school லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
school லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள்தாம் சிறப்பாக இருக்கும்!

அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள்தாம் சிறப்பாக இருக்கும்!

First Published : 26 Aug 2012 12:00:00 AM IST


அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி  (மானுடவியல்) படித்து வரும் மாணவி எலினார். இவர் தனது படிப்பின் ஆராய்ச்சிக்காக கிராம மக்களின் வாழ்க்கை, கலாசாரத்தை அறிந்துகொள்ள கடந்த 10 மாதங்களுக்கு முன் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்துக்கு வந்து ஓவியம் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான குழும வீட்டில் தங்கினார். இவருக்கு ஆறுமுகத்தின் மகள் எம்.எஸ்சி படித்த ராஜேஸ்வரி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல வகைகளில் வழிகாட்டுதலாக இருந்து வருகிறார்.  மானுடவியல் பாடத்தில் மக்கள் கிராம தெய்வங்களை வழிபடுவது, திருமணங்கள் நடத்துவது குறித்தும், கோயில் திருவிழாக்கள் கலாசார முறைகளையும் தனது ஆய்வுக்காக ஊன்றிக் கவனித்து வருகிறார் மாணவி எலினார்.    மேலப்பசலை கிராம மக்களிடத்தில் மாணவி எலினார் அன்பாகப் பழகி வருவதால், கிராம மக்களும் இவரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வருகின்றனர்.  கிராம மக்களுடன் சேர்ந்து வயல்வெளிகளில் வேலை செய்வது, வீட்டில் சமையல் வேலை செய்வது, கிராம மக்களுடன் சேர்ந்து திரையரங்குக்குச் சென்று சினிமா பார்ப்பது போன்றவற்றையும் தனது ஆராய்ச்சி படிப்புடன் எலினார் மேற்கொண்டுவருகிறார்.  மேலும், பெண்கள் வயல் வேலைகளுக்குச் சென்றால் அவர்களுடன் சென்று வயலில் நாற்று நடுவது, களை எடுப்பது போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். கிராமத்து வாழ்க்கையை ரசித்தபடி அனுபவித்துவரும் எலியனார் நம்மிடம் பேசியதிலிருந்து...  ""நான் பிரிட்டனில் முதுகலைப் படிப்புப் படித்தேன். தற்போது மானுடவியல் ஆராய்ச்சி படிப்புக்காக மேலப்பசலை கிராமத்தில் வந்து தங்கியிருந்து, படிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறேன்.  படிப்புக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். எனது படிப்புக்கு அமெரிக்கா, இந்திய அரசாங்கங்கள் உதவி செய்து வருகின்றன. நான் மேலப்பசலை அருகேயுள்ள கரிசல்குளம் கிராமங்களில் நடக்கும் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு நேரிடையாகச் சென்று, ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டுள்ளேன்.  இது எனது ஆராய்ச்சிப் படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  படிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியமானதாகும். அமெரிக்க கல்வி முறையானது படித்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையில் இல்லை. ஆனால், இந்தியாவில் படிக்கும் பாடத்திலிருந்து கேள்வி - பதில்களை மனப்பாடம் செய்து, அதையே பதிலாக எழுதுகிறார்கள். இந்த படிப்பு முறை வாழ்க்கைக்கு உகந்ததல்ல. படிக்கும் பாடத்திலிருந்து சொந்தமாகப் பதில் எழுத வேண்டும்.  அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள் தான் சிறப்பானதாக இருக்கும். வீடுகளுக்கு அருகேயுள்ள பள்ளிகளில்தான் சேர்ந்து படிக்க வேண்டும். ஒரு வகுப்புக்கு 30 மாணவர்கள்தான் இருப்பார்கள். பள்ளிகளில் விளையாட்டு, உடற்பயிற்சி முக்கியப் பாடங்களாக இருக்கும்.  தமிழகத்தில் விளையாட்டுக் கல்வி முறையும் படிப்பும் மாணவர்களை முன்னேற்றும் விதத்தில் இல்லை. இரவானால் இங்கு பெண்கள் வெளியில் செல்லத் தயங்குகிறார்கள். அமெரிக்காவில் இரவில் வெளியில் செல்ல பயம் கிடையாது.  திருமணத்துக்காக இங்கு போல் வரதட்சிணை வாங்கும் பழக்கம் எங்கள் நாட்டில் இல்லை'' என்றார்.  இவருக்கு உதவியாக உள்ள மேலப்பசலை ராஜேஸ்வரி, ""எலினார் தன்னம்பிக்கையுடன் சுறுசுறுப்பாக உள்ளார். எந்த நேரமாக இருந்தாலும் எங்கும் செல்லும் தைரியம் இவரிடம் உள்ளது.  மேலப்பசலை கிராம மக்களின் அன்பைப் பெற்றுள்ள இவர், சிறுவர்களுடன் விளையாடுவது இளைஞர்களுடன் சகஜமாக பேசி பழகுவது பெண்களுடன் சேர்ந்து வயலுக்கு நாற்று நடவும் களை எடுக்கவும்கூட செய்கிறார். இதெல்லாம் இவரது சிறப்பாகும்.  இவர் மேலப்பசலைக்கு வந்த பின்னர், இவரது பெற்றோர் ஒருமுறை இங்கு வந்து சென்றுள்ளனர்''  என்றார்.  
கருத்துகள்

