"ராமேஸ்வரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்கு
தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு
உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில், மனு
ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
கேள்விக்கே இடமில்லை:
இந்த
மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில், பதில் மனு
ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கச்சத்தீவு இந்திய அரசால்,
இலங்கைக்கு வழங்கப்படவில்லை; அதனால், அதை மீட்பது என்ற கேள்விக்கே
இடமில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழக மக்களுக்கு, குறிப்பாக,
மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள்
பலவும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், ராஜ்யசபாவில்
நேற்று, இந்தப் பிரச்னையை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள்
பெரிய அளவில் எழுப்பினர்.
ராஜாவுக்கு சொந்தம்:
அப்போது, நடந்த விவாதத்தின் போது, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசியதாவது:கச்சத்தீவு
என்பது, ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. இதை உறுதிப்படுத்துவதற்கான
ஆவணங்கள் எல்லாம், இன்றும் தெளிவாக உள்ளன.கடந்த, 1974ல், கச்சத்தீவை தாரை
வார்ப்பது தொடர்பாக, அப்போதைய வெளியுறவு அமைச்சர் தினேஷ்சிங்,
பார்லிமென்டில் பேசும்போது, "இந்தியாவின், ஒருங்கிணைந்த அங்கமே கச்சத்
தீவு' என, கூறியிருந்தார்.இதுதொடர்பாக, அப்போது நடைபெற்ற விவாதத்தில் பங்
கேற்று பேசிய, முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், "இது ஒப்பந்தமே அல்ல.
இலங்கையிடம், இந்தியா அடையும், சரணகதி படலம்; கச்சத் தீவை ஒப்படைப்பது,
முற்றிலும் தவறானது' என, தெரிவித்து உள்ளார். இவை எல்லாமே, பார்லிமென்ட்
ஆவணங்களில் இன்றளவும் உள்ளன.இலங்கையில், தமிழர்கள், கொத்துக் கொத்தாக
கொன்றொழிக்கபட்ட விவகாரம், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கும்
பிரச்னை, கச்சத்தீவை மீட்கும் விவகாரம் என, அத்தனையிலும், தமிழகத்திற்கு
விரோதமான போக்கையே, மத்திய அரசு மேற்கொள்கிறது. இதற்கு, வரும் தேர்தலில்,
காங்கிரசோடு கூட்டணி சேரும், எந்த கட்சிக்கும், தமிழக மக்கள் கடுமையான
பாடம் புகட்டுவர்.இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.
இலங்கைக்கு சொந்தமா?
பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:கச்சத்தீவு,
இலங்கைக்கு சொந்தமானது என, மத்திய அரசு திரும்ப திரும்ப கூறுகிறது. இதை,
நிச்சயமாக ஏற்க முடியாது. கச்சத்தீவு, நம்நாட்டோடு ஒருங்கிணைந்த அங்கம்.
அதை, நம்நாட்டிடமிருந்து பிரித்து பார்க்க முடியாது. தமிழக மீனவர்கள் மீது,
தாக்குதல் நடத்துவதற்கு அடிப்படையாக, கச்சத்தீவு விவகாரம் உள்ளதால்,
இதுபற்றி விவாதிக்க, உடனடியாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை, மத்திய அரசு
கூட்ட வேண்டும்.இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
தாக்குதல்:
தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது:தமிழக
மீனவர்கள், தொடர்ச்சியாக தாக்கப்படுகின்றனர். ராமேஸ்வரத்திற்கும், இலங்கை
தலைமன்னாருக்கும் இடையே, வெறும், 20 மைல்களே உள்ளன. இதில்போய், சர்வதேச
கடல் எல்லைக் கோடு வகுப்பதும், அதை தாண்டி மீன் பிடிக்க செல்லக் கூடாது என,
கூறுவதும், ஏற்க முடியாதது.தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி
வைக்க, கச்சத்தீவு விவகாரத்திற்கு தீர்வு காண, வேண்டும். இதுதொடர்பாக,
தி.மு.க., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனுத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்விஷயத்தில், மத்திய அரசு, உரிய கவனம் செலுத்த
வேண்டும்.இவ்வாறு கனிமொழி பேசினார்.
கச்சத்தீவு வழக்கில் மத்திய அரசு அளித்த
வாக்குமூலத்தில் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ளார்
திமுக தலைவர் கருணாநிதி.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கச்சத்தீவு” பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் “கச்சத்தீவு
எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை
இடையே நீடித்து வந்தது;
அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக்
கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது.
அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும்
கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக்
கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது.” என்றெல்லாம் தெரிவித்திருப்பது
தமிழ் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சத் தீவு
இந்தியாவிற்குத் தான் சொந்தம் என்றும், அதனை 1974ஆம் ஆண்டு இந்திய அரசு
இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து விட்டது என்றும்,
அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது
என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்சநீதி மன்றத்தில்
முறையிட்டிருக்கிறார்.
“கச்சத் தீவு” பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற “டெசோ” அமைப்பின்
கூட்டத்தில், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு
ஒப்பந்தத்தின்படி
இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும்
நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக்
கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி
நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை
நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்
கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை. எனவே
1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு
பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச
நீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், “டெசோ” அமைப்பின் சார்பில் நான்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல்
செய்திருக்கிறேன்.
உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15-7-2013 அன்று
தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா,
விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட
நீதிபதிகள், மத்திய அரசுக்கு “நோட்டீஸ்” அனுப்பிட உத்தரவிட்டனர்.
