differently abled லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
differently abled லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 செப்டம்பர், 2012

"நானே உதவவில்லை என்றால்...'

சொல்கிறார்கள்

 "நானே உதவவில்லை என்றால்...'
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, சேவை செய்யும் மாற்றுத் திறனாளிப் பெண் கலையரசி: ஏழாவது குழந்தையாக பிறந்த எனக்கு, பிறக்கும் போதே உயரக் குறைபாடு இருந்தது. மூன்று வயதில், போலியோ தாக்குதல் வேறு. பிறவியிலிருந்தே இருந்த கால்சியம் சத்து குறைபாடு காரணமாக, எலும்புகள் அடிக்கடி உடைந்து போகும்.லால்குடி தாலுகாவில் குமுளூர், ரெட்டி மாங்குடி கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள, குவளக்கடி கிராமம் தான், என் சொந்த ஊர். அப்பா பெரியசாமி தந்த அரை ஏக்கர், அண்ணன் தாமோதரன் அளித்த இரண்டு ஏக்கர் என, இரண்டரை ஏக்கர் நிலத்தின் சிறு பகுதியில், மாற்றுத் திறனாளிகளுக்காக, தங்குமிடம், உணவு வசதி உட்பட, இலவசமாக அளித்து வரும், "பூர்ணோதயா தொண்டு நிறுவனம்' என்ற தொழிற்பயிற்சி மையம் நடத்தி வருகிறேன்.இங்கு, கணினி பயிற்சி, தையல், சானிட்டரி நாப்கின் தயாரிப்பு, பினாயில், கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் செயற்கை ஆபரணத் தயாரிப்பு என, பல தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.காது கேளாத எமல்டா, செய்கை ஆபரணத் தயாரிப்பு மற்றும் தையல் பயிற்சி பெற்று வருகிறார். ஆசையழகன் என்பவர் பார்வையிழந்தவர்; காது கேளாதவர்; காலும் ஊனம். ஆனால், தையல் வேலையில் திறமையானவர். அவர் தான், இங்கு தையல் ஆசிரியர்.என் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, நானே உதவவில்லை என்றால், வேறு யார் உதவுவர்?கடைக்குட்டி என்பதால், வீட்டில் நான் தான் செல்லம். என் குறைகளைப் பெரிதாகக் காட்டாமல், என் குடும்பத்தினர் என்னை அரவணைத்து வளர்த்தனர். பள்ளிப் படிப்பின் போது, கேம்ஸ் பீரியடுகளில் என்னை ஓரமாக உட்கார வைத்து விடுவர். அதுவே எனக்கு பெரும் பாரமாகப் போனது.படிப்பு முடித்து வெளியே வந்த போது தான், என் போன்ற மாற்றுத் திறனாளிகளின் துயரங்கள் தெரிய வந்தன. தையல் ஆசிரியர் பயிற்சி பெற்று, திருச்சியில் இருக்கும் கிறிஸ்துவ மிஷனரி நடத்தும் பள்ளியில், ஆசிரியர் ஆனேன். அங்கு சேவை புரியும் சிஸ்டர்களின் உதவியோடு, அவர்களின் பக்குவத்தையும், சமூகத்தில் அவர்கள் களமிறங்கிச் செயல்படும் விதத்தையும் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, எனக்குள் உருவானது தான், பூர்ணோதயா தொண்டு நிறுவனத் திட்டம்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

Thendral T.V. honouring the teachers of handicapped

மாற்று த் திறனாளி மாணவர்களின் ஆசிரியர்களை ப் போற்றும்  தென்றல் தொலைக்காட்சி!

Thendran T.V., to honour handicapped teachersபணிகளில் சிறந்தது ஆசிரியர் பணி. அதிலும் காதுகேளாத, வாய்பேச முடியாத, பார்வையற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களின் சேவை ரொம்பவே பெரிது. இதை உணர்ந்த தென்றல் தொலைக்காட்சி அப்படி ஒரு உயரிய சேவையை செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கவுரவப்படுத்த இருக்கிறது. அந்த விருதுக்கு ஹெலன் கில்லெர் விருதுகள் என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்து குழந்தையிலேயே காதுகேற்கும் திறனையும், வாய்பேசும் திறனையும் இழந்த ஹெலன் கில்லர் என்ற பெண்மணி தனது 24வயதில் பட்டம் பெற்றார். உலகிலேயே இதுபோன்ற குறைகளை வைத்துகொண்டு, படித்து பட்டம் பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இவருடைய பெயரிலேயே ஹெலன் கில்லர் விருது  வழங்குகிறது. தென்றல் தொலைக்காட்சி.