இந்தப்பெண் போன பிறவியில் செய்த புண்ணியம், தமிழ்; மண்ணில் வந்து விழையாடுகின்றது கருணை ,கண்ணில் வழிகின்றது கருத்தில் தெளிவு இருக்கின்றது; எண்ணில் இது தமிழகத்தில் தொண்டு ஏற்குமோ என்ற கேள்வி எழுகின்றது எம்மனத்திலே! நாகன் ஸ்ரீனிவாசன் ஹூஸ்டன் டேக்ஸ்சாஸ்
By நாகன் ஸ்ரீனிவாசன்
8/26/2012 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 11 ஆகஸ்ட், 2012

எல்லார்க்கும் மது கிடைக்கும் நாட்டில் கல்வி கிடைப்பதில்லையே!



திருமங்கலம் அருகே தரம் உயர்த்தப்பட்டும் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம்

திருமங்கலம் அருகே தரம் உயர்த்தப்பட்டும் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம்

திருமங்கலம், ஆக. 11-
 
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ளது அரசபட்டி கிராமம். அங்கு அந்த கிராமத்திற்கென சுதந்திரம் பெற 13 ஆண்டுகளுக்கு முன் 1934-ல் சிறிய பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. பின் நடுநிலைப்பள்ளியானது. 2010-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்று வருகிறது.  
 
1 முதல் 5-ம் வகுப்பு வரை 105 குழந்தைகள் படித்து வருகின்றனர். கிராம பள்ளியானாலும் அங்குள்ள மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவு பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு 3 கம்ப்யூட்டர் வழங்கி உள்ளது. உயர்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
உயர்நிலைப்பள்ளியாகி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் ஆண்டில் 95 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு 78 சதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் உள்ளனர். அலுவலக உதவியாளர்கள் கிடையாது.  
 
உயர்நிலைப் பள்ளியாகியும் தனி கட்டிட வசதி இன்றி பழமையான ஓட்டுத்தாழ்வார கட்டிடத்திலும் மற்றும் ஒரு சிறிய கட்டிடத்திலும் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதிலும் இடப்பற்றாக் குறையால் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
 
சில நேரங்களில் மழை பெய்தால் கிராம ஊராட்சி கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. சத்துணவு சமையல் அறை மோசமாக உள்ளது. மரத்தடியில் சத்துணவு சமையல் நடைபெறுகிறது. உயர்நிலைப்பள்ளிக்கென ஊருக்கு அருகே 2 ஏக்கர் நிலம் பெற்றப்பட்டு அதில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கட்டிடம் கட்டாமல் முள்புதர் மண்டி கிடக்கிறது.
 
கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டிடத்திற்கு வானம் தோண்டி இரண்டு அடி உயரம் சுவர் எழுப்பியதுடன் அப்படியே நின்று விட்டது என கிராம மக்கள் தெரிவித்தனர்.
 
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
 
பள்ளியின் நிலை குறித்து அரசுக்கு தெரிவித்தோம். உயர் அதிகாரிகள் பார்த்து சென்றனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்கள்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

First Published : 09 Aug 2012 11:04:08 AM IST தினமணி


சென்னை, ஆக., 09 : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன் செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் பூசப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சனி, 28 ஜூலை, 2012

3 குழந்தைகள் பலி: பள்ளிக் குழந்தைகளை க் காவு கொடுக்கும் பேருந்துகள்

அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி க் குழந்தைகளை  க் காவு கொடுக்கும்  பேருந்துகள்



சுருதி... படிப்பில் சுட்டி. சுதியோடு பாடுவது... ஜதியோடு ஆடுவது... எல்லாவற்றிலும் அவள் கெட்டிக்காரி. ஏழு வயதே நிரம்பிய அந்த இளம் பிஞ்சு, பள்ளி பஸ்சின் ஓட்டை வழியே கீழே விழுந்து அநியாயமாக பலியாகி போனாள்.