கச்சத் தீவைப் பொறுத்தவரை அது பாரம்பரியமான நீண்ட நெடிய வரலாற்றைக்
கொண்டது என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம்
தள்ளப்பட்டுள்ளோம். கச்சத்தீவில் புனித அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம்
உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வாரத் திருவிழாவிற்கு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் செல்வர். இலங்கை மீனவர்களும்
கலந்து கொள்வர்.
தொன்று தொட்டு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் இப்பகுதியில் மீன்
பிடித்து வருகின்றனர். அதன் தொடர்பான, வலைகளை உலர்த்துதல், களைப்பாறுதல்
போன்றவற்றிற்கும் இத் தீவினைப் பயன்படுத்துவர். இத்தீவானது பன்னெடுங்காலமாக
ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் இருந்தது.
இலங்கையை ஆட்சி செய்த டச்சுக் கம்பெனி அந்தத் தீவை 1660இல்
குத்தகைக்குப் பெற்றிருந்தது. பின்னர் 1870-73, 1875, 1880, 1889 ஆகிய
ஆண்டுகளிலும் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவிற்கு அருகில் உள்ள சங்குப்
படுகையை குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை கவர்னரின் 1757-1962
நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதும், 1766இல் கண்டி அரசரால் செய்து
கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845ஆம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர்
எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின்
இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகையிலும்
கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும்.
இந்தக் காலக் கட்டத்தில் ராமநாதபுரம் அரசர் ஆங்கிலேய அரசுக்குக்
கட்டுப்பட்ட குறுநில மன்னராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின்
இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில்
கட்டுப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆவணத்
தொகுப்பேட்டிலும் (கெஜட்டிலும்) இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண
வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, தமிழக அரசு மூன்று
வாரங்களில் விளக்கம் தர வேண்டுமென்று “நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ள
நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும்
தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதி
மன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும். 1974ஆம்
ஆண்டு இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலக்
கட்டத்திலேயே, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய
வேண்டுமென்று, 21-8-1974 அன்று திமுக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த
போதே தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ஆம்
ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது நாடாளுமன்றத்தில்
அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான
கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டோம் என்று தி.மு.கவின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில்
கூறினார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா
தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு
வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார்.
“இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சத்தீவைத்
தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக்களை
மாநிலங்களவையில் திமுக சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி
சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர்
தெரிவித்தனர்.
இதையெல்லாம் முற்றிலும் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, மத்திய
அரசு உச்ச நீதி மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில்
உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் டெல்லிக்கு வந்த
இலங்கை அமைச்சர் பெரீஸ், கச்சத் தீவு முடிந்து போன அத்தியாயம் என்று வரம்பு
கடந்து பேசியதற்கு மத்திய அரசு “பின்பாட்டு” பாடுவதைப் போல, இந்தப் பிரமாண
வாக்குமூலத்தை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கச்சத்தீவு,
இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான
ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர்
சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம்,
இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570, தேதி 2-7-1980.
1947இல் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது.
கச்சத் தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.
இந்த ஆவவணங்களையும், அடிப்படை ஆதாரங்களையும் இந்திய அரசியல் சட்ட
நெறிமுறைகளையும் ஆழமாகப் பரிசீலனை செய்து உச்ச நீதி மன்றம் நல்ல தீர்ப்பு
வழங்கிடும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த
வேளையில், “கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது” என்று மத்திய அரசு
பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பது, தமிழகத்திற்குப் பேரிட போன்றது;
இந்தப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திடக் கூடியது. மத்திய
அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும், கச்சத்தீவுப்
பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால்,
நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம்!
- என்று கூறியுள்ளார்.
இதை 1974 லிலேயே உரக்க சொல்லி கட்ச தீவு கை மாறாம
செஞ்சிருக்கலாமே.தும்ப விட்டு வாலையில்ல இப்போ பிடிக்குறீங்க!!!அப்போ
உங்களுக்கு என்ன இக்கட்டு என்பது உலகறிந்த ரகசியம்.சரி இப்பவாவது கொஞ்சம்
வேஷம் கட்டணுமுன்னு தோணிச்சே...
மற்ற பிரச்சனைகளை காட்டிலும் இந்த பிரச்னை மிக சிறியது.
இலங்கை யில் இன படுகொலை, குற்றவாளியாக உங்கள் போன்ற வர் தான். தமிழ் மக்கள்
மடிய காரணியாக இருந்து இப்பொழுது தமிழ் தீவுக்காக போராடுவது போல நாடகம்.
தமிழக மீனவர்களுக்கு பச்சைத் துரோகம் செய்திட்ட
மத்திய அரசின் நய வஞ்சக செயலை வண்மையாக கண்டிக்கதக்கது என்று இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்
கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:-
கச்சத் தீவு மீட்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
அரசியல் கட்சிகளும் கோரி வருவதுடன் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர்
ஜெயலலிதாவும், தமிழ்நாடு அரசும், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து,
தற்பொது விசாரணை நடைபெற்று வருகின்றது.மத்திய அரசின் சார்பில் தாக்கல்
செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கச்சித்தீவு கேட்பார் அற்று கிடந்தது
என்றும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அதன் காரணமாக
இலங்கை நாட்டிற்கு கச்சத் தீவு சொந்தமாகி விட்டது என்றும் கூறியுள்ளது
கடும் கண்டனத்திற்க்குரியதாகும்.இலங்கைக்கு கச்சித் தீவு சொந்தமென்றால்,
இருநாடுகளும் 1974-ல் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
தமிழக மீனவர்கள் நித்தம் நித்தம், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும்,
வலைகள் அறுக்கப்படுவதும், மீன்களை பறிமுதல் செய்வதும், படகுகளை உடைப்பதும்,
பறிமுதல் செய்து எடுத்துச் செல்வதும் மீனவர்களை கைது செய்து சிறையில்,
அடைப்பதும், சுட்டுக்கொல்வது போன்ற வன்முறைகளை மேற்கொண்டுவரும் இலங்கை
அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்து, தமிழக மீனவர்களுக்கு பச்சைத்
துரோகம் செய்திட்ட மத்திய அரசின் நய வஞ்சக செயலை வண்மையாக கண்டிப்பதுடன்,
கச்சித் தீவை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழக
அனைத்து பகுதி மக்களும் ஆதரவளிக்க முன்வர வேண்டுகிறோம்.நீதி மன்றத்தில்
தமிழ்நாடு அரசு போராடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதுடன்
நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடுவோம் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.
கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத்
துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ளது. "நட்பு நாடாக, இலங்கை
இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை
ஏற்படுத்தும்' என, வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. எனினும், கச்சத்தீவை மீட்பது குறித்து, பார்லிமென்டில்
விவாதம் நடத்தப்படும் என, தமிழக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.
தடைவிதிப்பு:
இந்தியாவுக்கும்,
இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் அருகே, கச்சத்தீவு உள்ளது. இரு
நாடுகளுக்கும் இடையே, 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி,
கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதையடுத்து, அந்த தீவு
அருகில், நம் மீனவர்கள் மீன் பிடிக்கவோ, அந்தத் தீவில் வலைகளை உலர்த்தவோ
கூடாது என, இலங்கை கடற்படை தடை விதித்து வருகிறது. அந்தப் பகுதிக்குச்
செல்லும், நம் மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.நீண்ட நெடுங்காலமாக,
கச்சத்தீவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடத்தக் கூட, இலங்கை அரசிடம்
அனுமதி பெற்றே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. "கச்சத்தீவு, இலங்கைக்கு
வழங்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு பெரும் பாதிப்பாக
உள்ளது. எனவே, அந்தத் தீவை, மீண்டும் இந்தியா வசம் கொண்டு வர வேண்டும்;
அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக மீனவர்கள்
மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
எனினும், மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.கச்சத்தீவு விவகாரம்
குறித்து, பார்லிமென்ட்டில், சிறப்பு விவாதம் நடத்த வலியுறுத்தி, தி.மு.க.,
எம்.பி.,யான இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., லிங்கம் ஆகிய
இருவரும், சபாநாயகரிடம், நோட்டீஸ் அளித்துள்ளனர்.நடப்பு மழைக்கால
கூட்டத்தொடர் முடிவதற்குள், இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டுமென்று,
கேட்டு இருந்தும், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.இந்த
சூழ்நிலையில் தான், கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் பேசுவதற்கு,
வெளியுறவுத்துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ள விவகாரம்
அம்பலமாகியுள்ளது.
ஒப்பந்தம் :
எம்.பி.,க்கள்
சார்பில், இதுபோன்ற கோரிக்கைகளுக்காக, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டால்,
சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் மூலம், சபாநாயகர் அலுவலகம் கருத்துக்
கேட்பது வழக்கம்.அது போல், கச்சத்தீவு நோட்டீஸ் குறித்து, வெளியுறவுத் துறை
அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்து, கடந்த,
5ம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின், இணைச் செயலர் அந்தஸ்த்தில் உள்ள
ஹர்ஷ் வர்தன் சிரிங்லா என்பவர், பார்லிமென்ட் செயலகத்துக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவுக்கும்
இலங்கைக்கும் இடையிலான, கடல் எல்லைகள் எவை என்பது குறித்து, ஏற்கனவே
வரையறுக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து, இரண்டு ஒப்பந்தங்களில், இரு
நாடுகளும் கையெழுத்தும் இட்டுள்ளன. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், இந்த
ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.
முடிந்து போனது:
தன்
கடல் எல்லைப் பரப்பில், எதையும் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை.
இருதரப்பும், ஒப்புக் கொண்ட படியே, எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, முடிவு
செய்யப்பட்டது. அவ்வாறு செய்ததில், கச்சத்தீவு, இலங்கை கடல் பரப்புக்குள்
அமையும் படி ஆனது.எனவே, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி; இந்த
விஷயம், முடிந்துபோன ஒன்று; அதை திரும்பவும் பரிசீலனை செய்ய
முடியாது.இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு; நெருக்கமான நட்பு கொண்ட அண்டை
நாடாக, இலங்கை இருக்கும் போது, கச்சத்தீவு குறித்து, பார்லிமென்ட்டில்
விவாதம் நடத்துவது, ஏற்புடையது அல்ல. அவ்வாறு, விவாதம் செய்தால்,
இருநாடுகளின் நட்புறவில், மிகப்பெரிய தர்மசங்கடத்தை, ஏற்படுத்தும். எனவே,
எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்க கூடாது. தவிர, இந்த தகவல்கள் எல்லாமே,
வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தின் ஒப்புதலின் படியே
தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இளங்கோவன் எம்.பி.,யிடம் கேட்ட போது,
""ஏற்கனவே நடைபெற்ற, அலுவல் ஆய்வுக்குழுவில், டி.ஆர்.பாலு இப்பிரச்னை
குறித்து எழுப்பினார். இன்னொரு முறை, நானும் எழுப்பினேன். எனவே, இந்த
பிரச்னையை விட மாட்டோம். இன்னும், நாட்கள் உள்ளன. எப்படியும்,
பார்லிமென்ட்டில், இந்த பிரச்னையை கிளப்புவோம்,'' என்றார். மற்றொரு எம்.பி.,யான லிங்கம், ""நானும் இப்பிரச்னை குறித்து, விவாதம் நடத்த வேண்டுமென்று, மறுபடியும் வலியுறுத்துவேன்,'' என்றார்.
தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய பிரச்னை,
கச்சத்தீவு பற்றியது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களை காவு
வாங்கியும், பசியடங்கா காலனின் கொடுமைக்கு காரணமான கச்சத்தீவின்
பிரச்னைக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவை தாரை
வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?
தமிழகத்திற்கும், இலங்கைக்கும்
நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், ராமேஸ்வரத்திற்கு அருகில், ஒரு பொட்டு
போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தூரம், 16 கி.மீ., தீவின்
பரப்பளவு, 285 ஏக்கர். 20ம் நூற்றாண்டில், ராமநாதபுரம் சமஸ்தானத்தைச்
சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர், அங்கு அந்தோணியர் தேவாலயத்தை
அமைத்தார். இன்றும், அத்தீவில் இருக்கும் ஒரே கட்டடம் அதுதான்.இந்தியாவின்
தென்கோடி ராமேஸ்வரமும், அதை ஒட்டிய கடல் பகுதிகளும், சிறு தீவுகளும்,
இந்தியா சுதந்திரம் பெற்ற, 1947ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேரடி
நிர்வாகப் பகுதியாக இல்லாமல், சேதுபதி மன்னர்கள் ஆண்டு வந்த, ராமநாதபுரம்
சமஸ்தானத்திடமே இருந்தன.சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவிலிருந்த மற்ற
சமஸ்தானங்களைப் போல், ராமநாதபுரம் சமஸ்தானம், சட்ட பூர்வமாக இந்தியாவுடன்
இணைந்தது. அதுவரை கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி
மன்னர்களின் பரம்பரை சொத்து என்பதை நிரூபிக்க, ஏராளமான சான்றுகள் உள்ளன.
அவை இன்றும், மதுரையிலுள்ள ஆவண காப்பகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.
ராமநாதபுரம் மன்னருக்கும், அன்றைய இந்திய (மத்திய)
அரசின் உள்துறை செயலருக்கும் இடையே, 1913ல் குத்தகைப் பத்திரம் ஒன்று
கையெழுத்தாகியது. அந்தப் பத்திரத்தின் இறுதியில், சமஸ்தானத்தில் சங்கு
கிடைக்கும் பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில்,
கச்சத்தீவின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதன் மூலம், ராமநாதபுரம்
சமஸ்தானத்தின் சொத்தாக, கச்சத்தீவு இருந்தது என்பதும், அதை பிரிட்டிஷ் அரசு
அங்கீகரித்துள்ளது என்பதும், தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1921
அக்., 21ம் தேதி, இலங்கைத் தலைநகராகிய கொழும்பில், மீன் பிடி எல்லையை
வகுக்க மாநாடு ஒன்று நடந்தது. இலங்கையின் சார்பாக கலந்து கொண்ட,
ஹார்ஸ்பர்க் என்ற அதிகாரி, கச்சத்தீவுக்கு அப்பால், 3.45 மைல் (3 கடல்
மைல்) வரை, மேற்கே உள்ள கடல் பகுதியும் உள்ளடங்கும் வகையில், இலங்கையின்
எல்லை வகுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார். இந்திய அரசுக்
குழுவினர், கச்சத்தீவு தனக்கு சொந்தம் என்று, ராமநாதபுரம் மன்னர் கூறுவதை
வெளியிட்டு, வரைபடத்தையும் காட்டினர்.நெருக்கடியைத் தவிர்க்க,
இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை, கச்சத்தீவுக்கு
மேற்கே, 3.45 மைல் தொலைவிலேயே தற்காலிகமாக வரையறுத்துக் கொள்ளலாம் என,
உடன்பாடு செய்து, இந்திய குழு அறிக்கை ஒன்றை, இந்திய அரசுக்கு
அனுப்பியது.பழைய ஆவண விவரங்களையும், பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளையும்
பார்க்கும் போது, பிரிட்டிஷார் ஒரு போதும் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்
கொடுக்கவில்லை என்பதும், அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டனர்
என்பதும், தெளிவாகத் தெரிகிறது.
கடந்த, 1956க்கு பின், இந்திய அரசு,
தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல்
என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கி.மீ.,) 6 கடல் மைல்களாக
விரிவுபடுத்தியது. இதே போன்ற போட்டி அறிவிப்புகளை, இலங்கை அரசும் வெளியிட,
பிரச்னை வலுவடைந்தது.கடந்த, 1973ல், அன்றைய பிரதமர் இந்திரா, இலங்கை
சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974ல், இலங்கை
பிரதமர், சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியா வந்தார்.அண்டை நாடுகளுடன் சமாதான
சகவாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை, ஒரு வகையில் நமக்கு சொந்தமான கச்சத்தீவு
கைமாறக் காரணமாக இருந்தது. 1974ல், இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது.
இந்த
ஒப்பந்தத்தின், ஐந்தாவது ஷரத்து, இந்திய தமிழக மீனவர்கள், கச்சத்தீவு
பகுதியில் மீன் பிடிக்கவும், கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும், மீன் பிடி
வலைகளை உலர்த்திக் கொள்ளவும் வழி வகுத்திருந்தது.முதல்வர் ஜெயலலிதா,
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர்
என்ற முறையில், கச்சத்தீவை மீட்க வழக்கொன்றை உச்ச நீதிமன்றத்தில்
தொடுத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியும், 2013ல், அதேபோல் உச்ச
நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இந்த வழக்கின் சாராம்சம், இந்திய அரசியல்
அமைப்பு சட்டப்படி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு என்பது தான். இரு
நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கும், ஏற்கனவே
வழங்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை மீட்டெடுக்கவும், இந்திய உச்ச
நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில், 1960 மார்ச், 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு விடை சொல்கிறது.
