காட்சி துவங்கும். ஆங்கிலேய ஆட்சியினர் இதைத் தடுத்தபோதிலும் இவர் தேசிய இயக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திரைப்பட அரங்கில் தான் காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்றன. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் தேசிய இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்.1941-இல் காசிவிசுவநாதப் பாண்டியன் உடல் நலிவுற்று மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டி.கே.எஸ். சகோதரர்களின் "சிவலீலா' நாடகம் பிரம்மாண்டமான காட்சிகளுடன் நடந்து வந்தது. உடல் நலிவுற்ற நிலையிலும் அந்த நாடகத்தைப் பார்த்து, கண்டு ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார். நாடகக் கலையின் வளர்ச்சிக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் பல கலைகளில் சிறந்து விளங்கியவருமான காசிவிசுவநாதப் பாண்டியன் 1941-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி அமரர் ஆனார். அவர் வளர்த்த நாடகக் கலை வாழ்ந்து கொண்டிருக்கிறது; அவரும் கலைஞர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் விதமாக இவருடைய திருவுருவப்படம் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 27 மே, 2009

மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

First Published : 24 May 2009 12:54:00 AM IST


தமிழ் இலக்கிய உலகில் 19-ம் நூற்றாண்டு, பழமை, புதுமை இரண்டையும் இணைக்கும் பாலமாக அமைந்தது எனலாம். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும், ராமலிங்க சுவாமிகளும் அவதரித்துத் தமிழுக்குத் தொண்டாற்றினர். அவர்களைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ண பாரதி, தொழுவூர் வேலாயுத முதலியார், பூண்டி அரங்கநாத முதலியார், தண்டபாணி சுவாமிகள் போன்றோர் தோன்றி எண்ணற்ற பாடல்களை எழுதித் தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்த்தனர். இவர்கள் வரிசையில் தோன்றியவர் பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர். திண்டுக்கல் மாவட்டம் பழனியம்பதியில் "விசுவகன்மா' எனும் தெய்வக் கம்மியர் மரபைச் சேர்ந்த முத்தையா ஆசாரி-அம்மணியம்மாள் தம்பதிக்கு 1836-இல் கவிராயர் பிறந்தார். தம் முன்னோர்களில் ஒருவர் பெற்றிருந்த "மாம்பழம்' எனும் பெயரையே, முத்தையா தமது இரு புதல்வர்களுக்கும் சூட்டினார். கவிராயர் இளைய புதல்வர். இவரது முன்னோர்கள் வேதாகமச் சாத்திரங்கள், திருக்கோயில் நிர்மாணிப்பதற்குரிய சிற்பக்கலை, புராண வகைகளை ஐயம்திரிபறக் கற்றறிந்தவர்கள். கவிராயரின் ஏழாம் தலைமுறைப் பாட்டனாரே, தற்போது மதுரையில் உள்ள புது மண்டபம் என்று அழைக்கப்படும் வசந்த மண்டபத்தை அழகுறக் கட்டியவர் ஆவார். பள்ளிசெல்லும் பருவத்தில் கடுமையான அம்மைநோய் ஏற்பட்டு, மாம்பழக் கவிராயருக்கு கண்பார்வை பறிபோயிற்று. எனவே முத்தையாவே தம் மகனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கல்வி போதித்தார். தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களை பழனி மாரிமுத்துக் கவிராயரிடம் கற்றுத் தெளிந்தார். கவிபாடும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது. பழனி முருகன்பால் தீராத காதல் கொண்டு வணங்கிவந்த கவிராயர், "குமரகுரு பதிகம்', "சிவகிரிப் பதிகம்', "பழனிப் பதிகம்' எனும் பாமாலைகளைப் பாடினார்.""