accidents லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
accidents லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜூலை, 2012

3 குழந்தைகள் பலி: பள்ளிக் குழந்தைகளை க் காவு கொடுக்கும் பேருந்துகள்

அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி க் குழந்தைகளை  க் காவு கொடுக்கும்  பேருந்துகள்



சுருதி... படிப்பில் சுட்டி. சுதியோடு பாடுவது... ஜதியோடு ஆடுவது... எல்லாவற்றிலும் அவள் கெட்டிக்காரி. ஏழு வயதே நிரம்பிய அந்த இளம் பிஞ்சு, பள்ளி பஸ்சின் ஓட்டை வழியே கீழே விழுந்து அநியாயமாக பலியாகி போனாள்.

மரணத்தை தழுவுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தாயை பார்த்து சுருதி போட்ட கடைசி “டாடா” “அம்மா, நான் போகப் போகிறேன்” என்று போட்ட இறுதி டாடாவாக மாறிபோக தாய் பிரியாவும், தந்தை சேதுமாதவனும் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் வாசனையை உணருவதற்கு முன்பே சிலரது அஜராக்கிரதையால் சுருதியின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பதறிப்போனது பெற்றோர் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழகமே கதறியது. இதயம் உள்ள எல்லோரது இதயமும் ரணமாய் வலித்தது. அதனால்தான் நீதி தேவதையே (ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம்) தானாக முன்வந்து வழக்கு எழுதி கொலைக்கு சமமானது இது என்று தன் உள்ள குமுறலை வெளியிட்டுள்ளது.

தாம்பரம் அருகே நடந்த இந்த கோர விபத்து நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கும் போதே வேலூரில் இருந்து வந்த செய்தி நெஞ்சை பிழிகிறது. ஈச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் குமாரின் மகள்கள் சுவேதா (1-ம் வகுப்பு), சுஜிதா (எல்.கே.ஜி.) இருவரும் மாலையில் பள்ளி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள். கையைப் பிடித்துக் கொண்டே பிஞ்சுகள் இரண்டும் வீடு நோக்கி தளர் நடை போட்டார்கள். அதற்குள் டிரைவர் அவசரமாக பஸ்சை கிளப்பியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் சுஜிதா பஸ் சக்கரத்தில் சிக்கி சிதைந்து போனாள்.

வட தமிழ்நாட்டில் குலைநடுங்க வைத்த இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சிதம்பரத்தில் இருந்து அடுத்த செய்தி. தீபிகா என்ற 6-ம் வகுப்பு மாணவி பஸ் நிலையத்தில் பஸ் ஏறியபோது தவறி கீழே விழுந்தாள். மாலை நேரத்தில் கூட்டம் இப்படித்தான் மொய்க்கும்... யார் ஏறினால் என்ன? அசட்டுத் தனத்தில் டிரைவர் பஸ்சை கிளப்பியதால் பஸ் சக்கரத்தில் தீபிகா அநியாயமாக உயிர் இழந்தாள்.

அடுத்தடுத்து அநியாயமாக பறிக்கப்பட்ட இந்த 3 இளந்தளிர்களின் உயிரும் மீண்டும் வரப் போவதில்லை. ஆனால் முடிந்துபோன இந்த சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கிறதே? எத்தனை ஆசைகள்? கனவுகளுடன் குழந்தைகளை வளர்க்கிறோம்!. பள்ளிக்கு அனுப்புகிறோம். கடவுளுக்கு நிகராக குருவையும் (ஆசிரியரையும்) கோவிலாக கல்வி கூடங்களையும் நினைத்துத்தானே குழந்தைகளை அனுப்புகிறார்கள். பெற்றோர்களைவிட பள்ளியில்தான் குழந்தைகள் அதிக நேரம் இருக்கிறது. அவர்களை பெற்ற தாயைவிட கவனமாக பேணி காக்கும் கடமை பள்ளிகளுக்கு உண்டல்லவா?

ஆனால் அந்த கடமையை பள்ளிகள் சரிவர செய்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி. பள்ளி வளர்ச்சி கட்டணம், கல்வி கட்டணம், பஸ் கட்டணம் என்று பல கட்டணங்களில் குறியாக இருக்கும் பள்ளிகள் மாணவர் நலனிலும் குறியாக இருக்க வேண்டுமல்லவா? ஏதாவது பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார்களே! பணம் மனிதாபிமானத்தையும் சாப்பிட்டு விட்டதா? பஸ் ஓட்டை வழியாக சிறுமி சுருதி விழுந்து பலியானாள் என்றதும் பஸ் உரிமையாளர் மீது பழியை போட்டு தப்பிக்க நினைத்தது சீயோன் பள்ளி நிர்வாகம்.