இந்தியா,
1947ல் சுதந்திர அடைந்த போது, மேற்கு வங்க மாநிலம் இந்தியாவுடன் இருக்க,
கிழக்கு வங்க மாநிலம், கிழக்கு பாகிஸ்தானாக மாறியது. பின், இந்த கிழக்கு
பாகிஸ்தான், வங்க தேசமாக தனி நாடானது."பேர்பாரி' என்ற நிலப்பரப்பு
சம்பந்தமாக, இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே ஆரம்பம் முதல்,
சர்ச்சை இருந்து வந்தது. பேர்பாரி என்ற நிலப்பகுதி, மேற்கு வங்கத்தின்
நிர்வாகத்தில் தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்த போதும்,
கிழக்கு பாகிஸ்தானாக மாறிய, கிழக்கு வங்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது
என்று, பாகிஸ்தான் பிடிவாதமாக வாதாடியது.அரசமரத்து நாட்டாமை பாணியில்,
உனக்கு பாதி எனக்கு பாதி என்று முடிவானது.இது குறித்த வழக்கு, உச்ச
நீதிமன்றத்தில் வந்தபோது, மத்திய அரசின் சார்பில், இந்திய நிலப்பரப்பு
பகுதிகள் ஏதும் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவில்லை; சர்ச்சைக்குள்ளாயிருந்த
எல்லைப்பகுதி தான் வரையறுக்கப்பட்டன என்று, வாதிடப்பட்டது.
ஆனால்,
இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை ஆராய்ந்த நீதிமன்றம், அந்த ஒப்பந்தம்,
இந்தியாவின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தமே என்று முடிவு
செய்தது.இப்படி ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க, அரசுக்கு உரிமை உள்ளதா என்று
ஆராய்ந்த போது, இவ்வாறு விட்டுக் கொடுப்பதற்கு தேவையான திருத்தங்களை
அரசியல் அமைப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்றும், அவ்விதம் செய்யாத
பட்சத்தில், இந்தியாவின் நிலப்பகுதிகளை வேறு நாட்டோடு ஒப்பந்தம் செய்து,
அதை விட்டுக் கொடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும், ஒரு அதிமுக்கிய
தீர்ப்பை வழங்கியது. அதன்படி, பேர்பாரி நிலப்பரப்பு முழுவதும்,
இந்தியாவுடன் இணைந்தது.
உச்ச நீதிமன்ற, எட்டு நீதிபதிகள் கூடி
வழங்கிய இந்த தீர்ப்பு வந்த, 14 ஆண்டுகள் கழித்து, கச்சத்தீவு ஒப்பந்தம்
இலங்கை அரசோடு போடப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது
போலவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் பின்னேற்பு செய்யப்பட வேண்டும் என்று,
கச்சத்தீவு ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், கச்சத்தீவு
ஒப்பந்தம் தொடர்பாக, அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த ஒரு திருத்தமும்
இன்று வரை செய்யப்படவில்லை. எந்த திருத்தமும் செய்யப்படாத நிலையில்,
இந்தியா - இலங்கையோடு, 1974ல் செய்து கொண்ட ஒப்பந்தமும், அதன்பின்
தொடர்ச்சியாக, 1976ல் செய்து கொண்ட ஒப்பந்தமும் சட்டபூர்வமானதல்ல.
கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தமிழக மீனவர்களுக்கு உண்டான மீன் பிடித்தல், வலை
உலர்த்தல் ஆகிய உரிமைகளை வழங்காத இலங்கையுடன், இந்தியா செய்து கொண்ட
ஒப்பந்தம் எப்படி செல்லுபடியாகும்?
இப்போது, மத்திய அரசு என்ன நிலை
எடுக்கப் போகிறது என்பது தான் சஸ்பென்ஸ். இனப்படுகொலை நடத்தி,
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ஒரு அரக்கனுக்கு சிவப்புக் கம்பள
வரவேற்பளிக்கும் மத்திய அரசு, கச்சத்தீவு பிரச்னை முடிந்து போன விவகாரம்
என்று, இலங்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில், பதில் சத்தியபிரமாணம்
தாக்கல் செய்யுமா, உச்ச நீதிமன்ற எட்டு நீதிபதிகளின் அமைப்பான, அரசியல்
அமர்வு வழங்கிய அதிமுக்கிய தீர்ப்பை ஒப்புக்கொள்ளுமா அல்லது உதாசீனம்
செய்யுமா? இ-மெயில்:karuramiah70@yahoo.in
கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்
நிறுத்தப்பட்டிருப்பது, இந்திய இறையாண்மைக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்
என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம்
எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை வைகோ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது:
தமிழக மீனவர்களின் உரிமை நலன்களைப் பறிக்கும் வகையில், 1974-ஆம் ஆண்டு
இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது.
அதற்காக இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை.
இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும் என மத்திய
அரசை வலியுறுத்தி தமிழகச் சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தி உள்ளனர்.