பணிகொண்ட கண்டகர் பயங்கொண்ட வண்டரைப்பரிவுகொண் டாண்டதேவே!பழகுமங் களகீத முழவுகண் டுயிலாதபழனியம் பதிநாதனே''(பழனிப்பதிகம்) இதுபோன்று கவிராயர் பாடல்கள் அனைத்திலும் துள்ளிக் குதிக்கும் சந்தநயம் படிப்பதற்கும் சுவைப்பதற்கும் ஏற்றவையாகும். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகைக் கவிகளையும் நலனுறப்பாடும் ஏற்றம் பெற்றுத் திகழ்ந்தார். அத்துடன் எதையும் ஒரு தடவை கேட்டதும், திருப்பிக் கூறும் ஏகசந்தக் கிராகியம் எனும் ஆற்றலையும் பெற்றிருந்தார். மாம்பழக் கவிராயர் முதன் முதலில் பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டி மிராசுதார் வேங்கடசாமி நாயக்கர், ஆய்குடி ஓபுளக்கொண்டம நாயக்கர், துளசிமாணிக்கம் பிள்ளை ஆகியோரைப் பற்றிப் பாடி மனம் களிக்கச் செய்தார். புகழும் புலமையும் நிறைந்திருந்தபோதும் மாம்பழக் கவிராயர், தம் மூதாதையர்களைப் போன்று தாமும் தமிழ்ப் பற்றும் கொடைநலமும் வாய்க்கப்பெற்ற தமிழரசர் அவைகளுக்குச் சென்று தமிழ்ப் புலமையைக் காட்ட வேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்டிருந்தார். ராமநாதபுரத்து சேது சமஸ்தான மன்னர்களே தமிழ் கேட்டுருகும் பண்புடையவர்கள் என்று பலரிடம் கேட்டறிந்தார். அதனால் ராமநாதபுரம் செல்ல முடிவு செய்தார். ராமநாதபுரத்தை அடைந்த கவிராயருக்குப் பல நாள்களாகியும் ராஜதரிசனம் கிடைக்கவில்லை. இவரது வருகையைப் பற்றிப் புலவர்களும் சேதுபதிக்குத் தெரிவிக்கவில்லை. இறுதியாக ஒரு புலவரின் உதவியால் சேதுபதியின் அவைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவையில் கொலுவீற்றிருந்த சேதுமன்னர்கள் பொன்னுச்சாமித் தேவர், அவரின் சகோதரர் முத்துராமலிங்கத்தேவர் இருவர் மீதும் மாம்பழக் கவிராயர் வாழ்த்துக் கவிகளைப் பாடினார். கவிராயரின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பொன்னுசாமித்தேவர் கவிராயரை நோக்கி, "கிரியில் கிரியுருகும் கேட்டு' என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பாப் பாடுமாறு வேண்டினார். உடனே கவிராயர்,""மாலாம்பொன் னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்சேலாங்கண் மங்கையர்வா சிக்குநல்யாழ் - நீலாம்பரியில் பெரியகொடும் பாலைகுளி ரும்ஆகிரியில் கிரியுருகும் கேட்டு'' எனப் பாடி முடித்தார் (நீலாம்பரி, ஆகிரி என்பன ராகங்களின் பெயர்கள்). கவிராயரின் இயற்றமிழ், இசைத்தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்த தேவர், மேலும் பல ஈற்றடிகளைக் கொடுத்துப் பாடக் கேட்டார். அனைத்திற்கும் கவிராயர் பொருத்தமான பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். தமிழ்ப் பற்றாளரான பொன்னுச்சாமித் தேவர் கவிராயரின் புலமையை மேலும் அறிய விரும்பி, ""புலவரே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாசுரத்தில் "முத்தைத் தரு' எனத்தொடங்கி "ஓது' என்பது வரை உள்ள பகுதியை ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுக'' எனக் கேட்டார். ஒரு நொடியும் காலந்தாழ்த்தாத கவிராயர் தேவரைப் பார்த்து, "வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய' எனும் தொடரை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள், அது வெண்பாவாகிவிடும் எனக் கூறி,""வரமுதவிக் காக்கு மனமேவெண் சோதிபரவியமுத் தைத்தரு பத்தித் - திருநகையத்திக்கிறை சத்திச் சரவணமுத் திக்கொருவித்துக்குருப ரனெனவோ து'' என்று கவிராயர் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்த தேவர் ஆச்சரியமடைந்தார். மாம்பழக் கவிராயரின் ஆழமான தமிழ்ப் புலமையைக் கண்டு உளப்புளகாங்கிதம் அடைந்த தேவர், தமிழ்ப் புலவர்களில் இவரைப் போலத் தாம் எங்கும் எப்போதும் கண்டதில்லை எனக்கூறி, தம் ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அவரது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கி, ""சபாஷ், சபாஷ்'' எனப் பலமுறை கூறிப் பாராட்டினார். அத்துடன், ""புலவரீர், உமது புலமை அளவிடற்கரியது. அழகும் சுவையும் ஒருங்கே சிறக்கக் கவிபாடும் திறமை வியக்கத்தக்கது. கலை மடந்தையின் பீடமெனத் திகழும் தங்களுக்கு இப்பேரவையில் "கவிச்சிங்கம்' எனும் விருதுப் பெயரைச் சூட்டுகிறேன்'' என்று கூறி, மேலும் அவரை கெüரவிக்கும் வகையில் சேது சமஸ்தானத்துப் புலவராகவும் நியமித்தார். மாம்பழக் கவிச்சிங்க நாவலர் எண்ணற்ற தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். சேதுபதியின் வேண்டுகோளுக்கிணங்க எலிக்கும் புலிக்கும் சிலேடைப் பாடலொன்றையும் பாடி மகிழ்வித்தார்.""பாயும் கடிக்கும் பசுகருவா டும்புசிக்கும்சாயும்குன் றிற்றாவிச் சஞ்சரிக்கும் - தூயதமிழ்தேங்குமுத்து ராமலிங்கச் சேதுபதி பாண்டியனேவேங்கையொரு சிற்றெலியா மே'' கவிராயர் சேது சமஸ்தானத்தில் இருந்தபோது பல நிகழ்ச்சிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அத்துடன் நீரோட்டக வெண்பாப் பாடுவதிலும் கவிராயர் வல்லவராகத் திகழ்ந்தார். பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் பாடல்கள் "கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்'டாக வெளியாகியுள்ளது. இதுதவிர "சந்திர விலாசம்', "சிவகிரியமக அந்தாதி', "திருச்செந்தில் பதிகம்', "பழனி நான்மணிமாலை', "திருப்பழனி வெண்பா', "பழனாபுரி மாலை', "குமரன் அந்தாதி', "பழனிக் கோயில் விண்ணப்பம்', "தயாநிதிக் கண்ணி' ஆகிய நூல்களையும் அவர் தமிழுலகிற்குத் தந்துள்ளார். இவற்றில் உள்ள சொல்லாட்சி, பொருள்நயம், சந்தநடை ஆகியவை படித்தும் சுவைத்தும் மகிழுதற்குரியனவாகும். மாம்பழக் கவிச்சிங்க நாவலர் 1884-ஆம் ஆண்டு மாசி மாதம் 24-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், சொற்சுவை, பொருட்சுவை, இலக்கிய நயம், சந்தநயம், கொண்ட அவரது தனிப்பாடல்கள் மற்றும் சிற்றிலக்கிய வகை நூல்கள் இன்றளவும் தமிழார்வலர்களால் சுவைக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை.
தமிழ்நெறிக் காவலர்' மயிலை சிவமுத்து