இந்த ஆண்டு முதல் இந்த விருதினை வழங்கும் தென்றல் தொலைக்காட்சி இனி ஒவ்வொரு ஆண்டும் இதே பெயரில், இதுபோன்ற சிறப்பு குழந்தைகளுக்கும் , அவர்களுக்கு  ஆசிரியர் சேவை செய்பவர்களுக்கும  விருதினை வழங்க இருக்கிறது. இந்த விருதுடன் அவர்களுக்கு பரிசு தொகையாக பணம் முடிப்பும் வழங்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகன் கலந்துகொள்கிறார். மேலும் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல் துறை  பிரபலங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். இதை தென்றல் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் செழியன் ராதாகிருஷ்ணன் மற்றும் முதன்மை மார்கெட்டிங் மேலாளார் உதயகுமார் இருவரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது தென்றல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பல புதுமையான நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

இதுப்பற்றி கூறிய செழியன் ராதாகிருஷ்ணன், "தென்றல் டிவி மற்ற டிவி சேனல்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் அழுகாச்சி  சீரியல்களை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். மக்களுடைய வாழ்க்கைக்கும், அவர்களை மேம்படுத்தும் வகையிலும் தென்றல் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படும். அதே போல தினமும் சமூதாயத்தில் நடைபெறும் குற்றங்களையும், அதன் பின்னணிகளையும் நேரடியாக குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்தே, அந்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இது போன்ற பல புதுமையான நிகழ்ச்சிகளோடும், உடனுக்கு உடன் செய்திகளோடும் தென்றல் டிவி ஒளிபரப்பாகும்." என்றார்.
தென்றல் டிவியின் முதன்மை மார்கெட்டிங் மேலாளரும், ஹெலன் கில்லர் விருது நிகழ்ச்சியை உருவாகியவருமான உதயகுமார் பேசும் போது, "இது போன்ற மாற்றுத்திறனாலிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை கெளரவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாட்களாக இருந்தது. தென்றல் டிவி மூலம் அதை சாத்தியப்படுத்த முடிந்தது சந்தோசம்.   இந்த ஆண்டு முதல் இந்த விருதை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்குவோம். தற்போது இந்த விருதை பெரும் ஆசியர்கள் சென்னையைச் சேர்ந்த பள்ளியில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இனி வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்குவோம். இந்த விருதுக்காக தேர்வு குழு ஒன்றையும் உருவாக்குவோம்." என்றார்.

இந்த ஆண்டு ஹெலன் கில்லர் விருது 15 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுடன் 5 சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகிறது.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

First Published : 09 Aug 2012 11:04:08 AM IST தினமணி


சென்னை, ஆக., 09 : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன் செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் பூசப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஜூலை, 2012

உள்ளத்தில் ஊனமின்மையால் உயர்ந்தவர்



இடுப்பிற்கு கீழ் செயல் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் சாதித்து வரும் ஜெயன்: திருச்சி மாவட்டம் துறையூர் சோபனபுரம் தான் சொந்த ஊர். இரண்டு வயதிலேயே, பெற்றோரை இழந்து விட்டேன். பாட்டி தான் படிக்க வைத்தார். இப்போது நான், பி.ஏ., பி.எட்., பட்டதாரி.
வயல் மற்றும் தோட்ட வேலைக்கு பல நாள் பட்டினியுடன் சென்றிருக்கிறேன். அவ்வளவு கஷ்டத்திலும், படிப்பின் மேல் இருந்த ஆர்வம் குறையவில்லை. பிளஸ் 2வில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பமாக இருந்தது.

தென்காசி ஆயக்குடி அமர் சேவா சங்கத்தில் சேர்ந்தேன். அங்கு என்னைப் போல் வாழ்பவர்களின் இன்னொரு உலகத்தைப் பார்த்து, திகைத்துப் போனேன். அங்கு தான் டைப்பிங், புக் பைண்டிங், கம்ப்யூட்டர் எல்லாம் கற்றுக் கொண்டேன்.
ஆயக்குடி சங்கத்தில் தான், என் மனைவி பேபியைப் பார்த்தேன்; திறமையான பெண். அவரும் இடுப்பிற்கு கீழ் செயல் இழந்த மாற்றுத் திறனாளி தான். ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருந்தார். அந்த சங்கத்தில் கைவேலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நாங்கள் இருவரும் காதலித்தோம். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின், பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன்; எல்லா இடங்களிலும், அவமானம் மட்டுமே மிஞ்சியது.