ஆனால் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆப்பு வைத்து விட்டனர். இனி வழக்கு நடக்கும். தீர்ப்பு வரும். இந்த 3 இளம் பிஞ்சுகளின் உயிரோடு இந்த சோக அத்தியத்துக்கு முடிவுரை எழுதுவோம் என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

எனவேதான் ஐகோர்ட்டும் பல சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தர விட்டுள்ளது. சட்டங்கள் தவறு செய்பவர்களை தண்டிக்கலாம். ஆனால் தவறு செய்யாமல் இருப்பது பல உயிர்களை காக்கும். இந்த களேபரத்துக்கு இடையேயும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் ஒரு பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி பஸ்களை தினமும் பள்ளி நிர்வாகம், பஸ் டிரைவர், பஸ் உரிமையாளர்கள் பார்வையிட வேண்டும். சுருதியை காவு வாங்கி பஸ்சை 15 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து அதிகாரிகள்ஆய்வு செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கி இருப்பது வெட்கக்கேடான விஷயம்.

தகுதி சான்று வழங்கும் அதிகாரிகள் தகுதி இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும். பணத்துக்காக தன் தகுதியை இழந்து விடக்கூடாது. அவரவர் கடமையை ஒவ்வொருவரும் சரிவர செய்தால் இந்த அவலங்கள் அரங்கேறாது. அன்பு மகள் சுருதியை பறிகொடுத்த சேதுமாதவன் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சுருதி விபத்தில் சிக்கிக் கொண்டாள் என்ற தகவலை அறியும்போது சேதுமாதவன் தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சவாரி சென்று கொண்டிருந்தார். அந்த இக்கட்டான நேரத்திலும் பதட்டப்படாமல் தன் பாதுகாப்பில் இருந்த பள்ளி குழந்தைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கி விட்டுவிட்டு மகளை பார்க்க ஓடினார். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் தமது கடமைகளை செய்தால் இந்த மாதிரி அவலங்கள் நிகழாது என்பதை உணர வேண்டும்.

வருங்காலத்தில் சரித்திரம் படைக்கப் போகும் பச்சிளம் குழந்தைகளை காவு கொடுப்பது, கொடுமையிலும் கொடுமை. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.

வெள்ளி, 6 மே, 2011

dinamani editorial - no accidents; only carelessness: தலையங்கம்: விபத்தல்ல, கவனக்குறைவு...

பழையனவற்றை நினைவுகூர்ந்து எழுதப்பெற்ற நல்ல தலையங்கம். செவிடன் காதில் ஊதிய சங்காக இல்லாமல் அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


தலையங்கம்: விபத்தல்ல, கவனக்குறைவு....