First Published : 03 May 2009 02:03:00 PM IST


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் மறைந்த தமிழ்ச் சான்றோர் பலருள் தமிழ்நெறிக் காவலர் மயிலை சிவமுத்து குறிப்பிடத்தக்கவர். எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையின் வலிமை மிக்கப் பிடியில் சிக்கித் துன்பப்பட்டு, முயன்று படித்து பெரும்புகழ் பெற்றவர் சிவமுத்து. சென்னை, மயிலாப்பூரில் சிவானந்த முதலியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் இரண்டாம் மகனாக 1892-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி சிவமுத்து பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் முத்துக்குமாரசாமி. ஊர்ப் பெயரோடு தந்தையார் பெயரையும் இணைத்து மயிலை சிவமுத்து எனத் தம் பெயரை மாற்றிக் கொண்டார். அப்பெயரே இயற்பெயராக அமைந்து விட்டது. இவர் ஏழாம் வகுப்பு வரை படித்தார். அவரைக் குடும்பச் சூழ்நிலை திசை திருப்பி விட்டது. 1904-ஆம் ஆண்டில் எழும்பூரில் உள்ள சித்திரக் கலாசாலையில் சித்திரம் செதுக்கும் பிரிவில் சேர்க்கப்பட்டார். தந்தையார் மறைவுக்குப் பிறகு, குடும்பப் பொறுப்பைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் அச்சித்திர கலா சாலை பயிற்சியிலிருந்தும் விலகினார். சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் ஈடுபட்டார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சிறு சிறு நூல்களைப் படித்துத் தமிழ் மற்றும் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலியவைகளை இசையோடு பாடக் கற்றுக் கொண்டார். தாயுமானவர், பட்டினத்தார் போன்றோர் பாடல்களை இரவு - பகலாக மனப்பாடம் செய்தார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - புகழோடு வாழவேண்டும் என்ற எண்ணம் அவருடைய ஆழ்மனதில் அழுத்தமாக இருந்தது. தம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்தார். அவருடைய எண்ணமும் முயற்சியும் வீண் போகவில்லை. பிற்காலத்தில் தமிழ்நெறிக் காவலராகவும், பேராசிரியராகவும், மாணவர் மன்றத் தலைவராகவும், சமூகத் தொண்டராகவும், சிறந்த எழுத்தாளராகவும், குழந்தைக் கவிஞராகவும் புகழுடன் வாழ்ந்தார். இவர் தேவாரம், திருவாசகங்களை இசையுடன் பாடக் கற்றிருந்தமையால் சென்னை சிவனடியார் திருக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நிலையத்தில் நிறுவப்பட்ட "பால சைவ சபையின்' வாயிலாகக் கூட்டங்களில் பேசப்பழகிக் கொண்டார். அக்காலத்தில் இருக்கம் ஆதிமூல முதலியார், மணி.திருநாவுக்கரசர் ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. திருநாவுக்கரசரைத் தம் ஆசிரியராகக் கொண்டார். அவரிடம் தமிழ்க் கல்வி பயின்று பெரும்புலமை பெற்றார். தாம் பணியாற்றிய அச்சகத்தின் பணியிலிருந்தும் விலகினார். 1912-இல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் சென்னை கொண்டியம்பதியில் சிவனடியார் கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வந்த சைவ ஆரம்பப் பாடசாலையில் தலைமையாசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். இவர் தலைமையில் அப்பள்ளி எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. அக்காலத்தில் திருநாவுக்கரசர் முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். தம் ஆசிரியரின் விருப்பத்திற்கிணங்க சிவமுத்து தலைமையாசிரியர் பணியிலிருந்து விலகி, 1917-இல் முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியை ஏற்றார். இவர் முதன்முதலில் எழுதிய நூல் "என் இளமைப் பருவம்' என்னும் நூலாகும். இந்நூல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டது. "நித்தில வாசகம்' என்னும் தமிழ்ப் பாட நூலை இயற்றினார். இப்பாட நூல் அவரது புகழைப் பரவச் செய்தது. இவர் இயற்றிய குழந்தைப் பாடல்கள் பலவற்றைக் கவிஞர் தணிகை உலகநாதன் "முத்துப் பாடல்கள்' என்னும் தலைப்பில் தொகுத்து உதவினார். இந்நூலைப் பாராட்டி மத்திய அரசு அவருக்குப் பரிசளித்தது. குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகளுக்கான இவரது இலக்கியத் தொண்டைப் பாராட்டி மாநாடு நடத்திக் கேடயம் வழங்கியது. சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் மக்கள் சார்பில் "தமிழ்நெறிக் காவலர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழகப் புலவர் குழுவைச் சேர்ந்த நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராகத் திகழ்ந்தார் இவர். 1947-ஆம் ஆண்டு முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1931-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாணவர் மன்றப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது தலைவராக இருந்த டாக்டர் தருமாம்பாள் அம்மையார் மறைவுக்குப் பிறகு மன்றத்தின் தலைமைப் பொறுப்பை 1957-இல் ஏற்றார். நாளடைவில் சென்னையில் வாழும் மாணவர்களிடையே கலை நலமும், கல்வி வளமும் பெருகக் கலைப் போட்டிகளை நடத்தினார். உரைமணி கோ.வில்வபதி, கவிஞர் தணிகை உலகநாதன் ஆகியோரை மன்றக் கண்மணிகளாகத் தேர்ந்தெடுத்து, நாடு தழுவிய அளவில் உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு முன் மாதிரித் தமிழ்த் தேர்வுகளை நடத்தினார். 1961-இல் "நித்திலக்குவியல்' என்னும் திங்களிதழைத் தொடங்கினார். மன்றத்துக்காக சொந்தக் கட்டடம் வாங்கி, 1963-இல் இலவசத் தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். இன்றைய மாணவர் மன்றத்தின் வளர்ச்சிக்கும் பொலிவுக்கும் வித்திட்ட பெருமை மயிலை சிவமுத்துவையே சாரும். அவர் மன்றத் தந்தையார் மட்டுமல்ல; சிறந்த தமிழ்த் தொண்டராகவும் விளங்கினார். நாடு உரிமை பெற்ற பிறகும் தாய்மொழி கற்பிக்கும் தமிழாசிரியர் நிலை உயரவில்லை. அது உயர்வு பெறுவதற்காக "துக்கவாரம்' அனுஷ்டித்தார். 1938-இல் இந்தி மொழி, பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்ட போது இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் ஊட்டினார். தருமாம்பாளைத் தலைவராகக் கொண்ட தாய்மார் கழகத்தில் வாரந்தோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். திருக்குறளுக்கு எளிய, இனிய உரை நூல் எழுதினார். பெண்கள் முன்னேற்றத்துக்காக நல்ல பணிகள் செய்து சமுதாயத் தொண்டராக விளங்கினார். எண்ணற்ற இலக்கியம் படைத்த இலக்கியச் செம்மல், 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
தமிழ்ச் சொற்களஞ்சியம் கண்ட சிதம்பரநாதன் செட்டியார்