இனி படிப்பைத் தவிர வேறு யாராலும், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது என, முடிவெடுத்தேன். வைராக்கியத்துடன் படித்தேன். கட்டணக் கழிப்பறையில் இரவு வேலைக்கு சென்று கொண்டே, காலையில் கல்லூரிக்கு சென்று, பி.ஏ., தமிழில் தேர்ச்சி பெற்றேன்.
பி.எட்., படிப்பில் சேர, கையில் பணம் இல்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனக்கு உதவினர். இப்போது, எம்.ஏ.,வும் முடிக்கப் போகிறேன்.
மனைவி, குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், இப்போது, வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. வீட்டிலேயே மொபைல் போன் சர்வீஸ் செய்கிறேன். மாதம், 4,000 ரூபாய் வருமானம் கிடைக் கிறது. ஆசிரியர் வேலை கிடைத்தால், எங்கள் பாரம் தீர்ந்து விடும்.

வெள்ளி, 8 ஜூன், 2012

மன எழுச்சியை வளர்த்துக் கொண்டேன்!




பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ள, இரண்டே முக்கால் அடி உயரமுள்ள, மாற்றுத் திறனாளி பிரியா: என் சொந்த ஊர், பெரம்பலூர் மாவட்டம், மாவலிங்கை கிராமம். என் அப்பா விவசாயக் கூலி. எப்பொழுதாவது தான் வேலை கிடைக்கும். அதனால், வருமானம் குறைவு தான். நான் பிறக்கும் போதே, மிகக் குறைந்த உயரத்துடன் பிறந்தேன். நான்கு வயதான போதும், உடல் வளர்ச்சியில்லாததால், பதறிப்போன என் பெற்றோர், மருத்துவர்களிடம் சென்று காட்டியபோது, "இது பிறப்பின் இயல்பு என்பதால், இந்தக் குறைபாட்டை சரி செய்ய முடியாது' என்றனர்.ஆனால், என் குறையை எண்ணி, பெற்றோர் கவலைப்படாமல், என்னை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியிலேயே, என்னை சேர்த்து விட்டனர். நான் நன்றாகப் படித்து, ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்றதைப் பார்த்த என் பெற்றோருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
பின், செட்டிகுளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டனர். ஆறாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை விடுதியில் தங்கிப் படித்தேன்.குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து, இரவு பகல் பாராமல் படித்து, பிளஸ் 2வில், 1,040 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.அப்பா விவசாயக் கூலி என்பதால், எதையும் சேர்த்து வைக்க முடியாமல், குடும்பச் செலவிற்கும், நான், என் தம்பி, தங்கை மூன்று பேரின் படிப்புச் செலவிற்கும் சிரமப்பட்டு, தினம் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.நான் நன்றாகப் படித்து, சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் என் எதிர்கால லட்சியம். தமிழ் வழியில் படித்திருந்தாலும், ஆங்கிலம் சரளமாகப் பேசுவேன்; எழுதுவேன்.குள்ளமாக இருப்பதைப் பார்த்து, பலர் என்னை கிண்டல் செய்துள்ளனர். அதை பெரிதுபடுத்தி, வருத்தமடையாமல், எனக்குள் மன எழுச்சியை வளர்த்துக் கொண்டேன்.

புதன், 14 மார்ச், 2012

no hands; no legs; and no worries : கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை

கவலையும் இல்லை - 
                            ஒரு உண்மைக் கதை : நவின்.
எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.

இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன்.
Image
அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்!

எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக்.
Image
கருவில் இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட எனது பெற்றோர் தங்கள் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அனைவருடைய கேள்வியும், "கடவுள் என்பவர் கருணையுள்ளவராக இருந்திருந்தால் கை, கால்கள் இல்லா ஒரு ஜீவராசியைப் படைத்து, இந்தப் பூவுலகில் பரிதவிக்கவிட வேண்டிய அவசியம்தான் என்ன? அதுவும் ஒரு உண்மையான கிறிஸ்தவப் பாதிரியாருக்கு இப்படியொரு தண்டனையா?" என்பதுதான். என்னை மட்டும் இப்படிப் படைத்த அந்த இறைவன் எனக்குப் பிறகு என் பெற்றோருக்குப் பிறந்த தம்பி தங்கையரை அப்படிப் படைக்கவில்லை. இந்த நிமிடத்தில் என் கண்களில் கண்ணீரோடு நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கையும், காலும் ஏன் விரல்கள்கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தெடுக்கப் பட்ட வேதனைகள்தான் எத்தனை? அவமானங்கள்தான் எத்தனை? சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் நெடுநாள் பிழைக்க மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கை எனது பெற்றோர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! நியாயம்தானே! பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது "அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்.