First Published : 06 May 2011 01:10:36 AM IST


ஐந்து நாள் தேடலுக்குப்பின் அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அரசு மரியாதையுடன் இடா நகரில் அடக்கம் செய்யப்படுகிறது. ஏப்ரல் 30-ம் தேதி தவாங்கிலிருந்து அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகருக்குத் திரும்புவதற்காகக் கிளம்பிய முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் சேலா கணவாய் பகுதியில் திடீரென்று காணாமல் போனது முதலே, நாடு தழுவிய அதிர்ச்சியும் திகைப்பும் தொடர்ந்து வந்தன. இந்திய சீன எல்லைப் பகுதியில் தவாங்கிலிருந்து 30 கி.மீ. தொலைவில் லுகுதாங் என்கிற கிராமத்தில் முதல்வர் காண்டுவும் அவருடன் பயணித்த நான்கு பேர்களும் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பவன் ஹன்ஸ் என்கிற தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் எ350-பி3 ஹெலிகாப்டரில்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரும், அதில் பயணித்தவர்களின் சடலங்களும் அருகிலுள்ள கிராமத்தினரால் கண்டறியப்பட்டு, ஐந்து நாள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், விபத்து நிகழ்ந்த இடம் முதல்வர் டோர்ஜி காண்டுவின் தொகுதியான முக்தோலின் பகுதி என்பதுதான்.விமான விபத்துகளில் பிரபலங்கள் உயிரிழப்பது ஒன்றும் புதியதல்ல. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தாரா என்கிற சர்ச்சை இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. ஐ.நா.வின் பொதுச் செயலராக சுமார் எட்டாண்டு பதவி வகித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த டாக் ஹாம்மர்ஷீல்ட் 1961-ல் விமான விபத்தில் இறந்தபோது அது விபத்தா, சதியா என்று எழுந்த சர்ச்சை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம், சஞ்சய் காந்தி, மத்திய அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா, மக்களவைத் தலைவராக இருந்த பாலயோகி, முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி என்று விமான விபத்துகளில் உயிரிழந்தோரின் பட்டியல் நீளும். ஏன், ராணுவ இணையமைச்சராக இருந்த என்.வி.என். சோமுவும் மூன்று ராணுவ அதிகாரிகளும் அருணாசலப் பிரதேசத்தில் இதே தவாங்க் பகுதியில்தான் ஹெலிகாப்டர் விபத்தில் 1997-ல் உயிரிழந்தனர் என்பது கவனத்துக்குரியது.சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்தேறி இருப்பதுதான், அதுவும் இதே தவாங்க் பகுதியில் நிகழ்ந்திருப்பதுதான், பல கேள்விகளை எழுப்புகின்றன. ஒருசில நாள்களுக்கு முன்புதான் 17 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இதே பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அடுத்த சில நாள்களிலேயே முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்றால், இந்தப் பகுதி ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றதுதானா என்கிற முக்கியமான கேள்வியை அல்லவா எழுப்புகிறது.கடந்த சனிக்கிழமை நண்பகலில் முதல்வர் டோர்ஜி காண்டுவின் ஹெலிகாப்டர் கிளம்பும்போது தட்பவெப்பநிலை சாதகமாகவும், வானம் தெளிவாகவும்தான் இருந்ததாகக் கூறுகிறார்கள். அப்படியும் தவாங்கிலிருந்து கிளம்பிய 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர், விமான நிலைய ராடாரிலிருந்து மறைந்தது என்றால், திடீரென்று தட்பவெப்ப நிலை மாறியதா என்றுதானே கேட்கத் தோன்றும்?உண்மை என்னவோ அதுதான். அருணாசலப் பிரதேசத்தின் தட்பவெப்ப நிலையே விசித்திரமானது. எப்போது திடீர் திடீரென்று மேகங்கள் தோன்றும், மழை பெய்யும், வெயில் அடிக்கும், இருள் சூழும் என்றெல்லாம் கணிக்க முடியாத தட்பவெப்ப நிலைமை அந்தப் பகுதியில் காணப்படும் என்பது, விமான ஓட்டிக்குத் தெரியாவிட்டாலும், முதல்வர் டோர்ஜி காண்டுவுக்குத் தெரியும்.தவாங்கிலிருந்து இடா நகருக்குப் புறப்படுபவர்கள் காலையில் பத்து மணி முதல் பகல் 12 மணிக்குள் கிளம்பி விடுவார்கள். பிற்பகல் நேரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிந்தும், முதல்வர் ஏன் கவனக்குறைவாய் இருந்தார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கும் இந்த வேளையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சீதாராம் யெச்சூரியின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம் தொடர்பான சீதாராம் யெச்சூரி தலைமையிலான 30 பேர் அடங்கிய நிலைக்குழுவின் 168 மற்றும் 169-வது அறிக்கைகள், மாநிலங்களவைத் தலைவரான ஹமீத் அன்சாரியிடம் தரப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில், ஹெலிகாப்டர்களின் பாதுகாப்புப் பற்றிய குறிப்புகள் கவனத்தில்கொள்ள வேண்டியவை.முக்கியமான அரசியல் தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்கள் பல வேளைகளில் விமானப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்கிறது இந்த அறிக்கை. இரவு நேரங்களில் பறப்பது, காலநிலை பற்றிய அக்கறையின்மை, சரியாகக் காட்சிகள் தெரியாவிட்டாலும் சமாளித்துப் பறப்பது போன்ற விதிமுறை மீறல்கள் வி.ஐ.பி.களை ஏற்றிச்செல்லும் ஹெலிகாப்டர்களில் சர்வசாதாரணமாக நடப்பதாகவும், இதற்கு வி.ஐ.பி.கள்தான் முக்கியமான காரணம் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது அந்த அறிக்கை.ஏறத்தாழ 120 ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறு விமானங்கள் மலைப்பகுதிகளில் பறப்பதற்கான தகுதியே அற்றவை என்றும், போதுமான ஹெலிகாப்டர்கள் இல்லாததால்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும், இதுபோன்ற விபத்துகளில் அதிகமானவை, ஹெலிகாப்டர்களில் பயணிக்கும் வி.ஐ.பி.களின் வற்புறுத்தலால், தட்பவெப்ப நிலையைக் கவனிக்காமல் விமானிகள் பறக்க எத்தனிப்பதாலும், அவர்களது அவசரத்துக்கு ஈடுகொடுத்து விரைந்து பறப்பதாலும் ஏற்படுகிறது என்கிற சீதாராம் யெச்சூரி அறிக்கை.விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், விபத்துகளிலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டாமா? குறைந்தபட்சம், விபத்துகளை விரைந்து விசாரித்துத் தவறுகளைத் திருத்தவும், முறையான பாதுகாப்பு வசதி மற்றும் தொழில்நுட்பமுள்ள விமானங்கள்தான் செயல்படுகின்றனவா என்பதைத் தீர்மானிக்கவும், அனுமதி தரவும், அடிக்கடி சோதனை செய்யவும் ஒரு தனியான அமைப்பை உருவாக்கினால்தான் என்ன?அது முதல்வரானாலும், சுற்றுலாப் பயணியானாலும் மனித உயிர் என்ன வெல்லக் கட்டியா, போகட்டும் என்று விட்டுவிட?