First Published : 09 May 2009 10:58:54 PM IST


தமிழ் எனும் சேயைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த புலவர்களும் அரசர்களும் பலராவர். தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறியச் செய்த உயர்ந்தோர் சிலராவர். அவர்களுள் ஒப்பற்ற ஒருவராயிருந்து செந்தமிழ்க் காவலராய் விளங்கியவர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார். கும்பகோணம் இவரைப் பெற்றெடுத்த திருத்தலமாகும். அமிர்தலிங்கம்-பார்வதி அம்மையார் தம்பதிக்கு மகவாக 1907-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி பிறந்தார்.
இவர் குடந்தை "நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி'யில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928-ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்காக "டாக்டர் ஜி.யு.போப் நினைவு' தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
1933-ஆம் ஆண்டு முதல் 1935 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் 1943-ஆம் ஆண்டு "தமிழ்ச் செய்யுள் வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரியவர் என்ற பெருமையையும் பெற்றார்.


வடசொல் நீக்கி, செந்தமிழிலேயே பேசவும், எழுதவும் கூடிய ஆற்றலைப் பெற்றதைப் போன்று ஆங்கிலத்திலும் திறன்மிக்கவராகத் திகழ்ந்தார் சிதம்பரநாதன்.

சென்னை புதுக்கல்லூரி மற்றும் பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1948-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராகவும் பொறுப்பேற்றார். தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் முதன் முதலில் துணைவேந்தராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இவருக்குச் சிலப்பதிகாரமே உயிர் மூச்சாய் அமைந்தது. அந்நூலை மாணவர்களுக்கு அவர் எடுத்தியம்பும் பாங்கே தனி பாண்டித்யம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்களுக்குக் கருத்துரைகளைச் சொல்வதைக் காட்டிலும் ஆய்வு முறையில் அவர்கள் அறிந்து உணருமாறு செய்வதையே கொள்கையாகக் கொண்டார்.
இவர் எழுதிய நூல்கள் ஏராளம். அவற்றுள் தமிழோசை, முன்பனிக்காலம், இளங்கோவின் இன்கவி, தமிழ் காட்டும் உலகு, செங்கோல் வேந்தர், தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், கட்டுரைக்கொத்து ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உலக அரங்கில் தமிழ்க் காப்பியங்களின் சிறப்பினை நிலைநாட்ட An Introduction To Tamil Poetry' என்ற அதி அற்புத நூலையாத்த அருந்தவப் புதல்வர். பேராசிரியர்களே போற்றும் அளவுக்குச் சிறந்த தமிழ்க் காப்பாளர்.