குறைபாடுள்ள குழந்தையைக் கொடுத்த கடவுள் கூடவே எனது பெற்றோருக்குத் தன்னம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் கொடுத்திருந்தார். நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருப்பதாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க என்னை அனுமதிக்கவில்லை. இப்போது என் அம்மா அதனை எதிர்த்துப் போராடினார். தன் மகன் படும் வேதனைகளைவிட, ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அனுபவித்தவராயிற்றே! அரசுடன் யுத்தமொன்றையே நடத்தினார். ஒரு வழியாக வெற்றியையும் பெற்று, இதோ நான் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன, சமுதாயம் என்றால் என்ன, அதற்குள் எத்தனை போலித்தனம், எது எதார்த்தம், எது உண்மை என்பதையெல்லாம் வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் பூக்கள் நிறைந்த பல்லக்கில் பயணிக்கவில்லை. நான் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். கேலி பேசப்பட்டேன். சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டேன். ஒவ்வொருவரும் என்னை முகச்சுழிப்போடு பார்க்கும்போது உயிரோடு என்னைத் தோலுரித்த வேதனையை அனுபவித்தேன். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்த துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன். துடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட மட்டுமே முடிந்த என் அன்னையால் எந்த ஆறுதலும் கூறமுடியவில்லை. ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது.
Image

ஆனால் இதுபோன்ற மனவேதனையை அனுபவிக்கும்போதுதான் அதன் வீச்சு என்ன என்பது புலப்படும். காரணம் என்னை அனைவருமே கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். என் பக்கத்தில் வருவதைக்கூட அவமானமாக நினைப்பார்கள். அருவருத்து ஒதுக்குவதைப் பார்க்கும்போது நான் அப்படியே அணு அணுவாகச் செத்துப் பிழைத்திருக்கிறேன். இவற்றையெல்லாம் என் பெற்றோரிடம் வந்து சொல்லி அவமானத்தால் எத்தனையோ முறை நான் பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கிறேன். இதற்காகவே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சென்றிருக்கிறேன். பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னை உட்கார வைத்து, பக்குவப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நான் அழுதால் அழுது, அரவணைத்து, சிரிக்கவைத்து, சிந்திக்கச் செய்து, ஊக்கமூட்டி என்னை, என் வயதுக்காரர்களிடம் பழகவேண்டாம், அப்படிப் பழகினால் மன அழுத்தம்தான் அதிகமாகுமென்று, என்னைவிட வயது குறைந்த குழந்தைகளோடு பழக வைத்து, பேச வைத்துப் பல நண்பர்களை எனக்கு உருவாக்கித் தந்து, என்னை இதோ உங்கள் முன் ஒரு உன்னத மனிதனாக நிற்க வைத்து, நான் பேசும் பேச்சை, தன்னம்பிக்கைச் சொற்பொழிவை ஆயிரமாயிரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கேட்டுப் பிரமிக்கச் செய்த அந்த உள்ளங்கள், மனிதப்பிறவிகள் இல்லை, அவர்கள் என் தெய்வங்கள். என் பெற்றோர்கள் என்பதையும் விட எனது கண்களாய், கைகளாய், கால்களாய் எனக்கு எது வேண்டுமோ அதுவாகவோ ஆகி என்னை உங்கள் முன் நிற்கச் செய்திருக்கிறார்கள். நான் பாக்கியசாலி அல்லவா?

Image
ஆம்! நான் உடலளவில் மட்டுமே உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். எனக்குக் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை? உள்ளத்தளவில் உங்களைப்போன்ற அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன்தான் இந்த நிக்.

எனக்குள்ளும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை இதோ! என் இருபத்தைந்து வயதிற்குள் எட்டிப் பிடித்துவிடுவேன். இது சத்தியம்! எனக்கு இப்போது வயது 21. எனது 15 ஆவது வயதில் பைபிளில் ஒரு வசனத்ததைப் படித்தேன். அதிலிருந்து கடவுள், தான் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ, அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோதான் செவ்வனே செய்து முடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் அந்தப் பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையையே நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்
Image
நான் இப்படியொரு ஊனமாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் எனது வாழ்க்கையை இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் எத்தனையோ சகோதர சகோதரிகளை மனதளவில் நல்வழிப்படுத்தியிருக்கிறேன். என் உருவத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் இந்த உலகத்தில் மனதளவில் ஊனப்பட்ட எத்தனையோ பரிதாபத்திற்குரிய என் தோழமைக்குரியவர்களை மாற்றியிருக்கிறேன். மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். சிலவற்றை மாற்றமுடியாது. அதனால் சிலரையாவது மாற்ற முயல்கிறேன். உதாரணம் என் உருவம். அதை நான் மாற்றமுடியுமா? முடியாது. ஆனால் உங்களை என்னால் மாற்ற முடியும். இதோ! பார்த்தீர்களா? நீங்கள் மாறிவிட்டீர்கள். “கெட்ட நேரமென்ற ஒன்று என்றுமில்லை, நல்லவைகளைத் தொடங்க எல்லாமே நல்லநேரம்தான். இன்றே தொடங்குங்கள்!” உங்களை மறுபடியும் ஒரு மகத்தான பொழுதுகளில் சந்திப்பேன். நன்றி! வாழ்த்துக்கள்!! வணக்கம்!!கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம். நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரச் செருப்புக்கள். அவற்றை பயனுள்ளதாக வாழ்ந்து விடுவோமே! அவமானங்களை, வேதனைகளைத் தூக்கியெறியுங்கள்! நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை, அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தைத் தொடருங்கள்!சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்.