மரணத்தை தழுவுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தாயை பார்த்து சுருதி போட்ட கடைசி “டாடா” “அம்மா, நான் போகப் போகிறேன்” என்று போட்ட இறுதி டாடாவாக மாறிபோக தாய் பிரியாவும், தந்தை சேதுமாதவனும் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் வாசனையை உணருவதற்கு முன்பே சிலரது அஜராக்கிரதையால் சுருதியின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பதறிப்போனது பெற்றோர் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழகமே கதறியது. இதயம் உள்ள எல்லோரது இதயமும் ரணமாய் வலித்தது. அதனால்தான் நீதி தேவதையே (ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம்) தானாக முன்வந்து வழக்கு எழுதி கொலைக்கு சமமானது இது என்று தன் உள்ள குமுறலை வெளியிட்டுள்ளது.

தாம்பரம் அருகே நடந்த இந்த கோர விபத்து நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கும் போதே வேலூரில் இருந்து வந்த செய்தி நெஞ்சை பிழிகிறது. ஈச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் குமாரின் மகள்கள் சுவேதா (1-ம் வகுப்பு), சுஜிதா (எல்.கே.ஜி.) இருவரும் மாலையில் பள்ளி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள். கையைப் பிடித்துக் கொண்டே பிஞ்சுகள் இரண்டும் வீடு நோக்கி தளர் நடை போட்டார்கள். அதற்குள் டிரைவர் அவசரமாக பஸ்சை கிளப்பியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் சுஜிதா பஸ் சக்கரத்தில் சிக்கி சிதைந்து போனாள்.

வட தமிழ்நாட்டில் குலைநடுங்க வைத்த இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சிதம்பரத்தில் இருந்து அடுத்த செய்தி. தீபிகா என்ற 6-ம் வகுப்பு மாணவி பஸ் நிலையத்தில் பஸ் ஏறியபோது தவறி கீழே விழுந்தாள். மாலை நேரத்தில் கூட்டம் இப்படித்தான் மொய்க்கும்... யார் ஏறினால் என்ன? அசட்டுத் தனத்தில் டிரைவர் பஸ்சை கிளப்பியதால் பஸ் சக்கரத்தில் தீபிகா அநியாயமாக உயிர் இழந்தாள்.

அடுத்தடுத்து அநியாயமாக பறிக்கப்பட்ட இந்த 3 இளந்தளிர்களின் உயிரும் மீண்டும் வரப் போவதில்லை. ஆனால் முடிந்துபோன இந்த சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கிறதே? எத்தனை ஆசைகள்? கனவுகளுடன் குழந்தைகளை வளர்க்கிறோம்!. பள்ளிக்கு அனுப்புகிறோம். கடவுளுக்கு நிகராக குருவையும் (ஆசிரியரையும்) கோவிலாக கல்வி கூடங்களையும் நினைத்துத்தானே குழந்தைகளை அனுப்புகிறார்கள். பெற்றோர்களைவிட பள்ளியில்தான் குழந்தைகள் அதிக நேரம் இருக்கிறது. அவர்களை பெற்ற தாயைவிட கவனமாக பேணி காக்கும் கடமை பள்ளிகளுக்கு உண்டல்லவா?

ஆனால் அந்த கடமையை பள்ளிகள் சரிவர செய்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி. பள்ளி வளர்ச்சி கட்டணம், கல்வி கட்டணம், பஸ் கட்டணம் என்று பல கட்டணங்களில் குறியாக இருக்கும் பள்ளிகள் மாணவர் நலனிலும் குறியாக இருக்க வேண்டுமல்லவா? ஏதாவது பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார்களே! பணம் மனிதாபிமானத்தையும் சாப்பிட்டு விட்டதா? பஸ் ஓட்டை வழியாக சிறுமி சுருதி விழுந்து பலியானாள் என்றதும் பஸ் உரிமையாளர் மீது பழியை போட்டு தப்பிக்க நினைத்தது சீயோன் பள்ளி நிர்வாகம்.

ஆனால் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆப்பு வைத்து விட்டனர். இனி வழக்கு நடக்கும். தீர்ப்பு வரும். இந்த 3 இளம் பிஞ்சுகளின் உயிரோடு இந்த சோக அத்தியத்துக்கு முடிவுரை எழுதுவோம் என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

எனவேதான் ஐகோர்ட்டும் பல சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தர விட்டுள்ளது. சட்டங்கள் தவறு செய்பவர்களை தண்டிக்கலாம். ஆனால் தவறு செய்யாமல் இருப்பது பல உயிர்களை காக்கும். இந்த களேபரத்துக்கு இடையேயும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் ஒரு பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி பஸ்களை தினமும் பள்ளி நிர்வாகம், பஸ் டிரைவர், பஸ் உரிமையாளர்கள் பார்வையிட வேண்டும். சுருதியை காவு வாங்கி பஸ்சை 15 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து அதிகாரிகள்ஆய்வு செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கி இருப்பது வெட்கக்கேடான விஷயம்.