1956-ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழின் சிறப்பை நன்கு உணர்த்தி நம் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தார். 1960-ஆம் ஆண்டு ரஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார். 1961-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உலக மொழிகளில் விழுமிய தமிழிலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்த விரும்பி, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று தமிழின் சிறப்பைப் பறைசாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க, "ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்' எனும் அரிய நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றினார். 1959-ஆம் ஆண்டு முதல் 1965 வரை ஆறு ஆண்டுகள் அரும்பாடுபட்டார். அதன் பயனாய் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியத்தைத் தமிழுலகுக்கு அர்ப்பணித்தார்.

தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவராகவும், தமிழகப் புலவர்குழுத் தலைவராகவும் செயல்பட்டார் சிதம்பரநாதன். பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழகச் செனட்டிற்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து அகாதெமிக் கவுன்சிலுக்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே. 1964-ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் இவரது உரை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்தது. ஆசிரியர் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளைக் களைய இவரது செயல்பாடு பேருதவியாக இருந்தது.
இவ்வாறு வேறு பல பொறுப்புகளையும் ஏற்று அந்தந்த காலகட்டங்களில் செய்த அருந்தமிழ்த் தொண்டின் மூலம் முத்திரை பதித்த இவரை தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்' எனும் சிறப்புப் பட்டம் தந்து கெüரவித்தது. இவர் எத்தனையோ கல்லூரிகளில் பணியாற்றினாலும் தம் இறுதிக் காலத்தில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியின் முதல்வராக 1965-ஆம் ஆண்டு முதல் 1967 வரை பணியாற்றியதையே தம் வாழ்வில் கிட்டிய பெரும்பேறாகக் கூறியுள்ளார். மிகச்சிறந்த தமிழ்ச் சான்றோர்களான வி.கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், ஞானியாரடிகள் போன்றவர்களால் பெரிதும் பாராட்டிப் புகழப்பட்டார்.
""கிராமப்புற மக்களே நம் மொழியை இயல்பாகப் பேசித் தமிழைப் பேணி, பாதுகாத்து வருகின்றனர்; நகர்ப்புறங்களில் வாழ்வோர் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் கலந்து பேசுவதையே நாகரிகமாகக் கொண்டுள்ளனர்; இவர்களால் தமிழ் சீரழிந்து வருகிறது என்பது உண்மை'' என டாக்டர் சிதம்பரனார் அழுத்தமாகக் கூறியுள்ள கருத்து அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
அன்னைத் தமிழை அகிலமெங்கும் பரப்பித் தமிழுலகுக்குப் பெருமை சேர்த்த இவரது மணிவிழா 1967-ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவருக்குக் கிடைத்த இத்தகு பெருமைகளைக் காலதேவனால் கூடப் பொறுத்துக் கொள்ள இயலாமல், அதே ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி தமிழ் மக்களுக்கு ஆறாத்துயரை அளித்துவிட்டு இவ்வுலகை விட்டே அவரை ஈர்த்துச் சென்றுவிட்டான். அவர்தம் மறைவு தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழ்மொழி ஆகிய அனைத்துக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது தூய தமிழ்த்தொண்டினை என்றும் மறவாது பேணிக் காக்க வேண்டியது தமிழ் நெஞ்சங்களின் தலையாய கடமையாகும்.