Image
முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்யத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும்படியும் அமைத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்புப் பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்பொழுது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வுமனப்பான்மைகள் தரை மட்டமாவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பிரமித்துப் போயிருக்கிறேன். என் சொற்பொழிவு இந்த உலகம் முழுதும் ஒலிக்கப்பட வேண்டும். எனது வாழ்க்கை முழுதும் ஏழை, எளிய மக்களுக்கும் மனத்தால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவைதான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே! நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் எழுதிக்கொண்டிருக்கும் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை என்ற நூலை வெற்றிகரமாக இந்த ஆண்டிற்குள் முடித்தும் விடுவேன்.

Image
உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள்! அதில் கவனம் செலுத்துங்கள்! வெற்றியடைவீர்கள்! என்ன திறமை இருக்கிறதெனத் தேடிப் பார்க்காதீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதைவிடத் தேவையில் நம்பிக்கை வையுங்கள்! அதை எளிதில் அடைவீர்கள்! விரைவில் பெறுவீர்கள்! பிறகு அதுவே திறமையாகவும் மாறிவிடும். நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால், அதற்காகத்தான் உங்களைக் கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்ற நம்புங்கள். அந்த எண்ணம் உங்களுக்குத் தானாக வரவில்லை. அது அவன் ஏற்கனவே எழுதியதுதான். அதனை இன்றே காலம் தாழ்த்தாது செய்துவிடுங்கள்! நாம், காரணமில்லாமல் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறோம். அந்தக் கட்டுப்பாடுகள் உங்களின் வேகத்தைக் குறைக்குமே ஒழிய விவேகத்தை ஏற்படுத்தாது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் சாதிக்கப் பிறந்தவைதான். நானே சாதிக்கத் துணிந்துவிட்ட பின் நீங்கள் மட்டும் ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள்! உங்களால் முடியும்! நாம் சாதிப்பதற்கு எல்லை என்பது ஒன்றும் இல்லை. அவை நாம் போட்டுக் கொண்டவை. அவற்றைத் தகர்த்தெறியுங்கள்! இதோ ஒரு ஒளிமயமான பாதை உங்கள் கண்முன் தெரிகிறது. இன்றே! இப்பொழுதே புறப்படுங்கள்!! சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். தொடங்கும்பொழுது எவரும் சாதனையாளனாகத் தொடங்குவதில்லை, தொடங்கியபின் எவரும் சாதனை படைக்கத் தவறியதுமில்லை! பிறகென்ன தாமதம்? தொடங்குங்கள்!! இதோ களம் காத்திருக்கிறது!

- நவின்

நன்றி : நிலாச்சாரல்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

இரு கையை இழந்த தன்னம்பிக் "கை' இளைஞர்


 இரு கையை இழந்த தன்னம்பிக் "கை' வாலிபர் சாதனை: தேசிய நீச்சல் போட்டியில் 4 பதக்கங்கள் பெற்று அசத்தல்



தர்மபுரி: தர்மபுரியில், இரு கைகளை இழந்த வாலிபர், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், நான்கு பதக்கங்கள் வென்று இந்திய அளவில் நீச்சல் போட்டியில் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

சாதனைக்கு ஊனம் தடையில்லை என்பதை, பல்வேறு சாதனைகள் மூலம் தமிழகத்தில் பல மாற்று திறனாளிகள் நிரூபித்து வருகின்றனர். ஊனத்தை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தர்மபுரியை சேர்ந்த வாலிபர், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் செய்து, மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தர்மபுரியை அடுத்த எம்.ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பெருமாள். இவரது மகன் வெங்சடேசன். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, விவசாய பணிக்கு சென்றார். மின் ஒயரில் தவறுதலாக கை வைத்ததில், அவரது இரு கைகளும் கருகி, ஆப்பரேசன் மூலம் இரு கைகளும் அகற்றப்பட்டன. வெங்கடேசன், 10 வயது வரை இரு கைகளுடன் இருந்த போது, எப்படி உற்சாகத்துடன் இருந்தாரோ, அதே உற்சாகத்துடன், ஊனத்தை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை போல் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு, தன் வாழ்க்கை பயணத்தை துவங்கினார் வெங்கடேசன். மற்றவர்களுக்கு சவால் விடும் வகையில் தன் ஊனத்தை பற்றி சிறு துளி கவலைப்படாமல், இரு கைகள் உள்ளவர்களின் செயல்பாடுகள் போல் செய்து அசத்தி வருகிறார்.