கச்சத்தீவு அருகே சீனப் படகுகளும், இலங்கைப் போர்க்கப்பலில் சீன வீரர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும், இந்தியாவின்
இறையாண்மைக்கு விடுக்கப்பட்டு உள்ள அச்சுறுத்தல் ஆகும். போர்க்கப்பல்களைக்
கொண்டு வந்து நிறுத்துவது ஒரு முன்னோட்ட எச்சரிக்கையே ஆகும்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழக
மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு
மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைப் போர்க் கப்பல்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளைத்
தாங்கள் (பிரதமர்) மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மத்திய
அரசு மேற்கொண்ட உடன்படிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே, இந்த
உடன்படிக்கைகளை செல்லாது என அறிவிப்பதுடன், கச்சத்தீவை இந்தியாவுடன்
மீண்டும் இணைக்க உத்தரவிட வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை தடுக்க
வேண்டும். மேலும் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல்களில் பலியான
மீனவர்கள் மற்றும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும்
உத்தரவிட வேண்டும்.
கச்சத்தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற விரைந்து
நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவால் இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை கொண்டு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் 285 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள தீவு கச்சத்தீவு. இருபதாம் நூற்றாண்டில் ராமநாதபுரம்
சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்தத் தீவில் புனித
அந்தோணியர் தேவாலயத்தை அமைத்தார்.
இங்கு ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தியா
சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக
கச்சத்தீவு இருந்த தற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த
பின்பு, ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் இருந்த
கச்சத்தீவு இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்படும் வரை, தமிழக மீனவர்கள்
பாக் ஜலசந்தி பகுதியில், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து வந்தனர்.
வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் கச்சத் தீவினை பயன்படுத்தி வந்தனர்.
1974 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திலும் பாரம்பரிய மீன்பிடி
உரிமைகள் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும்,
இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் கச்சத்தீவு பகுதியில் மீன்
பிடிக்கவோ, கச்சத்தீவில் ஓய்வெடுக்கவோ இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதில்லை.
எல்லை மீறினார்கள் எனத் தெரிவித்து இந்திய மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு
வருகின்றன. பல சமயங்களில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளனர்.
பல நேர்வுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின்
அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
தமிழக மீனவர்களின் வாழ் வாதாரப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு
கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டிடம்
இருந்து திரும்பப் பெறுவதே என்பதால், இதுகுறித்த முக்கிய தீர்மானத்தை நான்
இப்பேரவையில் முன் மொழிய விழைகிறேன்.
'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும்,
துன்புறுத்தல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில்
கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்
அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது
அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும்
வாழ்வாதார பாதிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இந்த
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்தியா - இலங்கை ஒப்
பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும்
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
வலி யுறுத்துகிறது' என்னும் தீர்மானத்தினை முன் மொழிகிறேன்.
என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீது, உறுப்பினர்கள் தங்களது
கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.),
சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), பிரின்ஸ் (காங்), ஆறுமுகம் (இந்திய
கம்யூ), அஸ்லம் பாஷா (மனித நேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய
தமிழ கம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு
பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசு (இந்திய குடியரசு
கட்சி) ஆகியோர் பேசினார்கள்.
சபாநாயகர் தனபாலும் தீர்மானத்தை ஆதரித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இறுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவாக விளக்கம் அளித்து பேசினார்.
பின்னர் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஏக மனதாக நிறைவேறியது.
கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும் : முதல்வர்
சென்னை
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை காக்க வேண்டும்
என்றால், மத்திய அரசு கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
3.5.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இந்திய நாட்டிற்குச்
சொந்தமான கச்சத் தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை 1974-ஆம் ஆண்டைய
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதை
திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி
அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை,
தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் 285 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள தீவு கச்சத் தீவு.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு
பகுதியாக இருந்த கச்சத் தீவு, சுதந்திரம் அடைந்த பின்பு, இந்திய நாட்டுடன்
இணைக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்படும் வரை,
தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில், கச்சத் தீவு பகுதியில் மீன்
பிடித்து வந்தனர். 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்திலும்
பாரம்பரிய மீன் பிடி உரிமைகள் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டு
இருக்கின்றன. இருப்பினும், இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில்
கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கவோ, கச்சத் தீவில் ஓய்வெடுக்கவோ, இலங்கை
அரசாங்கம் அனுமதிப்பதில்லை.
எல்லை மீறினார்கள் எனத் தெரிவித்து இந்திய மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு
வருகின்றன. பல சமயங்களில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளனர். பல நேர்வுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை
கடற்படையினரின் அத்து மீறல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு கச்சத்
தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டிடம் இருந்து
திரும்பப் பெறுவதே என்பதால், இது குறித்த முக்கிய தீர்மானத்தை இப்பேரவையில்
முன்மொழிய விழைகிறேன். தீர்மானம்
“தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும்,
துன்புறுத்துதல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில்
கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்
அடிப்படையில் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்
தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு
ஏற்படும் வாழ்வாதார பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த
பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்தியா – இலங்கை
ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவு
மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
வலியுறுத்துகிறது” என்னும் தீர்மானத்தினை முன்மொழிகிறேன் என்று கூறினார். பதிலுரை
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏழு முறை இந்திய மீனவர்கள் இலங்கைக்
கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, சிறை
பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள்
பாதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் நாசம்
ஆக்கப்பட்டன. இவர்களில் 30 மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறைகளில் இருந்து
விடுவிக்கப்படவில்லை. இது தவிர, 5 தமிழக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும்
மேலாக இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில்,
தமிழக மீனவர்களைக் காக்க கச்சத் தீவினை மீட்பதைத் தவிர வேறு வழியில்லை
என்பதால், கச்சத் தீவினை மீட்கும் தீர்மானத்தினை நான் முன்மொழிந்துள்ளேன்.