"தமிழ் புளூராக்' படைத்த சைமன் காசிச் செட்டி

First Published : 26 Apr 2009 11:42:00 PM IST







தமிழகத்தில் 1812-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை கல்விச் சங்கம் என்பது தமிழ்நாட்டில் ஆங்கிலமும் தமிழும் அறிந்த ஒரு புதிய மாணவத் தலைமுறையை உருவாக்கியது. இதே காலகட்டத்தில் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்கள் நிறைய பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி, ஆங்கிலமும் தமிழும் கிறிஸ்தவ மதத் தத்துவங்களும் அறிந்த மாணவர்களைப் பல்லாயிரக்கணக்கில் உருவாக்கத் தொடங்கின. இந்தப் பின்புலத்திலிருந்து வெளிவந்த மாணவர்களில் பலருக்குத் தமிழ்மொழியின் பழைமையையும் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றையும் ஐரோப்பியப் புலவர்களின் வரலாறு போன்று உலகத்தினருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர்தான் சைமன் காசிச் செட்டி என்ற பல்துறை அறிஞர்.

இவர் 1859-இல் "தமிழ் புளூராக்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் அவர்களின் வரலாறு குறித்தும் ஒரு நூல் எழுதினார்.

புராண மயமாகச் சொல்லப்பட்டு வந்த தமிழ்ப் புலவர்களின் கதைகளை ஒரு வரலாற்று நூலாக்கும் முதல் முயற்சி இதுதான். கி.பி. 45-இல் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த புளூராக் என்ற அறிஞர் கிரேக்க நாட்டுப் புலவர்களைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்தான் உலகில் தோன்றிய முதல் இலக்கிய வரலாறாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வரலாறுகளுக்கெல்லாம் மூலமாக அமைந்து பெயர் பெற்றவரான புளூராக்கை தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் நூலுக்குப் பெயராக இட்டு மகிழ்ந்தார் சைமன் காசிச் செட்டி. இவர் 1807-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஈழவளநாட்டில் கற்பிட்டி என்னும் ஊரில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். கற்பிட்டி வடமேல் மாகாணத்தில் உள்ளது. புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய காசிச் செட்டி, 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம் மணியக்காரராகவும் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில் முதலியாராகவும் கடமை செய்தார். 1838-ஆம் ஆண்டு முதல் 1845-ஆம் ஆண்டுவரை இலங்கைச் சட்ட நிரூபண சபை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தாற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். அரசியலில் ஈடுபட்டுப் பல பணிகளில் உழைத்தபோதும் காசிச் செட்டி, தமது மொழிக்கும் நாட்டுக்கும் தம் எழுத்துகள் மூலம் சிறப்புத் தேடித் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ்த்தொண்டை அவர் வாழ்ந்த காலத்துத் தமிழறிஞர்கள் போற்றியுள்ளனர். பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் அதன் ஆசிரியர்கள் குறித்தும் அறிவியல் பூர்வமான தகவல்களைத் தரவேண்டும் என்பதே தமது விருப்பம் என்று புளூராக் நூலின் ஆங்கில முகவுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அத்தகைய ஆய்வுக்குத் தேவையான நாட்டு வரலாறுகளோ புலவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளோ தமிழ்மொழியில் இல்லை. எனவே, புராணமயமான செய்திகள், செவிவழிச் செய்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவற்றிலுள்ள மிகையான புனைவுகளை நீக்கிவிட்டுத்தான் இந்த வரலாற்றை உருவாக்கியதாகக் கூறுகிறார். எனவே, தாம் எழுதிய வரலாறு குறைபாடுகள் நிறைந்ததாக இருக்கும் என்று