கால்களால் எழுதவும், புத்தகங்களை புரட்டவும், உணவு அருந்தவும் பழக்கப்பட்ட வெங்கடேசன், நீச்சல், சைக்கிள் பயிற்சி என, இரு கைகளை இழந்த போதும், அவருக்குள் இருந்த தன்னம்பிக்கையோடு உலா வருகிறார். இடைநிலை ஆசிரிர் பயிற்சி முடித்துள்ள வெங்கடேசன், தற்போது சென்னையில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி கல்வியல் மேம்பாட்டு நிறுவனத்தில் எம்.எட் படித்து வருகிறார். படிப்புடன் விளையாட்டிலும் மற்றவர்களை போல் சாதனை படைத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள அவர், சமீபத்தில் இந்திய பாராலிம்பிக் கமிட்டியும், மஹாராஷ்டிரா மாநில பாராலிம்பிக் சங்கமும் இணைத்து தேசிய அளவிலான பாராலிம்பிக் முதன்மையாளர்கள் போட்டியை, மஹாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் கடந்த டிசம்பர் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தியது. இப்போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற வெங்கடேசன், நான்கு பதக்கங்களை வென்று, இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இவர் பெற்ற பதக்க விபரும் வருமாறு: நீச்சல் போட்டி ஆண்கள் பிரிவு 50 மீ., பிரஸ்ட் ஸ்டோர்க் முதலிடம் பெற்று தங்க பதக்கம். 50 மீ., பிரீ ஸ்டையில் இரண்டாமிடம் வெள்ளி பதக்கம், 50 மீ., பட்டர்பிளை முறை இரண்டாமிடம் வெள்ளி பதக்கம், 50 மீ., பேக் ஸ்டேரோக் இரண்டாமிடம் வெள்ளி பதக்கம். இந்த போட்டிகளில் ஒரு போட்டியாளர் நான்கு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க அனுமதியுண்டு. வெங்கடேசன் நான்கு போட்டிகளில் பங்கேற்று, ஒரு தங்கம் மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்களை பெற்று, இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். வெங்கடேசனுக்கும், பல மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி அளித்த தர்மபுரி மாவட்ட பாராலிம்பிக் கழக செயலாளரும் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், வெங்கடேசனை, கலெக்டர் லில்லி பாராட்டி பதக்கங்களை அணிவித்தார். வெங்கடேசன் கூறும்போது, ""மற்றவர்கள் போல் நானும் சாதிக்க வேண்டும் என்ற வேகமும், இரு கைகள் இழந்த போதும், தன்னம்பிக்கையும், என்னை ஊக்குவிக்கும் பல சமூக ஆர்வலர்களின் வாழ்த்தும், எனக்கு தொடர்ந்து வெற்றியை கொடுக்கிறது,'' என்றார்.

வியாழன், 26 ஜனவரி, 2012

seventh sense of differently abled girl: மாற்றுத் திறனாளிச் சிறுமியின் "ஏழாம் அறிவு':





திருச்சி: கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி என்ன கிழமை என்று கேட்டால், "புதன் கிழமை' என்று பளிச்சென்று சொல்லி, திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.

கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி, என்ன கிழமை என்று கேட்டால், நாம் அனைவரும் காலண்டரை புரட்டுவோம் அல்லது மொபைல் போனில் உள்ள காலண்டரை பார்ப்போம். ஆனால், திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி பிரியங்காவிடம், 2010, 2011, 2012, 2013 ஆகிய நான்கு ஆண்டுகளில் மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டால், சரியான கிழமைகளைச் சொல்லி அசத்துகிறார். திருச்சி, தீரன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 47; சென்னையில், செக்யூரிட்டி கார்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பானு; உறையூர் சிவாலயா பாலானந்தா பள்ளியில் சிறப்பு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும், "கேர் டேக்கராக' வேலை பார்க்கிறார். இவர்களது மகள் பிரியங்கா, 11. புத்தூர் நால்ரோட்டில் உள்ள ஆல்-சைன்ட்ஸ் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