மீனவர்களின் நலன் காக்கும் இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
கச்சத்தீவு, பொதுநல மாநாடு : கவன ஈர்ப்பு த் தீர்மானமாக க் கொண்டு வர தி.மு.க., கலந்துரை
புதுதில்லி :"பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த்
மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,
கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில்
ஆலோசிக்கப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
அறிவாலயத்தில், டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று
முன்தினம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் எதுவும்
நிறைவேற்றப்படவில்லை.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தமிழக
மீனவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, இரு தீர்மானங்கள் மட்டுமே
நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்த, தி.மு.க., விளக்கப் பொதுக்
கூட்டம், வரும், 24ம்தேதி சென்னை, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது.
இது
குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ அமைப்பின் கலந்துரையாடலில்,
உறுப்பினர் ஒருவர், "டெசோ அமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த
ஆதரவு ஏற்படவில்லை' என, கூறியுள்ளார். மற்றொரு உறுப்பினர், "டெசோ அமைப்பு
ஏற்பட்ட பின் தான், இலங்கை தமிழர் பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது' என,
மறுத்துள்ளார்.வழக்கமாக நடைபெறும் டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை
தமிழர்களுக்கு ஆதரவான விஷயங்களை விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்றப்படுவது
உண்டு. ஆனால், இந்தக் கூட்டத்தில், எம்.பி., க்கள் குழு, இலங்கை சென்று
வந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தமிழர்கள் பிரச்சனை
தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.நவம்பர் மாதம், இலங்கையில்
நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி,
ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம், தி.மு.க., - எம்.பி., க்கள்
மற்றும் டெசோ உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத்
தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,- எம்.பி.,க்கள் கொண்டு வர
வேண்டும் என, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து
துன்புறுத்தப்படுவது தொடர்பாக 26.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதல்வர்
ஜெயலலிதா பதில் உரை அளித்தார். அப்போது அவர், கச்சத்தீவுப் பிரச்னையிலும்
உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது உரையில் இருந்து...
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் அடித்து
துன்புறுத்தப்படுவது குறித்து உறுப்பினர்கள், இந்த அவையினுடைய கவனத்திற்கு
கொண்டு வந்து, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தங்களது
கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை குறித்த எனது
விரிவான விளக்கத்தை இந்த மாமன்றத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்த போது இந்தப் பிரச்சனை
எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களது
அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஒரு
பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அப்போது,
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதிதான். அப்போதைய காங்கிரஸ்
தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக, தங்கள் நாட்டிற்குச்
சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த
உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்,
இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள்
மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
1991 ஆம் ஆண்டு நான் முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன்,
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையிடம் இருந்து காப்பாற்ற கச்சத்தீவினை
மீட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்து, இதனை மீட்பதற்கான
நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரதப் பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும்
வற்புறுத்தினேன். குறைந்தபட்சம் நிரந்தரமான குத்தகை, தமிழக மீனவர்கள்
கச்சத்தீவிற்குச் சென்று மீன் பிடிக்கும் உரிமையையாவது பெற்றுத் தர
வேண்டும் என்று பாரதப் பிரதமரை பல முறை வற்புறுத்தி இருக்கிறேன்.
இருப்பினும், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
2006 முதல் 2011 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் மு. கருணாநிதி.
கருணாநிதி தயவில் தான் மத்திய அரசும் இருந்தது. தன் நலத்திற்காக பல
மிரட்டல்களை மத்திய அரசுக்கு விடுத்த கருணாநிதி, தான் செய்த பாவத்திற்கு
பரிகாரமாக கச்சத்தீவினை மீட்டுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி
இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவு
பற்றிய எண்ணமே கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால், 12.8.2012-ல்
நடைபெற்ற புத்துயிரூட்டபட்ட ‘டெசோ’ மாநாட்டில், “கச்சத்தீவை இந்தியா
மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு; தனுஷ்கோடி அல்லது மண்டபம்
முகாமில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்” என்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
1974 ஆம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட போது,
அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதைத் தடுக்க தவறிவிட்டார். மேற்கு
வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960-க்கு முன்பு கிழக்கு
பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தாரைவார்க்க முயன்ற போது, அதனை எதிர்த்து
அப்போதைய மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை
விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை
அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு
அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே
நடைமுறைப்படுத்த முடியும்” என 1960-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க
அரசின் இந்த நடவடிக்கையை 1974 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி
பின்பற்றி இருப்பாரேயானால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு
இருக்காது. ஆனால் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி இதைச்
செய்ய தவறி விட்டார்.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் காரணமாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை
கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் வலைகளை
அறுத்தெறிவதையும்; அவர்களை ஆயுதங்களால் துன்புறுத்துவதையும்; இலங்கை
கடற்படையினர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களுடைய
வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. தங்களது உயிரைப் பணயம் வைத்து மீன்
பிடித் தொழிலை தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் இலங்கைக் கடற்படையினரால் சிறை
பிடிக்கப்படும் போதும்; பாரதப் பிரதமரை வலியுறுத்தியும்; தமிழக அரசு
அதிகாரிகள் மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு
கொண்டும் அவர்களை மீட்டெடுத்து இருக்கிறேன். தமிழக மீனவர்களும் இந்திய
நாட்டு குடிமக்கள் தான் என்பதை பாரதப் பிரதமருக்கு உணர்த்தி; வலுவான,
உறுதியான, ஆக்கப்பூர்வமான, ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து இந்தப்
பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தி
இருக்கிறேன். பரம்பரை பரம்பரையாக, மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக
மீனவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள இலங்கை அரசுக்கு
அறிவுரை கூற வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், மத்திய அரசோ
தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று
நினைத்தோ என்னவோ, தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. மத்திய அரசின்
கையாலாகாத்தனம் காரணமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின்
தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல், கடந்த ஒரு மாதத்தில்
மட்டும் நான்கு முறை நடைபெற்று இருக்கிறது. இது உண்மையிலேயே கவலை அளிக்கக்
கூடியது.