தகுதி சான்று வழங்கும் அதிகாரிகள் தகுதி இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும். பணத்துக்காக தன் தகுதியை இழந்து விடக்கூடாது. அவரவர் கடமையை ஒவ்வொருவரும் சரிவர செய்தால் இந்த அவலங்கள் அரங்கேறாது. அன்பு மகள் சுருதியை பறிகொடுத்த சேதுமாதவன் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சுருதி விபத்தில் சிக்கிக் கொண்டாள் என்ற தகவலை அறியும்போது சேதுமாதவன் தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சவாரி சென்று கொண்டிருந்தார். அந்த இக்கட்டான நேரத்திலும் பதட்டப்படாமல் தன் பாதுகாப்பில் இருந்த பள்ளி குழந்தைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கி விட்டுவிட்டு மகளை பார்க்க ஓடினார். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் தமது கடமைகளை செய்தால் இந்த மாதிரி அவலங்கள் நிகழாது என்பதை உணர வேண்டும்.

வருங்காலத்தில் சரித்திரம் படைக்கப் போகும் பச்சிளம் குழந்தைகளை காவு கொடுப்பது, கொடுமையிலும் கொடுமை. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.

வெள்ளி, 27 ஜூலை, 2012

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் என்னென்ன?

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் என்னென்ன?

dinamani First Published : 27 Jul 2012 12:31:15 AM IST


சென்னை, ஜூலை 26: பள்ளி வாகனங்கள் தொடர் விபத்துக்கு உள்ளாகி வருவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.  தமிழகத்தில் ஆண்டுக்கு 300-க்கும் மேற்பட்ட விபத்துகளில் பள்ளி வாகனங்கள் சிக்கி, மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தபோதும், தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களும் கடுமையாக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றுகிறார்களா என்ற சந்தேகத்தை பெற்றோரிடையே ஏற்படுத்தியுள்ளது.  கவனக்குறைவு, போதிய பராமரிப்பு இல்லாதது, அதிக நபர்களை ஏற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளி பஸ்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்துகளைக் குறைத்து பள்ளிச் சிறுமிகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டம் மேலும் கடுமையாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.  உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்:  * பள்ளி பஸ்களில் மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும்  * பஸ்ஸின் முன்புறமும், பின்புறமும் -பள்ளி வாகனம்- என எழுத வேண்டும். தனியார் வாகனம் என்றால் -பள்ளி பயன்பாட்டுக்காக- என எழுத வேண்டும்  * பஸ்ஸில் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும்  * பஸ்ஸில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வண்டும்  * பஸ் ஜன்னல்களில் படுக்கை வாக்கில் கம்பிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்  * விபத்தின்போது பஸ்ஸிலிருந்து எளிதாக வெளியேறும் வகையில் -அவசர வழி- ஒன்று பொருத்தப்பட வேண்டும்  * பஸ்ஸின் மீது பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட வேண்டும்  * பஸ்ஸின் கதவுகளில் முறையான பூட்டுகள் இருக்க வேண்டும்  * பஸ்ஸில் பயணம் செய்யும் குழந்தைகள் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைக்கும் வகையில் இருக்கைகளுக்கு அடியில் கேரியர்கள் வைக்க வேண்டும்  * பஸ்ஸில் குழந்தைகளுக்கு உதவ உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்  * பஸ்ஸில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருப்பதை பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உறுதி செய்யவேண்டும். அல்லது, ஆசிரியர் ஒருவர் அந்த பஸ்ஸில் பயணிப்பது சிறந்தது  * பள்ளி பஸ்ஸின் டிரைவராக நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்  * ஓர் ஆண்டில் சிக்னலை மதிக்காதது, சாலையில் பஸ் வழித் தடத்தில் செல்லாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் இரண்டு முறை சிக்கிய டிரைவரை பணிக்கு வைக்கக் கூடாது  * இதுபோல் அதிகவேகமாக வாகனத்தை ஓட்டியது, குடித்துவிட்டு பஸ்ûஸ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை சிக்கிய டிரைவரை பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது.  * பள்ளி பஸ் ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம்.  இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தையும், கேரள மாநில அரசு அம்மாநில மோட்டார் வாகனச் சட்டம் 1988-ல் இடம்பெறச் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதை 2010 மே மாதத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.  ஆனால், ஆண்டுக்கு 300 பள்ளி வாகன விபத்துகளுக்கு மேல் நடைபெறும் தமிழகத்தின் மோட்டார் வாகனச் சட்டத்தில் இதுபோன்ற சட்டத் திருத்தம் இதுவரை கொண்டுவரப்படவில்லை. மாறாக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கையாக மட்டுமே அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.