பிரியங்காவுக்கு, மற்ற குழந்தைகளை காட்டிலும் தனித்திறன் உள்ளது. பிரியங்கா பிறக்கும்போது, மாறுகண் ஏற்பட்டது. இடது கை செயல்படவில்லை. இடது கால் வளர்ச்சி குன்றி காணப்பட்டது. அவர் வளர்ந்த பிறகு சற்று திக்கி... திக்கித் தான் பேசினார். மனம் தளராத தாய் பானு, குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி இரவு 11 மணிக்கு அவரது தாய் பானு, "ஆகஸ்ட் 13ம் தேதி "லீவு' போடணும். "லீவு' கிடைக்குதா? என்னானு தெரியலை' என்று புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது, பிரியங்கா, "ஆகஸ்ட் 13ம் தேதி சனிக்கிழமை உனக்கு "லீவு' தானே அம்மா?' என்று சாதாரணமாக கூறியுள்ளார். இதைக் கேட்ட பானு, காலண்டரை புரட்டி பார்த்து, ஆச்சர்யமானார். சிறுமி சொன்னது சரியாக இருந்தது.

இதுகுறித்து பிரியங்காவின் தாய் பானு கூறியதாவது: பிரியங்காவுக்கு இப்படி ஒரு, "சூப்பர் பவர்' இருப்பது, கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி தான் தெரியும். 2010, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் எந்த மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டாலும் சரியாக கிழமையை சொல்லிவிடுவாள். அதேபோல், குறிப்பிட்ட மாதத்தில் எந்தெந்த தேதியில் எத்தனை முறை ஒரே கிழமை வருகிறது என்று கேட்டாலும் சரியாக சொல்லிவிடுவாள். ஆறு வயதுக்கு மேல் தான் நடக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் தான் காலில் ஆபரேஷன் செய்தோம். தற்போது ஓரளவு காலை ஊன்றி நடக்கிறாள். கை தான் இன்னும் சரியாகவில்லை. இவ்வாறு பானு கூறினார்.

சிறுமி பிரியங்கா கூறுகையில், ""எனக்கு டியூஷன் எடுக்க வரும் ராஜாத்தி, "மிஸ்' தான் காலண்டரை படிக்கும்படி கூறினார். அன்றிலிருந்து காலண்டரை பார்த்து படித்து பழகினேன். எந்த தேதி கேட்டாலும் சொல்வேன்,'' என்றார். மாற்றுத் திறனாளிகள் மிகவும் திறமை யானவர்கள் என்பதற்கு பிரியங்கா ஒரு நல்ல உதாரணம். மாற்றுத் திறனாளி குழந்தை களிடம் நாம் எதிர்பார்க்காத பல திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அதை வெளிக்கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

வெறித்தனமாகக் கற்றுக் கொண்டேன்!

சொல்கிறார்கள்



மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள ராஜாத்தி: என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பெண்கள்; நான் தான் மூத்தப் பெண். தாத்தா காலத்திலேயே, பிழைப்பிற்காக கேரளா போய்விட்டோம். வறுமையிலும், எங்க அப்பா, என்னை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.டாடா நிறுவனம் நடத்திய, மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்கூடத்தில், டையிங் பிளான்டில் வேலை பார்த்தேன். அங்கு என்னைப் போலவே, மாற்றுத் திறனாளியான பாலமுருகன் என்பவரை, திருமணம் செய்து கொண்டேன். கடந்த, 2004ல், பிழைப்புத் தேடி திருமங்கலம் வந்துவிட்டோம்.நான் மாற்றுத் திறனாளி தானே தவிர, சிறு வயதிலிருந்தே, துறுதுறுன்னு இருப்பேன். விளையாட்டு என்றால், மிகவும் இஷ்டம். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி அளிப்பதாக, பத்திரிகையில், விளம்பரம் பார்த்த என் கணவர், அதில் சேரும் படி ஊக்கமளித்தார்.அப்போது நான், இரு குழந்தைகளுக்குத் தாய். எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுப் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு சொல்லிக் கொடுத்ததை, வெறித்தனமாக கற்றுக் கொண்டேன்.கடந்த, 2007ல், மாநில அளவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில், பதக்கங்கள் வாங்கிக் குவித்தேன். கடந்த, 2008ல், லண்டனில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, இரு பதக்கங்களை வென்றேன்.போட்டி முடிந்து, ஊருக்கு திரும்பிய சில நாட்களில், எனக்கு உடல் நிலை பாதித்தது. மருத்துவ பரிசோதனையில், புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு பக்கம் சக்கர நாற்காலியில் உள்ள கணவர்; மறுபக்கம் வறுமையில் உள்ள குடும்பம். நோயைக் குணப்படுத்தியே தீருவேன் என்று, மாதக் கணக்கில் மருத்துவமனையில் இருந்து, தேறி வந்தேன். தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கான, முதல்வர் பதக்க விருது போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளேன்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Change for differntly abled persons: மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றம் தரும்! & வளர வேண்டும் கூத்துக் கலை!