தமிழக மீனவர்களின் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில்,
கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். கச்சத்தீவு
பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும்.
எனவே தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு
சட்டத் திருத்தத்தின் மூலம், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க, கச்சத்தீவு
இலங்கைக்கு தாரைவார்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி; இது குறித்த
இந்தியா – இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று
2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்துள்ளேன். இந்த
வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இந்த வழக்கை விரைவில் எடுத்து விசாரிக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில்
மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இது மட்டுமல்லாமல், இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தப்
பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் போது,
அவர்களை மீட்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு எடுத்து
வருகிறது. மீனவர்களின் இன்னல்களை உணர்ந்து, அவர்களுக்கென பல்வேறு சலுகைகளை
எனது அரசு அளித்து வருகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடற்பகுதியில் மீன்பிடித்துக்
கொண்டிருந்த போது, போதைப் பொருள் கடத்தியதாக கூறி, இலங்கை கடற்படையினரால்
கைது செய்யப்பட்டு; சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மீனவர்கள்
சார்பாக இலங்கை நீதிமன்றத்தில் வாதாடி, விடுதலை செய்யப்படுவதற்கான
நடவடிக்கையை எனது அரசு எடுத்துள்ளது. அந்த வழக்கிற்கான செலவுகளையும் எனது
தலைமையிலான அரசு ஏற்றுள்ளது. இந்த ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு
நிவாரண உதவித் தொகையாக, தலா இரண்டு லட்சம் ரூபாய் எனது தலைமையிலான தமிழக
அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பங்கள்
அன்றாட வாழ்க்கை நடத்திடும் வகையில், மாதந்தோறும் 7,500 ரூபாய் தமிழக
அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தவிர, அண்மையில் இலங்கை
கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இலங்கை
சிறைச்சாலைகளில் உள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்களை இந்திய
அரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும்; தமிழக மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கும்; கொடூரமாக
துன்புறுத்தப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வலுவான
நடவடிக்கைகளை ராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என்றும்;
டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து,
இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்தத்
தருணத்தில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதோடு, இந்திய அரசமைப்புச்
சட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இந்தியா – இலங்கை நாடுகளுக்கு
இடையேயான கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற்றுக் கொள்ள
வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இல்லையெனில், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில்
வெளியிடச் செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெற்றதைப் போல்;
கச்சத்தீவு பிரச்சனையிலும் என்னால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட
வழக்கு விசாரணைக்கு வரும் போது, வலுவான வாதங்களை முன் வைத்து சட்ட ரீதியாக
இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்.
பாராட்டப்பட வேண்டிய தீர்மானம். ஆனால், இது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது தி.மு.க. வெளிநடப்பு செய்வது வருந்தத்தக்கது. வெளிநடப்பை உடன் முடித்துக் கொண்டு உடன் தீர்மான நிறைவேற்றத்திற்கு வந்திருக்க வேண்டும். காங்கிரசின் மீது அச்சமா எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் இனி, பொதுவான தமிழர் நலன் குறித்த தீர்மானங்கள் நிறைவேறும் பொழுது தி.மு.க.வும் பங்கேற்க வேண்டும். முதல்வருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்
First Published : 09 Jun 2011 11:58:30 AM IST
Last Updated : 09 Jun 2011 12:10:16 PM IST
சென்னை, ஜூன்.9: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார்.சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை:தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.தீர்மானம்:இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது. டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன. 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி, முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.நான் முதல்வராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.1960-ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். 1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார். 23.7.1974-ல் மாநிலங்களவையில் திரு கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது, “… I would like to get a clarification in this regard from the Hon. Minister. Just now I heard the views expressed by my Hon’ble friend, Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the government of India and the Sri Lanka government the government of Tamil Nadu was not properly informed. … There are two news items which appeared in the Hindu. One was on June 27. “When pressmen asked the Tamil Nadu Chief Minister Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he said he would prefer to wait until after the details had been announced. Mr. Karunanidhi said that Foreign Secretary, Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a favourable condition existed for agreement on Kachatheevu.” On the 29th June, the Chief Minister stated the following to the Press:- “It was regrettable that before signing the agreement, the Centre had not invited him or any representative of the State Government for consultation. The Prime Minister had not even chosen to ascertain the views of the leaders of parliament on this vital question”,என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார். இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was consulted என்று கூறி உள்ளார்.இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?” என்று ஆலடி அருணா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை கேட்ட போது, கருணாநிதி, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து சொல்கிறார். “… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice” அதற்கு விளக்கம் அளித்து, மு. கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up – I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed?” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார். சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record--க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
நல்ல திர்மானம். அடுத்து அடுத்து வரும் இப்படியான செய்திகள் மனதை குளிர வைக்கிறது. ஒரு மாநில சட்டசபையில் கொண்டு வரும் தீர்மானங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். கருணாநிதி ஆட்சி செய்யாததை,செய்ய நினைக்காததை செய்து காட்டிய முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
By sakthy
6/9/2011 1:37:00 PM
எதற்காக இந்த வேண்டாத வேலை. எங்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம். எப்பொழுதோ தாரை வார்த்து கொடுத்தாச்சி. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சும்மா ஸ்டன்ட் அடிக்க வேண்டாம். மீனவர்களே ஏமாறாதீர்கள்.