எழுதுகிறார். ஆயினும் வருங்காலத் தலைமுறையினர் எதிர்காலத்தில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சரியான வரலாற்றை உருவாக்க இந்நூல் துணைபுரியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். "ஆசியா ஆய்வுகள்' என்னும் பத்திரிகை திருவள்ளுவர் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்று கூறியது. இதைக் காசிச் செட்டி மறுக்கிறார். சிவவாக்கியர், திருமழிசையாழ்வார் வாழ்ந்த காலமான 8-ஆம் நூற்றாண்டு என்றனர். சிவவாக்கியர் பாடலில் முகம்மதியரைப் பற்றிய குறிப்பு வருவதால் தமிழ்நாட்டில் முகம்மதியர் படையெடுப்புக்குப் பிந்தைய காலத்தவராகத்தான் வாழ்ந்திருக்க முடியும் என்று கருத்துரைக்கிறார். மண்டலபுருடரின் காலத்தைப் பற்றிக் கூறுமிடத்து, தமது நிகண்டின் ஒன்பதாம் தொகுதியில் கிருஷ்ணதேவராயரைப் பாராட்டுவதால் கி.பி. 1508 முதல் கி.பி.1530 வரை ஆட்சி புரிந்த ராயரின் காலமே மண்டலபுருடரின் காலம் என்கிறார். இதேபோன்று "ஞானவெட்டியான்' என்ற நூலைத் திருவள்ளுவர் எழுதினார் என்று கூறுவதும், "அல்லி அரசாணிமாலை' புகழேந்திப் புலவர் எழுதியது என்று கூறுவதும் அவ்விரு பெரும் புலவர்களை இழிவுபடுத்தியதாகும் என்று கருத்துரைக்கிறார். 1848-ஆம் ஆண்டில் "தமிழ்நூற் பட்டியல்' என்னும் கட்டுரையில் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வீரசோழியம், மாறனலங்காரம், சீறாபுராணம் போன்ற நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் இந்நூலின் ஆசிரியர்களைப் பற்றி இவருக்கு எந்தச் செய்தியும் தெரிந்திருக்கவில்லை. 1876-ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் புகார் காண்டத்தை உரையுடன் வெளியிட்ட தி.ஈ.இராகவாச்சாரியார், "சேரமான் பெருமாணாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்' என்று அச்சிட்டார். 1929-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரையை பேராசிரியர் உரை என்று அச்சிட்டுவிட்டுப் பின்னர் திருத்தி அமைத்து வெளியிட்டனர். 1920-இல் உ.வே.சா. பரிபாடல் நூலைப் பதிப்பித்தபோது அதன் உரையாசிரியர் யாரென்று அறியாமல் இருந்தார். ரா.ராகவையங்கார்தான், பரிபாடலின் உரையாசிரியர் பரிமேலழகர் என்பதை நிறுவுகிறார். அதனை உ.வே.சா.வும் ஏற்றுக்கொள்கிறார். இத்தகைய வரலாற்றையெல்லாம் நோக்கும்போது காசிச் செட்டிக்கு மேற்கூறிய நூல்களின் ஆசிரியர்கள் பெயர் தெரியாமலிருந்தது வியப்பானதல்ல. வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் போன்ற துறைகளிலும் புலமையாளராகத் திகழ்ந்தார். "கற்பிட்டியில் கண்டெடுத்த நாணயங்கள்' "பண்டைக்காலம் தொட்டு ஒல்லாந்தர் காலம் வரையிலுள்ள வரலாறு' ரேணர் எழுதிய இலங்கை வரலாறு பற்றிய நூலின் மொழிபெயர்ப்பு போன்ற கட்டுரைகளும் நூலும் அவருடைய வரலாற்று ஆர்வத்தைக் காட்டுகின்றன. "முக்குவர் வரலாறு' "இலங்கை இசுலாமியரின் பழக்கவழக்கங்கள்', "சிலோன் கெஸட்டியர்' போன்ற நூல்கள் இவருடைய சமூகவியல் அறிவை வெளிக்காட்டுவன. மாலத்தீவு மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைக் காட்டும் சொற்பட்டியல், ஜாவா மொழிக்கும் வடமொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை, மலையகராதி (1840) என்னும் அகராதி ஆகியன இவருடைய மொழியியல் அறிவை விளக்குகின்றன. காசிச் செட்டி, 1860-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். இத்தகைய வலுவான அறிவியல் துறைகளின் துணையுடன் இவர் ஆக்கித் தந்த தமிழ்ப் புலவர் வரலாறான "புளூராக்' பிற்காலத்தில் அறிவியல் பூர்வமாகத் தமிழ் ஆய்ந்த அறிஞர்களுக்கெல்லாம் ஒளிவிளக்காக இருந்தது என்று சொன்னால் அது மிகையன்று.