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆட்டோவை வடிவமைத்த உதவிப் பேராசிரியர் கமலக்கண்ணன்: "இரண்டு காலும் இல்லை; என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னை எப்படி மாற்றுத் திறனாளின்னு சொல்றே?' என, நண்பன் ஒருவன் போகிற போக்கில் எழுப்பிய கேள்வி, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆட்டோவை உருவாக்க காரணமாக அமைந்தது. இந்துஸ்தான் பல்கலைக்கழக ஆட் டோ மொபைல் துறையில் உதவிப் பேராசிரியராக இருப்பதால், என் மாணவர்கள் உதவியுடன் இந்த ஆட்டோவை வடிவமைத்தேன். ஆட்டோவில் டிரைவர் இருக்கையை முழுவதுமாக மாற்றி, டிரைவர் இருக்கைக்குப் பதிலாக, சிறிய நாற்காலி ஒன்றைப் பொருத்தினேன். அந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை, "ஜாய் ஸ்டிக்' மூலம் கட்டுப்படுத்த முடியும். இதேபோல், ஆட்டோவுக்குள் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு வசதியாக, "லிப்ட்'டும் பொருத்தப்பட்டுள்ளது. இது, பி.எம்.டி.சி., எனும் மின் மோட்டார் மூலம் இயங்குவது போல் வடிவமைத்து இருக்கிறேன். அதிகபட்சமாக 400 கிலோ வரை தாங்கும் திறன் கொண்டது. "லிப்டில்' பொருத்தப்பட்டுள்ள, "பேட்டரி'யை ஒருமுறை, "சார்ஜ்' செய்தால், 40 முறை ஏறி இறங்க முடியும். வழக்கமான ஆட்டோக்களில், "ஆக்சிலரேட்டர்' மற்றும் "கிளட்ச்'சை கை களாலும், "பிரேக்'கை கால்களாலும் இயக்க வேண்டியிருக்கும். நான் வடிவமைத்த ஆட்டோவில் அனைத்தையுமே கைகளால் இயக்கலாம். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதி கிடையாது. அரசின் இந்த முடிவை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஆட்டோக்களுக்கு மட்டும் தளர்த்தி, டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற, சென்னை, கே.கே. நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பரிந்துரை சான்றிதழ் வழங்கப்படுகிறது.

"வளர வேண்டும் கூத்துக் கலை!' 
பிரபல கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரானின் பேத்தி கவுரி: பரம்பரையாக, கூத்துக் கலையைச் செய்பவர்களில் ஒரு சிலர், தம் பிள்ளைகள் இத்துறைக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். தாம் அனுபவித்த துயரத்தை, தங்கள் வாரிசு அனுபவிக்கக் கூடாது என்பது தான் காரணம். ஆனால், என் குடும்பம் இதற்கு நேர் எதிர். இயற்கையாகவே, கூத்தின் மீதிருந்த என் ஆர்வத்தை, என் தாத்தா கண்ணப்ப தம்பிரானும், என் அப்பா சம்பந்தன் தம்பிரானும் உற்சாகப்படுத்தினர். பள்ளி நாட்களிலேயே, வேஷம் போட்டு, தாத்தா, அப்பாவுடன் மேடையேறி விட்டேன். கஷ்டமான பொருளாதாரச் சூழலில் கூட, என் குடும்பத்தினர் இந்தக் கலையை விட்டு விடவில்லை. இந்த வைராக்கியம் தான் எனக்கு ஆதார சக்தி. கூத்தில் நாங்கள் பயன்படுத்தும் வடிவம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தது. இது போல், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திற்கும், தனியாகக் கூத்து வடிவம் உள்ளது. பாரம்பரியம் மிக்க கூத்தை, பலர் மோசமான விஷயத்துடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். இது போன்ற செயல்கள், எங்களைப் போன்ற கலைஞர்களின் மனத்தைப் புண்படுத்துகின்றன. என் அப்பா சம்பந்தன் தம்பிரான், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், புதுச்சேரி பல்கலைக் கழகம் உட்பட, பல கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு, கூத்துப் பயிற்சி தருகிறார். இம்மாணவர்கள், இன்னும் 20 ஆண்டுகளில், குருவாக மாறி, பலருக்கு இக்கலையைக் கற்றுத் தருவர். சாஸ்திரீய இசையும், கூத்தும் இணைவது ஆரோக்கியமான விஷயம். இன்றைய பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகள், "டிவி'யைப் பார்த்துக் கெட்டுப் போவதாக வருத்தப்படுகின்றனர். அவர்களை கூத்து பார்க்க அழைத்து வந்தால், குழந்தைகள் மனம் பண்பட்டு, ஆரோக்கியமான சமூகம் கண்டிப்பாக உருவாகும்.